புலம்பெயர்ந்த பெண்களின் குழந்தைக்கு தந்தையாக நடிக்கும் பிரிட்டிஷ் ஆண்கள்: பிபிசி புலனாய்வில் அதிர்ச்சித்தகவல்

    • எழுதியவர், பேட்ரிக் கிளஹானே, திவ்யா தல்வார் & குவே பி லு
    • பதவி, பிபிசி நியூஸ்நைட்

பிரிட்டனைச் சேர்ந்த ஆண்களில் பலர் பணத்துக்காக, தங்களின் தாயகத்துக்கு புலம்பெயர்ந்த பெண்களின் குழந்தைகளுக்கு தந்தையாக நடிப்பது பிபிசி நடத்திய புலனாய்வு மூலம் தெரியவந்துள்ளது.

குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழில் தந்தை என்ற இடத்தில் தங்களின் பெயரை பயன்படுத்திக் கொள்ள இந்திய மதிப்பில் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை இந்த ஆண்கள் பெறுகின்றனர். முறைகேடான வகையில் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் பெறுவதன் மூலம் அவர்களுக்கு பிரிட்டன் குடியுரிமை கிடைக்கும் வாய்ப்பு எளிதாகுகிறது.

இந்த மோசடிக்கு ஃபேஸ்புக் சமூக ஊடகத்தை மோசடி நபர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும், ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இந்த மோசடி முறை மூலம் உதவியுள்ளதாக அதில் ஈடுபடுபவர்கள் கூறுகின்றனர்.

இந்த வகையான இடுகைகள், விதிகளின்படி தடைசெய்யப்பட்டுள்ளது என்று ஃபேஸ்புக் கூறுகிறது.

பிபிசி நியூஸ்நைட் நடத்திய புலனாய்வில், பிரிட்டனைச் சுற்றியுள்ள பல்வேறு சமூகங்களில் இந்த மோசடி நடப்பது கண்டறியப்பட்டது.

இந்த மோசடிக்காக பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் முகவர்கள் குறித்த தகவல்களையும் இந்த புலனாய்வு வெளிகொண்டு வந்துள்ளது.

இதற்காக, புலனாய்வுக்குழுவைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் கர்ப்பிணி போன்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, இந்த மோசடி சேவை வழங்கும் நபரை தொடர்புகொண்டு பேசினார்.

`தாய் (Thai)` என்று அழைக்கப்படும் முகவர் ஒருவர், தந்தையாக நடிக்க பிரிட்டிஷ் ஆண்கள் பலர் தன்னிடம் இருப்பதாகவும் இதற்கும் 11,000 பவுண்டுகள் ( இந்திய மதிப்பில் ரூ.11,29,000) செலவாகும் என்றும் தெரிவித்தார்.

இதற்கான செயல்முறை மிகவும் எளிதானது என்று கூறிய அவர், குழந்தைக்கு பிரிட்டன் பாஸ்போர்ட் கிடைக்க அனைத்து வேலைகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

'தாய்', ஃபேஸ்புக்கில் இது தொடர்பாக விளம்பரம் எதையும் செய்யவில்லை. இது பற்றி அவர் கூறும்போது, தனது பின்னணி குறித்து எவ்வித சந்தேகமும் எழாது என்றும் தன்னால் அதிகாரிகளை ஏமாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.

கர்ப்பிணி போன்று மாறுவேடத்தில் இருக்கும் ஆய்வாளரிடம் ஆண்ட்ரூ என்ற நபரை அந்த முகவர் அறிமுகப்படுத்தினார். ஆண்ட்ரூ தந்தையாக நடிப்பார் என்றும் இதற்காக அவருக்கு 8,000 பவுண்டுகள் (ரூ.8,21,158) வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது, தான் பிரிட்டனைச் சேர்ந்தவர்தான் என்பதை நிரூபிப்பதற்காக ஆண்ட்ரூ தமது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) காண்பித்தார். மேலும், கர்ப்பிணி வேடத்தில் இருந்த ஆய்வாளருடன் அவர் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

தந்தையாக நடிப்பதற்காக சேவை வழங்கி வரும் முகவர்கள் எவருக்கும் பிபிசி எவ்வித தொகையையும் செலுத்தவில்லை.

இந்த மோசடியில் தாய் என்ற அந்த முகவருக்கு எந்த அளவுக்கு தொடர்பு இருக்கிறது என்று அவரிடம் கேட்டபோது, தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார்.

இந்த மோசடி தொடர்பாக நமது கேள்விகளுக்கு ஆண்ட்ரூ பதிலளிக்கவில்லை.

தி கிம் என்ற முகவரும் இதேபோல், ஏராளமான புலம்பெயர் கர்ப்பிணிகளுக்கு உதவியதாக கூறுகிறார்.

தந்தையாக நடிக்க பிரிட்டிஷ் ஆணை தான் ஏற்பாடு செய்வதாகவும் அதற்கு 10 ஆயிரம் பவுண்டுகள்( ரூ.10 லட்சம்) செலவு ஆகும் என்றும் தனக்கான கட்டணம் 300 பவுண்ட் (ரூ.30 ஆயிரம்) என்றும் அவர் கூறினார்.

"இந்த சேவையை வழங்குவதற்காக நான் பயன்படுத்தும் ஆண்கள் அனைவருமே இங்கு பிறந்தவர்கள்தான், மேலும், இதற்கு முன்பாக எந்த குழந்தைகளுக்கும் அப்பாவாக பதிவு செய்யப்படாதவர்கள்," என்று தி கிம் கூறினார்.

`அனைத்தையும் எப்படி சமாளிப்பது என்பது குறித்து எனக்கு தெரியும். பாஸ்போர்ட் இல்லை என்று கவலைப்படாதே, நான் உனக்கு வாங்கித் தருகிறேன்` என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர், இந்த விவகாரம் பற்றிய கிம்மின் கருத்தை அறிய முயன்றபோது, அவர் பதிலளிக்கவில்லை.

தந்தை போல் போலியாக நடிக்கும் இந்த மோசடி "நம்பமுடியாத அளவிற்கு விரிவானது" என்று குடிவரவு வழக்கறிஞர் அனா கோன்சாலஸ் விவரித்தார்.

"இது மிகவும் அதிநவீனமானது, காவல்துறைக்கு சவாலானது" என்று அவர் கூறுகிறார். "ஒரு விதத்தில், இந்த பெண்கள் பிரிட்டனில் தங்குவதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்காக நம்பமுடியாத அளவிற்குச் செல்லத் தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்," என்கிறார் அனா கோன்சால்ஸ்.

சட்டவிரோதமாக பிரிட்டனில் இருக்கும் ஒரு புலம்பெயர்ந்த பெண், பிரிட்டிஷ் குடிமகனுக்கோ பிரிட்டனில் தங்குவதற்கு அனுமதி பெற்ற ஆணுக்கோ குழந்தையைப் பெற்றெடுத்தால், பிறப்பால் அந்த குழந்தை பிரிட்டிஷ் நாட்டவர் ஆகிவிடும்.

குழந்தையின் அம்மா குடும்ப விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். இது பிரிட்டனில் தங்குவதற்கான உரிமையை அவருக்கு வழங்கும் - மேலும் உரிய நேரத்தில் குடியுரிமைக்கும் விண்ணப்பிக்கலாம்.

"இந்த விதி குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகவே தவிர, பிரிட்டனில் முறையான ஆவணங்கள் இல்லாத பெண்களுக்கு விசா வழங்குவதற்காக அல்ல" என்கிறார் கோன்சாலஸ். "இது முறைகேடு செய்வதற்கான வழி அல்ல. இதை அப்படி பார்க்கக் கூடாது," என்கிறார் அவர்.

இந்த மோசடியின் அளவை பிபிசியால் மதிப்பிட முடியவில்லை, ஏனெனில் உள்துறை அலுவலகம் தாங்கள் விசாரணை செய்த வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளை எங்களிடம் வழங்கவில்லை.

பிரிட்டன் குழந்தைகளின் பிரிட்டன் அல்லாத பிற நாடுகளைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களின் எண்ணிக்கை குறித்த தரவுகளையும் உள்துறை அமைச்சகம் வெளியிடவில்லை.

எனினும், கடந்த ஆண்டில் 4,869 குடும்ப விசாக்கள் "பிற சார்ந்திருப்பவர்களுக்கு" வழங்கப்பட்டன - பிரித்தானிய குழந்தைகளின் பெற்றோராக பிரிட்டனில் தங்குவதற்கு விண்ணப்பிப்பவர்களும் இதில் அடங்கும்.

பிறப்புச் சான்றிதழில் வேண்டுமென்றே தவறான விவரங்களை வழங்குவது கிரிமினல் குற்றமாகும்.

தவறான பிறப்புச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி குடியேற்ற மோசடிகளில் ஈடுபடுவதை தடுப்பதற்கும் கண்டறிவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

"பிறப்புச் சான்றிதழே தந்தையின் ஆதாரத்திற்கு போதுமான ஆதாரமாக இருக்காது" என்றும், இது நிறுவப்பட வேண்டிய சந்தர்ப்பங்களில், "எங்கள் சோதனைகள் திருப்திகரமாக முடிக்கப்படுவதற்கு கூடுதல் சான்றுகள் கோரப்படலாம்" என்றும் அது கூறுகிறது.

இருப்பினும், குடிவரவு வழக்கறிஞர் ஹர்ஜப் பங்கல், போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறுகிறார். "இது ஒரு முறை அல்ல, ஆயிரக்கணக்கானதாக இருக்கலாம்... உள்துறை அலுவலகம் இதை மிகவும் முக்கியமான பிரச்னையாக கருதவில்லை."

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு புலம்பெயர்ந்த சமூகங்களில் இந்த நடைமுறை உள்ளது. இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது என்கிறார் அவர்.

நியூஸ்நைட்டின் விசாரணையில், வேலை தேடுபவர்களுக்காக சில வியட்நாமிய ஃபேஸ்புக் குழுக்களில் இந்த சட்டவிரோத நடைமுறை பரவலாக விளம்பரப்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

போலி தந்தையாக நடிப்பவர்கள் மற்றும் போலி தந்தையாக நடிக்க பிரிட்டன் ஆண்களை தேடும் பெண்கள் ஆகியோரின் நூற்றுக்கணக்கான பதிவுகளை நாம் கண்டறிந்தோம்.

ஒரு பதிவில், `நான் 4 மாதம் கர்ப்பமாக உள்ளேன். குழந்தைக்கு தந்தையாக நடிக்க 25-45 வயதில் உள்ள (பிரிட்டன்) குடியுரிமை பெற்ற நபர் தேவை` என்று பதிவிடப்பட்டிருந்தது.

மற்றொரு கணக்கில், `சிவப்பு புத்தகம் (வியட்நாம் வட்டார வழக்கில் பாஸ்போர்ட் என்பது சிவப்பு புத்தகம் என்று அழைக்கப்படுகிறது) உள்ள தந்தை நான். நீங்கள் கர்ப்பமாக இருந்து, இன்னும் உங்கள் குழந்தைக்கான தந்தை கிடைக்கவில்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்` என்று பதிவிடப்பட்டிருந்தது.

ஃபேஸ்புக்கின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் , "பேஸ்புக்கில் தத்தெடுப்பு அல்லது பிறப்புச் சான்றிதழ் மோசடியை" அனுமதிப்பதில்லை என்று கூறுகிறது. தங்களது கொள்கைகளை மீறும் விதத்தில் பதிவிடப்படும் உள்ளடக்கத்தை அகற்றுவது தொடரும் என்று அது கூறுகிறது.

பெண் ஒருவரிம் பிபிசி பேசியது. அப்போது அவர், தனது குழந்தைக்கு தந்தையாக நடிக்க ஒரு நபருக்கு 9,000 பவுண்ட் (ரூ.9,23,852) வழங்கியதாக குறிப்பிட்டார்.

"அவருக்கு 30 வயது, என்னை விட வயதில் மூத்தவர். இதற்கு முன்பே வேறு பெண்ணுக்கும் அவர் இவ்வாறு செய்துள்ளார் என்று நான் கேள்விப்பட்டேன்," என்றார்.

அந்த நபருடன் தனக்கு பெரிதாக தொடர்பில்லை என்று அப்பெண் கூறினார். பிறப்பு சான்றிதழ் பதிவு செய்வதற்கு உட்பட இதுவரை மூன்று முறைதான் இருவரும் சந்தித்துள்ளனர்.

"என் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெற்றதற்கு அடுத்த நாள்தான், அந்த நபருக்கு குடியுரிமை இல்லை என்பதே எனக்கு தெரியவந்தது. இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். பிறப்பு சான்றிதழில் ஏற்கனவே, அந்த நபரின் விவரங்களை பூர்த்தி செய்துவிட்டோம். இனி அதை மாற்ற முடியாது," என்றார்.

தனது குழந்தையின் தந்தை என்று கூறி யாரோ ஒருவரின் பெயரை அவர் பிறப்பு சான்றிதழில் குறிப்பிட்டுள்ளார். என்றபோதிலும், பிரிட்டனில் வசிப்பதற்கு அவருக்கும் அவரின் குழந்தைக்கும் தற்போது அனுமதி இல்லை.

விசா விண்ணப்பக்கங்கள் குறித்து உள்துறை அலுவலகம் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று ஹர்ஜப் பங்கால் கூறுகிறார்.

`குழந்தை பிரிட்டிஷ் நாட்டவர் என்று உரிமை கோரும் பட்சத்தில் குழந்தையின் பெற்றோரில் ஒருவர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் மற்றொருவருக்கு விசா இல்லை என்றால், டிஎன்ஏ பரிசோதனை செய்வதுதான் சரியானதாக இருக்கும்` என்று அவர் கூறுகிறார்.

பிரிட்டனில் பிறப்பைப் பதிவு செய்யும் போது அல்லது குழந்தைக்கு பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

தந்தைப் போல் போலியாக நடிக்கும் இந்த குற்றச்சம்பவம் தொடர்பாக பெரிதாக யார் மீது வழக்குத் தொடரப்படுவதில்லை என்று பங்கல் நினைக்கிறார்.

"அதனால்தான் மக்கள் அதைச் செய்கிறார்கள் - விளைவுகள் குறித்து அவர்களிடம் பயம் இல்லை." என்று அவர் கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: