You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான சாதனை வரலாற்றை நீட்டிக்க பாகிஸ்தானுக்கு சென்னை ஆடுகளம் உதவுமா?
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நடப்பு உலகக்கோப்பையில் தொடக்க வெற்றிகளுக்குப் பிறகு ஹாட்ரிக் தோல்விகளால் தடுமாறும் பாகிஸ்தான் அணி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தனது சிறப்பான வரலாற்றை தக்க வைக்கும் முனைப்பில் இருக்கிறது. சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 270 ரன்களை சேர்த்துள்ளது.
சுழற்பந்துவீச்சுக்கு உதவும் சென்னை ஆடுகளத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்த இந்த ஸ்கோர் பாகிஸ்தான் அணிக்குப் போதுமானதா? பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் விரும் அதிசயம் நடக்குமா?
பாகிஸ்தான் டாஸ் வென்று முதல் பேட்டிங்
பாகிஸ்தான் அணி டாஸில் வென்றதும், முதலில் பேட்டிங் செய்த தீர்மானித்தது. அந்த அணியின் அப்துல்லா ஷஃபீக்கும், இமாம் உல் ஹக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாகளாக களமிறங்கினர். இந்த போட்டியிலும் பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை.
ஆட்டத்தின் 5-வது ஓவரிலேயே ஜான்சென் வீசிய பந்தில் அப்துல்லா ஷஃபீக் ஆட்டமிழந்தார். அவர் 17 பந்துகளில் 9 ரன் மட்டுமே சேர்த்தார். நடப்பு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் தொடக்க ஜோடி 100 ரன்களை கடந்துள்ளது.
பின்னர் வந்த கேப்டன் பாபர் ஆசம் வழக்கம் போல் களத்தில் நிலைநிறுத்திக் கொள்ள சற்று நிதானம் காட்டினார். ஆனால் மறுமுனையில் இமாம் உல் ஹக் சிறிது நேரத்தில் ஜான்சென் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு ஆபாத்பாந்தவனாக திகழும் முகமது ரிஸ்வான் உள்ளே வந்தார்.
மீண்டும் ஏமாற்றம் தந்த பாபர் ஆசம்
அவரும், பாபர் ஆசமும் சேர்ந்து பாகிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டனர். நல்ல பார்மில் உள்ள ரிஸ்வான் தொடக்கம் முதலே சற்று அதிரடி காட்டினாலும் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 31 ரன்களிலேயே அவர் அவுட்டாகிப் போனார். அதேபோல், நடப்பு தொடரில் 4 போட்டிகளில் மூன்றாவது அரை சதத்தை எட்டிய பாபர் ஆசமும் அதனை பெரிய ஸ்கோராக மாற்றாமல் வெளியேறினார். விராட் கோலிக்கு நிகராக வைத்து பாகிஸ்தான் ரசிகர்களால் பேசப்படும் பாபர் ஆசம் அந்த உச்சபட்ச எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இன்னும் ஆட்டத்தை வெளிப்படுத்தாதது அவர்களுக்கு ஏமாற்றமே.
பாகிஸ்தான் அணியில் ஒருவர் கூட அதிரடியாக ஆடி ரன் சேர்க்கவில்லை. அதேபோல் இதனால், ஆட்டம் முழுவதுமே அந்த அணியின் ரன் ரேட் மந்தமாகவே இருந்தது. முடிவில் அந்த அணி 47-வது ஓவரிலேயே 270 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிப் போனது.
தென் ஆப்ரிக்காவை கட்டுப்படுத்த இது போதுமா?
நடப்பு தொடரில் இமாலய ரன் குவிப்பில் இறங்கி எதிரணிகளை மலைக்க வைக்கும் தென் ஆப்ரிக்காவை வெற்றி கொள்ள இந்த 270 ரன்கள் பாகிஸ்தானுக்குப் போதுமா? 2009-ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் மற்றும் இருபது ஓவர் உலகக்கோப்பைப் போட்டிகளில் தென் ஆப்ரிக்காவை தொடர்ந்து 6 முறை வீழ்த்தியுள்ள பாகிஸ்தானால் அந்த வரலாற்றை சென்னையிலும் நீட்டிக்க முடியுமா?
சுழலுக்கு ஒத்துழைக்கும் சென்னை ஆடுகளத்தில் தென் ஆப்ரிக்காவை 270 ரன்களுக்குள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களால் சுருட்ட முடியுமா?
இதே சென்னை மைதானத்தில் இந்த வாரத் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானிடம் பாகிஸ்தான் அணி தோற்றது நினைவிருக்கலாம்.
எந்த நாட்டு வீரர்களின் சிறந்த கிரிக்கெட்டையும், ஸ்போர்ட்மேன்ஷிப்பையும் ஆதரிக்கும், உற்சாகப்படுத்தும், சென்னை ரசிகர்களுக்கு மத்தியில் இந்த ஆட்டம் நடக்கிறது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு மக்கள் எந்த அளவு ஆதரவு அளித்தார்களோ அதேபோன்ற ஆதரவை எதிர்பார்க்கலாம்.
அரையிறுதியை நோக்கிச் செல்லப்போவது யார் ?
தென் ஆப்பிரிக்க அணி இதுவரை 5 போட்டிகளில் 4 வெற்றி, ஒரு தோல்வி என 8 புள்ளிகளுடன், 2வது இடத்தில் வலுவாக இருக்கிறது. அதன் நிகர ரன்ரேட்டும் 2.370 என இருக்கிறது.
அதேநேரம், பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் 3 தோல்வி, 2 வெற்றிகள் என 4 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதன் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.400-புள்ளிகளாகச் சரிந்துவிட்டது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோற்றபின்பும் கூட 5ஆவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் , இலங்கையின் வெற்றியால், 6ஆவது இடத்துக்குச் சரிந்துவிட்டது.
அரையிறுதிச் சுற்றுக்குள் செல்ல இரு அணிகளுக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாக அமையும்.
எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணிக்கான நாக்-அவுட் சுற்று பிரகாசமாகும். தோற்கும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு சிக்கலாக மாறிவிடும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை நம்பி பயணிக்க வேண்டியது இருக்கும்.
இதனால், இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாகப் போராட வேண்டி இருக்கும்.
‘மைன்ட் கேம்’ மூலம் விஸ்வரூமெடுத்துள்ள தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்க அணி எந்த உலகக் கோப்பையிலும் இல்லாத அளவுக்கு இந்த தொடரில் புதிய உத்திகளைப் பயன்படுத்தி வெற்றி பெறும் நுட்பத்தைக் கையாண்டு வருகிறது. அதற்கான பலனும் அபரிமிதாகக் கிடைத்து வருகிறது.
நெதர்லாந்துக்கு எதிராக மட்டும் தென் ஆப்பிரிக்க அணி கவனக்குறைவாக, தவறாகக் கணித்ததால் தோல்வி அடைந்தது. இல்லாவிட்டால், 10 புள்ளிகளுடன் தற்போது இந்திய அணியைவிட உயர்ந்து முதலிடத்தில் இருந்திருக்கும்.
முதலில் பேட் செய்தால் 350 ரன்களுக்கு மேல் குவித்து, எதிரணிகளை பதற்றத்திலும், நெருக்கடியிலும் தள்ளி பேட்டர்களை டென்ஷனாக்கி ஆட்டமிழக்கச் செய்யும் ‘மைன்ட் கேமை’ தென் ஆப்ரிக்கா கையில் எடுத்திருக்கிறது. இந்த நுட்பம் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், செயல்படுத்தும்விதம், எதிரணிகளுக்கு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தாலும், பவர்ப்ளே ஓவரிலும், டெத் ஓவரிலும் மிகவும் கட்டுக்கோப்பாக, லைன் லென்த்தில் வீசி, பேட்டர்களை ரன் அடிக்கவிடாமல் திணறடித்து, பேட்டர்களை தவறு செய்யவைத்து வெற்றி பெறும் நுட்பத்தையும் தென் ஆப்ரிக்கா செயல்படுத்துகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சு இதற்கு சிறந்த சான்று.
சிறப்பான ஃபார்மில் டீ காக்
தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டீ காக் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார்.
இதுவரை 3 சதங்கள் உள்ளிட்ட 407 ரன்கள் குவித்து உலகக் கோப்பைத் தொடரில் அதிகமான ரன் சேர்த்த பேட்டராக வலம் வரும் குயின்டன் டீ பாகிஸ்தானுக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்.
இதேபோல ஹென்ட்ரிக்ஸ், வேன்டெர் டூ சென் ஆகியோரும் களத்தில் நங்கூரமிடாதவரை அவர்களை வீழ்த்தும் நுட்பத்தை ஆராயலாம். இருவரும் களத்தில் நின்றுவிட்டால், அதன்பின் ஆட்டமிழக்கச் செய்வது பாகிஸ்தானுக்குக் கடினமாகிவிடும்.
மிரட்டும் நடுவரிசை
அதேபோல் மார்க்ரம், கிளாசன், டேவிட் மில்லர் என நடுவரிசையில் அசுரத்தனமான பேட்டர்களை தென் ஆப்பிரிக்கா கையில் வைத்துள்ளது. அதிலும் கிளாசனின் கடந்த போட்டியில் அடித்த சதத்தை பார்த்தால் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் டெத் ஓவர்களில் எவ்வாறு சமாளிக்கப் போகிறார்களோ என்ற கேள்வி எழுகிறது. மார்க்ரம், கிளாசன் இருவரும் உலகக் கோப்பையில் தலா ஒரு சதம் அடித்து வலுவான ஃபார்மில் இருக்கிறார்கள்.
மார்க்கோ ஜான்சன்வரை பேட்டிங் செய்யும் வாய்ப்பு தென் ஆப்பிரிக்காவுக்கு இருப்பதால், 8 விக்கெட்டுகளை எடுக்கும்வரை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பணிச்சுமை குறையப்போவதில்லை. இதில் யாரேனும் இரு பேட்டர்கள் நிலைத்தாலும் பாகிஸ்தானின் நிலைமை சிக்கலாகிவிடும்.
பந்துவீச்சிலும் ஸ்திரமாக இருக்கும் தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சிலும் லுங்கி இங்கிடி, ரபாடா, ஜான்சன், கூட்ஸீ, வில்லியம்ஸ் என வேகப்பந்துவீச்சிலும், ஷாம்ஸி, கேசவ் மகராஜ் என சுழற்பந்துவீச்சிலும் ஸ்திரமாக இருக்கிறது. பாகிஸ்தான் அணி பேட்டர்கள் இடதுகை சீனாமேன் பந்துவீச்சுக்கு திணறுகிறார்கள் என்பதால், இன்று ஷாம்ஸிக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
கேப்டன் பவுமா காயத்திலிருந்து குணமடைந்துவிட்டதால் இன்று ஹென்ரிக்ஸுக்கு பதிலாக ஆட்டத்தைத் தொடங்கலாம் என நம்பப்படுகிறது.
பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என மூன்றிலும் வலுவாக இருக்கும் தென் ஆப்பிரிக்காவை பாகிஸ்தான் எப்படி சமாளிக்கப்போகிறது என்ன உத்திகளை கையாளப் போகிறது என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அதிசயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறதா பாகிஸ்தான்?
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை ‘ஏதாவது அதிசயம் நிகழும் என நம்புகிறேன். நிச்சயமாக அரையிறுதிக்குள் செல்வோம்,’ என்று அந்த அணியின் ஆல்ரவுண்டர் சதாப் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்தையும், இலங்கையையும் சாய்த்த பாகிஸ்தான்அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், சிறிய அணி என்று எண்ணப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் தோல்வியைத் தழுவியது. இதனால், 5 போட்டிகளில் 2 வெற்றிகள், 3 தோல்விகள் என 4 புள்ளிகளுடன், 6-வது இடத்துக்கு பின்தங்கியது.
சதாப் கான் ஒரு ஆங்கிலச் சேனலுக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் ஆகிய மூன்றிலும் சுமார் ரகத்துக்கும் கீழாகவே இருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நல்ல கிரிக்கெட்டை இதுவரை விளையாடவில்லை, ஆனால், விரைவில் மீண்டுவருவோம் என்று நம்புகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான ஆட்டம்
பாகிஸ்தான் அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அரையிறுதிக்குள் செல்ல இந்த ஆட்டத்தில் வெற்றி அவசியமானது, நிகர ரன்ரேட்டும் உயரும். இதில் தோற்கும் பட்சத்தில் ‘நாக்-அவுட்’ சுற்று கனவு கானல் நீராகிவிடும்.
பாகிஸ்தான் பேட்டிங் ஸ்திரமற்றதாக, கணிக்க முடியாததாக இருக்கிறது. சில நேரங்களில் டாப்ஆர்டர் பேட்டர்களே சிறப்பாக ஆடி வெற்றி தேடித் தருகிறார்கள், சில நேரங்களில் நடுவரிசை பேட்டர்கள் அணியை சிக்கலில் இருந்து மீட்கிறார்கள், சில போட்டிகளில் கேப்டன் வீழ்ந்தவுடன், மற்ற விக்கெட்டுகள் மளமளவென சரிகிறது என்பதால், கணிக்க முடியாததாக இருக்கிறது.
பாகிஸ்தான் சந்திக்கும் சிக்கல்கள் என்ன?
பாபர் ஆசம் மிகச்சிறந்த பேட்டர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கேப்டனாக இதுவரை அவர் அணிக்கு பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை. இந்தத் தொடரில் இதுவரை பாபர் ஆசம் தனது முழுத்திறமையை வெளிக்காட்டவில்லை. தொடக்க ஆட்டக்காரர் அப்துல்ல ஷபீக் ஓரளவுக்கு ஸ்திரமாக பேட் செய்துவருவது ஆறுதல் அளிக்கிறது.
ஃபக்கர் ஜமான் காயத்திலிருந்து குணமடைந்துவிட்டதால் இன்று களமிறங்கினால், இமாம் உல் ஹக் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடுவரிசை பேட்டர்கள் இதுவரை எந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
சதாப்கான், ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது ஆகியோர் பெரிதாக எந்த ஸ்கோரும் அடிக்கவில்லை. இவர்களின் பலவீனமும் கடந்த போட்டிகளில் வெளிப்பட்டுவிட்டது. ஆதலால், நடுவரிசை பேட்டிங் பாகிஸ்தானுக்கு பெரிய கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது.
இது தவிர பாகிஸ்தான் அணிக்குள் நிலவும் வீரர்களுக்கு இடையிலான பிரச்சினை, சிக்கல், ஈகோ ஆகியவையும் அணியை முறையாகஒருங்கிணைத்து செயல்பட முடியாமைக்கு காரணம் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
‘பல் இல்லாத’ பந்துவீச்சு
பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகின் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் என வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தும் அது பல் இல்லாத பந்துவீச்சாகவே இருக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பந்துவீசியதுபோல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று பந்துவீச்சு அமைந்தால், சிதம்பரம் அரங்கிற்கு வெளியேதான் பீல்டர்களை நிறுத்த வேண்டியதிருக்கும்.
அப்ரிடி, ராஃப் பந்துவீச்சில் இருக்கும் வேகம், துல்லியத்தன்மை, லைன் லென்த்தில் இல்லை. சென்னை ஆடுகளத்தில் எவ்வாறு தென் ஆப்பிரிக்காவை சமாளிக்கப் போகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.
சுழற்பந்துவீச்சிலும் உசாமா, சதாப்கான் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக பந்துவீசவில்லை. அதிலும் உசாமா பந்துவீச்சை ஆப்கானிஸ்தான் பேட்டர்களை வெளுத்துவாங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க பேட்டர்களிடம் சிக்கினால் சிக்கல்தான்.
லெக் ஸ்பின்னர்களை மட்டுமே நம்பி களமிறங்குவதும், 6-வது பந்துவீச்சாளர் இல்லாதது பாகிஸ்தானுக்கு பெரியபின்னடைவாக அமையும். இடது கை சுழற்பந்துவீச்சாளர் அதிலும் சீனாமேன் இல்லாதது பாகிஸ்தானுக்கு பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் உசாமாவுக்குப் பதிலாக முகமது வாசிம் ஜூனியர் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.
மிகவும் மோசமான ஃபீல்டிங்
ஃபீல்டிங் என்றாலே பாகிஸ்தான் அணியைப் பார்தது ரசிகர்கள் சிரிக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஃபீல்டிங்கை கோட்டைவிட்டு, கேட்சை கோட்டைவி்ட்டு, பவுண்டரியை தடுக்கமுடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறினர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் முறையாக பீல்டிங் செய்திருந்தாலே வெற்றி பெற்றிருக்கலாம்.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக பீல்டிங்கை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தில் பாகிஸ்தான் இருக்கிறது. பாகிஸ்தான் அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் மேம்படுத்தி களமிறங்கினால்தான் தென் ஆப்ரிக்காவுக்கு நெருக்கடி அளிக்க முடியும்.
24 ஆண்டுகால வரலாறு திரும்புமா?
தென் ஆப்ரிக்கா அணி கடைசியாக 1999-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வென்றது.
அதன்பின் 24 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியை உலகக் கோப்பைத் தொடரில் வென்றதில்லை. இந்த 24 ஆண்டுகால வரலாற்றை தென் ஆப்ரிக்கா மாற்றி எழுதுமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதுவரை உலகக் கோப்பையில் பாகிஸ்தான் 2 வெற்றிகளையும், தென் ஆப்ரிக்கா 3 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
சென்னை ஆடுகளம் எப்படி?
சேப்பாக்கத்தில் 3 ஆடுகளங்கள் உள்ளன. இதில் நியூசிலாந்து-வங்கதேசம் இடையிலான போட்டி நடந்த ஆடுகளம் இன்று பயன்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்வது சிறந்தது. தொடக்கத்தில் விக்கெட் விழாமல் 10ஓவர்கள் நின்றுவிட்டால், நினைத்த ஸ்கோரை எட்டலாம். பேட்டரை நோக்கி பந்து வேகமாக வரும் என்பதால், பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம். துல்லியமான பந்துவீச்சு, லைங்த்தில் வீசுவதுதான் பேட்டர்களை கட்டுப்படுத்தும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)