தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா திருப்பி அனுப்பப்பட்டதா? ஆளுநர் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் துவங்கப்படுவதற்கான மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியதாக மாநில மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால், ஆளுநர் மாளிகை அதை மறுக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மருத்துவத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் மீது அந்தத் துறையின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசும் போது ஒரு தகவலைத் தெரிவித்தார்.

அதாவது, "கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி இதற்கான மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆளுநருக்கும் சித்த மருத்துவத்திற்கும் என்ன சண்டையென்றே தெரியவில்லை. ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் நீண்ட நாட்களாக இருப்பிலேயே வைத்திருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் அழுத்தத்தின் காரணமாக கேட்டபோது, மசோதா திருப்பி அனுப்பப்பட்டது. பிறகு, இரண்டாவது முறையாக மசோதா திருப்பி அனுப்பப்பட்டது. இரண்டாவது முறையாக திருப்பி அனுப்பப்பட்ட பிறகும் கடந்த மாதம் ஆளுநர் ஒரு விளக்கம் கேட்டு அனுப்பியிருக்கிறார். எல்லோருமே அந்த பல்கலைக்கழகத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்" என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வட்டாரங்களில் விசாரித்தபோது, அமைச்சரின் இந்தக் கூற்றை அவர்கள் மறுத்தனர்.

சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா திருப்பி அனுப்பப்படவில்லை என்றும் சில விளக்கங்கள் மட்டுமே கேட்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா திருப்பி அனுப்பப்பட்டதாக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவிப்பது இது முதல் முறையல்ல.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசும்போதும் இதே தகவலைத் தெரிவித்தார்.

இந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பதாகவும் உரிய விளக்கங்களை அளித்து ஆளுநருக்கு மசோதா திரும்பவும் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அப்போதும் அமைச்சர் கூறியிருந்தார்.

சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் மசோதா பின்னணி

2021ஆம் ஆண்டு செப்டம்பரில் தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் அறிவித்த நிலையில், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதற்கான மசோதாவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு இயல், இசை, கவின் கலை பல்கலைக்கழத்தை தவிர, தமிழ்நாட்டில் உள்ள பிற அரசுப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் வேந்தராக ஆளுநரே இருந்துவரும் நிலையில், புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என அந்த சட்ட முன்வடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் பல்கலைக்கழகத்திற்கென சென்னை மாதவரம் பகுதியில் 25 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டிருந்தது.

தற்போது தமிழக அரசின் சார்பில் சென்னை அரும்பாக்கம் மற்றும் பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மேலும் ஒரு சித்த மருத்துவ கல்லூரி பழனி முருகன் கோவில் சார்பில் பழனியில் தொடங்கப்பட இருக்கிறது.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் சித்தமருத்துவத்திற்கென ஒரு துறை தனியாக இயங்கி வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: