வறண்டு கிடக்கும் வயல்கள்: மேட்டூர் அணை திறக்கப்படாததால் காவிரி டெல்டா விவசாயிகள் என்ன செய்கின்றனர்? பிபிசி கள ஆய்வு

காவிரி டெல்டா விவசாயம், மேட்டூர் அணை
படக்குறிப்பு, காவிரி டெல்டா பகுதி குறுவை சாகுபடி தொடங்காததால் வறண்டு காட்சியளிக்கும் வயல்கள்
    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலம் குறுவை சாகுபடிக்கான காலம். வழக்கமாக ஒவ்வோர்ஆண்டும் ஜூலை மாதத்தில் இங்குள்ள விவசாய நிலங்கள் பசுமையாக காட்சியளிக்கும்.

கடந்தாண்டு, ஆறு லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

"குறுவை பருவத்தில் (2025) 11.21 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்காக 1.45 லட்சம் விவசாயிகளுக்கு 2,709 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது" என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார்.

வழக்கமாக குறுவை பருவ கொள்முதலில் டெல்டா பகுதிகள் பெரும் பங்களிப்பை அளிக்கின்றன. ஆனால், இம்முறை நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காகவே வெட்டப்பட்ட கல்லணை கால்வாய் தற்போது வறண்டு கிடக்கிறது. பல விவசாய நிலங்கள் சாகுபடி செய்யப்படாமல் இருக்கின்றன.

இதற்கு முக்கிய காரணங்கள் தென்மேற்கு பருவ மழை குறைந்தது மற்றும் மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்படாதது.

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக ஜூன் மாதத் தொடக்கத்தில் தண்ணீர் திறந்து விடப்படும்.

கடந்தாண்டு, ஜூலை மாதத்தில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியிருந்தது.

ஆனால், தற்போது (ஜூலை 23, 2026) மேட்டூர் அணையின் நீர் இருப்பு என்பது 36.67 டிஎம்சி மட்டுமே. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 42 கன அடியாக மட்டுமே உள்ளது.

காவிரி டெல்டா விவசாயம், மேட்டூர் அணை
படக்குறிப்பு, காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காகவே வெட்டப்பட்ட கல்லணை கால்வாய் தற்போது வறண்டு கிடக்கிறது.

'குறுவை சாகுபடி கடும் பாதிப்பு'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"இந்தாண்டு காவிரி டெல்டா மண்டலத்தில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு 6 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு சுமார் 3 லட்சம் ஏக்கர்களில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதுவும் நிலத்தடி நீரை நம்பி" என்கிறார் தஞ்சாவூர் மாவட்டத்தின் வேளாண்மை உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற கலைவாணன்.

"இதிலும் பல விவசாயிகள் நிலத்தடி நீர் மூலம் நாற்றுவிட்டு நடவு செய்து முடித்து, காவிரி பாசன நீருக்காக காத்திருப்பவர்கள்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

காவிரி டெல்டா மண்டலம் என்பது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவியுள்ளது.

இந்த மண்டலத்தில் நெல் முக்கிய பயிராகும். இங்கு பெரும்பாலும் விவசாய சாகுபடி என்பது காவிரி நீரை சார்ந்தே உள்ளது.

"குறுவை சாகுபடி என்பது 110 முதல் 115 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய நெல் பயிரிடப்படும். ஜூன் மாதத்தில் விதைத்து, அக்டோபர் 10 அல்லது 15ஆம் தேதிக்குள் இது அறுவடை செய்யப்படும்" என்கிறார் கலைவாணன்.

குறுவைப் பயிர் அறுவடை செய்யப்பட்ட அதே நிலத்தில், சாகுபடி செய்யப்படுவது தாளடி. குறுவை அல்லாத பிற பகுதிகளில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தொடங்கி, 135 முதல் 150 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய நெல் ரகத்தை பயிரிடுவது சம்பா சாகுபடி ஆகும் என்றும் அவர் விளக்கினார்.

பொதுவாக, விவசாயிகளிடம் இருந்து அரசாங்கம் அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யும் காலம் குறுவைதான் எனக் குறிப்பிடும் கலைவாணன், "பல விவசாயிகள் குறுவை சாகுபடி தான் செய்வார்கள், குறிப்பாக 1 முதல் 3 ஏக்கர்கள் வைத்திருப்பவர்கள் அல்லது குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்கள். இம்முறை அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது அவர்கள் தான்" என்கிறார்.

காவிரி டெல்டா பகுதி, மேட்டூர் அணை, குறுவை சாகுபடி
படக்குறிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்தின் வேளாண்மை உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற கலைவாணன்.

காவிரி டெல்டா பகுதிகளை பொறுத்தவரை, பாசனத்திற்கு பயன்படுத்தும் நீரின் அடிப்படையில் விவசாயிகளை மூன்று வகையாக பிரிக்கலாம்.

  • காவிரி ஆற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள்.
  • நிலத்தடி நீரை மட்டுமே கொண்டு விவசாயம் செய்பவர்கள்.
  • நிலத்தடி நீர் மூலம் சாகுபடிகளை தொடங்கிவிட்டு, அறுவடைக்குள் ஆற்றுப் பாசன நீர் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருப்பவர்கள்.

இந்த வருடம் பாசனத்திற்கு காவிரி நீர் திறக்கப்படாததால் முதலாம் மற்றும் மூன்றாம் பிரிவினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பணந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த விஜி ரவி என்பவர் சுமார் 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் தஞ்சாவூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்தது.

கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கியதால், நாற்று முளைத்த வயலை அறுவடை செய்ய முடியாமல் விஜி ரவியே டிராக்டர் வைத்து முற்றிலும் உழுதது சமூக ஊடகங்களில் வைரலானது.

அப்போது பிபிசி தமிழிடம் பேசிய விஜி ரவி, "வட்டிக்கு வாங்கி மூன்றரை ஏக்கரில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவழித்து நெல் விதைத்தேன். அறுவடை செய்திருந்தால் இரண்டரை லட்ச ரூபாய் கிடைத்திருக்கும். ஆனால் மொத்தமாகப் போய்விட்டது. இப்போது குத்தகைத் தொகையையும் தர முடியாமல், குழந்தைகளின் நகையை வைத்துச் செலவழித்ததையும் எடுக்க முடியாமல் கடனாளி ஆகியுள்ளேன்.'' என்று கூறியிருந்தார்.

இந்த வருடம் மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்படாததால், தான் குறுவை சாகுபடி செய்யவில்லை எனக் கூறுகிறார் விஜி ரவி.

"கடந்த வருடம் அதிக தண்ணீரால் பயிர்கள் வீணாகின. இம்முறை தண்ணீரே இல்லை, விவசாயமே செய்ய முடியவில்லை. வட்டி கட்டவும், அன்றாட பிழைப்புக்காகவும் விவசாயக் கூலியாக பெரிய விவசாயிகளின் நிலங்களுக்கு வேலைக்குச் செல்கிறேன்" என்கிறார் விஜி ரவி.

குத்தகைய நிலம் என்பதாலும், போர்வெல் அமைக்க அதிக செலவாகும் என்பதாலும் தன்னால் விவசாயம் செய்ய முடியவில்லை என்று குறிப்பிடும் விஜி ரவி, "சென்ற வருடம் ஏற்பட்ட கடனை, இந்த முறை குறுவை சாகுபடி மூலம் கிடைக்கும் வருமானத்தில் எப்படியாவது மீட்டுவிடலாம் என இருந்தேன். ஆனால் முடியவில்லை. ஒருகட்டம் வரை தான் என்னால் குத்தகையைத் தக்க வைக்க முடியும். அதன் பின்னர் குடும்பத்தோடு கூலி வேலைக்கு தான் செல்ல வேண்டும்" என்கிறார்.

காவிரி டெல்டா பகுதி, மேட்டூர் அணை, குறுவை சாகுபடி
படக்குறிப்பு, விஜி ரவி

நிலத்தடி நீர் மூலம் விவசாயம்

திருப்பணந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கனகராஜூம் இதே போன்ற சிக்கலை எதிர்கொள்கிறார்.

"நான் 3 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளேன். என் அருகில் உள்ள நிலங்களில் நிலத்தடி நீர் மூலம் தான் விவசாயம் நடக்கிறது. ஆனால், அவர்கள் எனக்கு தண்ணீர் விட மறுத்துவிட்டார்கள். அதனால் நான் விவசாயம் செய்யவில்லை. என் குடும்ப நகைகளை அடமானம் வைத்து தான் குத்தகை எடுத்தேன். இப்போது என்ன செய்வது எனத் தெரியவில்லை" என்கிறார்.

நிலத்தடி நீர் மூலம் குறுவை சாகுபடியை தொடங்கிவிட்டு காவிரி பாசனத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயி செல்வம், "போர்வெல் போட 2 முதல் 3 லட்ச ரூபாய் செலவானது. ஆனால், அதிலிருந்து கிடைக்கும் நீர் என் நிலத்திற்கு அறுவடை வரைக்கும் போதாது. இன்னொரு போர்வெல் அமைக்க எனக்கு வசதியில்லை. இப்போது பாசனத்திற்கு காவிரி நீர் இல்லையென்றால் எனது பயிர்கள் கருகிவிடும்" என்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் நெடார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளந்திரையன் 15 ஏக்கர் நிலத்தில் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளார். தனது நிலத்திற்கு ஒரு போர்வெல் மூலம் வரும் நீர் போதாது என்பதால், இரண்டு போர்வெல்கள் அமைத்துள்ளதாக அவர் கூறுகிறார்.

"இரண்டு போர்வெல்கள் அமைத்தும் நிலத்தடி நீர் முன்பு போல அதிகம் வருவதில்லை. அதனால் தான் பக்கத்து நிலங்களுக்கு என்னால் நீரைக் கொடுக்க முடிவதில்லை. அதிலும் 3 ஏக்கருக்கும் அதிகமான நிலத்திற்கு அதிக தண்ணீர் தேவைப்படும். எங்கள் நிலதிற்கே போதுமான தண்ணீர் இல்லாத சூழல் நிலவுகிறது" என்கிறார்.

சில இடங்களில் விவசாயத்திற்காக மணிக்கு 150 ரூபாய் என்ற கட்டணம் கொடுத்து நிலத்தடி நீர் விலைக்கு வாங்கப்படுகிறது என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள்.

காவிரி டெல்டா பகுதி, மேட்டூர் அணை, குறுவை சாகுபடி
படக்குறிப்பு, விவசாயி கனகராஜ்

காவிரி டெல்டா பகுதியின் விவசாயிகள் பலரும் நிலத்தடி நீர் மூலமே தற்போது விவசாயம் செய்கிறார்கள் எனக் குறிப்பிடும் தஞ்சாவூர் விவசாயிகள் சங்க தலைவர் கோவிந்தராஜன், "நிலத்தடி நீருக்காக போர்வெல் வசதி செய்ய சில லட்ச ரூபாய் வரை தேவைப்படுகிறது. அப்படி செலவு செய்ய இயலாதவர்கள் பிற நிலங்களுக்கு விவசாயக் கூலிகளாக செல்லும் நிலை உண்டாகிறது" என்கிறார்.

"சிலர் ரியல் எஸ்டேட் துறைக்கு நிலங்களை விற்றுவிடுகிறார்கள் அல்லது அவற்றை தரிசு நிலங்களாக விட்டுவிட்டு வேறு பணிகளுக்கு சென்று விடுகிறார்கள்" என்கிறார் அவர்.

காவிரி டெல்டா விவசாயம், மேட்டூர் அணை

பட மூலாதாரம், TN DIPR

தமிழக அரசு கூறியது என்ன?

கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படாததால், தமிழக அரசு ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் ஒன்றை அறிவித்தது.

"காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்வதற்கு, மேட்டூர் அணை ஜுன் 12ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம். நடப்பு தென் மேற்குப் பருவத்தில் 'எல்நினோ' எனும் நிகழ்வால் மழை அளவு 90 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென் மேற்குப் பருவமழை தாமதமாகும் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. எனவே (ஜுன் 12) மேட்டூர் அணையைத் திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாத நிலை உள்ளது" என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக நெல் சாகுபடி மேற்கொள்ளும் 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, "டெல்டா மாவட்டங்களில் வடிமுனைக் குழாய்க் கிணறுகள் மூலம் 3.55 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி மேற்கொள்ள இயலும் என்பதாலும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் தற்போது மழைப் பொழிவு சீராக இல்லாத நிலையிலும் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட கார், குறுவை, சொர்ணவாரிப் பருவத்தில் நெல் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கவும், நெல் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகள் பயனடையும் வகையில் 2026ஆம் ஆண்டிற்கான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்" என தெரிவித்துள்ளது.

மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த இத்திட்டம் உறுதுணையாக அமையும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, "குறுவை சாகுபடிக்கு 10,714 மெட்ரிக் டன் நெல் விதைகள் மற்றும் 4.02 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தடையில்லா மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளது.

காவிரி டெல்டா பகுதி, மேட்டூர் அணை, குறுவை சாகுபடி
படக்குறிப்பு, தஞ்சாவூர் விவசாயிகள் சங்க தலைவர் கோவிந்தராஜன்

கடந்த புதன்கிழமை டெல்லியில் நடந்த காவிரி நீர் மேலாண்மை வாரியக் கூட்டத்தில், "காவிரிப் படுகையில் நிலவும் குறைந்த மழைப்பொழிவைக் கருத்தில் கொண்டு, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் தங்களது நீர்த்தேக்கங்களைக் குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டுமே கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டது விவசாயிகளை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

"இதனால் சம்பா விவசாயமும் கேள்விக்குறியாகியுள்ளது" எனக் குறிப்பிடுகிறார் தஞ்சாவூர் விவசாயிகள் சங்க தலைவர் கோவிந்தராஜன்.

"சம்பா சாகுபடியில் கிடைக்கும் நெல்லை தான் தை மாதத்தில் அறுவடை செய்து பொங்கலைக் கொண்டாடுவோம். ஆனால், 2027இல் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பொங்கல் என்பது சந்தேகம் தான்" என்கிறார் அவர்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு