தேவாங்குகள் சட்டவிரோத மாந்திரீக வேலைகளில் அனுபவிக்கும் கொடூர சித்ரவதைகள் - உண்மை என்ன?

ரகசியமாக நடக்கும் மாந்திரீக வேலைகளில் பல கொடூரங்களை அனுபவிக்கும் தேவாங்குகள்

பட மூலாதாரம், TNWCCB

படக்குறிப்பு, மேட்டுப்பாளையம் பகுதியில் மூடநம்பிக்கை சடங்குக்காக சட்டவிரோதமாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த தேவாங்கு குட்டிகள்
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உங்களுக்கு சங்கடம் தரும் விவரிப்புகள் இருக்கக் கூடும்.

கடந்த ஜனவரி 23ஆம் தேதி மேட்டுப்பாளையம் பகுதியில் முதியவர் ஒருவரின் வீட்டில் இருந்து இரண்டு தேவாங்கு குட்டிகள் வனத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டன.

அதிர்ஷடம் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையின் அடிப்படையில் நடத்தப்படும் 'தேவாங்கு சாஸ்திரம்' என்ற சடங்குக்காக அவை பிடித்து வைக்கப்பட்டிருந்ததாக தமிழ்நாடு வனத்துறையின் காட்டுயிர் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

அந்த முதியவர் கைது செய்யப்பட்டதுடன், மீட்கப்பட்ட தேவாங்கு குட்டிகள் ஆரோக்கியமாக இருப்பது காட்டுயிர் மருத்துவரால் உறுதி செய்யப்பட்ட பிறகு அவை மேல் ஆழியார் பகுதியில் பத்திரமாக காட்டுக்குள் ஜனவரி 28ஆம் தேதி விடுவிக்கப்பட்டதாகவும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் கூறினார்.

தேவாங்குகள் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதைத் தடுப்பதற்காக, தமிழ்நாடு வனத்துறையின் காட்டுயிர் குற்றத் தடுப்புப் பிரிவு, பல்வேறு முயற்சிகளை எடுத்திருப்பதுடன், மக்களிடையே மூடநம்பிக்கைகளை விலக்குவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.

வெறும் 200 கிராம் மட்டுமே உடல் எடை கொண்ட தேவாங்குகளை சட்டவிரோதமாகப் பிடிக்கும் நபர்கள் அவற்றை வைத்து என்னவெல்லாம் செய்கிறார்கள்? ஏற்கெனவே அழிவின் விளிம்பில் இருக்கும் இந்தப் பாலூட்டிகள் இதனால் எத்தகைய ஆபத்துகளை எதிர்கொள்கின்றன?

ரகசியமாக நடக்கும் மாந்திரீக வேலைகளில் பல கொடூரங்களை அனுபவிக்கும் தேவாங்குகள்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, மாந்திரீக வேலைகளில் தேவாங்குகளைப் பயன்படுத்துவது நீண்ட காலமாக அவற்றின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது (கோப்புப் படம்)

மாந்திரீகத்தில் பயன்படுத்தப்படும் தேவாங்கு

பாரம்பரிய மருத்துவ முறைகள், மாந்திரீக சடங்குகள் போன்றவற்றுக்காக பல்வேறு காட்டுயிர்கள் கண்காணிப்பை மீறி சட்டவிரோதமாக வேட்டையாடப்படுகின்றன.

இது உயிரினங்களின் எண்ணிக்கை குறைவுக்கு வித்திடுவதால் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக பிபிசி தமிழிடம் பேசிய காட்டுயிர் ஆர்வலர் சி. விமல் ராஜ் குறிப்பிட்டார்.

இதனால் சிறிய பாலூட்டி வகையைச் சேர்ந்த இரவாடி உயிரினமான தேவாங்குகள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், "வடக்கு நோக்கி மட்டுமே அமரும், அதற்குத் தீய சக்தியை விரட்டும் சக்தி உண்டு என்பன போன்ற மூட நம்பிக்கைகளால் தேவாங்குகள் அதிகமான பாதிப்புகளைச் சந்திப்பதாகவும்" அவர் கூறினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு இதுகுறித்து வெளியான ஓர் ஆய்வு, தேவாங்குகள் மருத்துவம் மற்றும் சடங்கு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் சாம்பல் நிற தேவாங்குகள் அதிகம் காணப்படும் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள 12 வெவ்வேறு வாழ்விடங்களில் ஏழு ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில், உயிருள்ள தேவாங்குகளும் அவற்றின் உடல் பாகங்களும் மாந்திரீகம் மற்றும் பிற சடங்குகளுக்காகப் பயன்படுத்தப்படுவது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு, பின்னர் மீட்கப்பட்ட 139 உயிருள்ள தேவாங்குகளைப் பரிசோதித்த ஆய்வுக் குழுவினர், அவற்றில் 116இல் மாந்திரீக வேலைகளால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட தடயங்களைக் கண்டறிந்தனர்.

