You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானுடன் மோதல் போக்கு - இந்தியாவில் சமூக ஊடக சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறதா?
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடத்திய பதில் தாக்குதல் என இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இது பற்றி சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடுவோர் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மதரீதியான மோதல்களுக்கு வழி வகுக்கும் என்று கருதக்கூடிய பதிவுகளை இடும் தனிநபர்களின் சமூக ஊடகக் கணக்குகள் தமிழக காவல்துறையின் பரிந்துரையின் பேரில் முடக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் இந்தியா மேற்கொண்ட தாக்குதலில் அங்குள்ள பொதுமக்கள் உயிரிழந்ததாக வெளியான தகவல்கள் குறித்து சமூக ஊடகத்தில் கருத்து வெளியிட்ட தனியார் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகள் குறித்து ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வருகின்றன. பொது மக்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பவை என்று ஒரு தரப்பும், தேசிய பாதுகாப்புக்காக எடுக்கப்படும் நடவடிக்கையை விமர்சிப்பது தேவையற்றது என்று மற்றொரு தரப்பும் விவாதித்து வருகின்றன. ஆனால் சட்ட நிபுணர்கள், இந்திய அரசுக்கு இதற்கான அதிகாரம் இருப்பதாகக் கூறுகின்றனர்.
பல்வேறு விதமான கருத்துகள்
ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக 'ஆபரேஷன் சிந்துார்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்தது.
பயங்கரவாத இலக்குகளை மட்டுமே குறிவைத்து 9 இடங்களில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார். இதற்கு எதிராக பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று ஜம்மு உட்பட மூன்று பகுதிகளில் நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்துள்ளது. இருப்பினும் இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்காமல் மறுப்பு தெரிவித்துவிட்டது.
பாகிஸ்தான் மீதான தாக்குதலில் தீவிரவாதிகள் மட்டுமே குறிவைத்து, கொல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். ஆனால், இந்திய தாக்குதலில் பொதுமக்களும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. அந்தத் தகவலை மறுத்துள்ள விக்ரம் மிஸ்ரி, ''பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே தீவிரவாதிகள்தான். பொதுமக்கள் இல்லை'' என்று மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.
இரு நாட்டு அரசுகளும் இதுகுறித்து வெவ்வேறு கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில், இந்திய அரசின் நடவடிக்கைகளை ஆதரித்தும் எதிர்த்தும் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் விவாதங்களும், விமர்சனங்களும் சூடுபிடித்துள்ளன.
எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இதுகுறித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையே, பாகிஸ்தான் மீதான தாக்குதலை விமர்சிப்பவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.சில இடங்களில் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் மனுக்களையும் கொடுத்து வருகின்றனர்.
சமூக ஊடக பதிவால் உதவிப் பேராசிரியர் பணியிடை நீக்கம்
பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத் தாக்குதலை விமர்சித்துக் கருத்துப் பதிவிட்ட சென்னை எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SRMIST) கீழ் இயங்கும் காட்டாங்குளத்தூர் வளாகத்தில் உள்ள தொழில் மைய இயக்குநரகத்தின் உதவிப் பேராசிரியரான லோரா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் தனது முகநுால் பக்கத்தில், இந்திய அரசு, தேர்தல் நோக்கங்களுக்காக ராணுவ நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியிருந்தார். பாகிஸ்தானில் பொதுமக்கள் உயிரிழந்ததாக வெளியான செய்திகளைக் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்ததோடு, இந்தியாவின் தாக்குதலை விமர்சிக்கும் வகையிலும் பதிவிட்டிருந்தார்.
மற்றொருபுறம், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சின்னங்களுடன் சமூக ஊடகத்தில் கருத்துப் பதிவிட்டதாக அஷ்ரஃப் அலி என்ற இளைஞர், கோவை மாநகர காவல்துறையால் மே 7ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது பிஎன்எஸ் 153 ஏ (இனம், மதம், மொழி அடிப்படையில் குழுக்களுக்கு இடையில் பகைமையைத் துாண்டுதல்) பிரிவின் கீழ் செல்வபுரம் போலீசாரால் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்படியாக, பாகிஸ்தான் மீதான தாக்குதல் குறித்து சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்ட 60க்கும் மேற்பட்ட தனி நபர்களின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்குவதற்கு கோவை சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இணைய சுதந்திரம் - இந்தியாவின் நிலை என்ன?
தமிழகம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், ஆனால் அது அலுவல்ரீதியான நடவடிக்கை இல்லையென்றும் பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை உயரதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் கருத்து சுதந்திரத்தை வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 19க்கு எதிரானது என்கிறார் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் நிர்வாகியும் வழக்கறிஞருமான பாலமுருகன். இந்த நடவடிக்கைகள், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இணைய சுதந்திரத்தைப் பற்றிய விவாதங்களை எழுப்பியுள்ளன.
''வியட்நாம் போரிலிருந்து போருக்கு எதிரான இயக்கம் உலகளாவிய இயக்கமாக இயங்கி வருகிறது. ஓர் அரசின் எல்லாக் கொள்கைகளையும், எல்லா நடவடிக்கைகளையும் மக்கள் ஏற்க வேண்டும் அல்லது ஆதரிக்க வேண்டுமென்பது கட்டாயமில்லை. அது குடிமக்களின் அடிப்படை உரிமை. அதை தேசத் துரோகம், பிரிவினைவாதம் என்ற பார்வையில் பார்க்கக்கூடாது. போரால் ஏற்படும் பாதிப்பை விளக்கிய பெண் பேராசிரியர் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை கடுமையாகக் கண்டிக்கத்தக்கது'' என்றார் அவர்.
தனிநபர்களின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்குவது பற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய சட்ட நிபுணர்கள், முகநுால் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள், சுயக்கட்டுப்பாடு என்று ஒரு வரையறையை வகுத்துள்ளதாகவும், அதை மீறும்போது அவர்களே அந்தக் கணக்கை முடக்கி விடுவதாகவும் தெரிவித்தனர்.
சில நேரங்களில் மிக மோசமாக, இரு தரப்புக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்தை வெளியிடும்போது மட்டுமே காவல்துறை தன்னிச்சையாகத் தலையிட்டு அல்லது ஏதாவது ஒரு புகாரின் பேரில் இவற்றை முடக்குகின்றன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
''பார்வையாளராக மட்டும் இருப்பதே நல்லது'
ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் அரசின் நடவடிக்கைகளை ஆதரிக்க வேண்டிய கட்டாயம், நாட்டு மக்களுக்கு இருப்பதாகவும், அதனால் அதுகுறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பதும் அவசியம் என்கிறார் முன்னாள் இந்திய விமானப்படை அதிகாரியும், வழக்கறிஞருமான ஜெகதீசன்.
''பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமென்ன என்பது பற்றி மக்களிடம் நிறைய கேள்விகள் இருக்கின்றன. ஆனால் இதுபோன்று பதிலடி தாக்குதல் நடவடிக்கை எடுக்கப்படும்போது, அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு இருக்கிறது. இல்லாவிடில் அது எதிராளியின் கரத்தைப் பலப்படுத்துவதாகக் கருதப்படும்'' என்கிறார் அவர்.
மேலும் அவர் இப்போதைய சூழலில், ''அரசின் நடவடிக்கைகளைப் பற்றி இப்போது விமர்சிப்பது தேவையில்லை. எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் பார்வையாளராக இருப்பதே நல்லது.'' என்கிறார்.
போரைப் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது ஒரு தனிமனிதரின் அடிப்படை உரிமை என்று கூறும் மக்கள் சிவில் உரிமைக் கழக நிர்வாகி பாலமுருகன், ''பாரதிய ஜனதா அரசு தேவையின்றி போரை உருவாக்குவதாகக் கூறுவது ஒரு தனிப்பட்ட மனிதரின் கருத்து. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து சமூக ஊடகத்தில் பதிவிடுவதை தனிப்பட்ட கருத்து என்று கூற முடியாது. இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது'' என்கிறார்.
அதோடு, "கோவிட் பெருந்தொற்றை காரணமாகக் காண்பித்து, தனிமனிதர்களின் பல்வேறு அடிப்படை உரிமைகளைத் தடுத்தது போல, போரைக் காரணம் காட்டி அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடி நிலையை ஏற்படுத்தி அடிப்படை உரிமைகளைப் பறிக்க அரசு முயற்சி செய்யும்," என்று கூறும் பாலமுருகன், "யுத்தம் என்பது சமூக சமத்துவ நிலையைச் சீர்குலைக்கும். அதை விமர்சிப்பதில் தவறில்லை," என்கிறார்.
'முடக்குவதற்கு அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது'
இரு நாடுகள் இடையே பதற்றம் நிலவும் சூழலில், இந்தியாவில் செயல்படும் 8,000க்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்குமாறு என்று இந்திய அரசிடம் இருந்து நிர்வாக உத்தரவுகளை எக்ஸ் சமூக ஊடக தளம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இவற்றில் ஊடக நிறுவனங்கள் சிலவற்றின் கணக்குகளும் அடக்கம் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், இந்தியாவில் சமூக ஊடகங்களை, இணைய சேவைகளை முடக்குவதற்கு இந்திய அரசுக்கு முழு சட்ட அதிகாரம் இருப்பதால், இணைய சுதந்திரம் என்ற பார்வையில் இதைப் பார்க்கக்கூடாது என்கிறார் இணைய வழி குற்றவியல் சட்ட நிபுணர் கார்த்திகேயன். கடந்த 2000ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் இது குறிப்பிடப்பட்டு இருப்பதை அவர் பிபிசி தமிழிடம் விவரித்தார்.
''அந்தச் சட்டத்தின் 69ஏ பிரிவின்படி, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்படின், இணைய வழியில் நடக்கும் எந்தச் செயல்பாட்டையும் அரசு கண்காணிக்கலாம், ஊடுருவலாம், குறுக்கீடு செய்யலாம்.
மேலும், இந்தச் சட்டப்பிரிவின் மூலம் எந்த இணைய செயல்பாட்டையும் தடுக்கும் அதிகாரம் அரசுக்கும் சிபிஐ, உளவுத்துறை போன்ற அரசாங்க அமைப்புகளுக்கும் தரப்பட்டுள்ளது'' என்றார் கார்த்திகேயன்.
ரா, சிபிஐ உள்ளிட்ட உளவுத்துறை சார்ந்த பல்வேறு ஏஜென்சிகளுக்கு இந்த அதிகாரம் தரப்பட்டதைக் குறிப்பிடும் கார்த்திகேயன், காவல்துறையைப் பொறுத்தவரை, டெல்லி மாநகர காவல் ஆணையருக்கு மட்டும் இணைய சேவைகளை முடக்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"மாநில அரசுகளின் சைபர் கிரைம் போலீசார், இதற்காகப் பரிந்துரைகளை மட்டுமே தர முடியும், கணக்குகளை முடக்கும் முடிவை அந்தந்த சமூக ஊடக நிறுவனங்கள்தான் மேற்கொள்ள முடியும்" என்பதைக் குறிப்பிட்ட அவர், ஆனால் டெல்லி மாநகர காவல்துறை ஆணையரால் ஒரு சமூக ஊடகத்தையே முற்றிலும் முடக்க முடியும் என்கிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு