You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாற்றுத்திறனாளிகளுக்கு கல்லூரி தொடங்கிய பார்வை மாற்றுத்திறனாளி பெண்
புனே மாவட்டத்தில் உள்ள ஷிரூர் தாலுகாவின் தாக்லி ஹாஜி பகுதியை சேர்ந்தவர் ஜெய் காம்கார். பல்வேறு நெருக்கடிகளை கடந்தும் அவர் உறுதியாக இருக்கிறார். தன் நோக்கங்களில் இருந்து அவர் ஒருபோதும் பின்வாங்கியதில்லை.
இவருடைய கதை 25 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்குகிறது. உடல்நல பிரச்னையால் 1997-ம் ஆண்டு இவர் கண் பார்வையை இழந்தார். அப்போது 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.
ஜெய் காம்கார் எளிய பின்னணியை கொண்டவர். தன் நொறுங்கிப் போன வாழ்க்கையை சரிசெய்ய அவர் முயற்சித்துக் கொண்டிருந்த அதேசமயம் தன்னைப் போன்றோருக்கும் அவர் ஆதரவுக் கரம் நீட்டினார். எந்தவொரு மாற்றுத்திறனாளியும் மரியாதையான வாழ்க்கையை வாழ உயர்கல்வி அவசியம் என்பதை அவர் உணர்ந்தார்.
ஜெய் காம்கார் மாற்றுத்திறனாளிகளுக்காக கல்லூரி தொடங்க முன்வந்தார். 2019-ம் ஆண்டு நியூ விஷன் கலை மற்றும் வணிகக் கல்லூரியை தொடங்கினார். இக்கல்லூரிக்கு இன்னும் அரசு மானியம் கிடைக்கவில்லை.
இந்த கல்லூரியில் சேருவதற்கு மும்பை மட்டுமல்லாமல் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வெளியே இருந்தும் மாணவர்கள் வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் 200 மாணவர்கள் பட்டப்படிப்பு அல்லது தொழில்சார் சான்றிதழ் படிப்பு முடித்துள்ளனர். கல்வி நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் கிடைப்பதில்லை, அதனால்தான் அவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு இல்லாமல் போவதாக ஜெய் காம்கார் கூறுகிறார்.
ஜெய் காம்கார் இன்றும் வீட்டு வேலைகள் அனைத்தையும் தானே செய்கிறார். விவசாயம், பயிரிடுதல், பால் கறத்தல்... இவையெல்லாம் அவரின் தினசரி வாழ்க்கையின் வழக்கமான வேலைகள். எதிர்காலத்தில் தனது இரண்டு கனவுகள் நனவாக வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜெய் காம்கர் மரணத்தின் வாசலில் இருந்தார். அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்து புதிய நம்பிக்கையுடன் தன் வேலையை மீண்டும் தொடங்கினார். அவருடைய பணியால் பலரது வாழ்க்கை ஒளிமயமாகியுள்ளது.
செய்தியாளர்: நிதின் நாகர்கர்
படத்தொகுப்பு: அரவிந்த் பரேகர்
தயாரிப்பு: பிரஜாக்தா துலப்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)