டெல்லியில் தமிழர்கள் வாழ்ந்த 'மதராஸி கேம்ப்' இடிப்பு - 370 குடும்பங்களின் நிலை என்ன?

காணொளிக் குறிப்பு, டெல்லியில் தமிழர்கள் வாழ்ந்த 'மதராஸி கேம்ப்' இடிப்பு - 370 குடும்பங்களின் நிலை என்ன?
டெல்லியில் தமிழர்கள் வாழ்ந்த 'மதராஸி கேம்ப்' இடிப்பு - 370 குடும்பங்களின் நிலை என்ன?

புதுடெல்லியில் உள்ள ஜங்புராவில் தமிழர்கள் வசிக்கும் மதராசி கேம்பில் சுமார் 370 வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டன. நீர்நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வீடுகள் இடிக்கப்பட்டன.

இங்கு வசித்த சுமார் 189 குடும்பங்களுக்கு மட்டுமே புதிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய குடும்பங்கள் வீடுகளைப் பெற தகுதி பெறவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் புதிய இடம் தங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றதாக இல்லை என இங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.

புதுடெல்லியில் உள்ள ஜங்புரா பகுதிக்கு நாங்கள் சென்ற போது, காலை 8 மணியளவில் வீடுகளை இடிக்கும் பணியை தெற்கு டெல்லி மாவட்ட நிர்வாகம் தொடங்கியிருந்தது. சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. பொக்லைன் எந்திரங்கள் வீடுகளை இடிக்கும் முன்னதாக போது வீடுகளிலிருந்து மின்சார மீட்டர்கள், போன்றவற்றை மின்துறை பணியாளர்கள் அகற்றிவிட்டு வெளியேறினர். பொதுமக்கள் யாரும் இடிபாடுகள் உள்ள பகுதிகளுக்குள் நுழைந்து விடாதவாறு போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த ரந்தன் டெல்லி ஜங்புராவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அருகில் உள்ள நான்கு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடையில் மெக்கானிக்காக வேலை பார்க்கும் ரந்தன் 10ம் வகுப்பு முடித்திருக்கிறார். இவரது தலைமுறையில் முதன்முறையாக தனது குழந்தைகளை பட்டப்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறும் ரந்தன் குமார், தற்போது மதராசி கேம்ப் இடிக்கப்பட்டு தங்களின் வீடுகள் மாற்றப்பட்டால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என அச்சப்படுகிறார். ஆனால் தமது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளாக தமது குழந்தைகளை உருவாக்குவேன் என உறுதியுடன் தெரிவித்தார் ரந்தன்.

"எனது மகன் 7வது வகுப்பு படிக்கிறார், மகள் 3 ம் வகுப்பு படிக்கிறார். இருவரும் இங்கு லோதிபார்க் பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளியில் படிக்கின்றனர். ஆனால் இங்கிருந்து புதிதாக வீடுகள் வழங்கப்படும் நரேலா பகுதிக்கு சென்றால் அங்கிருந்து பள்ளிக்கு வரவே 40 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டியது வரும்" என்கிறார் ஜங்புராவில் வசித்து வரும் ரந்தன். இவரது மகன் "ஞாலம் கருதினுங் கைகூடுங்" என்ற திருக்குறளை மனப்பாடமாக கூறினார்.

ஜங்புரா மதராசி கேம்ப்பில் வசிக்கும் ஆண்களில் பெரும்பாலானோர் ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று பணிகளைச் செய்கின்றனர். அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் கார்களை கழுவும் பணிக்குச் செல்கின்றனர். கார் ஒன்றுக்கு மாதம் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கிடைப்பதாகவும் இதன் மூலம் மாதத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடிவதாக சிவா என்பவர் குறிப்பிடுகிறார். இதுவே இருப்பிடத்திலிருந்து வெகு தூரத்தில் தற்போது குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நரேலா பகுதிக்கு சென்றால் இந்த வாழ்வாதாரமே இல்லாது போய்விடும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இதே போன்று பெண்களும் வீட்டு வேலை செய்பவர்களாக உள்ளனர். சுற்றுவட்டார குடியிருப்புகளிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றால் வாழ்வாதாரம் எப்படி கிடைக்கும்? என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பிருந்தா என்ற பெண், தனது தாயார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தற்போது போதுமான நேரம் கொடுக்கப்படாமல் தங்களின் வீடுகள் இடிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

வீடுகளை இடிக்கும் பணிக்கு நடுவே பெண்களில் சிலர் தடுப்புகளை மீறி தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய முயன்றதால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய தெற்கு டெல்லி மாவட்ட மாஜிஸ்திரேட் (ஆட்சியர்) அனில் பங்கா," நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது, நீதிமன்ற உத்தரவை பின்பற்றியே அனைத்துப் பணிகளும் நடைபெறுகிறது" என்று கூறினார்.

"பாராபுலா ஓடை ஆக்கிரமிப்புகள் காரணமாக மிகவும் குறுகிவிட்டது. கனழை பெய்யும் போது ஆக்கிரமிப்புகள் காரணமாக குடியிருப்பு பகுதிகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து கொள்கிறது. இதனால் இங்கு வீடுகள் இடிக்கப்பட்டு , நரேலா பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார்.

"சட்ட விரோத ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டு, 370 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 189 குடும்பங்கள் மறுகுடியேற்றத்திக்கு தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 181 குடும்பங்களுக்கு வீடு வழங்கப்படவில்லை" எனக் கூறினார்.

டெல்லி முதலமைச்சரான ரேகா குப்தா, தாம் பொறுப்பேற்ற பின்னர் குடிசைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார் என ஏஎன்ஐ செய்தி முகமை குறிப்பிடுகிறது. குடிசை வாழ் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அதே நேரத்தில் யமுனை நதியும் பாதுகாக்கப்பட வேண்டும் என ரேகா குப்தா அதில் கூறியுள்ளார்.

இதனிடையே தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் டெல்லி "மதராசி கேம்ப்" குடியிருப்புவாசிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் தமிழ்நாடு திரும்பி வர விரும்பினால் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் எனவும் அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு