'கணவரை விட உயர் பதவி வகித்தவர்': நிக்கோலஸ் மதுரோ மனைவியின் அரசியல் பின்னணி

நீண்ட காலமாக, வெனிசுவேலாவில் அதிபரின் மனைவி என்பதற்கும் மேலான முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்து வருகிறார் சிலியா ஃப்ளோரஸ்.

அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் மனைவியான இவர், அரசாங்கத்தின் மிகவும் முக்கியமான பெண் தலைவர்களில் ஒருவராவார். ஆதரவாளர்களால் இவர் பெரும்பாலும் "முதல் போராளி" என்று குறிப்பிடப்படுகிறார்.

1956-ஆம் ஆண்டு பிறந்த சிலியா ஃப்ளோரஸ், தனது கணவரின் அரசியல் வாழ்க்கைக்கு இணையாகத் தனது சொந்த அரசியல் பாதையையும் உருவாக்கிக் கொண்டார். சில நேரங்களில் அவரது கணவரை விட உயர் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

குறிப்பாக 2013-ல் மதுரோ அதிபரான பிறகு, நாட்டின் அரசியல் திசையை வடிவமைப்பதில் சிலியா ஃப்ளோரஸ் தீவிரப் பங்காற்றினார்.

இந்த சனிக்கிழமையன்று, வெனிசுவேலாவிற்குள் அமெரிக்கா நடத்திய ராணுவ நடவடிக்கையில் அவரும் அவரது கணவரும் பிடிக்கப் பட்டனர்.

இப்போது இருவரும் நியூயார்க் நீதிமன்றத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள உள்ளனர்.

புளோரஸ் மற்றும் மதுரோ ஆகிய இருவரும் வெனிசுவேலாவின் மறைந்த தலைவர் ஹ்யூகோ சாவேஸின் நிழலில் வளர்ந்து அதிகாரத்திற்கு வந்தவர்கள்.

சாவேஸின் மறைவுக்குப் பிறகு, 2013 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரோ தான் புளோரஸை "முதல் போராளி" என்று அழைத்தார்.

"அதிபரின் மனைவி" என்பது "உயர்குடி சமூகத்தின் ஒரு கருத்து" என்று கூறி அதை அவர் நிராகரித்தார்.

வெனிசுவேலா அதிபரின் நெருங்கிய வட்டாரத்தைக் குறிவைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 2018 செப்டம்பரில் அமெரிக்க நிதித்துறை புளோரஸ் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.

எளிமையான தொடக்கம்

புளோரஸ், தலைநகர் கராகஸுக்கு மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் உள்ள டினாகுவிலோ என்ற ஊரில், "மண் தரை கொண்ட ஒரு பண்ணை வீட்டில்" பிறந்தார் என்று மதுரோ தெரிவித்துள்ளார்.

புளோரஸுக்கு நான்கு வயதாக இருந்தபோது, அவரது குடும்பம் அந்த ஊரை விட்டு வெளியேறி கராகஸுக்கு குடிபெயர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அங்கு, ஆறு உடன்பிறப்புகளில் இளையவரான புளோரஸ், நகரின் மேற்குப் பகுதியில் உள்ள கடியா மற்றும் பொகுவெரான் ஆகிய மக்கள் நெருக்கம் மிகுந்த இரண்டு பகுதிகளில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

தனது 32-வது வயதில், சாண்டா மரியா என்ற தனியார் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். பின்னர் குற்றவியல் மற்றும் தொழிலாளர் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றார்.

இருப்பினும், பிப்ரவரி 1992-ல் ஹ்யூகோ சாவேஸ் தலைமையில் நடந்த தோல்வியுற்ற ராணுவப் புரட்சி முயற்சிக்குப் பிறகு, அவரது வாழ்க்கையில் ஒரு புதிய திருப்புமுனை ஏற்பட்டது.

புரட்சித்திட்டம் தீட்டிய ராணுவ அதிகாரிகளின் தரப்பில் வாதாடிய சட்டக் குழுவில் புளோரஸ் இணைந்தார். காலப்போக்கில் அவர்களின் அரசியல் திட்டங்களிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அந்தக் காலகட்டத்தில் தான் புளோரஸ் மதுரோவைச் சந்தித்தார்.

அந்தச் சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், சாவேஸின் பொது நிகழ்ச்சிகளில் அவருக்கு ஒரு பாதுகாப்பு வீரரைப் போல மதுரோ உடன் இருப்பதை இப்போதும் காண முடியும்.

"நான் சிலியாவைச் சந்தித்தேன். சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல தேசபக்தி மிக்க ராணுவ அதிகாரிகளுக்கு அவர் வழக்கறிஞராக இருந்தார். மேலும் அவர் தளபதி சாவேஸின் வழக்கறிஞராகவும் இருந்தார். சிறையில் இருந்த தளபதி சாவேஸின் வழக்கறிஞராக இருப்பது என்பது... மிகவும் கடினமானது," என்று நினைவு கூர்ந்த மதுரோ, "அந்தப் போராட்டக் காலங்களில் நான் அவரைச் சந்தித்தேன், பிறகு அவர் என் கவனத்தை ஈர்த்தார், அவருக்கும் என் மீது விருப்பம் ஏற்பட்டது"என்றார்.

அப்போதிருந்து, அவர்கள் இருவரின் வாழ்வும் சாவேஸ் மற்றும் 'சாவிஸ்மோ' என்று அழைக்கப்படும் அவரது அரசியல் இயக்கத்துடன் இணைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர்

1990-களில் புளோரஸ் 'சாவிஸ்மோ' இயக்கத்துடன் தொடர்புடைய பல்வேறு அமைப்புகளில் இணைந்தார். 1998ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஹ்யூகோ சாவேஸ் அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன், புளோரஸ் மிக முக்கியமான பதவிகளை வகிக்கத் தொடங்கினார்.

2000-ஆம் ஆண்டில், புளோரஸ் வெனிசுவேலாவின் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற பிறகு, 2006-ல் நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலில் பங்கேற்க வேண்டாமென முடிவெடுத்ததால், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஒரு கட்சி மட்டுமே கொண்ட நாடாளுமன்றத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.

சாவேஸின் தீவிரமான மற்றும் போராட்டக் குணமிக்க ஆதரவாளராக புளோரஸ் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.

நாடாளுமன்ற தலைவராக பதவி வகித்தபோது அவரது பதவிக்காலத்தில் சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. நாடாளுமன்ற அறைக்குள் பத்திரிகையாளர்கள் நுழைவதைக் கூட அவர் தடை செய்தார்.

இந்த நடவடிக்கை ஜனவரி 2016 வரை தொடர்ந்தது.

அப்போது புதிய தேர்தல்களின் பின்னர் வெனிசுவேலா எதிர்க்கட்சிகள் தேசிய சபையின் கட்டுப்பாட்டைப் பெற்றன.

புளோரஸ் தனது குடும்ப உறுப்பினர்கள் உட்பட சுமார் 40 பேரை வேலைக்கு அமர்த்த செல்வாக்கு செலுத்தியதாக தொழிற்சங்கங்கள் அவர் மீது வாரிசு அரசியல் செய்ததாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

"எனது குடும்பத்தினர் இங்கு வந்தனர், அவர்கள் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த நாடாளுமன்றத்தில் அவர்களைத் தொழிலாளர்களாக நான் பாதுகாப்பேன், பொதுப் போட்டிகளையும் நான் ஆதரிப்பேன்," என்று அவர் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

2012-ன் தொடக்கத்தில், சாவேஸ் அவரை குடியரசின் தலைமை வழக்கறிஞராக நியமித்தார். 2013 மார்ச் மாதம் அதிபர் இறக்கும் வரை அவர் அந்தப் பதவியில் நீடித்தார்.

அந்த ஆண்டு ஜூலை மாதம், மதுரோ அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, இருவரும் திருமணம் செய்து கொண்டதன் மூலம் புளோரஸ் முறையாக அதிபரின் மனைவி ஆனார்.

இதன் மூலம் அவர்களது பல ஆண்டு கால உறவு அதிகாரப்பூர்வமானது. தங்களது முந்தைய உறவுகள் மூலம் பிறந்த குழந்தைகளை (புளோரஸுக்கு மூன்று குழந்தைகள், மதுராவுக்கு ஒரு குழந்தை) அவர்கள் இருவரும் இணைந்து வளர்த்து வந்தனர்.

2015 சட்டமன்றத் தேர்தலில், புளோரஸ் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 15 ஆண்டுகளில் முதல் முறையாக அந்த அவையில் சாவிஸ்மோ இயக்கத்தின் ஆதரவாளர்கள் சிறுபான்மையினராக இருந்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆகஸ்ட் 2017-ல், அவர் அந்த அவையிலிருந்து விலகி, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் சர்ச்சைக்குரிய 'தேசிய அரசியலமைப்புச் சபையில்' உறுப்பினரானார்.

குடும்பம்

மே 2015-ல், புளோரஸ் பொதுத் தொலைக்காட்சி நெட்வொர்க்கில் 'வித் சிலியா, அஸ் எ ஃபேமிலி' என்ற நிகழ்ச்சியைத் தொடங்கினார். ஒரு வருடம் கழித்து, அரசு வானொலியில் 'டிசிஷன்ஸ்' என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பத் தொடங்கினார்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஊடகங்களின் கவனம் அவர் மீது இருக்கவில்லை, மாறாக அவரது குடும்பத்தினர் மீதே இருந்தது.

நவம்பர் 2015-ல், ஹைட்டியில் கைது செய்யப்பட்டு அமெரிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட அவரது உறவினர்கள் இருவர் மீது, நியூயார்க் அரசு வழக்கறிஞர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.

அமெரிக்க அதிகாரிகள் தனதுஉறவினர்களை "கடத்திச் சென்றுவிட்டதாக" புளோரஸ் குற்றம் சாட்டினார். ஆனால், டிசம்பர் 2017-ல், போதைப்பொருள் கடத்தலுக்காக அந்த இரு இளைஞர்களுக்கும் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கராகஸில் உள்ள மைக்கெடியா விமான நிலையத்தில் உள்ள அதிபரின் பிரத்யேக விமானத் தளத்தைப் பயன்படுத்தி, அங்கிருந்து 800 கிலோ கொக்கைனை ஹோண்டுராஸிற்கு அனுப்பி, அங்கிருந்து அமெரிக்காவிற்குக் கொண்டு செல்ல அவர்கள் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர், அக்டோபர் 2022-ல் அப்போதைய அதிபர் ஜோ பைடன் வழங்கிய மன்னிப்பின் அடிப்படையில் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

வெனிசுவேலாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஏழு அமெரிக்க குடிமக்களை மீட்பதற்கான ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த விடுதலை அமைந்தது.

தற்போது டிரம்ப் மீண்டும் அதிபராகப் பதவியேற்ற நிலையில், அந்த இரு இளைஞர்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் மீது மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும், இப்போது மதுரோ மற்றும் புளோரஸ் ஆகிய இருவருமே மிகவும் நேரடியான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

-பிபிசி நியூஸ் முண்டோ மற்றும் பிபிசி குளோபல் ஜர்னலிசம் அளித்த தகவல்களுடன் இச்செய்தி வழங்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு