சாப்பிட்ட சில நிமிடங்களில் மலம் கழிக்கும் உந்துதல் வருகிறதா? மருத்துவர்கள் சொல்வது இதுதான்...

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

சாப்பிட்டு முடித்து சில நிமிடங்களில் மலம் கழிப்பதற்கான உந்துதலை உணர்வது என்பது அன்றாட வாழ்க்கையில் பலரும் சந்திக்கும் ஒரு பிரச்னை.

இந்த உணர்வால், தாங்கள் உண்ணும் உணவு உண்மையில் உடலில் சேர்கிறதா அல்லது உடனடியாக கழிவாக மாறிவிடுகிறதா என்ற சந்தேகமும் எழும்.

அலுவலக நாட்களில் குறைவான அல்லது மிதமான உணவுகளை எடுத்துக்கொண்டு, வார இறுதியில் வீட்டில் இருக்கும்போது பிடித்தமான உணவுகளை வயிறு நிறைய உண்பதற்கு பின்னால் இருக்கும் உளவியலுக்கும் இந்த உணர்வே காரணம் என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால், இங்கு எழும் கேள்விகள் என்னவென்றால் அப்படி சாப்பிட்டவுடன் மலம் கழிப்பதற்கான உந்துதல் ஏற்படுவது சகஜம் தானா அல்லது அது ஏதேனும் நோயின் அறிகுறியா? ஒரு நாளைக்கு பல முறை மலம் கழிப்பது பிரச்னையா? மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆய்வுகள் கூறும் பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

சாப்பிடும் உணவு உடனே கழிவாக மாறுகிறதா?

"சாப்பிட்ட சிறிது நேரத்தில் மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவதற்கு கேஸ்ட்ரோகோலிக் ரெஃப்ளெக்ஸ் (Gastrocolic reflex) என்று பெயர். ஆனால், பலரும் நினைப்பது போல அப்போது சாப்பிட்ட உணவே உடனடியாக கழிவாக மாறுவதில்லை" என்கிறார் சென்னையைச் சேர்ந்த இரைப்பை குடல் நோய் நிபுணர், மருத்துவர் மகாதேவன்.

பொதுவாக, நாம் எடுத்துக்கொள்ளும் உணவு மலமாக மாறி உடலை விட்டு வெளியேறுவதற்கு (Gut transit time) 10 முதல் 73 மணிநேரம் ஆகலாம் என ஒரு ஆய்வு கூறுகிறது.

இருப்பினும், வயது, பாலினம், உடல் எடை போன்ற பல காரணிகளை இது சார்ந்துள்ளது.

நாம் உண்ணும் உணவு வயிற்றுப் பகுதியில் நுழையும்போது, ​​நரம்புகள் பெருங்குடலில் உள்ள தசைகளுக்கு சமிக்ஞைகளை அனுப்புகின்றன. அந்த சமிக்ஞைகள் பெருங்குடலைச் சுருங்கச் செய்து, ஏற்கனவே அங்கு இருக்கும் கழிவுகளை மலக்குடலுக்கு நகர்த்துகின்றன. இதனால் அவற்றை உடலை விட்டு வெளியேறச் செய்வதற்கான உந்துதல் உருவாகிறது.

பெருங்குடலில் இருக்கும் கழிவுகள் மலக்குடலுக்கு நகர்வதால், அதிக உணவு எடுத்துக்கொள்வதற்கு பெருங்குடலில் இடம் கிடைக்கிறது. இதுவே கேஸ்ட்ரோகோலிக் ரெஃப்ளெக்ஸ்.

"இது உடலின் வழக்கமான எதிர்வினை தான். குழந்தைகளுக்கு இது அதிகமாக இருக்கும், அதனால் தான் பால் குடித்தவுடன் குழந்தைகள் மலம் கழிப்பார்கள்." என்கிறார் மகாதேவன்.

இந்த உணர்வு, சாப்பிட்ட சில நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரத்திற்குள் ஏற்படலாம். குழந்தைகளில் இது வேகமாக நிகழும், பெரியவர்களிடையே மெதுவாக இருக்கும் என ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.

இது சாதாரணமானது என்றாலும் கூட, இத்தகைய உணர்வு அடக்கமுடியாத அளவுக்கு மிகவும் வலுவாக உள்ளது என்றால், அது வயிறு சார்ந்த கோளாறுகள் அல்லது குடல் நோய்களின் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம் என்கிறார் மகாதேவன்.

வயிறு சார்ந்த கோளாறுகளில் முதன்மையானது இரிடபிள் பௌல் சிண்ட்ரோம் (Irritable bowel syndrome) எனக் குறிப்பிடும் அவர், ஆனால் அது சமாளிக்கக்கூடிய ஒரு பிரச்னை தான் என்றும் குறிப்பிடுகிறார்.

இரிடபிள் பௌல் சிண்ட்ரோம்

இரிடபிள் பௌல் சிண்ட்ரோம் (ஐபிஎஸ்) என்பது செரிமான அமைப்பை பாதிக்கும் ஒரு பொதுவான நிலை எனக்கூறும் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (NHS) அதன் அறிகுறிகளையும் குறிப்பிட்டுள்ளது.

  • வயிற்று வலி அல்லது தசைப் பிடிப்புகள், பொதுவாக மலம் கழிக்கும் உந்துதலுடன் தொடர்புடையவை.
  • அதிகப்படியான வாயு மற்றும் வீக்கம் (Bloating)
  • வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது இரண்டும் மாறி மாறி ஏற்படுவது.
  • மலம் கழித்த பிறகும், மலக்குடல் காலியாகவில்லை என்ற உணர்வு.

இந்த அறிகுறிகள் நான்கு வாரங்களுக்கு மேல் இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும் என தேசிய சுகாதார சேவை பரிந்துரைக்கிறது.

வெளிப்படையான காரணங்கள் இல்லாவிட்டாலும் கூட, மது, காஃபின் (caffeine), காரமான அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகள், மன அழுத்தம் மற்றும் பதற்றம், வழக்கமான ஆன்டிபயோடிக் பயன்பாடு போன்றவற்றால் ஐபிஎஸ் கோளாறு தூண்டப்படலாம்.

ஐபிஎஸ் காரணமாக சாப்பிட்டவுடன் மலம் கழிப்பதற்கான உந்துதல் மட்டுமல்லாது,

  • வாயுத் தொல்லை
  • சோர்வு மற்றும் ஆற்றல் இல்லாமை
  • குமட்டல்
  • முதுகுவலி
  • அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல்,
  • முழுமையாக சிறுநீர் கழிக்கவில்லை என்ற உணர்வு ஆகியவையும் ஏற்படலாம் என தேசிய சுகாதார சேவை கூறுகிறது.

உலக மக்கள் தொகையில் 5 முதல் 10% பேருக்கு இரிடபிள் பௌல் சிண்ட்ரோம் உள்ளது என்றும், அவ்வாறு ஐபிஎஸ் உள்ளவர்களில் மூன்றில் ஒருவர் பதற்றம் அல்லது மனச்சோர்வை எதிர்கொள்கின்றனர் என்றும் ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.

"இரிடபிள் பௌல் சிண்ட்ரோம் என்பது பலருக்கும் இருக்கும் ஒன்று தான். உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருந்தாலும், வயிற்றில் இத்தகைய அசௌகரியம் ஏற்படும். இது ஐபிஎஸ்- சி (IBS- Constipation), அதாவது மலச்சிக்கலுடன் வரும் வயிற்று வலி மற்றும் ஐபிஎஸ்- டி (IBS- Diarrhea) வயிற்றுப்போக்குடன் ஏற்படுவது என இருவகைப்படும்" என்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவரும் உணவு ஆலோசகருமான அருண்குமார்.

"உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தத்திற்கு தீர்வு காண்பது, போன்ற வழிகளில் இரிடபிள் பௌல் சிண்ட்ரோம் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம். மிகவும் கடுமையான அறிகுறிகள் தோன்றினால் மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சை பெறுவது சிறந்தது." என்று மருத்துவர் மகாதேவன் கூறுகிறார்.

குடல் நோய்களின் அறிகுறியாக இருக்கலாமா?

"பல வருடங்களாக ஒருவர் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மலம் கழிப்பதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால், அதனால் அவருக்கு உடல் அல்லது மன அளவில் எந்த அசௌகரியமும் இல்லை என்றால், அது பிரச்னை இல்லை. ஆனால், திடீரென அத்தகைய உந்துதல் ஒருவருக்கு தொடர்ந்து ஏற்படுகிறது என்றால், அதைத் தான் கவனிக்க வேண்டும்," என்கிறார் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவர் ரவீந்திரன் குமரன்.

"தினமும் அலுவலகம் அல்லது பள்ளி/கல்லூரி செல்பவர்கள் இப்படி அடிக்கடி மலம் கழிப்பதை அசௌகரியமாக உணரலாம், அவர்கள் எங்களை அணுகினால் சில வாழ்க்கை முறை மாற்றங்களைப் பரிந்துரைப்போம். மற்றபடி, ஒருநாளைக்கு இத்தனை முறை தான் மலம் கழிக்க வேண்டுமென்று எந்த வரைமுறையும் இல்லை. தொடர்ச்சியாக மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறலாம்," என்று கூறுகிறார் அவர்.

இதே கருத்தை வலியுறுத்தும் மருத்துவர் மகாதேவன், "உங்களது வழக்கமான மலம் கழிக்கும் செயல்முறையில் தொடர்ச்சியாக ஒரு மாற்றத்தைக் காணும்போது அதை புறக்கணிக்கக் கூடாது. உதாரணத்திற்கு, இரவில் தூக்கத்தின் நடுவே, மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு அடிக்கடி விழித்தெழுவது ஒரு ஆபத்தான மாற்றம். அது வேறு ஏதேனும் நோய்களுக்கு அறிகுறியாக இருக்கலாம்." என்கிறார்.

உங்கள் மலத்தில் சளி (Mucus- வெள்ளை நிறமாகத் தோன்றலாம்) வருவது அல்லது ரத்தம் வருவது, உடல் எடை குறைவது, தொடர்ச்சியான மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்றவை மலக்குடல் நோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம், அதற்கு மருத்துவரை அணுகுவது சிறந்தது என்றும் அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு