You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தலைவன் - தலைவி விமர்சனம்: வழக்கமான பாணியை கடந்து இயக்குநர் பாண்டியராஜின் புது முயற்சியா?
பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள 'தலைவன் தலைவி' திரைப்படம் நேற்று (ஜூலை 25) அன்று திரையரங்குகளில் வெளியானது.
தங்களில் வலுவான கதாபாத்திர தேர்வுக்காக அறியப்படும் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இது. ஏற்கெனவே 19(1)(ஏ) என்கிற மலையாள திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.
இவர்கள் இருவரையும் தவிர, தீபா வெங்கட், யோகி பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாரயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
குடும்ப செண்டிமெண்ட் பாணி திரைப்படங்களுக்காக அறியப்படும் பாண்டியராஜ் இதனை இயக்கியுள்ளார். அனுபவமிக்க நடிகர்களை வைத்த இயக்குநர் பாண்டியராஜ் இயக்கியுள்ள தலைவன் தலைவி எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? ஊடக விமர்சனங்கள் சொல்வது என்ன?
கதை என்ன?
மதுரையில் பரோட்டா கடை நடத்தி வருபவர் ஆகாசவீரன் (விஜய் சேதுபதி), பக்கத்து ஊரைச் சேர்ந்த பட்டதாரி பேரரசி (நித்யா மேனன்).
இருவருக்கும் வீட்டாரால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆகாச வீரனுக்கும் பேரரசிக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு விருப்பம் உண்டாகிறது.
அதன் பின்னர் சில காரணங்களால் இரு குடும்பங்களும் பின் வாங்குகின்றன. ஆனால் ஹீரோ ஆகாச வீரன் குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி பேரரசியை திருமணம் செய்கிறார்.
இதன் பின்னர் குடும்பத்திற்குள் ஏற்படும் பிரச்னையால் ஹீரோ - ஹீரோயினுக்கும் இடையே சிக்கல் உருவாகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிகின்றனர்.
இருவரின் உறவு விவாகரத்து வரை சென்ற நிலையில் இருவரும் மீண்டும் இணைந்தார்களா? அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் மீதமுள்ள கதை.
ஆகாச வீரனாக விஜய் சேதுபதியும் பேரரசியாக நித்யா மேனனும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக ஊடக விமர்சனங்கள் கூறுகின்றன.
"படத்தின் மிகப் பெரிய ப்ளஸ், அதன் நடிகர்கள். விஜய் சேதுபதி - நித்யா மேனனை சுற்றி நடக்கும் கதை என்பதால் இருவருக்குமே சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. விஜய் சேதுபதியும் ஹீரோயிசத்துக்கு வாய்ப்பிருந்த காட்சிகளில் கூட அதை தவிர்த்திருப்பதன் மூலம் மீண்டும் ஒருமுறை தனித்து நிற்கிறார்." என இந்து தமிழ் திசையின் விமர்சனம் கூறுகிறது.
ஆனால் விஜய் சேதுபதி ஒரே பாணியிலான நடிப்பை தருவதாக தினத்தந்தி திரை விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.
"அலட்டல் இல்லாத விஜய் சேதுபதியின் நடிப்பை பாராட்டலாம். ஆனால் ஒரே பாணியிலான நடிப்பு வேண்டாமே... கொஞ்சம் மாற்றுங்கள் பாஸ். ஜாடிக்கு ஏற்ற மூடி போல பக்காவாக பொருந்தியுள்ளார் நித்யாமேனன். நடிப்பில் மீண்டும் 'ஸ்கோர்' செய்துள்ளார்." என அதில் கூறப்பட்டுள்ளது.
படத்தில் ஒளிப்பதிவும் இசையும் சாதகமாக உள்ளதாக தினமணி திரை விமர்சனம் கூறுகிறது.
"எம். சுகுமாரின் ஒளிப்பதிவு சண்டைக்காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் நல்லமுறையில் கைகொடுத்துள்ளன. சந்தோஷ் நாராயணன் பாடல்களும் படத்தை மெருகேற்ற உதவியுள்ளன." என தினமணியின் விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.
படத்தின் கதாபாத்திரங்களை இயக்குநர் பாண்டியராஜ் அமைத்த விதம் சிறப்பாக இருந்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா விமர்சனம் கூறுகிறது.
"கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற பாண்டியராஜின் முந்தைய படங்களில் ஹீரோ குறைகளற்ற, தன்னலமற்றவராக இருப்பார். உறவினர்கள்தான் வில்லன்கள் என்பது தெரிந்துவிடும். ஆனால் இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயின் தொடங்கி அனைவரிடமும் குறை இருப்பதாக கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன" என டைம்ஸ் ஆப் இந்தியா கூறுகிறது.
படத்தின் மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பும் குறிப்பாக யோகி பாபுவின் நகைச்சுவையும், படத்தின் கதையோட்டத்தில் பரோட்டாவை ஒரு முக்கிய அங்கமாக பாவித்திருப்பதும் சிறப்பாக இருந்ததாக இந்து தமிழ் திசை கூறுகிறது.
"'பாரதி கண்ணம்மா' ரோஷினிக்கு முக்கியமான கதாபாத்திரம். அதை நிறைவாக செய்திருக்கிறார். சரவணன், செம்பன் வினோத், ஜானகி சுரேஷ், காளி வெங்கட், மைனா நந்தினி, யோகி பாபு என படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களும் சிறப்பாக செய்திருக்கின்றனர். குறிப்பாக, பரோட்டாவை படத்தில் ஒரு முக்கிய கேரக்டராக பாவித்திருப்பது ரசிக்கும்படி இருந்தது. படத்தின் ஆரம்ப காட்சிகள் பரோட்டா பிரியர்களை வாய் ஊற வைக்கும்." என இந்து தமிழ் திசை கூறுகிறது.
"முக்கியமாக திருடனாக வரும் யோகி பாபு முதல்காட்சியிலிருந்து கடைசி வரை நம் கூடவே நகர்ந்து நம்மைச் சிரிக்கவைக்கத் தவறவில்லை. அவரது பல நகைச்சுவைகள் திரையரங்கைச் சிரிக்கவைத்து சிறப்பு செய்துள்ளன." என தினமணி விமர்சனம் கூறுகிறது.
படத்தின் குறைகள் என்ன?
படத்தில் நகைச்சுவை சில இடங்களில் ஓவர்டோஸாக இருப்பதாக இந்து தமிழ் திசை தெரிவிக்கிறது.
"படத்தின் குறையென்று பார்த்தால் சில சீரியசான தருணங்களைக் கூட கலகலப்பாக காட்ட முயற்சித்திருப்பது ஒரு கட்டத்தில் ஓவர்டோஸ் ஆகிவிடுகிறது. உதாரணமாக, நித்யா மேனனும் விஜய் சேதுபதியும் சண்டை போடும் காட்சிகளில் இருவரும் மாறி மாறி கத்திக் கொண்டே இருப்பது ஓரளவுக்கு மேல் சலிப்பை ஏற்படுத்துகிறது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தில் சில சண்டை காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம் என டைம்ஸ் ஆப் இந்தியா கூறுகிறது.
"குடும்ப டிராமா நடைபெறும் இடங்களில் பல சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு கட்டத்தில் அனைவரும் வன்முறையாக மாறுகின்றனர். கணவன் மனைவி ஒருவரையொருவர் மாறி மாறி அறைகின்றனர். உடன் பிறந்தவர்களை அடிப்பதற்கு அடியாட்களை கூட்டி வருகின்றனர். இவையெல்லாம் தேவைதானா?" என அதில் கூறப்பட்டுள்ளது.
"மொத்தமாக பார்க்கையில் இந்தப் படம் கண்டிப்பாகக் குடும்பங்களுடன் சென்று சிரித்து மகிழ்ந்துவிட்டு வருவதற்கான அனைத்து விஷயங்களையும் கொண்டுள்ளது" என தினமணி விமர்சனம் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு