You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"சந்தோஷம் கொஞ்ச நாள் தான்"; மிரட்டிய காதல் மனைவியின் தந்தை - திண்டுக்கல் கொலையில் நடந்தது என்ன?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
எச்சரிக்கை : இந்தக் கட்டுரையில் உள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.
"ஐந்து மாதங்களாக கொலை மிரட்டல் வந்து கொண்டிருந்தது. எனக்கு போன் செய்த என் அப்பா, 'இன்னும் கொஞ்ச நாள் தான் இந்த சந்தோஷம் எல்லாம்' எனக் கூறினார். என் அண்ணனோ, 'யாரும் கொடுக்காத சாவைக் கொடுப்பேன்' என மிரட்டினார். சொன்னபடியே என் கணவரை கொன்றுவிட்டனர்" எனக் கூறி அழுகிறார், திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி.
"என் கணவரின் கொலைக்கு சாதி மட்டுமே காரணம்" எனவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அக்டோபர் 12 அன்று ஆர்த்தியின் கணவர் ராமச்சந்திரன் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆர்த்தியின் தந்தையைக் கைது செய்துள்ளதாக, பிபிசி தமிழிடம் நிலக்கோட்டை டிஎஸ்பி தெரிவித்தார்.
திண்டுக்கல் இளைஞர் கொலையில் என்ன நடந்தது? கொலைக்கான பின்னணி என்ன?
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியை அடுத்த ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 24 வயதான ராமச்சந்திரன், பால் கறவை தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது பெற்றோர் கூலி வேலை செய்து வந்துள்ளனர்.
'காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு'
ஐந்து மாதங்களுக்கு முன்பு நடகோட்டை அருகில் உள்ள கணபதிபட்டியில் வசிக்கும் சந்திரன் என்பவரின் மகள் ஆர்த்தியை தனது மகன் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக, நிலக்கோட்டை காவல்நிலையத்தில் ராமச்சந்திரனின் தந்தை செல்வம் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதில் ராமச்சந்திரன் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராகவும் ஆர்த்தியின் குடும்பத்தினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.
'என் மகனின் திருமணத்துக்கு ஆர்த்தியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து, வத்தலகுண்டு காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு இருவரும் ஆஜரானார்கள்' எனப் புகார் மனுவில் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
இருவரும் மேஜர் என்பதால் இரு குடும்பத்தினரையும் அழைத்து அறிவுரை கூறிய போலீஸார், ஆர்த்தியை ராமச்சந்திரனுடன் அனுப்பி வைத்தனர்.
"திருமணத்துக்குப் பிறகு திண்டுக்கல்லில் பத்து நாள் வசித்தோம். அதன்பிறகு சொந்த ஊருக்குப் போக வேண்டும் என ராமச்சந்திரன் கூறியதால் அவரின் வீட்டுக்கே வந்துவிட்டோம்" என, செய்தியாளர்களிடம் ஆர்த்தி கூறியுள்ளார்.
'என் கையால் தான் சாவு வரும்'
"வீட்டுக்கு வந்த பிறகு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டேயிருந்தன" எனக் கூறும் ஆர்த்தி, "கடந்த பத்து நாள்களுக்கு முன்பு கூட என் அப்பா வந்து, 'உனக்கு என் கையால்தான் சாவு வரும்' என என் கணவரை மிரட்டிவிட்டுப் போனார். ஆனால், எதுவும் செய்ய மாட்டார்கள் என நினைத்து அமைதியாக இருந்தோம்" எனக் கூறுகிறார், ஆர்த்தி.
கடந்த மூன்று ஆண்டுகளாக ராமச்சந்திரனை காதலித்து வந்ததாகவும் காதலுக்கு தனது குடும்பத்தினர் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆர்த்தியின் தந்தை மரம் அறுக்கும் வேலையைச் செய்து வந்துள்ளார். "என் அப்பா, அம்மா, அண்ணன் என அனைவரும் மிரட்டி வந்தனர். இரண்டு மாதம் முன்பு என் கணவரை வாகனத்தில் இருந்து என் அப்பா தள்ளிவிட்டுள்ளார். இதை என் கணவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" எனக் கூறுகிறார், ஆர்த்தி.
சரண் அடைந்த தந்தை
இந்தநிலையில், கடந்த அக்டோபர் 12 அன்று மாலை சுமார் 4 மணியளவில் குளிப்பட்டி கிராமத்தில் உள்ள தனது சகோதரி ஷாலினி வீட்டில் பால் கறப்பதற்காக ராமச்சந்திரன் சென்றுள்ளார்.
'பால் கறப்பதற்காக இரும்பு வாளியுடன் இரு சக்கர வாகனத்தில் என் மகன் சென்றுள்ளார். மாலை சுமார் 5 மணியளவில் கூட்டாத்து அய்யம்பாளையம் - குளிப்பட்டி சாலையில் உள்ள வைகை ஆற்றுக் கால்வாய் பாலத்தில் என் மகன் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது' என, நிலக்கோட்டை காவல்நிலையத்தில் செல்வம் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
''ஏற்கெனவே இரண்டு முறை ஆர்த்தியின் அப்பா சந்திரன், எனது மகனைப் பார்க்கும் இடங்களில் எல்லாம் மிரட்டி வந்துள்ளார். 'என் மகளை என்னிடம் இருந்து அநியாயமாக பறித்துவிட்டாய். உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன்' என மிரட்டி வந்தார்'' எனவும் புகார் மனுவில் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
ராமச்சந்திரனை வெட்டிய பிறகு வத்தலகுண்டு காவல்நிலையத்தில் சந்திரன் சரண் அடைந்துள்ளார்.
"என் அப்பா மட்டும் தனியாக இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பார் என நான் நினைக்கவில்லை. ஆனால், அவரை மட்டும் போலீஸ் கைது செய்துள்ளது. கொலைக்குக் காரணம் சாதி மட்டும்தான். என் அண்ணன், உறவினர்கள் உள்பட பலரும் ஒன்று கூடி என் கணவரைக் கொன்றுவிட்டனர்" என செய்தியாளர்களிடம் ஆர்த்தி தெரிவித்தார்.
அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ராமச்சந்திரனின் உடலை வாங்க மறுத்து அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். "எனக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை. என் கணவர் கொலையில் பத்து பேர் பெயரை எழுதிக் கொடுத்திருக்கிறேன். இதை போலீஸார் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை" எனக் கூறியுள்ளார், ஆர்த்தி.
அவரிடம் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பிரதீப் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
"உடலை வாங்குவதற்கு ஆர்த்தி சம்மதம் தெரிவிக்கவில்லை. 'விசாரணை முடிவில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்போம்' என போலீஸ் எஸ்.பி உறுதியளித்ததை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) உடலைப் பெறுவதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்" என்கிறார், ராமச்சந்திரனின் உறவினரும் வழக்கறிஞருமான வெங்கடேசன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கொலை நடப்பதற்கு முன்பாக ஒரு வாரமாக அந்தப் பகுதியில் ஆர்த்தியின் தந்தை சுற்றி வந்துள்ளார். சம்பவம் நடந்த நாளில் மூன்று பேர் அங்கு இருந்ததாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர். காவல்துறை தரப்பில் விசாரணையைத் துரிதப்படுத்தினால் நன்றாக இருக்கும்" எனவும் அவர் தெரிவித்தார்.
"ராமச்சந்திரனை வெட்டிய பிறகு அவரது கையை மட்டும் கால்வாயில் தூக்கிப் போடுவதற்கு முயன்றுள்ளனர். அப்போது அந்த வழியாக டிராக்டர் ஒன்று வந்ததால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்" எனக் கூறுகிறார், வெங்கடேசன்.
'சாதி... பொருளாதார ஏற்றத்தாழ்வு'
"ராமச்சந்திரனுக்கு ஆர்த்தியின் அண்ணன் ஒரு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எப்படியெல்லாம் கொலை செய்வேன் எனக் கூறினாரோ அப்படியே ராமச்சந்திரன் கொல்லப்பட்டுள்ளார்" எனக் கூறுகிறார், வழக்கறிஞர் வெங்கடேசன்.
ராமச்சந்திரனுக்கு ஆர்த்தியின் சகோதரர் அனுப்பியதாக கூறப்படும் ஆடியோவை பிபிசி தமிழ் கேட்டது.
ஆனால், அதன் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்க்க இயலவில்லை.
"சாதி, பொருளாதார ஏற்றுத்தாழ்வு என இரண்டு விஷயங்களும் இந்தக் கொலையில் உள்ளன. பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டால் மட்டுமே பொதுவெளியில் பேசப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள் நடக்கும் கொலைகளைப் பற்றி யாரும் பெரிதாக பேசுவதில்லை" எனக் கூறுகிறார், மதுரையைச் சேர்ந்த 'எவிடென்ஸ்' அமைப்பின் கதிர்.
"ராமச்சந்திரனின் மரணத்தை சாதி ரீதியிலான கொலையாக பார்க்க வேண்டும்" எனக் கூறுகிறார் கதிர்.
'சாதி காரணம் அல்ல' - நிலக்கோட்டை டிஎஸ்பி
ஆனால், இதனை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார், " கொலை வழக்கில் சாதிரீதியான உள்நோக்கம் எதுவும் இல்லை. இங்குள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினர் பலரும் ஒற்றுமையுடன் பழகி வருகின்றனர்" எனக் கூறுகிறார்.
"இரண்டு குடும்பங்களும் பொருளாதாரரீதியாக வலுவானவர்களாக இல்லை" எனக் கூறும் டிஎஸ்பி செந்தில்குமார், "பால் கறந்து கொடுக்கும் வேலையை ராமச்சந்திரன் செய்து வந்துள்ளார். ஆர்த்தியின் தந்தை மர வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்" என்கிறார்.
"காதல் திருமணத்துக்குப் பிறகும் பெற்றோர் வீட்டுக்கு ஆர்த்தி சென்று வந்துள்ளார். அதனால் சாதிரீதியான உள்நோக்கம் இருப்பதாகக் கூற முடியாது" எனவும் அவர் தெரிவித்தார்.
ஆர்த்தியின் அண்ணன் மிரட்டுவதாக பரவும் ஆடியோ குறித்துக் கேட்டபோது, "அவர்களின் திருமணத்துக்கு முன்பாக அவர் பேசிய ஆடியோ அது " எனப் பதில் அளித்தார்.
"சாதிதான் காரணம் என ஆர்த்தி கூறுகிறாரே" எனக் கேட்டபோது, " அது மட்டுமே காரணம் எனக் கூற முடியாது. ராமச்சந்திரனை சந்திரன் வெட்டியுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கொலை நடந்துள்ளது. வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என விசாரணை நடந்து வருகிறது" எனப் பதில் அளித்தார்.
"திருமணத்துக்குப் பிறகு தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக காவல்நிலையத்துக்கு ஆர்த்தியின் தரப்பில் இருந்து எந்தப் புகாரும் வரவில்லை" எனவும் டிஎஸ்பி செந்தில்குமார் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு