You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'2 ஆண்டுகளில் 87 பேர் மரணம்' - மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து உயிரிழப்பது ஏன்?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
"கணவர் இறந்துவிட்டதால் மகனை நம்பித் தான் வாழ்ந்து வந்தேன். ஐ.டி.ஐ எலக்ட்ரீஷியன் படித்துவிட்டு கீரனூர் மின்வாரியத்தில் தினசரி சம்பளத்துக்கு வேலைக்குப் போனான். மழை பெய்தாலும் நள்ளிரவில் கூப்பிடுவார்கள். இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்தவனைக் கொன்றுவிட்டார்கள்" எனக் கூறி அழுகிறார், ஆனந்தி.
கடந்த 13-ஆம் தேதியன்று மின் ஊழியர்களின் அலட்சியத்தால் தனது மகன் பிரவீன்குமார் உயிரிழந்துவிட்டதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ஆள் பற்றாக்குறை காரணமாக ஆண்டுக்கு சுமார் 40 ஊழியர்கள் வரை உயிரிழப்பதாக, மின் ஊழியர் சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன. பாதுகாப்பு குறைபாட்டால் மின்வாரியத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கிறதா?
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் உள்ள கரடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். 27 வயதான இவர் கீரனூர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த அக்டோபர் 13-ஆம் தேதியன்று ஜி.அரியூர் பகுதியில் மின் பழுதை சரிசெய்யும் பணிக்காக பிரவீன்குமாரை மின்வாரிய அதிகாரிகள் அழைத்துள்ளனர். அங்கு பணியில் ஈடுபட்டபோது முறையான பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படாததால் பிரவீன்குமார் உயிரிழந்ததாக அவரின் தாயார் தெரிவிக்கிறார்.
'உத்தரவாதம் கொடுக்காததால் உயிரிழப்பு'
"உயர் மின்அழுத்த இணைப்பில் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது மின் விநியோகம் தடைபட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கென பாதுகாப்பு செயலி (APP) ஒன்று உள்ளது. பிரவீன்குமார் விவகாரத்தில் இவை முறையாகப் பின்பற்றப்படவில்லை" எனக் கூறுகிறார், மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் சீனிவாசன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நிலத்துக்கு எர்த் கம்பி கொடுத்துவிட்டு மின் விநியோகம் (Supply) செல்ல முடியாத அளவுக்கு உள்ளதை புகைப்படம் எடுத்து செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதைப் பிரிவு அலுவலர், சூப்பர்வைஸர் ஆகியோர் உறுதிப்படுத்த வேண்டும்." என்கிறார்.
"ஆனால், பிரவீன்குமார் பணிபுரிந்தபோது இவற்றை உறுதிப்படுத்திவிட்டதாக எந்த உத்தரவாதமும் இவர்கள் கொடுக்கவில்லை," எனக் கூறும் சீனிவாசன், "மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பிரவீன்குமார் உயிரிழந்துவிட்டார். ஆனால், மரணத்துக்கான காரணங்களை மூடிமறைக்கும் வேலைகளில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்." எனத் தெரிவித்தார்.
'நள்ளிரவில் கூப்பிடுவார்கள்' - பிரவீன்குமாரின் தாய்
தனது மகனின் மரணத்தால் குடும்பத்தின் வாழ்வாதாரமே பறிபோய்விட்டதாகக் கூறுகிறார், பிரவீன்குமாரின் தாய் ஆனந்தி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "என் கணவர் இறந்த பிறகு என் மகனை நம்பித் தான் வாழ்ந்து வந்தேன். ஐ.டி.ஐ எலக்ட்ரீஷியன் படித்துவிட்டு மின்வாரியத்தில் தினசரி சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தான். மழை பெய்தால் கூட நள்ளிரவில் வேலைக்குக் கூப்பிடுவார்கள்" என்கிறார்.
"மின்வாரியத்தில் ஆள்பற்றாக்குறை இருப்பதால் தினமும் பத்து மின் கம்பங்களுக்கு மேல் ஏறுவதாக கூறுவான். இரவு பகல் பாராமல் வேலை பார்த்தால் தான் பணி நிரந்தரம் ஆகும் எனக் கூறி வந்தான்," எனவும் ஆனந்தி தெரிவித்தார்.
"சம்பவம் நடந்த அன்றைக்கு அரியூரில் வேலை இருப்பதாகக் கூப்பிட்டதால் சென்றான்" எனக் கூறிய ஆனந்தி, "மின்சார லைனை அணைக்காமல் என் மகனைக் கைவிட்டுவிட்டார்கள். அடிபட்டு விழுந்திருந்தால் கூட காப்பாற்றியிருக்கலாம். என் மகனுக்கு நானே கொள்ளி வைக்க வேண்டிய நிலை வரும் எனக் கனவிலும் நினைக்கவில்லை," எனக் கூறி அழுதார்.
ஒப்பந்த ஊழியர் மரணத்தில் அலட்சியப் போக்குடன் மின்வாரிய அதிகாரிகள் செயல்பட்டதாகக் கூறி கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி திருக்கோவிலூர் செயற்பொறியாளர் அலுவலக வாசலில் சிஐடியு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
'அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை'
"போராட்டத்தைத் தொடர்ந்து பிரவீன்குமார் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீட்டைப் பெற்றுத் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதுவும் பொதுமக்கள் மின்சாரம் தாக்கி இறந்தால் அறிவிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை தான் வழங்கப்பட உள்ளது" என்கிறார் சீனிவாசன்.
"பிரவீன்குமார் மரணத்தில் பெயரளவுக்கு சம்பவ இடத்தில் இருந்த சூப்பர்வைசர் ஒருவரை பணிநீக்கம் செய்துவிட்டனர். இதற்குக் காரணமான உதவி பொறியாளர் உள்பட இரண்டு பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை," எனவும் அவர் தெரிவித்தார்.
"மின்வாரியத்தில் உதவியாளர், லைன்மேன் உள்பட அடிப்படை வேலைகளை தற்காலிக ஊழியர்களைக் கொண்டு தான் செய்து முடிக்கின்றனர்," எனக் கூறும் சீனிவாசன், "கள்ளக்குறிச்சியில் உதவியாளர், லைன்மேன் பணியிடங்களில் சுமார் 700 பணியிடங்கள் காலியாக உள்ளன." எனக் கூறுகிறார்.
இப்பணியிடங்களை நிரப்பாமல் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களைப் பயன்படுத்தி வருவதாகக் கூறும் அவர், "ஒப்பந்ததாரர் மூலமாக அவர்களுக்கு சம்பளம் தரப்படுகிறது. இதுதவிர, நுகர்வோரிடம் பணம் பெற்றுக் கொண்டு தற்காலிக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் வேலைகளும் நடக்கின்றன." என்கிறார்.
கள்ளக்குறிச்சி மின்வாரிய அதிகாரியின் விளக்கம்
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய கள்ளக்குறிச்சி மாவட்ட மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர், பெயர் குறிப்பிட விரும்பாமல் சில தகவல்களைத் தெரிவித்தார்.
"ஒப்பந்த ஊழியர் இறந்த அன்றே சூப்பர்வைஸர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரின் ஒப்புதலுடன் இறந்துபோன நபரின் குடும்பத்துக்கு இழப்பீட்டைக் கொடுப்பதாகக் கூறியுள்ளோம்." என்கிறார்.
"ஒப்பந்ததாரருடன் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக மின்வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. பணிகளை மேற்கொள்ளும்போது போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. சம்பவம் நடந்த நாளில் மின்வாரிய ஊழியர் ஒருவர் உடன் சென்றதால் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்," எனவும் அவர் தெரிவித்தார்.
பணியிடங்கள் காலியாக உள்ளதாக ஊழியர் சங்கம் சுமத்தும் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டபோது, "போதிய பணியாளர்கள் உள்ளனர். வேறு எந்த சிக்கலும் இல்லை" என்று மட்டும் பதில் அளித்தார்.
மின் கம்பங்களில் பணிகளை மேற்கொள்ளும்போது உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு ஊழியர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் போதுமான மேற்பார்வை இல்லை. களப் பணியில் உதவியாளர், கம்பியாளர் (Wireman) பணிகளில் சுமார் 42 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன" எனக் கூறுகிறார், மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) பொதுச்செயலாளர் ஜெய்சங்கர்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மாநிலம் முழுவதும் 2,374 மின்வாரிய பிரிவு அலுவலகங்கள் உள்ளன. ஓர் அலுவலகத்தில் ஆறு உதவியாளர், ஆறு வயர்மேன் இருக்க வேண்டும். ஆனால், வயர்மேன் பணியிடங்களில் ஆட்களே இல்லாத நிலை நீடிக்கிறது." என்கிறார்.
