You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாதிமறுப்பு திருமணம் செய்த தாய், மகளின் காதலை எதிர்த்தது ஏன்? தலித் இளைஞர் கொலையில் எழும் கேள்விகள்
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வைரமுத்து என்ற தலித் இளைஞர் கொல்லப்பட்டதாக, செப்டெம்பர் 17 அன்று மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒரே சாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதற்கு முடிவெடுத்ததால் பட்டியல் சாதி இளைஞர் கொல்லப்பட்டாரா? பின்னணி என்ன?
மயிலாடுதுறை மாவட்டம், அடியமங்கலம் கிராமத்தில் பெரிய தெருவில் வசித்து வரும் குமார் என்பவரின் மகன் வைரமுத்துவும் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
டிப்ளமோ படித்துள்ள வைரமுத்து, இருசக்கர வாகன மெக்கானிக் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். எம்.பி.ஏ படித்துள்ள இளம்பெண், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
'தனது சாதியை சேர்ந்த பெண்ணை, கடந்த 10 வருடங்களாக வைரமுத்து காதலித்து வந்துள்ளார். ஆனால், பெண்ணின் குடும்பத்தினர் அவர்களின் திருமணத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்' என, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.
கடந்த செப்டெம்பர் 5 அன்று உறவினர் ஒருவரின் புதுமனை புகுவிழாவுக்காக கிராமத்துக்கு வந்த தனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளில் அப்பெண்ணின் தாய் விஜயா ஈடுபட்டுள்ளார்.
ஆனால், தான் காதலித்துக் கொண்டிருக்கும் வைரமுத்து என்பவருடன் மட்டுமே வாழ விருப்பம் உள்ளதாகவும் அவரைப் பதிவு திருமணம் செய்ய உள்ளதாகவும் தனது தாயிடம் சம்பந்தப்பட் பெண் தெரிவித்ததாக, காவல்துறை கூறியுள்ளது.
இதனை ஏற்காத பெண்ணின் தாய் மற்றும் சகோதரர்கள், வைரமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக, வைரமுத்து வேலை பார்க்கும் இடத்துக்கு வந்து பெண்ணின் தாய் விஜயா மிரட்டல் விடுக்கும் காணொளி காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவியது.
வைரமுத்துவை அவர் ஒருமையில் வசைபாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ள அந்த காணொளியின் உண்மைத்தன்மையை பிபிசி தமிழால் உறுதி செய்ய முடியவில்லை.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட ஒன்றிய துணைத் தலைவராக வைரமுத்து பொறுப்பில் இருந்துள்ளார். காதல் விவகாரத்தின் பின்னணியில் நடந்த விவரங்களை இவ்வமைப்பின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் அறிவழகன் பிபிசி தமிழிடம் பகிந்துக்கொண்டார்.
காவல்நிலையத்தில் என்ன நடந்தது?
"செப்டெம்பர் 8-ஆம் தேதியன்று சென்னைக்குச் செல்வதற்கு அப்பெண் திட்டமிட்டுள்ளார். ஆகவே, மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு வருமாறு வைரமுத்துவை அவர் அழைத்துள்ளார். அங்கு வைரமுத்து சென்றபோது அப்பெண்ணின் சகோதரர்கள் அவரை அடித்துள்ளனர்" என்கிறார் அறிவழகன்.
ஆனால், தனது மகனை வைரமுத்து தாக்கியதாக காவல்நிலையத்தில் அப்பெண்ணின் தாய் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
"இதன்பேரில் 11-ஆம் தேதி விசாரணை நடத்திய போலீஸார், அப்பெண்ணை காவல்நிலையம் அழைத்து வருமாறு கூறினர்" எனக் கூறுகிறார், அறிவழகன்.
கடந்த செப்டெம்பர் 12 அன்று மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அப்பெண் கொடுத்துள்ளார். அதில், 'நான் காதலிக்கும் நபருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். என் பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் அனுப்பி வைத்தால் அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையே செய்தியாளர்களிடம் தெரிவித்த அப்பெண், ''பெற்றோர் விருப்பத்துடன் திருமணம் செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருந்தேன். அதையே காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரிலும் எழுதிக் கொடுத்தேன். ஆனால், 'நான் வேண்டாம்' என என் வீட்டில் எழுதிக் கொடுத்துவிட்டனர்" எனக் கூறியுள்ளார்.
வைரமுத்துவும் அப்பெண்ணும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அப்பெண்ணின் தாயார் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். அவர் இருவரின் காதலுக்குத் தொடக்கம் முதலே எதிர்ப்பு காட்டி வந்ததாக, அப்பெண் கூறியுள்ளார்.
'புகார் மனுவை விசாரித்த காவல்துறையினர், வைரமுத்துவின் குடும்பத்தினருடன் அப்பெண்ணை அனுப்பி வைத்தனர்.
அப்போது, ''நீங்கள் எப்படி உயிரோடு வாழப் போகிறீர்கள் எனப் பார்க்கிறோம் என அப்பெண்ணின் சகோதரர் மிரட்டியுள்ளார்'' என, அறிக்கை ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதன்பிறகு வைரமுத்துவின் உறவினர் வீட்டில் அப்பெண் வசித்து வந்துள்ளார்.
ஒரே சாதி தான்... ஆனால்?
இந்தநிலையில், கடந்த 15-ஆம் தேதியன்று இரவு சுமார் 10.30 மணியளவில் வைரமுத்துவை அப்பெண்ணின் உடன் பிறந்த சகோதரரும் அவரது கூட்டாளிகளும் வெட்டிக் கொலை செய்துவிட்டதாக, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கொலை சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். 'குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்' எனவும் அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களைக் கைது செய்த காவல்துறை, அவர்கள் மீது முதலில் பதிவு செய்யப்பட்ட சட்டப் பிரிவுகளை மாற்றியுள்ளது.
"வைரமுத்துவும், அப்பெண்ணும் ஒரே பகுதியில் தான் வசித்து வருகின்றனர். பட்டியல் சாதி மக்களுடன் இணைந்துதான் அப்பெண்ணின் தாய் விஜயாவும் வசித்து வந்துள்ளார்" எனக் கூறுகிறார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் அறிவழகன்.
"வைரமுத்துவுக்கு தனது மகளைத் திருமணம் செய்து வைப்பதற்கு அப்பெண்ணின் தந்தை விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், தனது உறவினருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு விஜயா முயற்சி செய்ததாக கூறினார்" என்கிறார், அறிவழகன்.
இந்தநிலையில், கொலை வழக்கு தொடர்பாக, குகன், அன்புநிதி, பாஸ்கர், விஜயா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் விஜயா என்பவர் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது
இதனை சாதி ஆணவப் படுகொலையாக குறிப்பிடும் மா.கம்யூ கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், 'சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
சாதியா... பொருளாதாரமா?
அதேநேரம், வைரமுத்து படுகொலை விவகாரத்தில் சில கேள்விகள் எழுவதாகக் கூறுகிறார், மதுரையைச் சேர்ந்த எவிடென்ஸ் அமைப்பின் கதிர்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், " பட்டியல் சாதி அல்லாத பெண், பட்டியல் சாதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்த பிறகும் அவருக்கு சாதி உணர்வு மறைந்துவிடும் எனக் கூற முடியாது. அந்த உணர்வு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்கிறார்.
"திருமணம் செய்த பிறகு பட்டியல் சாதியை சேர்ந்தவருடன் வாழ்ந்து தன் குழந்தைகளுடன் பட்டியல் சாதியினருடன் இணைந்து வாழும்போது, அவரை சாதி விரோதியாக பார்ப்பது என்ற கோணமும் நெருடலாக உள்ளது" எனக் கூறுகிறார் கதிர்.
தொடர்ந்து பேசிய அவர், "சாதி அடிப்படையில் வைரமுத்துவை அப்பெண்ணின் தாய் பார்த்தாரா அல்லது பொருளாதாரீதியாக அவர் வலுவாக இல்லாததை முக்கிய காரணமாக பார்த்தாரா என்பது முக்கியம்" என்கிறார்.
'கொலையின் பின்னணியில் சாதி பிரதான காரணமாக உள்ளதா?" என, மயிலாடுதுறை காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமாரிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. புலனாய்வின் முடிவில் தான் இதர விவரங்கள் தெரியவரும்" என்று மட்டும் பதில் அளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.