அடல் பிகாரி வாஜ்பாய்: இந்து தேசியவாத அரசியலை அனைவரும் ஏற்றுக்கொள்ள செய்த அரசியல்வாதி

1975ஆம் ஆண்டு ஜுன் 26ஆம் தேதி பெங்களூரு நகர விடுதி ஒன்றில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அடல் பிகாரி வாஜ்பாய் தங்கியிருந்தபோது அங்கு வந்த போலீசார், அவரைக் கைது செய்தனர்.

அதற்கு முந்தைய நாள் மாலையில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி நாடு முழுவதும் ஒரு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தார்.

தேர்தல்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டன. பொதுமக்களின் செயல்பாடுகள் மற்றும் உரிமைகளுக்குப் பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஊடகங்களின் வாய் அடைக்கப்பட்ட நிலையில், அரசியல் விமர்சகர்களும், எதிர்க்கட்சியினரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இந்தியாவை ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இந்திரா காந்தி அப்போது தடை விதித்திருந்தார்.

பாஜக-வின் முன்னோடியும், வலது சாரி சித்தாந்தங்களைக் கொண்டிருந்த அரசியல் கட்சியுமான பாரதிய ஜன சங்கத்தின் முக்கியத் தலைவராக அப்போது செயல்பட்டு வந்த வாஜ்பாய், ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார்.

அதன் பின்னர் 20 ஆண்டுகள் கழித்து, அடல் பிகாரி வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார். 1996, 1998ஆம் ஆண்டுகளில் குறைந்த காலத்திற்கு மட்டுமே பிரதமராகத் தொடர முடிந்த அவர், 1999 முதல் 2004 வரை கூட்டணி அரசை அமைத்து, ஐந்து ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்தார்.

பெங்களூருவில் 1975ஆம் ஆண்டு கோடை காலத்தில் வாஜ்பாய் கைது செய்யப்பட்டார். அங்கிருந்த மிகச் சிறந்த சிறை எது என்பதைக் கேட்டறிந்த அவர், காவல் நிலையத்தில் பொழுது போகாமல் தவித்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தார்.

அவர் ஒரு மாதம் சிறையில் இருக்க வேண்டியிருந்தது. சிறையில் அவர் கவிதை எழுதுவது, சீட்டு விளையாடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு நேரத்தைப் போக்கினார்.

அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜுலை மாதம் தனி விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

டிசம்பர் மாத மத்தியில் மெதுவாக நம்பிக்கையை இழக்கத் தொடங்கிய அவர், ஒரு கவிதையில், "மாலை மயங்கும் வேளையில், எனது வாழ்க்கையின் சூரியன் அஸ்தமித்துவிட்டான். எல்லாச் சொற்களும் பொருளற்ற சொற்களாகவே காணப்படுகின்றன. ஒரு காலத்தில் இனிய இசையாகத் தெரிந்தது, தற்போது தெளிவற்ற இரைச்சலாகத் தெரிகிறது," என எழுதினார்.

காங்கிரஸ் கட்சியின் முதல் தோல்வி

இந்திரா காந்தியின் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து, ரகசியமாக எழுதுதல், சட்டத்திற்கு அடங்க மறுத்தல் போன்ற செயல்களைத் தொடங்கி, அவற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முயற்சிகளை அப்போதே ஆர்எஸ்எஸ் காரிய கர்த்தாக்கள் தொடங்கியிருந்தனர்.

அந்தக் காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சரணடையச் சம்மதிக்க வேண்டும் என இந்திரா காந்தி தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இதனால், வாஜ்பாய் "அதிர்ச்சியடைந்ததாகவும், அவசரநிலையை எதிர்த்துப் பெரும் எழுச்சி எழவில்லை என்று கவலைப்பட்டதாகவும்," புதிதாக அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள அபிஷேக் சௌத்ரி குறிப்பிடுகிறார்.

ஆனால், ஓராண்டில் அனைவரையும் ஒருங்கிணைத்து, இந்திரா காந்தியை எதிர்க்கும் அளவுக்கு வாஜ்பாய் உருவாவார் என அப்போது ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. ஜனசங்கம் உள்ளிட்ட நான்கு கட்சிகளின் கூட்டணியான ஜனதா கட்சி 1977 தேர்தலில் இந்திரா காந்திக்கு பெரும் தோல்வியைக் கொடுத்தன.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 30 ஆண்டுகளில் அது காங்கிரஸ் கட்சியின் முதல் முக்கிய தோல்வியாகக் கருதப்பட்டது. (ஜனவரி மாதம் பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் இந்திரா காந்தி, 20 மாதங்களுக்குப் பின்னர் அவசரநிலை பிரகடனத்தை விலக்கிக்கொண்டார்.)

542 தொகுதிகளில் 298 இடங்களை ஜனதா கட்சி கைப்பற்றியது. மிக முக்கியமாக, அந்தக் கூட்டணியில் ஜன சங்கம்தான் 90 இடங்களைக் கைப்பற்றி முன்னிலை வகித்தது. அப்போது, பிரதமர் பதவி வேண்டுமென்று வாஜ்பேய் "பெயரளவிலாவது கேட்டிருக்கலாம்," என அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதும் சௌத்ரி சொல்கிறார். (மிக எளியவராகவும், மென்மையானவராகவும் கருதப்பட்ட 78 வயது மொரார்ஜி தேசாய் அப்போது பிரதமர் ஆனார்).

புதிய அமைச்சரவையில் ஜன சங்கம் சார்பில் 3 பேர் இடம்பெற்றனர். "நாட்டின் கொள்கைகளில் அப்போதைக்கு எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளப் போவதில்லை என்றும், சீனாவுடன் உறவுகள் பேணப்படும்," என்றும் உறுதிமொழி அளித்து வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சரானார்.

ஜனதா கட்சி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோதே, வாஜ்பாய்க்கு அளிக்கப்படும் இடம் குறித்துத் தெளிவாக அறிவித்திருந்தது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து, ஜெயபிரகாஷ் நாராயணனுக்குப் பின் மிகப்பெரும் பேச்சாளராக விளங்கி, அனைவரையும் ஈர்க்கும் கவர்ச்சி மிக்கத் தலைவர் வாஜ்பாய் என சௌத்ரி எழுதுகிறார்.

ஜனதா கட்சியின் கவர்ச்சி மிக்க நபர் என அவரை அப்போதைய ஊடகங்கள் வர்ணித்தன. "வாஜ்பாய் இந்தியாவின் பெருமை" என பிரசார ஏடுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்து தேசியவாத அரசியலை உருவாக்கியது யார்?

"இந்து தேசியவாத அரசியலை உருவாக்கியதில் வாஜ்பாய் பெரும் பங்காற்றியதாக" எழுத்தாளர் சௌத்ரி என்னிடம் தெரிவிக்கிறார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதாக வாக்குறுதி அளித்து பாஜகவை எல்.கே. அத்வானி தான் வளர்த்தெடுத்தார் என அனைவரும் நினைத்துக்கொண்டிருப்பதற்கு முற்றிலும் முரணாக இந்தக் கருத்து அமைந்துள்ளது.

"முன்னர் இருந்த நிலைமையை மாற்றி, உண்மைக்குப் புறம்பாக உருவாக்கப்பட்டதுதான் எல்.கே.அத்வானி குறித்த இந்தக் கருத்து," என எழுத்தாளர் சௌத்ரி தெரிவிக்கிறார்.

1984ஆம் ஆண்டு சொற்ப அளவில் இரண்டு இடங்களை மட்டும் கைப்பற்றிய பாரதீய ஜனதா கட்சி, பிற்காலத்தில் 2014 மற்றும் 2019 தேர்தல்களில் இரண்டு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற நிலையில், அதற்கு அடிப்படையாக அமைந்தது ஜனசங்கம் தான் என்றும், ஒரு வலது சாரியாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டு, அந்தக் கட்சியில்தான் வாஜ்பாய் இருந்தார் என்பதையும் மக்கள் மறந்துவிடுவதாக சௌத்ரி கூறுகிறார்.

1967இல் உச்சத்தில் இருந்த ஜனசங்கம், 50 எம்பி-க்களையும், 300 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருந்தது என அவர் மேலும் பேசுகையில் தெரிவிக்கிறார்.

"காங்கிரஸ் மற்றும் வலதுசாரி சித்தாந்தங்களுக்கு இடையே ஒரு பாலமாக வாஜ்பாய் திகழ்ந்தார் ," என்கிறார் சௌத்ரி. 1980களில் ஜனதா கட்சி வீழ்ச்சியடைந்த நிலையில், ஜனசங்கத்தை புதிய எழுச்சி பெற்ற கட்சியாக மீண்டும் கட்டமைக்கத் தொடங்கியபோது தான் பாரதிய ஜனதா கட்சி பிறந்தது.

பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகளுடன் இணைந்து பணியாற்றும் நிலை இருந்த காலத்தில், அனைவரையும் போல் இல்லாமல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் இருந்திருக்கிறார் வாஜ்பாய்.

"ஆனால், அவர் ஒரு எம்பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்பு எதையும் விடாப்பிடியாகச் செய்பவராக இருந்துள்ளார்," என்கிறார் சௌத்ரி.

புரியாத புதிராக விளங்கிய தலைவர்

குவாலியரில் ஓர் ஆசிரியருக்கு மகனாகப் பிறந்த வாஜ்பாய், இளமைக்காலத்தில் அங்கேயே கல்வி கற்றார். இந்து ஒற்றுமை குறித்து இந்து மகாசபா மற்றும் ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் அப்போதே பெரும் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தன.

இந்நிலையில், வாஜ்பாய் அப்போது எழுதிய கவிதைகள், "அடல் பிகாரி வாஜ்பாய், தான் ஒரு பாதிக்கப்பட்டவன் என கவலையில் மூழ்கி, அந்த பாதிப்புக்கு எதிரான ஆத்திரமாகவும், அவற்றை எதிர்த்து மிகத் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணங்களைக் கொண்டவையாகவும் இருந்தன என்பது மட்டுமல்லாமல் இந்தப் பரந்து விரிந்த உலகில் தனக்கான இடத்தைத் தக்க வைக்க அவர் விரும்பினார். மேலும் இந்தியாவின் வரலாறு மற்றும் புவியியலை மாற்றி எழுதவும் அவர் தீவிரமாகச் சிந்தித்தார்," என்றும் சௌத்ரி தெரிவிக்கிறார்.

இந்த யோசனைகளை அடுத்து தனது கல்லூரி காலத்தின்போது, அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார். ஒரு பத்திரிக்கையாளராகும் விதத்தில் அந்த அமைப்பில் அவர் வாராந்திர உரைகளை நிகழ்த்தினார்.

இந்தியாவில் இஸ்லாம் மதத்தின் வரலாறு குறித்துக் கடுமையாக விவாதித்தார். அதன் பிறகு பஞ்ச்ஜன்யா உள்ளிட்ட, வலது சாரி இயக்கங்களின் நான்கு பதிப்புகளின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இக்காலகட்டத்தில் அவர், பசு பாதுகாப்பு, இந்து குடும்ப சட்டம், உலக நாடுகளுடனான இந்தியாவின் உறவுமுறைகள் மற்றும் இந்து மதம் குறித்து ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அக்காலகட்டத்தில் வெளியான பர்சாத் (மழை) என்ற பிரபல பாலிவுட் திரைப்படத்தின் பாடல்கள் மிகவும் ஒழுக்கக்கேடான வகையில் இருந்ததாகக் கருதி அதைக் கண்டித்த வாஜ்பாய், குழந்தைகள் அந்தப் படத்தைக் காணத் தடை விதிக்குமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அதன் பின் பல தசாப்தங்கள் கழித்து, வாஜ்பாய் ஒரு நடைமுறைவாதியாக மாறினார். ஜனதா கட்சியை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டபோது, "பிரச்னைகளைக் கையாள்வதில் சாதுரியம் மிக்கவராகவும், எதையும் மிதமாக அணுகுபவராகவும், திறமைமிக்கவராகவும்" இருந்ததாக ஊடகங்கள் புகழ்ந்தன.

2018ஆம் ஆண்டில் தமது 93வது வயதில் காலமான வாஜ்பாய், அவரது 60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் "அண்மைக்கால இந்திய அரசியலில் எவரும் புரிந்துகொள்ள முடியாத தலைவராகத் திகழ்ந்தார்" என்பது தெளிவான உண்மை என்கிறார் எழுத்தாளர் சௌத்ரி.

  • சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: