You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருப்பதி கூட்ட நெரிசல்: 48 பேர் காயம், 6 பேர் மரணம் - பாதிக்கப்பட்டவர் கூறுவது என்ன?
வைகுண்ட ஏகாதசி நாளை முன்னிட்டு திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டிக்கெட்டுகளை வாங்க மக்கள் முண்டியடித்துச் சென்றதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 நபர்கள் உயிரிழந்ததாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஜனவரி மாதம் 8ம் தேதி அன்று, புதன்கிழமை, டிக்கெட்டுகள் வாங்க பக்தர்கள் காத்திருந்தபோது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் உடனடியாக அங்கே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
வியாழக்கிழமை அன்று தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் திருமலை திருப்பதி கோவிலில் உள்ள 8 இடங்களில் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, புதன்கிழமை மாலையன்று அதிகளவில் பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
திருப்பதியில் உள்ள ராமநாயுடு பள்ளி மற்றும் பைராகிபெட்டெடாவில் அமைந்துள்ள விஷ்ணு நிவாசம் கேந்திராஸ் ஆகிய இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் குறைந்தது 48 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் எஸ்.வி. ஐ.எம்.எஸ் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், நர்சிபட்டணத்தைச் சேர்ந்த புத்தேட்டி நாயுடு பாபு (51) , விசாகபட்டனத்தை சேர்ந்த ரஜினி (47) மற்றும் லாவண்யா (40), பெல்லாரியை சேர்ந்த நிர்மலா (50) மற்றும் ஷாந்தி (34), சேலத்தை சேர்ந்த மல்லிகா (49) ஆகியோர் இந்த அசம்பாவிதத்தால் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவரின் குற்றச்சாட்டு
"காலை 10 மணிக்கு நங்கள் இந்த வரிசைக்கு வந்தோம். இங்கு எந்த விதமான பாதுகாப்பு முன்னேற்பாடும் செய்யப்படவில்லை," என்று கூறுகிறார் பெல்லாரியில் இருந்து வந்து கூட்ட நெரிசலில் சிக்கிக் காயமடைந்த ஸ்ரீதேவி.
"கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அதைக் கட்டுப்படுத்த யாரும் இல்லை. பெண்களுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள்கூட அங்கு இடம்பெறவில்லை. நாங்கள் பெல்லாரியில் இருந்து வந்துள்ளோம், காலையில் இருந்து இந்த பூங்காவில் அடைத்து வைக்கப்பட்டுள்ளளோம். அடுத்த நாள் மாலை வரை உணவின்றித் தவித்தோம்" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சந்திரபாபு நாயுடு அறிக்கை
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில், டிக்கெட்டுகள் வாங்கச் சென்று கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகளிடம் பேசிய அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், மாவட்ட மற்றும் தேவஸ்தான நிர்வாகிகளிடம் தொடர்ச்சியாக இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை பெற்று வருவதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் அனிதா, திருப்பதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுப்பா ராயுடுவை தொடர்புகொண்டு இந்த அசம்பாவிதத்திற்கான காரணங்களை விசாரிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிரதமர் மோதி இரங்கல்
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பிரதமர் மோதி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் கூடிய விரைவில் குணமடைய தான் பிராத்தனை செய்வதாக தெரிவித்த அவர், பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் வேண்டிய அனைத்து உதவிகளையும் ஆந்திர அரசு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இரங்கல் தெரிவித்த ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அரசு விரைந்து செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான, சிறப்பான மருத்துவ சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.
விசாரணை நடத்த வேண்டும்
ஆந்திரப் பிரதேசத்தின் பாஜக தலைவர் டக்குபதி புரந்தேஸ்வரி, உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
டிக்கெட்டுகள் வாங்குவதற்காக அதிகமாக மக்கள் கூடிய இடத்தில் ஏற்பட்ட உயிரிழந்த சம்பவம் கேட்டு வேதனை அடைந்ததாக தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சைகளை வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)