You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - மாட்டின் பேரை கேட்டு அலறிய மாடுபிடி வீரர்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டு நிமிடமாக தனியாக நின்ற காளையின் அருகில் யாரும் செல்ல முடியாத வகையில் அசத்தலான ஆட்டத்தைக் காட்டி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது மதுரையை சேர்ந்த ஒரு காளை.
பயத்தை காட்டிய மாடு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், மாடு ஒன்று வாடிவாசலில் இருந்து வெளியே வருவதாக அறிவித்த மறுநொடியே களத்தில் இருந்த மாடுபிடி வீரர்கள் அனைவரும் சுற்றியிருந்த மதில் மற்றும் வேலிகள் மீது ஏறி ஒதுங்கினார்கள். மதுரை ரமேஷ் என்பவருக்கு சொந்தமான இந்த மாட்டை பிடிக்க ஒருவர் கூட அருகே செல்லவில்லை. வாடிவாசலில் இருந்து மாட்டை அவிழ்த்து விட்ட உடன், அனைவரும் அருகில் இருந்த தடுப்புகளில் ஏறி பாதுகாப்பாக நின்று கொண்டனர். காளையை பிடிப்பவருக்கு வழக்கமாக அறிவிக்கப்படும் பரிசுகளை விட கூடுதல் ரொக்கப் பரிசு அறிவித்த பிறகும், இந்த மாட்டின் அருகில் செல்ல யாரும் முயலவில்லை.
களத்தில் இரண்டு நிமிடத்திற்கும் மேல் தனியாக நின்ற காளையின் அருகில் வீரர்கள் செல்லாத வகையில் அந்த காளை அனைவருக்கும் பயம் காட்டியது. இறுதியில் மாட்டை பிடிக்க யாரும் முயற்சி செய்யாத நிலையில், மாடு வெற்றி பெற்றதாக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்தனர்.
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி முதன்மையானது. ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை, இந்த ஆண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
மதுரையை அடுத்த அலங்காநல்லூர் கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி உலக அளவில் பிரபலமான போட்டி. இந்தப் போட்டியைக் காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் இருந்து பலர் வருவார்கள்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளில், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை விட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புகழ் பெற்றது.
காளையை வளர்க்கும் ஒவ்வொரு மாட்டின் உரிமையாளருக்கும், தனது மாடு அலங்காநல்லூர் வாடியில் மாட்டை அவிழ்த்து வெற்றி பெற வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். அதே போல அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக மாடுகளைப் பிடித்து வெற்றி பெறும் வீரர் மீதும் அதிக கவனம் கிடைக்கும்.
இந்நிலையில், இன்று தொடங்கிய போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் இரண்டு காளைகள் பிடிபடாமல் வெற்றி பெற்றுள்ளன.
பல சிறப்புகளைக் கொண்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7. 30 மணிக்குத் தொடங்கியது. போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண தமிழக அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி மற்றும் நடிகர் சூரி எனப் பலரும் கூடியுள்ளனர். இந்தப் போட்டியைக் காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அலங்காநல்லூருக்கு வந்துள்ளனர்.
இன்றைய போட்டியில் கலந்து கொள்ள இந்த ஆண்டு 1200 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் காளைகளைப் பிடிக்க 300 வீரர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள்.
4ஆம் சுற்றின் முடிவில், 275 காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. இதுவரை 13 காளைகளை பிடித்த அபி சித்தர் முதலிடத்தில் இருந்து வருகிறார். அவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் 9 காளைகளை பிடித்த அஜய்யும், முன்றாவது இடத்தில் 7 காளைகளை பிடித்த கோபாலகிருஷ்ணனும், ரஞ்சித்தும் இருக்கின்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இப்போது வரை, 15 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. பாதுகாப்புப் பணியில் 2000 காவலர்கள் வரை ஈடுபட்டுள்ளனர்.
வெற்றி பெறும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், கட்டில், பீரோ, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு முதல் பரிசாக ஒரு காரும், சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளையின் உரிமையாளருக்கு ஒரு காரும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்