'2 ஆண்டுகளில் 87 பேர் மரணம்'
கடந்த இரண்டு ஆண்டுகளில் மின் தாக்குதலால் இறந்தவர்கள் குறித்த விவரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் மின்வாரியத்திடம் பெறப்பட்டுள்ளதாகக் கூறிய ஜெய்சங்கர், அதுதொடர்பான பட்டியலை பிபிசி தமிழிடம் பகிர்ந்தார்.
அதில், '2023-24 ஆண்டில் மின்துறை சார்ந்த ஊழியர்கள் 44 பேர் மரணம் அடைந்துள்ளனர். 2024-25 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 43 பேர் இறந்துள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவே, துறை சாராத பொதுமக்களில் 2023-24 ஆம் ஆண்டில் 640 பேர் இறந்துள்ளனர். 2024-25 ஆம் ஆண்டில் பொதுமக்களில் 708 பேர் இறந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்சார தாக்குதலில் பொதுமக்கள் இறந்து போவதற்கு கம்பி அறுந்து விழுந்தது, மின் கம்பிகளில் ஈரமான துணிகள் படுவது, சுவிட்ச் போர்டில் பழுது, மின் இணைப்புக்குக்கீழ் கட்டடம் கட்டுவது, மின் கண்டக்டர்களை (conductor) திருட முயற்சி செய்வது, மின்வாரியத்துக்குத் தெரியப்படுத்தாமல் மின் பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றைப் பட்டியலிட்டுள்ளது.
அதேநேரம், துறைசார் மரணங்களுக்கு முறையான பாதுகாப்பு விதிகளைக் கடைபிடிக்காதது, மின் விநியோகத்தை (Supply) அணைக்காமல் பணி செய்வது உள்ளிட்ட காரணங்களை மின்வாரியம் வகைப்படுத்தியுள்ளது.
'மாதத்துக்கு 500 பேர் ஓய்வு... ஆனால்?'
பாதுகாப்பு விதிகளைக் கடைபிடிக்காத வகையில் கடந்த 2023-24 ஆண்டில் 13 மின்வாரிய ஊழியர்கள் இறந்துள்ளனர். கடந்த 2024 முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 16 பேர் இறந்துள்ளதாக, தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலில் மின்வாரியம் கூறியுள்ளது.
மின்வாரிய ஊழியர்களின் இறப்புக்கான காரணம் குறித்துப் பேசும் ஜெய்சங்கர், "ஒரே நபர் ஒரே நாளில் தொடர்ந்து மூன்று இடங்களில் வேலை பார்க்க வேண்டியுள்ளது. ஓர் இடம் என்றால் கண்காணிப்பாளர், மேற்பார்வையிட எளிதாக இருக்கும்." என்கிறார்.
"மின் விநியோகம் செல்லும் இடங்களில் எங்கே அணைக்க வேண்டும் என்பது கண்காணிப்பாளருக்கு தெரியும். ஆள் பற்றாக்குறையால் எங்கு மின்சாரம் வருகிறது எனத் தெரியாததால் பலரும் மின்சாரத்தில் அடிபட்டு இறக்கின்றனர்." எனவும் அவர் தெரிவித்தார்.
"மாநிலம் முழுவதும் 2,374 மின்வாரிய பிரிவு அலுவலகங்கள் உள்ளன. ஆனால், 1,850 ஊழியர்களை மட்டும் பணிக்கு எடுப்பது தொடர்பான அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அதேநேரம், மாதத்துக்கு சுமார் 500 பேர் ஓய்வு பெறுகின்றனர் என்பதையும் கவனிக்க வேண்டும்" எனவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுவது என்ன?
இதுதொடர்பாக மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது அவரிடம் விளக்கம் பெற முடியவில்லை.
அதேநேரம் பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர், "புதிய நியமனங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அண்மையில் நானூறு பொறியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது சுமார் 1800 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது" என்கிறார்.
ஊழியர்கள் இறப்பு தொடர்வது குறித்துக் கேட்டபோது, "பணியின்போது கையுறை உள்பட பாதுகாப்பு உபகரணங்களை களப்பிரிவு பணியாளர்கள் மற்றும் கேங்மேன் ஊழியர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யுமாறு மேற்பார்வை பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது." எனக் கூறினார்.
"பாதுகாப்பு உபகரணங்களை சரிவர பயன்படுத்தாமல் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது." என்றும் அவர் தெரிவித்தார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு