You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னையில் லிவ்-இன் உறவில் இருந்த பெண் சாவில் மர்மம் - என்ன நடந்தது? இன்றைய முக்கியச் செய்தி
குறிப்பு: இதில் இடம் பெற்றிருக்கும் தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
நீங்களோ அல்லது உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பது தெரிய வந்தால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு மையத்தின் உதவி எண்ணான 044-24640050-க்கு அழைப்பு விடுக்கவும்.
மாநில சுகாதாரத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தற்கொலை தடுப்பு மையத்திற்கு அழைப்புவிடுக்க 104 என்ற எண்ணையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
ஜூன் 7 அன்று தமிழ்நாட்டில் செய்தித்தாள்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
சென்னை கொடுங்கையூரில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் தம்பதியாக வாழ்ந்து வந்த நிலையில், பெண் பொறியாளர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர் நித்யா (26). மென் பொறியாளரான இவர், அம்பத்தூரில் தங்கி அப்பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நித்யாவும், கொடுங்கையூர் வெங்கடேஷ்வரா காலனி 6-ஆவது தெருவைச் சேர்ந்த பாலமுருகனும் (28) கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பாலமுருகன், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பட்டப் படிப்பு முடித்துவிட்டு, வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தார்.
நித்யா பாலமுருகனை திருமணம் செய்து கொள்ளாமல் கொடுங்கையூர் ஆசிரியர் காலனி 5-ஆவது தெருவில் ஒரு வாடகை வீட்டில் இரு மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நித்யா, தனது தந்தை பாஸ்கர் அங்கு வருவதாகவும், அவர் வரும்போது பாலமுருகனை அங்கு இருக்க வேண்டாம் எனவும் வியாழக்கிழமை கூறினாராம். இதையடுத்து பாலமுருகன் அங்கிருந்து வெளியே சென்றுள்ளார்.
இதன் பின்னர் அன்று இரவு வீட்டுக்கு பாலமுருகன் திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. வீட்டுக்குள் சென்று பார்த்த போது நித்யா உயிரிழந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே அவர், கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நித்யா சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே போலீஸார்அங்கு நடத்திய விசாரணையில்,வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த நித்யாவின் 25 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிந்து, நித்யா எப்படி இறந்தார், அவரது தங்க நகைகளை யார் எடுத்துச் சென்றது என விசாரணை மேற்கொண்டுள்ளனர்," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவெக - தேமுதிக கூட்டணியா? விஜய பிரபாகரன் பேச்சு
"தவெக-தேமுதிக கூட்டணி அமைப்பது குறித்து கடலூரில் அடுத்த ஆண்டு ஜன. 9-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்தார்," என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
"கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டிப்பட்டிக் கோட்டை பகுதியில் தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேமுதிக வளர்ச்சியை நோக்கிச் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், தற்போது தேமுதிகவின் வளர்ச்சி மட்டுமே எங்கள் நிலைப்பாடாக உள்ளது. தவெக-தேமுதிக கூட்டணி அமையுமா என்பது குறித்து அடுத்த ஆண்டு ஜன. 9-ம் தேதி கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில், பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு