பி.எஃப். முன்பணமாக இனி மூன்றே நாளில் ₹5 லட்சம் பெறலாம் - எப்படி?

வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்கள் 'ஆட்டோ செட்டில்மென்ட்' முறையில் இனி ரூ.5 லட்சம் வரை எடுக்க முடியும் என்றும் அந்த செயல்முறை 72 மணி நேரத்திற்குள் நிறைவடையும் என்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் இந்த உச்சவரம்பு ஒரு லட்சம் ரூபாயாக இருந்தது.

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முன்பணம் கேட்பு உச்சவரம்பை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியிருப்பதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிஎஃப் முன்பணம் 72 மணி நேரத்திற்குள் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது ஆட்டோ செட்டில்மென்ட் முறையில் முன்பணம் கோருபவர்களுக்கு அவர்கள் கேட்கும் தொகை மூன்று நாட்களுக்குள் கிடைக்கும்.

மாண்டவியா பதிவின்படி, 2023-24 நிதியாண்டில் 89.52 லட்சம் ஆட்டோ செட்டில்மென்ட் கோரிக்கைகளுக்கான தொகைகள் கொடுக்கப்பட்டது, அதுவே 2024-25ஆம் ஆண்டில் 2.32 கோடி ஆட்டோ செட்டில்மென்ட் கோரிக்கைகளுக்கு தொகை கொடுக்கப்பட்டது. அதாவது ஒரு வருடத்தில் ஆட்டோ செட்டில்மென்ட் கோரிக்கை 161 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஆட்டோ செட்டில்மென்ட் என்பது என்ன?

வருங்கால வைப்பு நிதி கோரிக்கைகளை விரைவாக செயல்படுத்துவதற்கான செயல்முறைதான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆட்டோ செட்டில்மென்ட் முறை. இதற்கு மனித தலையீடு ஏதும் தேவையில்லை. இந்த கோரிக்கைகளுக்கு டிஜிட்டல் சரிபார்ப்பு படிமுறைகள் மூலம் ஒப்புதல் வழங்கப்படுகிறது.

கணக்கு வைத்திருப்போருக்கு விரைவான நிதி உதவி அளிப்பதற்காக முன்பண கோரிக்கைகளை ஆட்டோ செட்டில்மென்ட் மூலம் வழங்குவதை ஈபிஎஃப்ஓ, கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொடங்கியது.

இந்த முறையில் உடல் நலக்குறைவு, குழந்தைகள் கல்வி, திருமணம் அல்லது வீட்டுக்காக முன்பணம் கோருவதன் மூலம் பிஎஃப் பணத்தின் ஒரு பகுதியை எடுக்கமுடியும்.

2024-25ஆம் ஆண்டில் முன்பண கோரிக்கைகளில் 59% ஆட்டோ செட்டில்மென்ட் முறையில் கொடுக்கப்பட்டன.

ஈபிஎஃப்ஓ-வில் உங்களுடைய யுஏஎன் (யுனிவர்சல் அக்கௌன்ட் நம்பர்), ஆதார் எண் மற்றும் பான் எண் ஆகிய அனைத்தும் உங்களுடைய வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு, கேஒய்சி (KYC) நடைமுறை முடிக்கப்பட்டிருந்தால் உங்களுடைய முன்பண கேட்பு விரைவில் செயலாக்கம் பெறும்.

இந்த ஆட்டோ செட்டில்மென்ட் முறை குறிப்பிட்ட வகையான கோரிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும். மருத்துவ காரணங்கள், குழந்தைகள் கல்வி, திருமணம் அல்லது வீட்டுக்காக தேவைப்படும் போது மட்டுமே இந்த வசதி இருக்கிறது. வழக்கமான நடைமுறையில் பணம் பெற இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை ஆகும். ஆனால் ஆட்டோ செட்டில்மென்ட் முறையில் அதற்கு 72 மணி நேரம் மட்டுமே எடுக்கும்.

பிஎஃப் தொகையை ஆன்லைன் மூலம் எடுப்பது எப்படி?

வருங்கால வைப்பு நிதி தொகையை ஈபிஎஃப்ஓ இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் எடுக்கலாம். அதற்கான செயல்முறைகளை கீழே தரப்பட்டுள்ளன.

  • நீங்கள் உங்களது யுஏஎன் எண்ணை செயல்பாட்டுக்கு (ஆக்டிவேட்) கொண்டுவர வேண்டும்.
  • அதன் பின்னர் ஆதார், பான் எண்கள் மற்றும் வங்கி கணக்குடன் யுஏஎன் எண் இணைக்கப்பட வேண்டும்.
  • யுஏஎன் செயல்பாட்டுக்கு (activation) வந்த பின்னர், ஈபிஎஃப்ஓ உறுப்பினர் இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் சேவைகளுக்குச் செல்லவேண்டும்.
  • அங்கிருந்து நீங்கள் கோரிக்கை விண்ணப்பத்தை (Form-31, 19 and 10-C) தேர்வு செய்து வங்கி விவரங்களை உறுதி செய்யவேண்டும். அதன் பின்னர் நீங்கள் அந்த கோரிக்கையை சமர்ப்பிக்கலாம்.

ஈபிஎஃப் திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது?

ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்படி, ஊழியரின் அடிப்படை ஊதியத்தில் 12 விழுக்காடு ஈபிஎஃப் கணக்கில் செலுத்தப்படுகிறது. பணி அமர்த்துபவரும் அதே தொகையை செலுத்தவேண்டும். ஆனால் பணி அமர்த்துபவர் செலுத்தும் தொகை முழுமையாக உங்களுடைய ஈபிஎஃப் கணக்கிற்கு செல்வதில்லை. பணி அமர்த்துபவரரின் பங்கில் 8.6 விழுக்காடு ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் (ஈபிஎஸ்) செலுத்தப்படுகிறது. இதற்கு அதிகபட்ச உச்சவரம்பு ரூ.1250. எஞ்சிய தொகை ஈபிஎஃப் கணக்கில் செலுத்தப்படுகிறது.

ஈபிஎஃப்-க்கு செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80-சியின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் மட்டுமே.

ஈபிஎஃப்ஓ-வின் வட்டி விகிதம் ஓவ்வொரு ஆண்டும் வேறுபடலாம். ஈபிஎஃப்ஓ-வின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு வட்டி விகிதம் அரசால் நிர்ணயம் செய்யப்படுகிறது. 2024-2025 (ஏப்ரல் 1, 2024 முதல் மார்ச் 31, 2025) வருடத்திற்கு மத்திய அரசு 8.25 விழுக்காடு என்ற வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்துள்ளது.

ஏடிஎம் மூலம் வருங்கால வைப்பு நிதி

வருங்கால வைப்பு நிதியை ஏடிஎம் கார்டு அல்லது யுபிஐ பயன்படுத்தி எடுக்கும் வசதியை விரைவில் வழங்க ஈபிஎஃப்ஓ திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.

வங்கிக் கணக்கை ஈபிஎஃப் கணக்குடன் இணைத்த பின்னர் இந்த வசதி கிடைக்கும்.

பிடிஐ செய்தி முகமை தகவல்படி, வருங்கால வைப்பு நிதியின் ஒரு குறிப்பிட்ட பங்கு பிடித்து வைத்துக் கொள்ளப்பட்டு எஞ்சிய தொகையை யுபிஐ அல்லது ஏடிஎம் டெபிட் கார்டு மூலம் எடுப்பதற்கு ஒரு நடைமுறையை தொழிலாளர் அமைச்சகம் விரைவில் உருவாக்கும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு