சார்மினார் பகுதியில் தீ விபத்து - 17 பேர் உயிரை பறித்த தீ விபத்துக்கான காரணம் என்ன?
ஹைதராபாத் நகரின் சார்மினார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து, குறைந்தது 17 பேர் உயிரை பறித்திருக்கிறது. பலர் காயமடைந்துள்ளனர். என்ன நடந்தது?
ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் சார்மினார் பகுதியில் குல்சார் ஹவுஸ் அருகே தீ விபத்து ஏற்பட்டது.
ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெலங்கானாவின் தீ பேரிடர் மீட்பு அவசரநிலை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, உயிரிழந்த 17 பேரில் 8 பேர் குழந்தைகள். மேலும், ''காலை 6.15 மணி அளவில் தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தீ விபத்துக்குள்ளான இடம் இரண்டு மாடி கட்டடம். தரைத்தளத்தில் பரவிய தீ முதல் தளத்துக்கும் பரவி உள்ளது'' என் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இந்த தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிவாரண பணிகளை தீவிரப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மக்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.'' என தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



