அஸ்வின் ஓய்வு பற்றி ரோஹித், கோலி மற்றும் பயிற்சியாளர் கம்பீர் கூறியது என்ன?
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இன்று டிசம்பர் 18-ம் தேதி ஆஸ்திரேலியாவில், பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அஸ்வின் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
"இந்திய கிரிக்கெட்டராக இது என்னுடைய இறுதி நாள். சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வகையான போட்டிகளிலிலிருந்து இன்றுடன் ஓய்வு பெறுகிறேன். என்னுள் இன்றும் கிரிக்கெட் மீதான வேட்கை இருக்கிறது. அதை உள்ளூர் போட்டிகளில் வெளிப்படுத்த உள்ளேன்.
என்னுடன் விளையாடிய வீரர்களுடன் பல மறக்க முடியாத நினைவுகள் உள்ளன. நிச்சயமாக, நிறைய பேருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். குறிப்பக பேட்டர்களுக்கு அருகே அற்புதமான பல கேட்சுகளை பிடித்து எனக்கு விக்கெட்டுகளை பெற்றுத் தந்த ரோகித், விராட் கோலி, அஜிங்கிய ரஹானே, புஜாராவை ஆகியோரையும் சொல்வேன். இது எனக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணம். அனைவருக்கும் நன்றி" என அஸ்வின் குறிப்பிட்டார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர் தரவரிசையில் மூன்றாம் இடத்திலும், பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஐந்தாம் இடத்திலும் அஸ்வின் தற்போது இடம்பெற்றுள்ளார்.
2010 ஆண்டு முதல் தொடர்ந்து இந்தியாவுக்கு டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விதமான ஃபார்மட்டிலும் அஸ்வின் விளையாடியுள்ளார். 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் தொடர் வென்ற அணியில் இவரின் பங்கு மிகப்பெரியது. 2011 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற அணியிலும் இடம்பெற்றிருந்தனர். 2021, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதி போட்டி வரை இந்தியாவை அழைத்து வந்ததில் அஸ்வினின் பங்கு அளப்பரியது.
`இந்திய அணியின் லெஜெண்ட்' என அஸ்வினை புகழ்ந்த கோலி

பட மூலாதாரம், Getty Images
இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 537 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். முதலிடத்தில் 619 விக்கெட்டுகளுடன் கும்ப்ளே உள்ளார்.
அஸ்வினின் ஓய்வு அறிவிப்புக்குப் பிறகு பேசிய இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித், "பெர்த் டெஸ்டுக்கு பிறகு அஷ்வின் ஓய்வை அறிவிக்க இருப்பதாக எனக்குத் தெரியவந்தது. நான் அவரிடம் பேசி அவரை பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் ஆட வைத்தேன். இன்னும் நாங்கள் மெல்பர்ன் போட்டியை ஆடவில்லை. அதே சமயம், அஷ்வினின் எண்ணத்திற்கும், அவரின் முடிவிற்கும் நாங்கள் மதிப்பளிக்க வேண்டும். அவர் இப்போது என்ன நினைக்கிறாரோ, அதற்குத் துணை நிற்க விரும்புகிறோம்" என்றார்.
அஸ்வின் ஓய்வு பற்றி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கோலி, "நான் உங்களுடன் 14 ஆண்டுகள் விளையாடியுள்ளேன். ஓய்வை அறிவிக்கப்போகிறேன் என நீங்கள் இன்று என்னிடம் சொன்னபோது உணர்ச்சிவப்பட்டு, நாம் சேர்ந்து விளையாடிய நாட்களை நினைவு கூர்ந்தேன். இந்திய அணியின் வெற்றிகளுக்கு நீங்கள் செய்த பங்கு, உங்கள் கிரிக்கெட் திறனுக்கு ஈடு இணையே இல்லை. இந்திய அணியின் லெஜெண்டாக எப்போதும் நீங்கள் நினைவு கூறப்படுவீர்கள்" என்ற கூறினார்.
`உங்களை நான் மிஸ் செய்வேன்’

பட மூலாதாரம், Getty Images
"நீங்கள் ஒரு இளம் பந்து வீச்சாளராக இருந்து நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவனாக வளர்வதைப் பார்க்கும் பாக்கியத்தை பெற்றதை இதற்கு முன்புவரை வெளிப்படையாக உலகிடம் சொல்லவில்லை. இனி வரவிருக்கும் தலைமுறை பந்து வீச்சாளர்கள், நான் பந்து வீச்சாளராக மாற அஸ்வின் தான் காரணம் என கூறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உங்களை நான் மிஸ் செய்வேன்" என இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, நான் பயிற்சியாளராக இருந்த காலத்தில் நீங்கள் ஒரு விலைமதிப்பற்ற சொத்தாக இருந்தீர்கள், உங்கள் திறமை மற்றும் பந்துவீச்சு மூலம் விளையாட்டை அபரிமிதமாக வளப்படுத்தினீர்கள்," என எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் எக்ஸ் தளத்தில், "உங்களின் சிறந்த கெரியருக்கும் வாழ்த்துக்கள். உங்களுடன் விளையாடியதில் பெருமைப்படுகிறேன், நிச்சயமாக தமிழ்நாட்டிலிருந்து இதுவரை விளையாடியதில் நீங்கள் மிகப்பெரிய ஜாம்பவன்" என தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய வீரர்கள் பகிர்ந்த கருத்து

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ், "அஸ்வினின் ஓய்வு அறிவிப்பு ஆச்சரியமாக இருக்கிறது. அஸ்வின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். அவரது கெரியருக்கு எங்கள் அணியின் டிரசிங் ரூமில் அதீத மரியாதை இருக்கும்" என அவர் கூறினார்.
தனியார் சேனலுக்கு வழங்கிய பேட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வீரர் நெதன் லயன், "நான் அதிகம் கவனிக்கும் ஒரு வீரர் அஸ்வின். ஆஃப் பிரேக் பந்துகளைச் சிறப்பாக வீசுவார். அவரது ஓய்வு ஆச்சரியமாக உள்ளது. உலகம் முழுவதும் மிக்ச்சிறப்பாக பந்து வீசியுள்ளார். கிரிக்கெட்டிற்கு அவரது பங்களிப்பிற்கு நன்றி. எனக்கு அவர் மிகப்பெரிய போட்டியாளராக இருந்தார். அவருடன் போட்டியிடுவதை நான் விரும்பினேன்" என்றார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிவேக 250, 300 மற்றும் 350 விக்கெட்களை அஸ்வின் வீழ்த்தியுள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஏழாவது வீரராகவும் அஸ்வின் தொடர்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் 37 முறை ஒரு இன்னிங்சில் ஐந்து விக்கெட் வீழ்த்திய பெருமை அவருக்கு உண்டு. ஷேன் வார்ன்னுக்கு அடுத்தபடியாக, முரளிதரனுடன் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொள்கிறார்.
அதுமட்டும் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்களும் 6 சதங்களை அஸ்வின் அடித்துள்ளார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



