You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய அணியின் கேப்டன் எனக் கூறி முதலமைச்சரை சந்தித்தவர் மீது மோசடி வழக்கு - என்ன நடந்தது?
- எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
- பதவி, பிபிசி தமிழ்
வீல் சேர் கிரிக்கெட் இந்திய அணியின் கேப்டன் என்று கூறி வினோத் பாபு என்பவர் பலரிடமும் மோசடியில் ஈடுபட்டதாக புகார் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக தினேஷ் குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் வினோத் பாபு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?
ராமநாதபுரம் மாவட்டம் கீழசெல்வனூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் பாபு. மாற்றுத் திறனாளியான இவர், அண்மையில் லண்டனில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சார்பாக பங்கேற்றதாகவும், இந்திய அணிக்கு தான் தலைமை தாங்கியதாகவும் ஊடகங்களில் கூறியுள்ளார்.
லண்டன் உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் போன்ற அணிகள் பங்கேற்றதாகவும், இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியதாகவும் அவர் கூறியிருந்தார். இது தொடர்பாக பலரையும் கோப்பையுடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அவர் சந்தித்து வாழ்த்து பெற்றார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினின் சமூக ஊடகப் பக்கத்தில், முதலமைச்சர் ஸ்டாலினை லண்டனில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை டி-20 சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணியின் கேப்டனும், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் கீழசெல்வனூரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வினோத்பாபு சந்தித்து, வெற்றிக் கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்` என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், வினோத் பாபு லண்டன் உலகக் கோப்பையில் பங்கேற்க உதவி செய்யுமாறு தன்னிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக தினேஷ் குமார் என்பவர் ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், "கடந்த மார்ச் 23ஆம் தேதி ஆனந்த் பாண்டியராஜ் என்பவர் என்னை சந்தித்து வினோத்பாபு என்பவர் இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட்டின் கேப்டனாக உள்ளார், கராச்சியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். லண்டனில் நடக்கவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பண வசதி இல்லை என்று கூறினார். இதையடுத்து அவருக்கு 1 லட்சம் ரூபாயை உதவியாக வழங்கினேன். தற்போது அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை என்றும் போலியான நபர் என்றும் ஊடகங்களில் வந்த செய்தி மூலம் தெரியவந்துள்ளதால், வினோத் குமார் மீது நடவடிக்கை எடுத்து என்னை ஏமாற்றி பெற்ற பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக தினேஷ் குமாரை தொடர்புகொண்டு பேசியபோது, "ஆனந்த் பாண்டியராஜ் என்பவர்தான் வினோத் பாபுவை என்னிடம் அறிமுகப்படுத்தினார். சர்வதேச வீல்சேர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவதாகவும் லண்டன் வீல்சேர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க 95 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகும். தற்போதுவரை 15 ஆயிரம் ரூபாய்தான் கிடைத்துள்ளது என்றும் கூறினார். நான் முதலில் 10 ஆயிரம் ரூபாயை மட்டுமே உதவியாக வழங்கலாம் என்று நினைத்தேன். பின்னர், அவர் சூழலை கருத்தில் கொண்டு 1 லட்சம் ரூபாயை கொடுத்தேன்.
சில நாட்கள் கழித்து வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மேசேஜ் அனுப்பிய அவர், இன்று ஆஸ்திரேலியாவில் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளதாக தெரிவித்தார். அடுத்த இரண்டு நாட்கள் கழித்து போட்டியில் வெற்றிபெற்றுவிட்டதாகவும் சென்னை திரும்பிவிட்டதாகவும் கூறினார். தற்போது ஊடகங்களில் பார்த்துதான் அவர் என்னை ஏமாற்றிவிட்டதை அறிந்துகொண்டேன்" என்றார்.
வினோத் குமாரை மீண்டும் தொடர்புகொள்ள முயன்றீர்களா என்று அவரிடம் கேட்டபோது, "அவர் ஏமாற்றி வந்துள்ளார் என்று தெரிந்த பின்னர் அவரிடம் எப்படி பேசுவது. அவரை அறிமுகம் செய்துவைத்த ஆனந்தை தொடர்புகொண்டபோது, பணத்தை வாங்கி தருவதாக கூறினார். ஆனால், அதன் பின்னர் எதுவும் நடக்கவில்லை. அதனால் போலீஸில் புகார் அளித்துள்ளேன்" என்றார்.
வீல்சேர் கிரிக்கெட் இந்தியா அசோசியேசன் கூறுவது என்ன?
வினோத் குமார் பங்கேற்றதாக குறிப்பிட்ட லண்டன் வீல்சேர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பாக அறிந்துகொள்வதற்காக நாம் முயற்சி செய்தபோது, அதுதொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. அதேவேளையில், வினோத் பாபு பற்றிய அதிர்ச்சி தகவல்கள் அதிகம் கிடைத்தது.
வினோத் பாபு, இதற்கு முன்பே வீல்சேர் ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியதோடு, கோப்பையை வென்றிருந்ததாக கூறி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடந்த டிசம்பர் மாதம் சந்தித்திருந்தார். இது தொடர்பாக உதயநிதி தனது சமூக வலைதள பக்கத்தில், "மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசியா கோப்பை டி20 சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியை வென்ற இந்திய அணியை, தலைமை தாங்கி வழிநடத்திய தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் வினோத் பாபு அவர்கள், இன்று என்னை நேரில் சந்தித்து வெற்றிக்கோப்பை காண்பித்து வாழ்த்துப் பெற்றார். வெற்றிகள் தொடரட்டும்!" என்று வாழ்த்தியிருந்தார்.
இந்த பதிவை டிவிட்டரில் ரீ-டிவிட் செய்த வீல்சேர் கிரிக்கெட் இந்தியா அசோசியேசன் (WCIA), "வீல்சேர் கிரிக்கெட் இந்தியாவின் லோகோவையும் பெயரையும் பயன்படுத்தி இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணியின் கேப்டன் என்று கூறி அமைச்சர்களை சந்தித்து வருகின்றனர். ஆசிய கோப்பை போன்ற எவ்வித போட்டிகளையும் WCIA ஏற்பாடு செய்யவில்லை. அதேபோல், வீல்சேர் கிரிக்கெட்டர் என்று கூறிக்கொள்ளும் நபருக்கு எங்களுடன் எவ்வித தொடர்பும் கிடையாது. அவருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல், வினோத் பாபு தற்போது பங்கேற்று கோப்பையை கைப்பற்றியதாக கூறிவரும் லண்டன் வீல்சேர் உலகக் கோப்பை தொடர்பாகவும் ஒரு பதிவை WCIA வெளியிட்டிருந்தது. அதில், லண்டன் உலகக் கோப்பை' என்ற போலி நிகழ்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியலுடன் WCIA என்ற பெயரில் ஒரு கடிதம் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. இந்த கடிதம் திருத்தப்பட்டுள்ளது. வினோத் பாபு என்பவரின் பெயர் இதில் போலியாக சேர்க்கப்பட்டுள்ளது. வினோத் பாபு என்ற பெயரில் எங்கள் அமைப்பில் யாரும் பதிவு செய்யப்படவில்லை, இதுபோன்ற விளையாடுகளை நடத்தவும் நாங்கள் திட்டமிடவில்லை. சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த விவகாரம் தொடர்பாக பேசப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணியின் கேப்டன் சோம்ஜித் சிங் கவுரை பிபிசி சார்பில் தொடர்புகொண்டு பேசினோம். "கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற `யூனிட்டி கப்` என்ற கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர்களின் பட்டியலை எங்கள் அணியைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். நீங்கள் சொல்லும் நபர்(வினோத் பாபு) அதில் என் பெயர் இருக்கும் இடத்தில் அவர் பெயரை எடிட் செய்து ஏமாற்றியுள்ளார். இதுபோன்ற உலகக் கோப்பை போட்டி இதுவரை நடைபெற்றதே இல்லை. அவர் பொய்யாக எங்களின் லோகோவை பயன்படுத்தியுள்ளார். அவர் தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்த போதே இது குறித்து எங்களுக்கு தெரியவந்தது. தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சரின் பதிவை விளக்கத்துடன் நாங்கள் ரி-டிவிட் செய்தோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த ஆண்டு பார்வையற்றோர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றிபெற்றதற்கு பிரதமர் மோதி தனது சமூக ஊடக பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அப்படியிருக்கும்போது நீங்கள் சொல்லும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் வாழ்த்தியிருக்க மாட்டாரா? அப்படி ஒரு போட்டியே நடைபெறவில்லை என்பதே உண்மை" என்று குறிப்பிட்டார்
இந்த விவகாரம் தொடர்பாக வீல்சேர் கிரிக்கெட் இந்தியா அசோசியேசனின் நிறுவன தலைவர் அபய் பிரதாப் சிங் பிபிசியிடம் பேசுகையில், வீல்சேர் கிரிக்கெட் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் மட்டுமே உள்ளன. அப்படியிருக்கும்போது லண்டனில் எப்படி உலகக் கோப்பை போட்டி நடைபெற்றிருக்கும். எனவே, அவர் பொய் கூறுகிறார். அவருக்கும் எங்களுக்கும் எந்த தொடரும் இல்லை என்று டிவிட்டரில் நாங்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். அதே நேரத்தில் எங்கள் பெயரை பயன்படுத்தி அவர் பணம் வசூலிப்பத்தில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் கூறுவது என்ன?
வினோத் பாபு கூறிய தகவல்களை உண்மையா என்று சரி பார்க்காமல் முதலமைச்சருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது எப்படி என்று ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமாரிடம் கேட்டபோது, "முதலமைச்சரை அவர் தனிப்பட்ட முறையில்போய் சந்தித்துள்ளார். எங்கள் சார்பில் அவரை அங்கீகரித்து அழைத்து செல்லவில்லை. ஏற்கெனவே, அவர் அரசிடம் உதவிக்கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவை ஆட்சியர் எனக்கு அனுப்பி வைத்தபோது, அவர் அங்கீகரிக்கப்பட்ட எந்த விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு விளையாடவில்லை. எனவே அரசின் உதவியை வழங்க முடியாது என்று நான் பதிலளித்துவிட்டேன். துறை ரீதியாக சென்று முதலமைச்சரை சந்திக்க முயற்சித்தால் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தே அவர் தனிப்பட்ட முறையில் சென்று சந்தித்துள்ளார். அவர் முதலமைச்சரை சந்தித்த உடனடியே அவர் குறித்து புகார் கிளம்பியுள்ளது. இதையடுத்து ஏடிஜிபி உத்தரவின்பேரில் போலீஸ் டீம் வந்து அவரை விசாரித்து சென்றுள்ளதாக தெரிகிறது` என்று கூறினார்.
வினோத் பாபு கூறுவது என்ன?
வினோத் பாபு மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரையே தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர், "இந்தியாவில் வீல்சேர் அசோசியேசன்கள் மூன்று உள்ளன. எங்களுடையது Disability Wheelchair Cricket of India. பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் இது போன்ற மூன்று அமைப்புகள் உள்ளன" என்று குறிப்பிட்டார்.
வீல்சேர் கிரிக்கெட் இந்தியா அசோசியேசனின் பெயரை நீங்கள் தவறாக பயன்படுத்தியதாகவும் அவர்களின் கிரிக்கெட் அணி வீரர்கள் பட்டியலில் இருந்த கேப்டன் பெயரில் உங்கள் பெயரை போலியாக சேர்த்ததாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனரே என்று வினோத் பாபுவிடம் கேட்டப்போது, "நான் அப்படி செய்யவில்லை. எனக்கு வேண்டப்படாதவர்கள் யாரோ அப்படி எடிட் செய்து பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக WCIA-விடம் நான் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளேன். நானும் மாற்றுத் திறனாளி, என் மனைவியும் மாற்றுத்திறனாளி. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள்" என்றார்.
லண்டனில் நடைபெற்றதாக அவர் குறிப்பிடும் போட்டி குறித்து விளக்கமாக கூறும்படி நாம் கேட்டோம். அதற்கு வினோத் பாபு, "அனைத்துமே லண்டனில் தொடங்கியது. அங்கேயே ப்ரோமோசன் போன்றவை நடைபெற்றது. அதை தொடர்ந்து ஆட்டங்கள் மேற்கு வங்கத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது" என்றார்.
வெளிநாட்டில் நடைபெற்ற வீல்சேர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்றதாக வினோத் பாபு கூறுவதற்கு ஆதரமாக, இது தொடர்பான பயண டிக்கெட், விளையாட்டு போட்டிகளின் காணொளிகள், புகைப்படங்கள், அவர் இணைந்து விளையாடுவதாக கூறும் Disability Wheelchair Cricket of India அமைப்பு குறித்த தகவல்களை அனுப்பி வைக்க முடியுமா என்று நாம் கோரிய போது, உடனடியாக அனுப்பி வைப்பதாக அவர் நம்மிடம் தெரிவித்தார். எனினும் எவ்வித ஆதாரங்களையும் வினோத் பாபு நமக்கு அனுப்பவில்லை. இது தொடர்பாக அவரை மீண்டும் தொடர்புகொண்டு கேட்டப் போது, "விரைவில் அனுப்பி வைக்கிறேன்" என்று இரண்டு முறை கூறியவர், அதன் பின் அழைப்புகளை ஏற்கவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்