You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை நீதிமன்ற ஆடை விதிமுறைகள்- முஸ்லிம் பெண் வழக்கறிஞர்கள் ஹபாயா அணிய முடியாத நிலை
- எழுதியவர், மப்றூக்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கை நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்கள் ஹபாயா அணிந்து ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முஸ்லிம் சட்டத்தரணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஹபாயா என்பது உடல் முழுவதும் மறையும் வண்ணம் அணியப்படும் ஒரு நீண்ட அங்கி.
நீதிமன்றில் சட்டத்தரணிகள் அணிய வேண்டிய ஆடை விதிமுறைகள் தொடர்பில் - உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் காரணமாக, இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று சட்டமாணி ராஸி முகம்மத் கூறுகின்றார்.
கடந்த மார்ச் 30ஆம் தேதி, 'உச்ச நீதிமன்ற விதிகள்' எனும் தலைப்பில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் மூவரின் ஒப்புதலுடன் மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
அதன்படி;
- · வெள்ளை, கறுப்பு, வெளிறிய வெண்மை, சாம்பல், ஊதா நிறத்திலான சேலை மற்றும் சட்டை அல்லது
- · வெள்ளை நிற மேற்சட்டை, கறுப்புநிற கோட் மற்றும் காலணிகளுடன் கறுப்பு நிற காற்சட்டை அல்லது
- · வெள்ளை நிற மேற்சட்டை, கறுப்புநிற கோட் மற்றும் காலணிகளுடனான கறுப்பு நிற பாவாடை ஆகியவை, பெண் சட்டத்தரணிகளின் நீதிமன்ற உடையாக அமைதல் வேண்டும் என, அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், பெண் சட்டத்தரணிகள் இதுவரை காலமும் ஹபாயா அணிவதற்கு இருந்த சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளதாக சட்டமாணி றாஸி கூறுகின்றார்.
இதற்கு முன்னர் 2018 அக்டோபர் 05 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் - பெண் சட்டத்தரணிகளுக்கான ஆடை விதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தவற்றில் காணப்பட்ட 'கறுப்புநிற கவுன்' (black gown/cloak) என்பதற்கு இணங்கவே, பெண் சட்டத்தரணிகள் ஹபாயாவை அணிய முடிந்ததாகவும், புதிய ஆடை விதிகளில் தற்போது 'கறுப்புநிற கவுன்' (black gown/cloak) எனும் சொற்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் றாஸி குறிப்பிடுகின்றார்.
பெண் சட்டத்தரணிமாரின் நீதிமன்ற உடை தொடர்பில் 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், பின்வரும் ஆடைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவை;
- வெள்ளை, கறுப்பு, சாம்பல், ஊதா நிற சேலையும் சட்டையும்.
- முழங்காலுக்குக் கீழ் நீளமான - வெள்ளை, கறுப்பு, சாம்பல், ஊதா நிற நீண்ட சட்டை அல்லது கறுப்பு நிற கோட்
- கணுக்கால் வரை நீண்ட கறுப்பு நிற காற்சட்டை மற்றும் காற்சட்டைக்குள் உட்செலுத்தி, காலர் உடையதாக கழுத்து வரை அணியப்பட்ட வெள்ளை நிற - நீண்ட கையுடைய மேற்சட்டை மற்றும் கறுப்பு நிற நீளங்கி ஆகியனவாகும்.
அதிச்சியளிக்கிறது
பெண் சட்டத்தரணிகளுக்கான ஆடை தொடர்பான விதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் பிபிசி தமிழிடம் பேசிய அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எம்.எம். பஹீஜ்; பெண் சட்டத்தரணிகளுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த 'நீளமான கவுன்' எனும் ஆடைத் தெரிவு, திடீரென இல்லாமலாக்கப்பட்டமை அதிர்ச்சியளிப்பதாக கூறுகின்றார்.
"ஆண்டாண்டு காலமாக பெண் சட்டத்தரணிகள் 'நீளமான கவுன்' ஆடையினை உடுத்துவதற்கான வாய்ப்பு, ஆடை விதிமுறைகளில் இருந்து வந்தது. 2018ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஆடை விதிமுறை திருத்தத்திலும் அது இருந்தது.
ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தில், என்ன காரணம் எனக் கூறப்படாமலேயே, 'நீளமான கவுன்' அணிவதற்கான சந்தர்ப்பத்தினை இல்லாமலாக்கியமையானது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது" என அவர் தெரிவித்தார்.
'நீளமான கவுன்' எனும் ஆடைத் தெரிவினை பயன்படுத்தி வந்த பெண் சட்டத்தரணிகளுடன் - தனியாக ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டு, அதன் பின்னர் ஆடை விதிமுறைகள் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்" எனவும் சிரேஷ்ட சட்டத்தரணி பஹீஜ் வலியுறுத்தினார்.
"அரசியலமைப்பின் ஏற்பாடு ஊடாகவே, அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமை மீறப்பட்டுள்ளது"
இந்த நிலையில், 13 வருடங்களாக சட்டத்தரணியாக தொழில் புரிந்து வரும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் சட்டத்தரணியொருவர் (தனது பெயரை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்), ஹபாயா அணிந்து கொண்டுதான் நீதிமன்றில் - தான் ஆஜராகுவதாகவும், தற்போதைய ஆடை விதிமுறையானது தனக்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறுகின்றார்.
”சேலை என்பது எல்லோருக்கும் சௌகரியமான ஆடையில்லை. ஹபாயா அணிவதே எனக்கு சௌகரியமானது. எனவே, எனது ஆடைச் சுதந்திரத்தை தற்போதைய விதிமுறையானது பாதித்துள்ளது," என்கிறார் அந்த பெண் சட்டத்தரணி.
பொதுமக்களின் உரிமைகளுக்காக - சட்ட ரீதியில் வழக்காடுகின்ற சட்டத்தரணிகளின் ஆடைச் சுதந்திரத்தில் கை வைக்கப்படுவதை, சட்டத்தரணிகளான தாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும், அப்படியிருப்பது மக்கள் மத்தியில் சட்டத்தரணிகள் பற்றிய நம்பிக்கையை இல்லாமலாக்கி விடும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
"சட்டத்தரணிகளின் ஆடை பற்றிய விதிமுறைகளை வகுப்பதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆனாலும் மற்றவர்களின் உரிமையுடன் தொடர்புபட்ட விடயமாகவும் இது இருப்பதனால், விதிமுறையை வகுப்பதற்கு முன்னர், சட்டத்தரணிகளின் தாய் சங்கம் ஊடாக - துணைச் சங்க உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெற்று, அதன் பின்னர், இந்த விதிமுறைகளை அறிவித்திருக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
தற்போதைய நீதிமன்ற ஆடை விதிமுறை காரணமாக, தொழிலை விட்டு விடலாமா என, தான் உட்பட பல பெண் சட்டத்தரணிகள் யோசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நாம் பணிந்தே ஆகவேண்டும். அரசியலமைப்பிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாகவே நீதிமன்ற ஆடை விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் உருவாக்கியுள்ளது. அதேவேளை, இவ்வாறான விதிமுறைகளை வரையறுக்கும் போது, அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்தப்பட்ட 'விரும்பிய ஆடையை அணிவதற்கான' அடிப்படை சுதந்திரத்தை மீறி செயற்படுவது முரணாக அமைகிறது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த வகையில், அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள ஆடைச் சுதரந்திரமானது, அரசியலமைப்பின் ஏற்பாடுகளினூடாகவே மீறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது இவ்வாறிருக்க, பெண் சட்டத்தரணிகளின் ஆடை விதிகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து - இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரை, முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கத்தினர் கடந்த 3ஆம் தேதி சந்தித்து பேசியதாக தெரியவருகிறது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் கௌசல்ய நவரட்ணவை, முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் - சிரேஷ்ட சட்டத்தரணி ரஸ்மாறா ஆப்தீன் தலைமையிலான சட்டத்தரணிகள் சந்தித்து, இவ் விவகாரம் குறித்து பேசியுள்ளனர். இந்தக் குழுவில் முஸ்லிம் பெண் சட்டத்தரணிகளும் இடம்பெற்றிருந்தனர்.
பெண் சட்டத்தரணிகளின் ஆடை விதிமுறைகள் தொடரபில் எழுந்துள்ள இந்த புகார்கள் தொடர்பில் - அரசாங்கத்தின் கருத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, முன்னாள் நீதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான அலி சப்றி ஆகியோரை தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், அவர் பதிலளிக்கவில்லை.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்தை முன்வைக்குமாறு கோரி, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவிடம் கோரப்பட்டது. ஆனால் இதுவரை பதில் ஏதும் கிட்டவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்