ரகசியமாக நடக்கும் மாந்திரீக வேலைகளில் பல கொடூரங்களை அனுபவிக்கும் தேவாங்குகள்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, அளவில் மிகச் சிறியவையாக இருப்பதால் அவற்றைச் சிறு கூண்டில் வைத்து பராமரித்து சடங்குகளில் பயன்படுத்தி விடுகிறார்கள் என்கிறார் மருத்துவர் ரூபா சதீஷ் (கோப்புப் படம்)

மாந்திரீக சடங்குகளில் நடக்கும் கொடூரம்

மேட்டுப்பாளையம் சம்பவத்தில் தேவாங்கு சாஸ்திரம் என்ற சடங்கு மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்து குட்டிகளை மீட்ட அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

அதுபோக, இன்னும் பல்வேறு வழிகளில் இந்தச் சிறிய பாலூட்டிகளுக்கு மூட நம்பிக்கைகளின் பெயரால் அபாயங்கள் நிறைந்திருக்கின்றன. அவை குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள, காட்டுயிர் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல்களை வழங்கும் வலைப்பின்னலின் அங்கமாக இருப்பவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

அவர்களின் கூற்றுப்படி, மாந்திரீகத்தில் தேவாங்குகள் பல கொடூரங்களை அனுபவிக்கின்றன.

"சூனியம் வைக்கப் பயன்படுத்தப்படும் உருவ பொம்மைகளைப் போல உயிருள்ள தேவாங்குகள் மாந்திரீக வேலைகளில் ஈடுபடுவோரால் பயன்படுத்தப்படுகின்றன. அப்போது, அவற்றின் உடலில் ஊசிகளால் குத்துவது போன்ற சித்திரவதைகளைச் செய்கிறார்கள்."

தேவாங்குகள் மாந்திரீக நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதை உறுதி செய்த 2022ஆம் ஆண்டு ஆய்வறிக்கையில், ஆய்வாளர்கள் பரிசோதித்த தேவாங்குகளில் கண்கள், கால்கள், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் சிறிய ஊசிகளால் குத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரகசியமாக நடக்கும் மாந்திரீக வேலைகளில் பல கொடூரங்களை அனுபவிக்கும் தேவாங்குகள்

பட மூலாதாரம், TNWCCB

படக்குறிப்பு, மேட்டுப்பாளையத்தில் மீட்கப்பட்ட இரண்டு தேவாங்கு குட்டிகளையும் வனத்துறை அதிகாரிகள் மேல் ஆழியார் பகுதியில் காட்டுக்குள் விடுவித்தனர்

இந்தச் சடங்குகள் பெரும்பாலும் அமாவாசை நாட்களின்போது நிகழ்வதாகக் கூறுகிறார் அந்த ஆய்வுக் குழுவில் ஒருவரும் பெங்களூருவின் பன்னேர்கட்டாவில் அமைந்துள்ள காட்டுயிர் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தின் மூத்த கால்நடை மருத்துவருமான ரூபா சதீஷ்.

தேவாங்கை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மாந்திரீக சடங்கு பற்றி விளக்கிய அவர், "இதன் உடலமைப்பு மனித உருவத்தை ஒத்திருப்பதால், அதை சூனிய பொம்மையாக பயன்படுத்துகிறார்கள். அந்த சடங்கில் தேவாங்கின் உடலில் ஊசியை வைத்துக் குத்துவார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தேவாங்குகளுக்கு நான் சிகிச்சை அளித்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

"ஆரம்பத்தில் ஏதேனும் விபத்து அல்லது பிற உயிரினங்களின் தாக்குதல் காரணமாக இப்படியான காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றே கருதினோம். ஆனால் மீட்கப்பட்ட பல தேவாங்குகளின் உடலில், தொடர்ச்சியாக சில குறிப்பிட்ட உறுப்புகளில், துல்லியமான வடிவத்தில் காயங்கள் தென்பட்டதை அவதானிக்கத் தொடங்கினோம்," என்கிறார் அவர்.

ரகசியமாக நடக்கும் மாந்திரீக வேலைகளில் பல கொடூரங்களை அனுபவிக்கும் தேவாங்குகள்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, கோப்புப் படம்

அப்போதுதான், தேவாங்குகளை மாந்திரீக சடங்குகளில் சிலர் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதைத் தாங்கள் தெரிந்துகொண்டதாக விவரித்தார் அவர்.

"அவற்றின் சில உறுப்புகள் கண் தொடர்பான நோய்களை, மூட்டு வலியைக் குணப்படுத்தும் மருத்துவ குணங்களைக் கொண்டது எனவும் நம்பி மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதாக" காட்டுயிர் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல்களைப் பகிரும் தன்னார்வலர்கள் பிபிசி தமிழிடம் விவரித்தனர்.

சில ஜோதிடர்கள் உயிருடன் பிடிக்கப்படும் தேவாங்குகளை வைத்து, எதிர்காலத்தைக் கணித்தல், தீய சக்திகளை விரட்டுதல், நோய்களைக் குணப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ரகசியமாக நடக்கும் மாந்திரீக வேலைகளில் பல கொடூரங்களை அனுபவிக்கும் தேவாங்குகள்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, மாந்திரீக வேலைகள், சடங்குகள், ஜோதிட வேலைகள் ஆகியவற்றுக்காக தேவாங்குகள் பிடிக்கப்படுகின்றன (கோப்புப் படம்)

'உயிர் வாழ்வதையே சாத்தியமற்றதாக்கிவிடும்'

"இதையெல்லாம் செய்யும் நபர்கள், தங்கள் சடங்குகள் முடிந்ததும் அவற்றை விடுவித்து விடுவார்கள். ஆனால், இதனால் ஏற்பட்ட காயங்களின் காரணமாக இந்தச் சிறிய பாலூட்டிகளால் சுயமாகப் பிழைத்திருக்க முடியாது. எனவே, அடுத்த சில நாட்களில் அவை மரணித்துவிடும்."

உடலிலுள்ள முக்கியமான உறுப்புகளைக் காயப்படுத்தி அவை உயிர் வாழ்வதையே சாத்தியமற்றதாக்கிவிடும் என்று கூறும்போது மருத்துவர் ரூபாவின் குரல் உணர்ச்சி மேலீட்டால் மிகவும் தழுதழுத்தது.

இதுபோலவே, உடல் பாகங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு, பதப்படுத்தப்பட்ட தேவாங்கு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

அதுகுறித்துக் கேட்டபோது, "பாரம்பரிய மருத்துவம் என்ற பெயரில் உடல் உறுப்புகளைப் பிரித்தெடுத்து மருந்துகள் செய்யவோ அல்லது மாந்திரீகத்திற்குத் தேவையான பொருட்களைச் செய்யவோ பயன்படுத்தி இருக்கலாம்" என்றார்.

ஆனால், பதப்படுத்தப்பட்ட உடலை எந்த வகையில் பயன்படுத்துகிறார்கள் என்பதில் தெளிவில்லை. இந்த நடவடிக்கைகள் மிகவும் ரகசியமாக நடப்பதால், அவற்றில் பலவும் எங்கு, எப்படி, யாரால் நடத்தப்படுகின்றன என்பதைக் கண்டுபிடிப்பதில் பல சவால்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார் அவர்.

ரகசியமாக நடக்கும் மாந்திரீக வேலைகளில் பல கொடூரங்களை அனுபவிக்கும் தேவாங்குகள்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, இந்தச் சிறிய பாலூட்டிகளின் உடல் பாகங்கள் மருத்துவம் என்ற பெயரிலும் மாந்திரீக வேலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன (கோப்புப் படம்)

கால்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தேவாங்கு

இவையெல்லாம் இன்றைய காலகட்டத்தில் அரிதாக நடப்பவை எனக் கூறிப் புறந்தள்ளிவிட முடியாது என்று கூறும் மருத்துவர் ரூபா, மிகச் சமீபத்தில் கடந்த டிசம்பர் மாதம் அவரிடம் வந்து சேர்ந்த ஒரு தேவாங்கு பற்றிக் கூறினார்.

"கடந்த டிசம்பர் மாத இறுதியில் காயங்களுடன் ஒரு தேவாங்கு மீட்கப்பட்டு என்னிடம் சிகிச்சைக்காக வந்தது. அதைப் பார்த்தவுடனேயே, மாந்திரீக சடங்கில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்ததைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது" என்று அவர் விளக்கினார். அது மீட்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் அமாவாசை நாள் வந்ததையும் அவர் உறுதி செய்துள்ளார்.

