You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரூ.500 நோட்டில் ராமர் படம் என்ற போலிச் செய்தி - ரிசர்வ் வங்கி கூறியது என்ன?
ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக ராமரும், செங்கோட்டைக்கு பதிலாக அயோத்தி ராமர் கோவிலும் இடம்பெறப்போவதாக சமூக ஊடகங்களில் புகைப்படங்களுடன் கூடிய ஒரு போலி செய்தி உலா வருகிறது.
இந்த புதிய ரூபாய் நோட்டை ஜனவரி 22ம் தேதி வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுகின்றன.
மனோஜ் தரேஸ்வர் என்பவர் பேஸ்புக்கில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து, இந்த புதிய ரூபாய் நோட்டுகள் ஜனவரி 22ம் தேதி வெளியிட வேண்டும். இது உலகில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் கனவு, ஜெய் ஸ்ரீராம் என பதிவிட்டுள்ளார்,
நரேந்திர மோதி அரசாங்கம் இத்தகைய மாற்றங்களை கொண்டு வரப்போகிறது என்றும், ரிசர்வ் வங்கி விரைவில் இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும் என்றும் சிலர் சமூக ஊடகங்களில் தகவல்களை பரப்புகின்றனர்
இது முற்றிலும் பொய்யான செய்தி என boom live என்கிற ஃபேக்ட் செக் இணையதளம் தெரிவித்துள்ளது. இது ஒருசிலர் தனிப்பட்ட ஆசையே தவிர, 500 ரூபாய் நோட்டுகளில் ராமர், அயோத்தி கோவில் இடம்பெறுவது தொடர்பான செய்தி தவறானது என boom live குறிப்பிட்டுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கியின் செய்தித்தொடர்பாளர் யோகேஷ் தயல் பேசும்போது, இதுபோன்று எந்தஒரு முடிவையும் ரிசர்வ் வங்கி எடுக்கவில்லை என்றார்.
ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது தொடர்பான எந்தவித செய்தியுடம் இடம்பெறவில்லை.
இந்திய ரூபாய் நோட்டுக்களில் ராமரும் அயோத்தி கோவிலின் புகைப்படமும் இடம்பெற வேண்டும் என்பது ராம பக்தர்களின் எண்ணமே தவிர, இந்திய அரசு இதுபோன்ற எத்தகைய அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என boom live கூறுகிறது
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)