திமிங்கலச் சுறா: சென்னை கடற்கரைக்கு அருகே கூட்டமாக உலா வருவது ஏன்? நெருங்கிச் செல்வது ஆபத்தா?

    • எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப்
    • பதவி, பிபிசி தமிழ்

வெள்ளிக்கிழமை (ஜூன் 9) சென்னையின் பெரிய நீலாங்கரைக்கு அருகில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த பாரம்பரிய மீனவர் புகழரசனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அவரது படகுக்கு சற்றுத்தொலைவில் சுமார் 20 பெரும் திமிங்கலச் சுறாக்கள் நீந்திக்கொண்டிருந்தன.

20 வருடங்களுக்கு மேலாக இதே பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் புகழரசன், இதுவரை அதிகபட்சமாக ஒன்று அல்லது இரண்டு திமிங்கலச் சுறாக்களைக் இப்பகுதியில் பார்த்திருப்பார். “20 திமிங்கலச் சுறாக்களை ஒன்றாகப் பார்த்தது இதுதன் முதல்முறை. எங்களுக்கு ஆச்சிரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது,” என்கிறார் பிபிசியிடம் பேசிய புகழரசன்.

‘கரைக்கு அருகில் பார்ப்பது மிக அரிது’

வழக்கமாக கரைக்கருகில் அரிய கடல்வாழ் உயிரினங்களைக் கண்டால் அவற்றுக்கு அடிபட்டிருக்கிறதா என்று முதலில் பார்க்கும் பழக்கம் உடையவர் புகழரசன். அதனால் இச்சுறாக்களைக் கண்ட உடனே, அவர் ஆமைகள் மற்றும் கடல் உயிர்கள் பராமரிப்பிற்காகத் தான் இணைந்திருக்கும் Tree Foundation India அமைப்பின் தலைவர் சுப்ரஜா தாரிணியிடம் தகவல் சொன்னார்.

அவர்களது குழு அங்கு சென்று இரண்டு நாட்கள் அங்கு சுற்றிக்கொண்டிருந்த திமிங்கலச் சுறாக்களைக் கண்காணித்தனர்.

கரையிலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் இம்மீன்களை அவர்கள் பார்த்ததாகவும், இது மிகவும் அரிதானதொரு நிகழ்வெனவும் சுப்ரஜா பிபிசியிடம் தெரிவித்தார்.

“நாங்கள் ஒரு படகில் சென்று அவற்றைப் பார்த்தோம். இத்தனை திமிங்கலச் சுறாக்களை ஒரே இடத்தில் பார்ப்பது மிகவும் அரிது,” என்றார்.

இப்போது மீன்பிடித்தடைக் காலம் அமலில் உள்ளதால், மோட்டார் படகுகள் கடலில் செல்வதில்லை. அதனால் அவை இரைதேடி அதிக எண்ணிக்கையில் இங்கு வந்திருக்கின்றன என்கிறார் சுப்ரஜா.

'திமிங்கலச் சுறாக்கள் மிகவும் சாதுவானவை'

திமிங்கலச் சுறாக்களின் வாய் அகலமானது. அவை பிளாங்டன் (plankton) எனப்படும் சிறிய கடல் உயிரினங்களையும் சிறுமீன்களையுமே உண்ணும்.

மேலும் இவ்விலங்குகள் மிகவும் சாதுவானவை என்கிறார் சுப்ரஜா.

புதுச்சேரியில் ஸ்கூபா டைவிங் நிறுவனம் நடத்தும் அரவிந்த் இதைத் தாம் நேரிலேயே பார்த்து அனுபவித்திருப்பதாகக் கூறுகிறார். 2010ஆம் ஆண்டிலிருந்தே புதுச்சேரி கடலில் ஸ்கூபா டைவிங்க் செய்யும்போது திமிங்கலச் சுறாக்களைப் பார்த்து வருவதாகக் கூறுகிறார்.

“இவை மிகவும் அமைதியான, சாதுவான விலங்குகள். நாங்கள் அவற்றின் அருகிலேயே நீந்தியிருக்கிறோம். அவற்றைக் காணும் போதெல்லாம், அவை தென்பட்ட தேதி மற்றும் இடத்தைக் குறித்து வைத்துக்கொள்வோம், முடிந்தால் படங்களும் எடுத்துக் கொள்வோம்,” என்கிறார் அரவிந்த்.

மிகச் சமீபமாக ஞாயிற்றுக்கிழமை புதுவை அருகே இம்மீன்களைப் பார்த்திருக்கிறார். “இவ்வருடம் மட்டும் மூன்று முறை இவற்றை இங்கு பார்த்திருக்கிறோம்,” என்றார்.

தென் ஆப்பிரிக்காவை மைய இருப்பிடமாகக் கொண்ட மீன்கள்

சமீப காலங்களில் சென்னை மற்றும் அதனருகே இருக்கும் கடற்பரப்பில் திமிங்கலச் சுறாக்கள் அதிகளவில் தென்படுவதைப்பற்றி பிபிசி தமிழிடம் பேசினார் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோ கிழக்கூடன்.

திமிங்கலச் சுறாக்கள் தெற்கு ஆப்பிரிக்காவின் ஜொஹானஸ்ப்ரக் நகருக்கு அருகில் இருக்கும் கடலை மைய இருப்பிடமாகக் கொண்டவை என்றும் அவை வருடந்தோறும் உணவு தேடி ஏப்ரலில் இருந்து ஜூன் மாதம்வரையிலான காலத்தில் ஒரு வலசைப் பாதையில் செல்லும் எனவும் கூறினார்.

“தாய்ச் சுறாக்களும் குட்டிகளும் பிளாங்க்டன் எனும் சிற்றுயிரிகளைத்தேடி விளையாடிய படியே பயணம் மேற்கொள்ளும். இவை அதிகளவில் கிடைக்குமிடங்களில் தங்கிப் பசியாறிவிட்டு அடுத்த இடம்தேடிச் செல்லும்,” என்றார்.

ஆனால் இதுவரை இச்சுறாக்கள் மேற்கு இந்தியக் கடற்கரை மாநிலங்களான குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் கடற்கரைகளுக்கருகில் காணப்பட்டன, தமிழகத்தில் காணப்படுவது மிக அரிது என்றார். “ஆறு வருடங்களுக்கு முன்வரை சிறிய எண்ணிக்கையில் காணப்பட்ட இவை இப்போது பெரும் எண்ணிக்கையில் காணப்படுகின்றன,” என்றார்.

‘எண்ணிக்கை அதிகமாகக் கூடும்’

அரசுகளின் முன்னெடுப்பில் கரையோரங்களில் செயற்கையாக நீரடிப் பாறைகள் உருவாக்கப்படுகின்றன என்றும், இதனால் கிடைக்கும் உணவிற்காக திமிங்கலச் சுறாக்கள் அதிக அளவில் வருகின்றன என்றும் கூறுகிறார் கிழக்கூடன். “இது ஒரு வருடாந்திர நிகழ்வாகிவிட்டது. இம்மாத இறுதியில் இவை பழவேற்காட்டின் அருகே தென்படும், பிறகு அவை வேறிடம் சென்றுவிடும்,” என்கிறார்.

இந்தியக் கடற்கரை நெடுக 3,000 இடங்களில் செயற்கை நீரடிப் பாறைகள் உருவாக்கப்பட்டு வருவதால், வரும் காலங்களில், பாதுகாக்கப்பட்ட விலங்குகளான இம்மீன்கள் அதிகளவில் இங்கு தென்படக்கூடும் என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: