You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோதியின் சீனப் பயணம் பற்றி அமெரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?
- எழுதியவர், ராஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
"சீனா எந்தப் போரிலும் ஈடுபடாமல் பல போர்களை வென்றுள்ளது, அமெரிக்கா எந்தப் போரையும் வெல்லாமல் பல போர்களில் ஈடுபட்டுள்ளது" என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது "தி இந்தியா வே" புத்தகத்தில் எழுதியுள்ளார்.
ஜெய்சங்கர் அமெரிக்காவையும் சீனாவையும் நன்றாகப் புரிந்து வைத்துள்ளார். ஆனால் கடினமான நேரங்களில் புரிதல் இருந்தாலும் உங்களால் தீர்க்கமாக செயல்பட முடிவதில்லை. டிரம்பின் வரிகளுக்குப் பிறகு இந்தியா அத்தகைய சூழ்நிலையை தான் எதிர்கொண்டு வருகிறது.
பிரதமர் மோதியின் சீனப் பயணம் பற்றி அமெரிக்காவில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான உறவு மோசமடைந்து வரும் பின்னணியில் இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்க ஊடகங்கள் இந்தியாவுக்கு எச்சரிக்கையும் செய்கின்றன.
அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்திய பொருளாதாரத்திற்கு பெரிய அதிர்ச்சியாக வந்திறங்கியது.
கடந்த ஆண்டு 87.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள சரக்குகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்தது அமெரிக்கா. இது இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 18 சதவிகிதம் ஆகும். டிரம்பின் நிலைப்பாடு இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரித்து அதன் உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) 0.5% குறைக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணக்கிட்டுள்ளனர்.
இத்தகைய சூழலில் மோதியின் சீனப் பயணம் மிகவும் முக்கியமானதாகிறது.
"டிரம்பின் வரிகள் இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கலாம். ஆனால் இந்தியாவின் நீண்ட கால மூலோபாய கணக்குகள் பாதிக்கப்படுவது தான் மிகப்பெரிய ஆபத்தாக உள்ளது," என மும்பையைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான எக்ஸ்கேடிஆர் ஃபோரமின் இணை நிறுவனர் அஜய் ஷா ப்ராஜக்ட் சிண்டிகேட்டில் எழுதியுள்ளார்.
டிரம்பால் இந்தியாவின் நிலைப்பாடு மாறியுள்ளதா?
மோதியின் சீனப் பயணம், விளாடிமிர் புதின் மற்றும் ஜின்பிங் உடனான அவரின் சந்திப்புக்குப் பிறகு அமெரிக்க அரசு இந்தியாவை விமர்சிப்பதை நிறுத்தவில்லை. டிரம்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ இந்தியாவை ஒவ்வொரு நாளும் குறிவைத்து வருகிறார்.
ஞாயிறு அன்று ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் பேசிய நவர்ரோ, "மோதி ஒரு சிறந்த தலைவர், ஆனால் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருக்கிற போது அவர் ஏன் புதின் மற்றும் ஜின்பிங் உடன் நெருக்கமாகிறார் என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை." எனத் தெரிவித்தார்.
அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க் தனது செய்தியில், "டிரம்பின் வர்த்தகப் போர் இந்தியா மற்றும் சீனா நெருங்கி வருவதற்கான முயற்சிகளை வேகப்படுத்தியுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே எல்லை மோதல் உள்ளது மற்றும் ஒருவருக்கொருவர் அவ்வப்போது சண்டையிட்டுக் கொள்கின்றனர்" எனத் தெரிவித்துள்ளது.
மோதியும் ஜின்பிங்கும் சீனாவில் உள்ள தியான்ஜினில் சந்தித்தனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாடும் அங்கு தான் நடைபெற்றது.
"சர்வதேச சூழ்நிலை நிலையற்றதாக உள்ளது. இத்தகைய சூழலில் இந்தியாவும் சீனாவும் அண்டை நாடுகளுடன் நல்லுறவை பராமரிக்கும் நண்பர்களாக மாற வேண்டும். தங்களின் வெற்றிக்கு உதவும் கூட்டாளிகளாக மாற வேண்டும்," என மோதி உடனான சந்திப்பில் ஜின்பிங் தெரிவித்தார்.
யுரேசியா க்ரூப் என்கிற ஆய்வுக் குழுவில் சீனா மற்றும் வட கிழக்கு ஆசியாவுக்கான மூத்த ஆய்வாளரான ஜெரெமி ஷான் ப்ளூம்பெர்க் ஊடகத்திடம் பேசுகையில், "எல்லைப் பிரச்னையை விட்டு, மற்ற பல்வேறு வழிகளில் இந்தியாவும் சீனாவும் தங்களின் உறவுகளை ஆழப்படுத்த முடியும். இருநாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தணியவில்லை. பரஸ்பர சந்தேகம் என்பது இருநாடுகளுக்கும் இடையே நிலவும். மோதி மற்றும் ஜின்பிங் இடையேயான பேச்சுவார்த்தைகள் இந்த மூலோபாய போட்டியை முடிவுக்கு கொண்டு வரப்போவதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
எஸ்சிஓ அமைப்பு, ஜூன் 2025-இல் இரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதல்களை கண்டித்துள்ளது. அந்த எஸ்சிஓ அறிக்கையிலிருந்து இந்தியா தன்னை விலக்கிக் கொண்டது. இந்தியாவின் இந்த நகர்வு டிரம்பின் வரிகளுடன் தொடர்புபடுத்தப்படும்.
தெற்காசிய அரசியலை கூர்ந்து கவனித்து வரும் ஆய்வாளரான மைக்கேல் கூகள்மேன், மோதியின் சீனப் பயணம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகளை பாதிக்காது என நம்புகிறார்.
இந்தியா கவனமாக இருக்க அறிவுரை
"மோதி ஏழு ஆண்டுகள் கழித்து சீனா சென்றுள்ளார், இது அமெரிக்க-இந்திய உறவுகளைப் பாதிக்காது. இது கடந்த ஒரு வருடமாக சீனா உடனான பதற்றத்தை குறைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் முடிவுகள். சமீப மாதங்களில், அமெரிக்க-இந்திய பதற்றம் சீனா உடனான உறவுகளை மேம்படுத்துவதற்கான உந்துதலை அதிகரித்துள்ளது" என கூகள்மேன் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் பலமுறை அழைத்தும் இந்தியப் பிரதமர் பேசவில்லை என ஜெர்மன் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
ஜேம்ஸ் க்ராப்ட்ரீ, அமெரிக்க இதழான ஃபாரின் பாலிசியில் கட்டுரையாளராக உள்ளார். ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஃபாரின் பாலிசி இதழில், "சீனா மற்றும் ரஷ்யா விரிக்கும் வலையில் இந்தியா ஏன் விழக்கூடாது?' என்கிற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார் ஜேம்ஸ்.
"உறவுகள் கசப்படையும் போது ஒரு தரப்பு பதிலளிக்க மறுக்கும். ஜெர்மன் ஊடக செய்திகளின்படி மோதி அதைத்தான் சமீபத்தில் செய்துள்ளார். மோதி டிரம்பின் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. சீனாவுக்கு எதிரான கூட்டாளியாக இந்தியாவைப் பார்க்கிறது அமெரிக்கா. ஆனால் டிரம்ப் இந்தியா மீது 50% வரி விதித்துள்ளார். அமெரிக்காவின் இந்த திடீர் நடவடிக்கைகளால் கோபமடைந்த இந்தியா புதிய வெளியுறவு கொள்கை வாய்ப்புகளைப் பார்க்க ஆரம்பித்தது" என அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் ஜேம்ஸ்.
இந்த விவகாரத்தில் இந்தியா கவனமுடன் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
"மோதி மற்றும் டிரம்ப் இடையேயான விரிசலை சாதகமாக்கிக் கொண்டு புதின் மற்றும் ஜின்பிங் இந்தியாவை கவர முயற்சிப்பார்கள். பல்வேறு தரப்புகளையும் அனுசரித்துச் செல்வதே இந்தியாவின் வெளியுறவு கொள்கையாக இருந்துள்ளது. இந்தியாவின் கண்ணோட்டத்தில் பார்த்தால், அமெரிக்காவுடனான உறவுகளில் பதற்றம் நிலவினாலும், இது தான் புத்திசாலித்தனமான மற்றும் நீண்ட கால சிந்தனையாக இருக்கும். சீனா மற்றும் ரஷ்யாவுடன் கூட்டு சேர்வது ஒரு வலையில் விழுவதைப் போன்றது. அது விரைவிலே எதிர்மறையாக மாறக்கூடும்" என்கிறார் ஜேம்ஸ்
கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவுடன் கடைபிடிக்கப்பட்டு வந்த கொள்கைகளை டிரம்ப் மாற்றுவதாக ஜேம்ஸ் நம்புகிறார்.
இதனை விவரித்து பேசிய ஜேம்ஸ், "கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் எழுச்சி என்பது அமெரிக்காவின் நீண்ட கால நலனுக்கானது என அந்நாடு நினைத்து வருகிறது. டிரம்ப் இந்த கொள்கையை திடீரென கைவிட்டு உடனடி பலன்களுக்கான வர்த்தக ஒப்பந்தங்களை முன்னிறுத்தி வருகிறார். இந்த கொள்கை அமெரிக்கா தன்னைத்தானே தோற்கடித்துக் கொள்வதைப் போன்றது, ஏனென்றால் சீனாவை எதிர்கொள்ள இந்தியாவின் பங்கு முக்கியமானது." எனத் தெரிவித்தார்.
இந்த கடினமான நேரத்தில் இந்தியா சில பொறுப்புகளை தன்வசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜேம்ஸ் நம்புகிறார்.
டிரம்பால் மாறிய கொள்கை
மோதியின் குழு டிரம்ப் பற்றிய தங்களது கணிப்பு தவறானது என்பதை மிக தாமதமாகவே புரிந்து கொண்டதாக ஜேம்ஸ் கூறுகிறார் .
"இந்தியா பல சார்பு கொள்கையைப் பின்பற்றி வருகிறது, அதாவது அனைத்து குழுக்களுடனும் இருக்க வேண்டும். இதன் அர்த்தம் மேற்கத்திய கூட்டாளிகளுடன் நல்லுறவைப் பராமரிக்கும் அதே வேளையில் புதினுடனான உறவுகளின் மீது நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். இந்தியா இரானுடன் தன்னை அந்நியப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஜோ பைடன் அதிபராக இருந்தபோது இந்தியாவின் இந்த கொள்கையைப் பொறுத்துக் கொண்ட அமெரிக்கா அதன் மூலோபாய முக்கியத்துவத்தை ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால் டிரம்ப் இந்த கொள்கையை கைவிட்டு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக 25% கூடுதல் வரி விதித்துள்ளார்"
"டிரம்பையும் சமாளித்துவிட முடியும் என இந்தியா நினைத்தது. ஆனால் டிரம்ப் விவகாரத்தில் தங்களின் கணக்கு தவறானது என்பதை தாமதாகவே புரிந்து கொண்டுள்ளனர். இந்தியாவை அமெரிக்காவுக்கு நெருக்கமாக வைத்திருப்பது உள்நாட்டில் மோதிக்கு அரசியல் ரீதியாக சவாலானதாக இருக்கும். அணி சேராமல் இருப்பது தான் பாரம்பரியமாக இந்தியாவின் வெளியுறவு கொள்கையாக இருந்து வருகிறது. இந்தியா உடனான உறவை டிரம்ப் ஒரே அடியில் முடித்தது இந்தியாவில் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது." என தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் ஜேம்ஸ்.
அமெரிக்காவுக்கு மாற்றாக ரஷ்யா மற்றும் சீனாவைப் பார்ப்பது மிகப்பெரிய தவறாக இருக்கும் என அமெரிக்க ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்தியாவுக்கு பணக்கார மற்றும் தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய நாட்டிடமிருந்து முதலீடு தேவை. இந்தியாவிற்குள் சீனா ஒரு சவாலான நாடாகவே பார்க்கப்படுகிறது, அமெரிக்காவும் சீனாவை ஒரு மிகப்பெரிய சவாலாகப் பார்க்கிறது. இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான உறவுகளில் ஒரு தொடர்ச்சி இருந்து வருகிறது, ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு தேவைகள் ரஷ்யாவை மையப்படுத்தி இல்லை. ரஷ்யாவிடமிருந்து மலிவான எண்ணெயை பெற்று வருகிறது இந்தியா, ஆனால் நவீன தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டிற்கு ரஷ்யாவுக்கு அப்பாற்பட்டுதான் சிந்திக்க வேண்டும்.
சீனாவுக்கு மாற்றாக இந்தியாவை அமெரிக்கா பார்த்தது. ஆனால் டிரம்ப் அதனை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் என நியூயார்க் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
"சீன தொழிற்துறைக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திக் கொள்ள இந்தியா கடினமாக வேலை செய்துள்ளது. பெரிய வணிகர்களும் சீனா பிளஸ் கொள்கையின் கீழ் இந்தியாவை ஒரு மாற்றாகப் பார்த்தனர். ஆனால் தற்போது அது மாறிவிட்டது. மோதி ஏழு ஆண்டுகள் கழித்து சீனா சென்றுள்ளார். டிரம்பின் வரிகளால் தொழிற்துறை விநியோக சங்கிலியில் மாற்றங்கள் இருக்கலாம் என யூகிக்கப்பட்டது. தற்போது அமெரிக்க இறக்குமதியாளர்களுக்கு இந்தியா கவர்ச்சிகரமானதாக இல்லை, நிறுவனங்கள் குறைவான வரிகள் கொண்ட நாடுகள், குறிப்பாக மெக்சிகோ அல்லது வியட்நாமை நோக்கி நகரலாம்" என அந்த செய்தியில் குறிப்படப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தியில், "உலகில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற இந்தியா முயற்சித்து வருகிறது. தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ள இந்தியா ஜப்பானை (4வது இடம்) பின்னுக்குத் தள்ள முயற்சித்து வருகிறது. அமெரிக்கா உதவவில்லையென்றால் சீனாவுடன் நெருக்கமாவதை தவிர இந்தியாவிற்கு வேறு வாய்ப்பு இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு