மருந்துகளும் ஆக்சிஜனும் இன்றி இறக்கும் குழந்தைகள்; 'தலைமுறையை இழக்கும்' ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் குழந்தைகள் இறப்பு
    • எழுதியவர், யோகிதா லிமாயே
    • பதவி, ஆப்கானிஸ்தான் செய்தியாளர்

பிறந்து மூன்று மாதமே ஆன தயாபுல்லாவின் உடல் அமைதியாக அசையாமல் இருக்கிறது. அவனது மூக்கில் வைக்கப்பட்டிருந்த ஆக்ஸிஜன் குழாயை எடுத்துவிட்டு, கொஞ்சமாவது அவன் மூச்சு விடுகிறானா என அவனது தாய் சோதித்துப் பார்க்கிறார்.

குழந்தையின் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததை உணர்ந்து அந்த தாய் கதறி அழத் தொடங்குகிறாள்

ஆஃப்கானிஸ்தானில் உள்ள இந்த மருத்துவமனையில் நன்றாக வேலை செய்யும் ஒரு வென்டிலேட்டர் கூட இல்லை.

வென்டிலேட்டர்களைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு மூச்சு விட உதவலாம் என்றால், அவர்களின் சிறிய முகங்களுக்குப் பொருந்தும் வகையில் மாஸ்க்குகளும் இந்த மருத்துவமனையில் இல்லை. அதனால் ஆக்ஸிஜன் குழாய்களை குழந்தைகளின் மூக்குக்கு அருகில் வைத்துப் பிடித்துக்கொண்டிருக்கும் வேலைகளை குழந்தைகளின் அம்மாக்கள் தான் செய்யவேண்டியுள்ளது. இதை பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு பணியாளரோ அல்லது இயந்திரமோ தான் சரியாகச் செய்ய முடியும்.

சரியான மருத்துவ சிகிச்சையின் மூலம் எளிதில் குணப்படுத்தக்கூடிய நோய்களைக் கூட குணப்படுத்த முடியாததால் ஆஃப்கானிஸ்தானில் ஒவ்வொரு நாளும் 167 குழந்தைகள் உயிரிழப்பதாக யுனிசெஃப் தெரிவிக்கிறது.

இந்த எண்ணிக்கை நம்ப முடியாதது. ஆனால் இது தான் ஒரு மதிப்பீடாக இருக்கிறது.

கோர் என்ற மேற்கு மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவுக்குள் சென்றால், இந்த எண்ணிக்கை மிகக்குறைவானது என நீங்கள் ஆச்சரியமடைவீர்கள்.

அங்குள்ள பல அறைகளில் ஏராளமான குழந்தைகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஒவ்வொரு படுக்கையிலும் குறைந்தது இரண்டு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இக்குழந்தைகளுக்கு கடுமையான நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 60 குழந்தைகளை இரண்டு செவிலியர்கள் மட்டுமே பார்த்துக்கொள்கின்றனர்.

ஒரே அறையில் குறைந்தது 25 குழந்தைகள் கடுமையான பாதிப்புக்களுடன் சிகிச்சை பெற்றுவந்ததை நாங்கள் பார்த்தோம். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இக்குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும். ஆனால் அது இங்கே எந்த வகையிலும் சாத்தியமில்லை.

இருந்தாலும் கோர் மாகாணத்தில் வசிக்கும் பத்து லட்சம் பேருக்கு இந்த மருத்துவமனைதான் மிகச் சிறந்த மருத்துவமனை என்ற நிலையே காணப்படுகிறது.

ஆஃப்கானிஸ்தான் மக்களுக்கு போதுமான சுகாதார வசதிகள் இதுவரை ஒருநாளும் கிடைத்ததில்லை. வெளிநாட்டு நிதி உதவிகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் 2021-ம் ஆண்டு தாலிபான்கள் அந்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றிய பின் அந்த நிதியுதவிகளும் நின்றுவிட்டன. கடந்த 20 மாதங்களாக நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு நாங்கள் சென்றிருந்தோம். அவை அனைத்தும் படுமோசமான நிலையிலேயே உள்ளன. தற்போது, அரசு சாரா அமைப்புக்களில் பெண்கள் பணியாற்ற தாலிபான்கள் தடை விதித்துள்ள நிலையில் மனித நேயத்துடன் செயல்படும் அமைப்புகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றன. இதனால் குழந்தைகளின் உடல் நலத்தை பேணுவதில் மேலும் பல சிக்கல்கள் எழுந்துள்ளன.

