'யோனியில் புகையிலை' - மேற்கு ஆப்பிரிக்க பெண்கள் இந்த போதைப் பொருளுக்கு அடிமையானது ஏன்?

- எழுதியவர், அஜிஜாத் ஓலாவோலுவா
- பதவி, மூத்த செய்தியாளர், மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து
(எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உள்ள சில தகவல்கள் உங்களை கலங்கச் செய்யலாம். 'டபா' அனுபவங்களை விவரித்த நபர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)
இந்தக் கட்டுரையில் உள்ள பெண்ணின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக அவரது பெயரை மாற்றியுள்ளோம். இக்கட்டுரையில் அவர் 'ஐஷாத்து' என்று அழைக்கப்படுகிறார்.
ஐஷாத்து.. காம்பியாவில் வசிக்கும் ஒரு விதவைத் தாய்.
தான் கடந்த 15 ஆண்டுகளாக அவ்வப்போது 'டபா' பயன்படுத்தி வந்ததாகவும், இறுதியில் அதற்கு அடிமையாகிவிட்டதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
உள்ளூரில் 'டபா' என அழைக்கப்படும் புகையிலைப் பொடியை மேற்கு ஆப்பிரிக்காவில் ஆண்கள் மற்றும் பெண்கள் பல தசாப்தங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனை மூக்கின் வழியாக உறிஞ்சுதல், புகைபிடித்தல், வாயில் போட்டு மெல்லுதல் போன்ற முறைகளில் பயன்படுத்துகின்றனர்.
ஆனால்... ஐஷாத்து மற்றும் பல பெண்கள் 'டபா'-வை ரகசியமாக வாங்குகின்றனர்.
ஐஷாத்து மற்றும் பல பெண்கள் புகையிலைப் பொடியால் செய்யப்பட்ட பசையை தங்கள் யோனிப் பாதையில் வைத்துக்கொள்கின்றனர்.
ஐஷாத்து டபாவை இவ்வாறாகப் பயன்படுத்துவதற்கு அடிமையானதாக கூறினார். அவ்வாறு செய்ததால் தனது வாழ்க்கையில் எவ்வளவு இழப்புகளைச் சந்தித்த்தார் என்பதையும் அவர் விவரித்தார்.
'டபா' எதிர்ப்புப் பிரச்சாரகர்களின் கூட்டத்தில் பங்கேற்ற ஐஷாத்துவை ஒரு சமூக சுகாதார மையத்திலுள்ள செவிலியர் அலுவலகத்திற்கு அருகில் நாங்கள் சந்தித்தோம். தான் ஏன் இந்தப் பழக்கத்தை ஆரம்பித்தோம் என்று தாம் மிகுந்த வருத்தப்படுவதாக அவர் கூறினார்.
காம்பியா நாடு முழுவதும் உள்ள விநியோகஸ்தர்களின் வலைப்பின்னல் மூலம் 'டபா' ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது.
இது உள்ளூர் சந்தைகளில் தாராளமாகக் கிடைக்கிறது. பெரும்பாலும் இதை வாங்குவதும், விற்பதும் பெண்களே.
கடந்த சில ஆண்டுகளில் 'டபா'-வின் வடிவம் மாறிவிட்டது. இப்போது இந்தப் புகையிலைப் பொடியில் பல்வேறு இதரப் பொருட்களைக் கலந்து பசையாகத் தயாரிக்கின்றனர்.

'கர்ப்பப்பை புற்றுநோய் வந்தது'
தான் 2021-இல் கர்ப்பமானபோது, இந்த 'டபா' பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்பது தனக்குத் தெரியும் என்று ஐஷாத்து கூறினார்.
இதற்கு முந்தைய கர்ப்பக் காலங்களில் டபா பயன்படுத்துவதை நிறுத்திய ஐஷாத்து, இந்த முறை மட்டும் நிறுத்தவில்லை.
இதன் விளைவாக, தனது கர்ப்பம் கலைந்ததற்கு டபாவே காரணம் என்று அவர் கூறினார்.
குழந்தையின் மரணத்திற்கு 'டபா' பயன்பாடே நேரடி காரணம் என்று ஐஷாத்து ஆழமாக நம்புகிறார்.
கருவில் குழந்தையின் அசைவுகள் நின்றுவிட்டதால் அவர் மருத்துவரிடம் சென்றார்.
"குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர் என்னிடம் கூறினார். அதனால்தான் அவர்கள் சிசேரியன் செய்ய வேண்டியிருந்தது. வெளியே எடுத்தபோது எனது குழந்தையின் தோல் கருகிப்போய் இருந்தது. நான் பயன்படுத்திய 'டபா'தான் எனது குழந்தையைக் கொன்றுவிட்டது என்பதை அப்போதுதான் நான் புரிந்துகொண்டேன்" என்று ஐஷாத்து வேதனையுடன் கூறினார்.
இருப்பினும்.. அவர் கூறிய காரணம் மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை.
தான் 'டபா' பயன்படுத்திய ஒவ்வொரு முறையும் தனது யோனிக்குள் எரிச்சல் உண்டாவதாக ஐஷாத்து கூறினார்.
எடை குறைவதற்கும், கர்ப்பம் தரிப்பதற்கும் உதவும் என்ற நம்பிக்கையில் சில ஆண்டுகளுக்கு முன்பு 'டபா' பயன்படுத்தத் தொடங்கியதாக ஐஷாத்து கூறினார். ஆனால், அது இந்த இரண்டிற்கும் எவ்விதத்திலும் பயன்படவில்லை என்றார்.
"டபா உங்கள் உடலுக்குள் நுழையும்போது, அது உங்களைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்கிறது. நீங்கள் இயல்பாக உணர வேண்டும் என்றால் அதனைப் பயன்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். டபா எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது, ஆனால் என்னுள் இருந்த பாலியல் இச்சையை குறைத்துவிட்டது" என்று ஐஷாத்து கூறினார்.
"டபாவிற்கு அடிமையானேன், ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை அதனை யோனியில் தடவிக் கொள்வேன். குழந்தையை இழந்த பிறகு டபா பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். ஆனால் அப்போதே எனக்குக் கர்ப்பப்பை புற்றுநோய் இருந்தது எனக்குத் தெரியாது" என்று விவரித்தார்.
தனக்குப் புற்றுநோய் இருப்பது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
'மூன்று நாட்கள் இல்லாதபோது பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது'
மற்றொரு இடத்தில், ஒரு மாமரத்தின் அடியில் ரஷீதா (அவரது உண்மையான பெயர் அல்ல) அமர்ந்திருந்தார். அவரும் டபாவினால் பாதிக்கப்பட்டவர்.
தான் ஏழாண்டுகளாக டபா பயன்படுத்தி வருவதாகவும், தனது கணவருக்கு இந்த விஷயம் தெரியாது என்றும் ரஷீதா பிபிசியிடம் கூறினார்.
இந்த டபா பழக்கம் தனது வாழ்க்கையை எப்படி அழித்தது என்பதை விவரிக்கும்போது, அவர் தனது கண்ணீரை அடக்க முயன்றார்.
மருத்துவமனையில் இறந்த தனது அண்ணி குறித்து நினைவு கூர்ந்த அவர், "நான் மூன்று நாட்கள் அவருடன் இருக்க வேண்டியிருந்தது. ஆனால் டபா எடுத்துச் செல்ல மறந்துவிட்டேன். எதன் மீதும் கவனம் செலுத்த முடியாத அளவு பைத்தியம் பிடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது," என்று கூறினார்.
டபா தனது வாழ்க்கையில் அத்தியாவசியப் பொருளாக எப்படி மாறிவிட்டது என்பதை ரஷீதா விவரித்தார்.
'அது என் உடலைச் சுத்தம் செய்யும் என்று சிலர் கூறினார்கள்...' என்றார் அவர்.
டபாவை முதன்முறை யோனிப் பாதையில் பயன்படுத்துவது என்பது ஒரு பயங்கரமான அனுபவம் என்று இதனைப் பயன்படுத்தும் பெண்கள் கூறுகின்றனர்.
"நான் முதன்முறை பயன்படுத்தியபோது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மயக்கமடைந்தேன், இனி ஒருபோதும் இதனைப் பயன்படுத்தக் கூடாது என்று முடிவு செய்தேன். ஆனால் இரண்டாவது முறை பயன்படுத்தியபோது வாந்தி வந்தது. இருப்பினும், இதனை எனக்கு அறிமுகப்படுத்திய நபர், இது என் உடலைச் சுத்தம் செய்யும் என்றும், எனவே தொடர்ந்து பயன்படுத்துமாறும் கூறினார்" என்று ஐஷாத்து விவரித்தார்.
ரஷீதாவும் அதே கருத்தைத் தெரிவித்தார்.
"எனக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது, உடல் நடுங்கத் தொடங்கியது. மலேரியா வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதன் பிறகு நான் மயக்கமடைந்தேன். இரண்டாவது நாளும் அதே அனுபவம் ஏற்பட்டது. ஆனால் மூன்றாவது நாளில் அது சாதாரணமாகிவிட்டது" என்று கூறினார்.

ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கை
ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரித்த போதிலும், காம்பியா நாட்டில் 'மன அழுத்தத்தைக் கையாள, ஆற்றல் அல்லது ஆரோக்கியத்தை பெறுவதற்கு ஒரு பாரம்பரிய நிவாரணியாக' 'டபா' இன்னும் பிரபலமாக உள்ளது.
டபா விநியோகஸ்தர்கள், கடையில் இதர பொருட்களை வெளியே காட்சிக்கு வைத்துவிட்டு, ரகசியமாக டபா வியாபாரம் செய்கின்றனர். இவற்றின் விற்பனை மற்றும் கொள்முதலில் ரகசியக் குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர்.
கிராமப்புறங்களில் வயதான பெண்களை முன்னிறுத்தி டபா விற்பனை செய்யப்படுகிறது.
ரமத் என்ற பெண், நார்த் பேங்க் பகுதியிலுள்ள ஒரு சிறிய நகரத்தில் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக டபாவை ரகசியமாக விற்பனை செய்வதாக பிபிசியிடம் தெரிவித்தார்.
டபா கலவையைச் சாதாரணமாக நைலான் கவர்களில் சுற்றுவார்கள். அதன் கடுமையான வாசனை வெளியே வராமல் இருக்கச் சில நேரங்களில் கூடுதலாகக் காகிதத்தையும் சுற்றுவார்கள் என்று ரமத் விவரித்தார். ஒரு பாக்கெட்டின் விலை 15 தலாசி (இந்திய மதிப்பில் சுமார் 18 ரூபாய்) இருக்கும் என்றார்.
டபா கலவையை எதைக் கொண்டு தயாரிக்கிறார்கள் என்று ரமத்திற்குத் தெரியாது, ஆனால் அவரது வியாபாரம் மட்டும் ஜோராக நடக்கிறது. தான் விற்பனை செய்யும் ஒவ்வொரு ஐந்து கிலோ டபா பொடியின் மீதும் அவருக்கு 200 சதவீத லாபம் கிடைக்கிறது.
இதனை விற்கத் தொடங்கியபோது, அது இந்தளவுக்கு தன்னை அடிமைப்படுத்தும் என்று தான் ஊகிக்கவில்லை என்று அவர் கூறினார்.
"ஒருவேளை எனக்கு லாபம் தரக்கூடிய வேறொரு தொழில் கிடைத்தால், இதனை விற்பதை நிறுத்திவிடுவேன். ஏனெனில், என் சக பெண்களுக்கு இனிமேல் தீங்கு விளைவிக்க எனக்கு விருப்பமில்லை" என்று ரமத் கூறினார்.
"ஒருமுறை தொற்றைக் குணப்படுத்த டபா பயன்படுத்தினேன், ஆனால் நான் கிட்டத்தட்ட இறந்துவிடும் நிலைக்குச் சென்றேன். அந்த நாளிலிருந்து மீண்டும் எப்போதும் பயன்படுத்தவில்லை. எனது வாடிக்கையாளர்களில் சிலரும் தங்களுக்கும் இது போன்ற அனுபவம் ஏற்பட்டதாகக் கூறினர்" என்று அவர் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் டபா விநியோகம்
காம்பியா அரசு 2020-லேயே டபாவை ஆபத்தானது என்று அறிவித்தது. ஆனால் சட்டங்கள் சரியாக அமல்படுத்தப்படாததால் டபா இன்னும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. இதன் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று காம்பியா குழந்தைகள் மற்றும் சமூக நல அமைச்சகத்தின் துணை நிரந்தரச் செயலாளர் கஜாலி சோன்கோ கூறினார்.
டபா விநியோக நெட்வொர்க் காம்பியா நாட்டின் எல்லைகளைத் தாண்டி, சர்வதேச அளவில் விரிவடைந்துள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
கினி-பிசாவு, சியரா லியோன், செனகலிலுள்ள காசமான்ஸ் போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்து வியாபாரிகள் டபாவை வரவழைக்கின்றனர்.
காம்பியா அரசு 2020-இல் டபாவை பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தான பொருளாக அடையாளம் கண்டது. ஆனால் கள அளவில் இந்தக் கட்டுப்பாடுகளின் தாக்கம் பெரியதாக இல்லை. வியாபாரிகளையும், நுகர்வோரையும் தடுக்க இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
டபா பயன்பாடு சட்டவிரோதமானது அல்ல என்றாலும், புகையிலை தயாரிப்புகளைப் பயன்படுத்தச் சட்டபூர்வமான வயது 18 ஆகும்.
இருப்பினும், குழந்தைகளும் டபா பயன்படுத்துவதாக 'மதர்ஸ் ஹெல்த் பவுண்டேஷன்' போன்ற அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
"காம்பியா பெண்களின் ஆரோக்கியத்திற்கு டபா தீங்கு விளைவிப்பதாக அரசு கண்டறிந்துள்ளது. இதனைத் தடுக்கத் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும், கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்கவும் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று கஜாலி சோன்கோ கூறினார்.

ஆரோக்கியத்தில் தீவிர பாதிப்பு
மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் (காம்பியா பிரிவு) தொற்றுநோயியல் நிபுணராகப் பணிபுரியும் மருத்துவர் பாய் சாம், டபா பாதிப்பு குறித்து 2023-இல் ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார்.
இதர புகையிலை சார்ந்த பொருட்களின் பாதிப்பு குறித்த ஏற்கனவே உள்ள தகவல்களின் அடிப்படையில், டபாவும் "ஆரோக்கியத்தில் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது" என்று அவரது குழுவினர் கண்டறிந்தனர்.
மருத்துவர் சாம் தனது அடுத்தகட்ட ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக டபா கலவைகளின் மாதிரிகள் மீது ரசாயன பகுப்பாய்வு செய்து வருகிறார். இதற்காக அவர் 42 பெண்கள் மற்றும் 15 ஆண்களை (இவர்களில் பெரும்பாலானோர் தற்போது டபா பயன்படுத்துபவர்களின் துணைகள் அல்லது முன்னாள் பயனர்கள்) நேர்காணல் செய்தார்.
பெண்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோரிடம் நிக்கோட்டின் நச்சுத்தன்மையின் அறிகுறிகள் உள்ளதாக மருத்துவர் சாம் தெரிவித்தார். வாந்தி, வயிற்றுப்போக்கு, கட்டுப்பாடற்ற சிறுநீர் கழித்தல், எரிச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பதாகக் கூறினார்.
அவர்களில் சில பெண்கள், தாங்கள் புகையிலைப் பொடியில் காஸ்டிக் சோடா கலப்பதாகக் கூறினர்.
மருத்துவர் சாம் குழுவினர் பரிசோதித்த மாதிரிகளில், அதிகப்படியான அளவில் நிக்கோட்டின் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் 'புகையிலை சார்ந்த என்-நைட்ரோசமைன்' (TSNA) என்ற ரசாயனங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
டபா மாதிரிகளில் 3.63 மிகி/கிலோ வரை ஈயம் இருப்பது ஆய்வகப் பரிசோதனைகளில் தெரியவந்தது.
உலக சுகாதார அமைப்பு உண்ணக்கூடிய இலைகளுக்கு நிர்ணயித்துள்ள பாதுகாப்பான அளவான 0.3 மிகி/கிலோ-வை விட இது 10 மடங்கு அதிகம்.
எஸ்ஸாவ், பஞ்சுல் ஆகிய பகுதிகளிலிருந்து மேலும் சில டபா மாதிரிகளை பிபிசி சேகரித்து, பகுப்பாய்விற்காக லாகோஸ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியது.
அந்தப் பரிசோதனை முடிவுகளில் நிக்கோட்டின் தொடர்பான 'பிரிடின் டெரிவேடிவ்ஸ்' எனும் கலவைகள் இருப்பது தெரிந்தது. அதுமட்டுமின்றி, இதில் உள்ள ஈயத்தின் அளவு உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள பாதுகாப்பான அளவை விட மிக அதிகமாக இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












