You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பசிபிக், ஆண்டிஸ், அமேசானை இணைத்த 3500 ஆண்டு பழமையான நகரம் எப்படி உள்ளது?
வடக்கு பெருவில் இருக்கும் பரான்கா பிராந்தியத்தில் ஒரு பழமையான நகரத்தை கண்டுபிடித்திருப்பதாக தொல்லியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
பெனிகோ என்று அழைக்கப்படும் இந்த 3,500 ஆண்டு பழமையான நகரம், ஆரம்பகாலகட்ட பசிபிக் கடற்கரை சமூகங்களை, ஆண்டிஸ் மலைகள் மற்றும் அமேசான் படுகையில் இருந்த சமூகங்களுடன் இணைக்கும் ஒரு முக்கிய வணிக மையமாக இருந்ததாக நம்பப்படுகிறது.
லிமாவிற்கு வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 600 மீட்டர் உயரத்தில் உள்ளது.
அண்மைய கிழக்கு உலகு மற்றும் ஆசியாவில் முதல் நாகரிகங்கள் உருவான 1800 கிபி மற்றும் 1500 கிமு-க்கு இடைபட்ட அதே காலத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
அமெரிக்காவின் மிகப் பழமையான நாகரிகமான கரால் நாகரிகத்திற்கு என்னவானது என்பதை இந்த கண்டுபிடிப்பு வெளிச்சம்போட்டு காட்டுவதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
பெனிகோ பொதுமக்கள் பார்வைக்காக ஜூலை 12ஆம் தேதி திறக்கப்படும்.
ஆய்வாளர்கள் வெளியிட்ட டிரோன் காட்சிகளில் மலையில் பக்கவாட்டில் அமைந்துள்ள நகரின் நடுவில் வட்டவடிவில் ஒரு கட்டமைப்பும் அதனை சுற்றி கல் மற்றும் மண் கட்டடங்களின் எச்சங்கள் காணப்படுகின்றன.
அந்த இடத்தில் எட்டு வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வு, சடங்குகளுக்கான கோயில்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்கள் உள்பட 18 கட்டமைப்புகளை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த இடத்தில் உள்ள கட்டடங்களில், ஆராய்ச்சியாளர்கள் சடங்கு பொருட்கள், மனித மற்றும் விலங்கு உருவங்களின் களிமண் சிற்பங்கள், மற்றும் மணிகள், கடல் ஓடுகளால் ஆன நெக்லஸ்களை கண்டறிந்தனர்.
ஒரு நாற்கர மண்டபத்தின் சுவர்களில் "புதுதுஸ்" (கடல் சங்குகளால் ஆன காற்று இசைக் கருவிகள்) வடிவமைப்புகளுடன் கூடிய ஒரு கட்டமைப்பு அங்கிருக்கும் கட்டடங்களில், தனித்து தெரிகிறது.
இது, இந்த கட்டடத்தை நிர்வாக மற்றும் கருத்தியல் செயல்பாடுகளுக்கான முக்கியமான இடமாக அடையாளப்படுத்தலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
பெனிகோ, 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கிமு 3,000-இல், பெருவின் சூப் பள்ளத்தாக்கில், அமெரிக்க கண்டங்களின் பழமையான நாகரிகமாக அங்கீகரிக்கப்பட்ட கரால் குடியேற்றப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.
பெரிய பிரமிடு கட்டமைப்புகள், நவீன பாசன விவசாயம் மற்றும் நகர்ப்புற குடியிருப்புகள் உள்ளிட்ட 32 நினைவுச்சின்னங்களைக் கொண்டுள்ளது கரால். இது இந்தியா, எகிப்து, சுமேரியா மற்றும் சீனாவின் ஒப்பிடத்தக்க ஆரம்பகால நாகரிகங்களிலிருந்து தனித்து வளர்ந்ததாக நம்பப்படுகிறது.
சமீபத்திய பெனிகோ ஆய்வையும் 1990களில் கரால் அகழ்வாய்வையும் வழிநடத்திய தொல்பொருள் ஆய்வாளர் ரூத் ஷேடி, கரால் நாகரிகம் காலநிலை மாற்றத்தால் அழிந்த பிறகு என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்தக் கண்டுபிடிப்பு முக்கியமானது என்று கூறினார்.
"கடற்கரை, மலைப்பகுதிகள் மற்றும் காட்டுப் பகுதிகளில் உள்ள சமூகங்களுடன் வர்த்தகம் மற்றும் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கு உகந்த ஒரு இடத்தில் பெனிகோ சமூகம் அமைந்திருந்தது," என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் ஷேடி தெரிவித்தார்.
பெரு கலாச்சார அமைச்சகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றும் தொல்பொருள் ஆய்வாளர் மார்கோ மச்சகுவேயின் கூற்றுப்படி, கரால் சமூகத்தின் தொடர்ச்சியாக அதை பிரதிநிதித்துவப்படுத்துவதில்தான் பெனிகோவின் முக்கியத்துவம் இருக்கிறது.
ஆண்டிஸ் மலைத்தொடரில் உள்ள இன்கா கோட்டையான மச்சு பிச்சு மற்றும் மத்திய கடற்கரைப் பாலைவனத்தில் பொறிக்கப்பட்ட மர்மமான நாஸ்கா கோடுகள் உள்பட அமெரிக்க கண்டங்களின் மிக முக்கியமான தொல்பொருள் கண்டுபிடிப்புகளுக்கு பெரு தாயகமாக உள்ளது.
-ஜெஸிகா ராவ்ன்ஸ்லியின் கூடுதல் தகவல்களுடன்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.