ஆப்கானிஸ்தான் குழந்தைகள் இறப்பு

போதுமான உபகரணங்கள் இல்லாததால் ஏற்கெனவே மோசமான நிலையில் இருக்கும் இந்த மருத்துவமனையில் தயாபுல்லாவைக் காப்பாற்ற, முடிந்த அளவுக்கு மருத்துவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

குழந்தை தயாபுல்லாவின் உடல்நலம் மோசமடைந்ததையடுத்து டாக்டர் அஹமது சமதி அங்கு வரவழைக்கப்பட்டார். ஸ்டெதாஸ்கோப்பை தயாபுல்லாவின் நெஞ்சில் வைத்து அவர் பரிசோதித்தபோது, ஒரு பலவீனமான இதயத்துடிப்பு மட்டுமே அங்கே இருந்தது.

இதையடுத்து ஆக்ஸிஜன் பம்ப் ஒன்றுடன் அங்கு விரைந்த எடிமா சுல்தானி என்ற செவிலியர், அந்த பம்ப்பை தயாபுல்லாவின் வாயில் வைத்து காற்றை வேகமாக பம்ப் செய்தார். டாக்டர் சமதி, அவரது கட்டை விரல்கள் மூலம் அந்த சின்னக்குழந்தையின் நெஞ்சில் வைத்து மெதுவாக அழுத்தி இதயத்துடிப்பை மீட்கும் முயற்சியில் இறங்கினார்.

இதை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த தயாபுல்லாவின் தாத்தா கவ்சாதின், அவன் நிமோனியா மற்றும் ஊட்டச் சத்துக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

"எங்களுடைய மாவட்டமான சர்சதாவிலிருந்து அவனை இங்கே கொண்டு வர மோசமான சாலையில் எட்டு மணிநேரம் பயணித்தோம்," என கவ்சாதின் கூறினார். பசிக்கு வெறும் ரொட்டித் துண்டுகளை மட்டுமே உணவாக உட்கொள்ளும் அளவுக்கு வறுமையில் தவித்த அந்த குடும்பம், குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துவந்ததற்கும் செலவு செய்யவேண்டியிருந்தது.

குழந்தை தயாபுல்லாவைக் காப்பாற்றும் முயற்சிகள் அரை மணிநேரம் தொடர்ந்தது. பின்னர் தயாபுல்லாவின் தாய் நிகாரைப் பார்த்த செவிலியர் சுல்தானி, அவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் குழந்தைகள் இறப்பு

அதுவரை நிசப்தமாக இருந்த அந்த அறை, தாய் நிகாரின் அழுகைச் சத்தத்தால் அமைதியை இழந்தது. ஒரு போர்வையில் சுற்றி கவ்சாதினிடம் ஒப்படைக்கப்பட்ட தயாபுல்லாவின் உடல் பின்னர் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தயாபுல்லா உயிருடன் இருந்திருக்கவேண்டும். அவனது உடல் நலப்பிரச்சினைகள் அனைத்தும் எளிதில் சரிப்படுத்தக்கூடியவை தான்.

"நானும் ஒரு தாய் தான். இங்கே ஒவ்வொரு குழந்தையும் உயிரிழப்பதைக் காணும் போதெல்லாம் எனது குழந்தையை இழந்ததைப் போலவே உணர்கிறேன். இந்தத் தாய் கதறி அழுததைப் பார்த்தபோது எனது இதயமே நொறுங்கியது. அது எனது மனசாட்சியைக் காயப்படுத்தியது" என செவிலியர் சுல்தானி தமது வேதனையை வெளிப்படுத்தினார். இவர் அந்த மருத்துவமனையில் அடிக்கடி 24 மணிநேரமும் பணியாற்றும் நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கிறார்.

"எங்களிடம் போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லை. பயிற்சி அளிக்கப்பட்ட பணியாளர்களும் இல்லை. பல குழந்தைகள் உயிருக்குப் போராடுவதைப் பார்க்கும் போது, எந்தக்குழந்தைக்கு முன்னுரிமை அளிப்பது என்பதை எங்களால் எப்படித் தீர்மானிக்க முடியும்? குழந்தைகள் உயிரிழப்பதை பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிற வேறு எதையும் செய்யும் நிலையில் நாங்கள் இல்லை."

சில நிமிடங்கள் கழித்து அந்த அறையின் மற்றொரு பகுதியில் இன்னொரு பெண் குழந்தை மூச்சு விடவே முடியாத நிலையில் இயந்ரத்தின் உதவியுடன் மூச்சுவிட்டுக் கொண்டிருந்ததை நாங்கள் பார்த்தோம்.

இரண்டு வயது நிரம்பிய குல்பதான் பிறந்த போதே இதயத்தில் பிரச்சினை இருந்தது. அது கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தான் இந்த மருத்துவமனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது சாதாரணமாக ஏற்படும் ஒரு பிரச்சினை தான் என்றும், இதைச் சரிசெய்வது கடினமான பணி அல்ல என்றும் மருத்துவர்கள் எங்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் கோர் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான இந்த மருத்துவமனையில் இது போன்ற பிரச்சினைகளைச் சரிசெய்யும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளத் தேவையான உபகரணங்கள் இல்லை. மேலும், அந்தக் குழந்தைக்குத் தேவையான மருந்துகளும் இந்த மருத்துவமனையில் இல்லை.

குல்பதானுடைய முகத்தில் பொருத்தப்பட்டிருந்த சுவாசக் கருவியை அகற்ற அவளுடைய பிஞ்சுக்கைகள் முயன்ற போது, பாட்டி அஃப்வா குல் அந்தக் கைகளை மென்மையாகப் பற்றி அதைத் தடுத்தார்.

"தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி நாங்கள் அவளை காபூல் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது, அறுவை சிகிச்சைக்குத் தேவையான தொகையை செலவழிக்க எங்களால் முடியவில்லை. எனவே அவளை மீண்டும் இந்த மருத்துவமனைக்கே கொண்டுவந்தோம்" என பாட்டி அஃப்வா குல் தெரிவித்தார். குழந்தை குல்பதான் உடல்நிலை மற்றும் குடும்பத்தின் வறுமை குறித்த விவரங்களைப் பதிவு செய்து, அரசு சாரா அமைப்பு ஒன்றிடம் நிதி உதவி கேட்டும், இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.

குல்பதான் ஒவ்வொரு முறை மூச்சுவிடும் போதும் மிகுந்த சிரமப்பட்ட போது, தந்தை நவ்ரோஸ் அவளுடைய நெற்றியில் இதமாகத் தட்டிக்கொடுத்து ஆறுதல் அளித்தார். மிகுந்த பதற்றம் மற்றும் ஆற்றாமையுடன் காணப்பட்ட அவர், அண்மையில் தான் குல்பதான் பேசக்கற்றுக்கொண்டதாகவும், தன்னையும், வீட்டில் உள்ள மற்றவர்களையும் பார்த்துப் பேசத் தொடங்கியதாகவும் எங்களிடம் தெரிவித்தார்.

"நான் ஒரு கூலித் தொழிலாளி. எனக்கு நிலையான வருமானம் இல்லை. என்னிடம் பணம் இருந்திருந்தால், குல்பதானுக்கு இந்த அளவு சிரமங்கள் ஏற்பட நான் அனுமதித்திருக்கவே மாட்டேன். இப்போதைக்கு ஒரு டீ வாங்கக்கூட என்னிடம் பணம் இல்லை" என்றார் அவர்.

ஆப்கானிஸ்தான் குழந்தைகள் இறப்பு

பட மூலாதாரம், AFP

குல்பதானுக்கு எவ்வளவு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என நான் டாக்டர் சமதியிடம் கேட்டேன்.

"ஒவ்வொரு நிமிடத்துக்கும் இரண்டு லிட்டர் தேவைப்படுகிறது. இந்த சிலிண்டர் காலியான பின் மற்றொரு சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால் அவள் உயிரிழந்துவிடுவாள்." என்றார் அவர்.

பின்னர், குல்பதானுக்கு என்ன ஆனது என்பதைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் நாங்கள் மீண்டும் அங்கே சென்ற போது, மருத்துவர் ஏற்கெனவே கூறியது அப்படியே நடந்திருந்தது. ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாததால் அந்தக் குழந்தை உயிரை விட்டிருந்தாள்.

அந்த மருத்துவமனையில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்துக்கு இரவு நேரம் மட்டுமே மின்சாரம் கிடைப்பதால், போதுமான அளவுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யமுடியாத நிலை காணப்படுகிறது. தேவையான கச்சாப் பொருட்களும் வழங்கப்படுவதில்லை.

தடுக்கக்கூடிய அல்லது குணப்படுத்தக்கூடிய உடல்நல பாதிப்பில் சிக்கி சிலமணிநேர இடைவெளியில் இரண்டு குழந்தைகள் அநியாயமாக உயிரிழந்தன. இந்தச் செய்தி ஒவ்வொருவருக்கும் பெரும் சோகத்தை விளைவித்தாலும், டாக்டர் சமதி மற்றும் அந்த மருத்துவமனையில் பணியாற்றுபவர்களுக்கு இது எப்போதும் காணப்படும் நிகழ்வாகவே இருந்தது.

"என்னால் எதுவும் செய்யமுடியவில்லையே என்ற மனவலியும், துயரமும் ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும் கோர் மாகாணத்தின் பாசமிகு குழந்தைகள் ஒருவரையோ, இருவரையோ இழக்கிறோம். இது எங்களுக்கு பழகிப்போன ஒன்றாகவே மாறிவிட்டது," என்கிறார் டாக்டர் சமதி.

அந்த மருத்துவமனையின் அறைகளைச் சுற்றிப் பார்த்தபோது, ஏராளமான குழந்தைகள் மிகவும் அவதிப்பட்டு வந்ததைக் காணமுடிந்தது. ஒரு வயதே நிரம்பிய சஜாத் மிகவும் சிரமப்பட்டு அதிக சத்தத்துடன் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான். அவன் நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறான்.

மற்றொரு படுக்கையில் இர்ஃபான் என்ற குழந்தை படுத்திருக்கிறான். அவன் மூச்சுவிட அதிக சிரமப்பட்டபோது, அவனுடைய மூக்கின் அருகே வைத்துப் பிடிப்பதற்காக தாய் ஜியா-ராவிடம் மற்றுமொரு ஆக்ஸிஜன் குழாய் கொடுக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் குழந்தைகள் இறப்பு

கண்களிலிருந்து தாரை தாரையாக வழிந்த கண்ணீரை தனது கைகளால் துடைத்தபடியே அந்த ஆக்ஸிஜன் குழாயை அவர் இர்ஃபானின் மூக்கின் அருகே வைத்து கவனமாகப் பிடித்திருந்தார். சாலைகளில் பனிக்கட்டிகள் விழுந்து தடைகளை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால் குறைந்தது நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்பாகவே இர்ஃபானை மருத்துவமனைக்கு அழைத்துவந்திருக்கமுடியும் என்றார் அவர்.

மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலையில் பலர் சிக்கித் தவிக்கும் நிலையில் மேலும் சிலர் மருத்துவமனைக்குச் சென்றாலும் அங்கேயே இருக்க முடிவதில்லை.

"பத்து நாட்களுக்கு முன் மிக மோசமான நிலையில் ஒரு குழந்தை இந்த மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது. நாங்கள் அந்தக் குழந்தைக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தினோம். ஆனால் அவனுடைய நோயைக் குணப்படுத்தும் மருந்துகள் எங்களிடம் இல்லை," என்றார் செவிலியர் சுல்தானி.