இதன்மூலம், "அந்தத் தேவாங்கு எப்படிப்பட்ட கொடூரங்களை அனுபவித்திருக்கும் என்பதை உணர முடிந்தது. இது மிகவும் மனிதத்தன்மையற்ற செயல். அந்தச் சிறிய பாலூட்டிக்கு சிகிச்சை அளித்து அதை நலம்பெறச் செய்ய முயன்றோம். ஆனால், சில நாட்களுக்கு காயங்களால் ஏற்பட்ட பாதிப்புகளுடன் தவித்து வந்த அது, ஜனவரி இறுதியில் உயிரிழந்துவிட்டது.

"இப்படியான நடவடிக்கைகள், பாதுகாக்கப்பட வேண்டிய, ஏற்கெனவே அழிவின் விளிம்பிலுள்ள இந்தப் பாலூட்டிகளின் இருப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. இந்தக் குற்றங்களைத் தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்," என்று கூறினார் மருத்துவர் ரூபா.

ரகசியமாக நடக்கும் மாந்திரீக வேலைகளில் பல கொடூரங்களை அனுபவிக்கும் தேவாங்குகள்

பட மூலாதாரம், N.Senthil Kumaran

படக்குறிப்பு, கடந்த 2022ஆம் ஆண்டு வாகன விபத்தில் தாயை இழந்து தவித்து, பின்னர் மீட்கப்பட்ட தேவாங்கு குட்டி (கோப்புப் படம்)

வனத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன?

தேவாங்குகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்க கடந்த 2022ஆம் ஆண்டு கடவூர் தேவாங்கு சரணாலயம் கொண்டு வரப்பட்டது. அதற்கான முயற்சிகளை முதன்மையாக மேற்கொண்ட தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, "சமீப காலமாக காட்டுயிர் குற்ற வழக்குகள் அதிகரித்து வருவது, குற்றங்கள் அதிகரிப்பதைக் குறிக்கவில்லை. அது வலுப்படுத்தப்பட்ட உளவு வலையமைப்புகள், மேம்படுத்தப்பட்ட சமூகப் பங்கேற்பு ஆகியவற்றைக் காட்டும் நேர்மறை குறியீடுதான்" என்று தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, தற்போதைய வலுவான உளவுத் தகவல் சேகரிப்பு கட்டமைப்பு, தமிழ்நாடு காட்டுயிர் குற்றத் தடுப்புப் பிரிவு முன்னர் கண்டறியப்படாத குற்றங்களைக் கண்டறிய உதவியுள்ளது.

மேலும், "நன்கு நிறுவப்பட்ட, இந்த உளவு கட்டமைப்பு, தமிழ்நாடு வனத்துறை காட்டுயிர் குற்றங்களைக் கண்டறிவதிலும், தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் வலையமைப்பின் மூலம் சேகரிக்கப்பட்ட உளவுத் தகவல்கள், தேவாங்கு, அலங்கு போன்ற அழிவின் விளிம்பிலுள்ள உயிரினங்கள் உள்பட, மாநிலம் முழுவதும் காட்டுயிர் குற்றங்கள் கண்டறியப்படுவதன் அளவைக் கணிசமாக அதிகரித்துள்ளது.

இது குற்ற நடவடிக்கைகளை இலக்கு வைத்து சோதனை நடத்துவது, குற்றவாளிகளைக் கைது செய்வதை எளிதாக்கியுள்ளது. மீட்கப்படும் ஒவ்வொரு தேவாங்கும் காட்டில் விடுவிக்கப்படுவதற்கு முன் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது," என்று அவர் தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"கடவூர் தேவாங்கு சரணாலயத்தைப் பொறுத்தவரை, பாதுகாப்பு நடவடிக்கைகள், சூழல் சுற்றுலா, சூழல் மேம்பாட்டு முன்னெடுப்புகள், ஆராய்ச்சி மற்றும் காட்டுயிர் மீட்பு என ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்றார் அவர்.

அதோடு, "வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள, உள்ளூர் சமூகங்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த, காட்டுயிர் பாதுகாப்பு கல்வித் திட்டங்களும், கண்காணிப்புப் பணிகளும் செயல்படுத்தப்படுகின்றன.

கூடுதலாக, மூடநம்பிக்கை சார்ந்த நடவடிக்கைகளைக் குறைக்க, தேவாங்குகளின் சூழலியல் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவற்கான முயற்சிகளும், அவற்றின் பாதுகாப்பு இலக்குகளை சமூகப் பொருளாதார நலனுடன் இணைப்பதன் மூலம், காட்டுயிர் பாதுகாப்பை மையமாகக் கொண்ட உள்ளூர் பொருளாதாரத்தை வளர்க்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன," என்று விளக்கினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு