You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கள்ளச்சாராயம் குடித்த பிறகு என்ன நடந்தது? உயிர் பிழைத்தவர்கள் பேட்டி
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 5 பேர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்து, மீண்டு வந்துள்ளனர். அவர்கள் வீட்டிற்கு நேரடியாகச் சென்று பேசினோம்.
கள்ளச்சாராயம் குடித்து, சிகிச்சையின் மூலம் மீண்ட அவர்கள் பிபிசி தமிழிடம் கூறியது என்ன?
கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகே, காவல் நிலையத்திற்குப் பின்புறத்தில் உள்ள கருணாபுரம் பகுதிக்கு சென்றோம். அப்பகுதியில் எங்கு திரும்பினாலும் இன்னமும் அழுகுரல் ஓயவே இல்லை. அங்கு கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்து மீண்ட முருகன் வீடு எங்கே உள்ளது என்று கேட்டு, முதல் தெருவில் நுழைந்து வலது புறம் திரும்பியவுடன் மா மரத்தின் கீழே முயல் விளையாடிக் கொண்டிருந்த வீட்டிற்குள் சென்றோம்.
அங்கு முருகன் வீட்டினுள் படுத்திருந்தார். அப்பொழுது தான் அவர் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்குப் பின் பூரண நலம் பெற்று வந்ததாக அவரது உறவினர்கள் கூறினார்கள். என்ன நடந்தது என்பது குறித்து அவர் பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார்.
"எனக்கு தினமும் குடிக்கும் பழக்கம் உண்டு. தினமும் குறைந்தது நான்கு முதல் ஆறு பாக்கெட் சாராயம் குடிப்பேன். அதுபோலத்தான் அன்றும் சென்று நான்கு பாக்கெட் வாங்கிக் குடித்தேன். கூடுதலாக இரண்டு பாக்கெட் வாங்கி எனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டேன். வீட்டிற்கு வந்தபோது சற்று உடல் தடுமாறி கீழே விழுந்தேன்,” என்றார்.
"என்னை எனது மகன் வீட்டிற்குள் தூக்கி வந்து படுக்க வைத்தார். எனக்கு எப்பொழுதும் போல் அல்லாமல் ஒரு வித்தியாசமான நிலை இருப்பதை உணர்ந்தேன் என்ற போதும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை . இட்லியும், சப்பாத்தியும் சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டேன். அடுத்த நாள் காலை பத்து மணிக்கு தான் எழுந்தேன். நான் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்துபவன்," என்று கூறிய முருகன் தொடர்ந்து பேசினார்.
"காலை எழுந்தவுடன் எனக்கு வாந்தி வந்தது. என்னை எனது மகனும், மகளும் உடனடியாகக் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் உடனடியாக என்னைப் பரிசோதனை செய்து பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்," என்றார்.
அங்கு மருத்துவர்கள் மிக வேகமாகச் செயல்பட்டுத் தன்னை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து டயாலிசிஸ் மேற்கொண்டனர் என்கிறார் முருகன்.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)