"அதனால் அவனுடைய அப்பா, அவனை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். 'அவன் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டால், வீட்டிலேயே உயிர் போகட்டும்'," என என்னிடம் தெரிவித்தார்.

கோர் மாகாணத்தில் நாங்கள் பார்த்த சம்பவங்கள், 2021-ம் ஆண்டு வரை வெளிநாடுகளில் இருந்து பலநூறு கோடி ரூபாய் பணம் வந்துகொண்டிருந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் நாட்டின் பொதுச் சுகாதாரம் ஏன் இப்படி மோசமான நிலைக்குச் சென்றது என்பது குறித்து எங்களிடம் மிகவும் முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன

மாகாண மருத்துவமனை ஒன்றில் நோயாளிகளைக் காக்க ஒரு வென்டிலேட்டர் கூட இல்லை என்றால், வெளிநாடுகளில் இருந்து வந்த பணம் எங்கு செலவுசெய்யப்பட்டது?

தற்போதைய நிலையில், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாத தாலிபான் அரசை நம்பி பணத்தை நேரடியாகக் கொடுக்க முடியாத நிலையில் கோர் மாகாண மருத்துவமனையைப் போன்ற இடங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் கொடுத்தல் உள்ளிட்ட தேவைகளுக்காக மனிதநேயம் மிக்க அமைப்புக்கள் நிதியுதவி அளிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிதியில் மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களும் வாங்கப்படுகின்றன.

ஆப்கானிஸ்தான் குழந்தைகள் இறப்பு

இதற்கிடையே, அரசு சாரா அமைப்புக்கள் மற்றும் ஐ.நா. அலுவலகங்களில் பெண்கள் பணியாற்ற தாலிபான்கள் சர்வதேச சட்டங்களை மீறி தடை விதித்திருப்பதால், ஏற்கெனவே நன்கொடை அளித்து வந்தவர்கள் தங்கள் நிதியுதவியை நிறுத்திக்கொள்ளும் ஆபத்து அதிகரித்துள்ளது. இது பிரச்சினையை மேலும் மோசமாக்கும் என உதவி அமைப்புக்கள் எச்சரித்துள்ளன. ஆஃப்கானிஸ்தானுக்கு உதவ நன்கொடையாளர்களிடம் ஐ.நா. கேட்கும் தொகையில் வெறும் 5 சதவிகிதம் தான் அந்த அமைப்புக்குக் கிடைக்கிறது.

கோர் மாகாண மருத்துவமனைக்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் இருக்கும் மயானத்துக்கு நாங்கள் சென்று பார்த்தோம். இந்த மயானத்தில் எந்த ஒரு பதிவேடோ அல்லது பதிவுகளோ இல்லை. மயானத்தை பார்த்துக்கொள்வதற்கான பணியாளர் கூட இல்லை. இதனால் எந்தக் குழியில் யார் புதைக்கப்பட்டிருந்தனர் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்பட்டாலும், புதைக்கப்பட்ட உடல் பெரியவர்களுடையதா அல்லது குழந்தைகளுடையதா என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

நாங்கள் அங்கே பார்த்த அளவில் சம்பந்தமே இல்லாத எண்ணிக்கையில் புதிய உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. புதிதாக புதைக்கப்பட்ட இடங்களில் குறைந்தது பாதி அளவு குழிகள் குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்டவை. அண்மைக்காலங்களில் அங்கே குழந்தைகளின் உடல்கள் தான் அதிக எண்ணிக்கையில் புதைக்கப்படுவதாக, அந்த மயானத்துக்கு மிக அருகில் வசித்து வரும் நபர் சொல்கிறார்.

எத்தனை குழந்தைகள் தினமும் உயிரிழக்கின்றன என்பது பற்றிய கணக்குகள் இல்லை. ஆனால் ஆஃப்கானிஸ்தானில் இப்படி ஒரு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது என்பதற்கும், இந்த அவலம் அனைத்து இடங்களில் காணப்படுகிறது என்பதற்கும் நிறைய சாட்சிகள் உள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: