You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்யா - யுக்ரேன் போரை நிறுத்த இந்தியாவால் முடியுமா? மோதி பயணம் உணர்த்தும் சேதி என்ன?
யுக்ரேனுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பேச்சுவார்த்தைகளின் மூலமும் ராஜிய முறைகளின் மூலமும் மட்டுமே அமைதியை நிலைநாட்ட முடியும் என்றும் தெரிவித்திருந்தார். மோதியின் இந்த பயணம் சொல்லும் செய்தி என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்
ஜூலை மாதம் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோதி ரஷ்ய அதிபர் புதினை கட்டித்தழுவியது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
இந்திய பிரதமர் மோதி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த அதே நாளில் ரஷ்யா தொடுத்த தாக்குதலில் யுக்ரேனில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதில் யுக்ரேனில் ஒக்மதித் குழந்தைகள் மருத்துவமனை நேரடி தாக்குதலுக்கு இலக்கானது
சரியாக ஆறு வார இடைவெளியில் மோதி யுக்ரேனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். போலாந்திலிருந்து யுக்ரேனுக்கு ரயிலில் சென்றார் மோதி.
2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் யுக்ரேன் மீதான தனது தாக்குதலை ரஷ்யா தொடங்கியது. அதற்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து இந்த அகஸ்டு மாத தொடக்கத்திலிருந்து ரஷ்யாவுக்குள் புகுந்து யுக்ரேன் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் சுமார் ஆயிரத்து 250 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்துள்ளதாக யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா மீது யுக்ரேன் தாக்குதலை தொடங்கிய பிறகு அங்கே முதன்முறையாக பயணம் செய்த ஒரு நாட்டின் தலைவர் மோதிதான்.
யுக்ரேன் தலைநகர் கீவ்வில் நடைபெற்ற சந்திப்புகளுக்கு பிறகு பேசிய மோதி, இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வர இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றார்.
இந்திய பிரதமர் மோதி யுக்ரேனுக்கு சென்றவுடன் அவர் முதலில் யுக்ரேனின் வரலாற்று அருங்காட்சியத்திற்கு அழைத்து செல்லப்பட்டார் அது ஏதேச்சையான ஒன்று இன்று கூற இயலாது. ரஷ்ய ஆக்கிரமிப்பால் கொல்லப்பட்ட 570 குழந்தைகளை நினைவு கூரும் வீடியோ ஒன்று மோதிக்கு காண்பிக்கப்பட்டது
அங்கு உருவாக்கப்பட்டிருந்த தற்காலிக நினைவிடத்தில் இருநாட்டு தலைவர்களும் பொம்மைகளை வைத்தனர். குழந்தைகள் போரில் உயிரிழந்ததை எண்ணி தனது மனம் துக்கத்தால் நிரம்பியுள்ளது என மோதி தெரிவித்தார்.
ஒரு கட்டத்தில் பிரதமர் மோதி யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கியின் தோளில் தனது கையை போட்டு நின்றார். இந்த படம் மோதியின் சமூக வலைத்தள பக்கத்திலும் பகிரப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்துடன் குழந்தைகளை இழந்த குடும்பத்தினரை தான் நினைத்து பார்ப்பதாகவும் அந்த குறிப்பிடப்பட்டிருந்தது. அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தான் உதவுவதாகவும் மோதி தெரிவித்தார்.
யுக்ரேன் ரஷ்யா போரில் இந்தியா நடுநிலை வகிப்பதாக எப்போதும் கூறியதில்லை என்றும் முதல் நாளில் இருந்தே நாங்கள் அமைதியின் பக்கம் நிற்கிறோம் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும் யுக்ரேன் மீதான ரஷ்யா தாக்குதல் குறித்து இந்தியா இதுவரை நேரடியாக கண்டனம் தெரிவித்ததில்லை. மறுபுறம் ரஷ்ய எரிபொருளை இந்தியா பெரும் அளவில் இறக்குமதி செய்து வருகிறது.
ஜூன் மாதம் யுக்ரேனால் முன்னெடுக்கப்பட்ட அமைதி மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளவில்லை. அந்த கூட்டத்திற்கு ரஷ்யா அழைக்கப்படவில்லை.
இந்நிலையில் மோதியின் இந்த யுக்ரேன் பயணம் எத்தகையை செய்தியை சொல்கிறது?
ரஷ்யாவுடன் வலுவான உறவை பேணும் அதே சமயத்தில் இந்தியா மேற்கத்திய நாடுகளுடனும் இணைந்து பணியாற்றும் என்பதை அழுத்தமாக சொல்லும் ஒரு பயணமாகவே மோதியின் யுக்ரேன் பயணம் உள்ளது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
வாஷிங்டனில் உள்ள வில்சன் ஆய்வுக் கழகத்தில் உள்ள சவுத் ஏசியா இன்ஸ்டியூட்டின் இயக்குநராக இருக்கும் மைகெல் குகெல்மன், மோதியின் இந்த பயணம் இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை மீண்டும் நிலைநிறுத்தும் ஒன்றாகவுள்ளது என்று தெரிவித்தார்
"மேற்கத்திய நாடுகள் உள்பட யாரையும் சமாதானப்படுத்தும் அவசியம் இந்தியாவுக்கு இல்லை. யுக்ரேனுடனான நட்பை வலுப்படுத்தும் அதே நேரத்தில் போர் குறித்த தனது கவலையை வெளிப்படுத்துவதன் மூலம் இந்தியா தனது நிலையை மீண்டும் அழுத்தமாக தெரிவித்துள்ளது
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் போர் குறித்து இந்தியா ஒரு நிலையை எடுக்க வேண்டும் என்று கூறினாலும், எந்த ஒரு கடுமையான அழுத்தத்தையும் தடையையும் இதுவரை விதிக்கவில்லை." என்கின்றார் குகெல்மன்.
"ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆகிய இருதரப்புடனும் இந்தியா நல்லுறவை பேணுவதால் யுக்ரேன் - ரஷ்யா போரில் மத்தியஸ்தம் செய்யலாம் என ஊடகங்களில் பேச்சுகள் எழுந்தன.
ஆனால் அவ்வாறு நடப்பதற்கு சாத்தியமில்லை
இந்தியா தனது உள்நாட்டு விவகாரத்தில் எந்த ஒரு நாடும் தலையிடுவதை விரும்பியது இல்லை. அதேபோல ரஷ்யா யுக்ரேன் என இருநாடும் இந்தியா மத்தியஸ்தம் செய்வதை விரும்பினால் ஒழிய இந்தியா இதில் தலையிடாது." என குகெல்மன் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)