You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவையில் நாய் கடித்து இருவர் மரணம், எச்சரிக்கும் மருத்துவர்கள் - ரேபிஸ் தடுப்பூசி ஏன் அவசியம்?
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
கோவையில் ஒரு இளம் பெண் உட்பட அடுத்தடுத்து இரண்டு பேர் நாய் கடித்து ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் நாய்கடி சம்பவங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பேசுபொருளான நிலையில், கோவையில் நடைபெற்றிருக்கும் ரேபிஸ் உயிரிழப்புகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரேபிஸ் ஏற்பட்டால் அதை குணப்படுத்த மருந்துகள் இல்லாததால் அது வராமல் தடுக்க நாய் கடித்த உடன் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதே உயிரிழப்புகளை தவிர்க்கும் வழி என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி 57 வயது ஆண் ஒருவர், நாய் கடித்து இறந்துவிட்டார். ‘‘அவருக்கு தெரு நாய் கடித்ததா, வீட்டு நாய் கடித்ததா என்று தெரியாது; ஆனால் தாமதமாக வந்ததால், அவருக்கு ரேபிஸ் நோய் தாக்கம் அதிகமாகிவிட்டது. அதனால் அவரைக் காப்பாற்ற இயலாமல் போய்விட்டது’’ என்று பிபிசி தமிழிடம் கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் நிர்மலா தெரிவித்தார்.
அதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு, அக்டோபர் 9-ஆம் தேதி, கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர், ரேபிஸ் நோய் ஏற்பட்டு இறந்திருக்கிறார்.
அந்தப் பெண்ணின் வீட்டில் மொத்தம் நான்கு நாய்கள் வளர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு நாய் ஜூலை மாதத்தில் அவரைக் கடித்துள்ளது. அவர் அப்போது தனியார் கிளினிக்கிற்குச் சென்று டெட்டனஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். ரேபிஸ் தடுப்பூசி போடவில்லை. மூன்று மாதங்கள் கழித்து, ரேபிஸ் நோய் ஏற்பட்டு அவர் இறந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் பூபதி.
இவற்றைத் தவிர்த்து, பீளமேடு கிரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அருண்குமார் என்பவர், ரோட்டில் பைக்கில் செல்லும்போது, அவரை ‘ராட்வீலர்’ நாய் துரத்திக் கடித்துள்ளது. அருண்குமாரின் மனைவி துர்கா அளித்த புகாரை ஏற்று, தடை செய்யப்பட்ட ‘ராட்வீலர்’ நாயை வளர்த்து வந்த மனோஜ் மற்றும் அவரின் மனைவி இருவர் மீதும், பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி போடுவதற்கான முகாம்களை, தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து தீவிரப்படுத்த கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
அத்துடன், நாய்க்கடி குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்றும் பலரும் வலியுறுத்துகின்றனர்.
ஆய்வு சொல்வது என்ன?
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையின்படி, ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2023 வரை தமிழ்நாட்டில் 8,06,239 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 2022-ஆம் ஆண்டில், 3,65,318 என்றிருந்த நாய்க்கடிகளின் எண்ணிக்கை, 2023-ஆம் ஆண்டில் 4,40,921 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் பதிவான நாய்க்கடிக்கு பாதிக்கப்பட்டவர்களில் 60.2 சதவீதம் பேர் ஆண்கள் ஆவர்.
2022 - 2023 ஆண்டுகளில் 41–50 வயதுக்கு உட்பட்டோர் 16.33 சதவீதமும், 31-40 வயதுக்கு உட்பட்டோர் 16.19 சதவீதமும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 15.42 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
“2023-ஆம் ஆண்டில், மாநிலத்தில் ரேபிஸ் பாதிப்பால் 18 இறப்புகள் பதிவாகியுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் நாய்க்கடி மற்றும் வெறிநாய்க்கடி மரணம் ஆகிய இரண்டும் அதிகரித்து வருவதை நாங்கள் கருத்தில் கொண்டிருக்கிறோம்." என்று தெரிவித்திருக்கிறார் தமிழக அரசின் பொது சுகாதார இயக்குனர் டாக்டர் டி.எஸ். செல்வ விநாயகம்.
‘‘நாய் கடித்தால் அச்சப்பட தேவையில்லை. அதே நேரத்தில் அஜாக்கிரதையாகவும் இருந்துவிடக்கூடாது. சரவணம்பட்டியில் வீட்டு நாய்தானே கடித்தது என்று அந்தப் பெண் பொருட்படுத்தவில்லை, அதுதான் அவரின் மரணத்துக்குக் காரணம். நாய்க்கடியைப் பொறுத்தவரை, நாமாகவே எதையும் முடிவு செய்யக்கூடாது.’’ என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் தனியார் கால்நடை மருத்துவர் சக்கரவர்த்தி.
"நாய்க்குட்டி பிறந்ததும் முதலில் ஒரு தடுப்பூசியும், அடுத்து 21 நாட்களில் மற்றொரு தடுப்பூசியும் போட வேண்டும். தடுப்பூசியின் வீரியம் குறைந்து கொண்டிருக்கும் என்பதால், ஆண்டுதோறும் பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்.
நாயால் மனிதர்களுக்கு ரேபிஸ் நோயைப் பரப்ப முடியும். கடிக்கும் இடத்தைப் பொறுத்து அதன் தாக்கம் இருக்கும். உதாரணமாக முகத்தில் கடித்தால், உடனே மூளைக்குப் பரவும் வாய்ப்பு அதிகம். எனவே, கடித்த 24 மணி நேரத்துக்குள் தடுப்பூசி போடுவது அவசியம்’’ என்றார் மருத்துவர் சக்கரவர்த்தி.
நாய் கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய கால்நடைத்துறை இணை இயக்குநர் திருமுருகன், ‘‘நாய் கடித்துவிட்டால், உடனே அந்த இடத்தை ஓடும் தண்ணீரில் நன்கு சோப்புப் போட்டு 10-15 நிமிடங்கள் வரை கழுவுவதுதான் முதலில் செய்ய வேண்டிய காரியம். வீட்டு நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும், நாய் கடித்த நபருக்கும் ARV எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்ற நாட்களில் சரியாகப் செலுத்திக்கொள்வது அவசியம்’’ என்றார்.
தெருநாய்களை வளர்ப்போர் கவனத்திற்கு!
‘‘தெருநாய்க்குட்டிகளை சிலர் கொண்டு போய் வளர்ப்பார்கள். ஆனால் அதற்கு எந்தத் தடுப்பூசியும் போட மாட்டார்கள். அதன் தாய்க்கு ரேபிஸ் இருந்திருந்தால், அதன் பாலைக்குடித்த அந்தக் குட்டிக்கும் அதன் தாக்கம் இருக்கும். நாய் வளர்ப்பில் பராமரிப்புதான் முக்கியம். அதற்கு மாதந்தோறும் குடற்புழு நீக்கம் (deworming) செய்ய வேண்டும்; தடுப்பூசிகள் சரியாகப் போட வேண்டும். முக்கியமாக வீட்டு நாய்களை தெருநாய்களுடன் தொடர்பின்றி பார்த்துக் கொள்ள வேண்டும்.’’ என்று எச்சரிக்கிறார் பொள்ளாச்சி கால்நடை உதவி மருத்துவர் அசோகன்.
தொடர்ந்து பேசிய அவர், ‘‘வீட்டு நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும், அது கடித்தாலும், பிராண்டினாலும் கட்டாயம் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பூனை, ஆடு, மாடு உள்ளிட்ட வளர்ப்பு விலங்குகள், வன விலங்குகள் கடித்தாலும் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். நாயின் உமிழ்நீரில்தான் ரேபிஸ் கிருமி இருக்கும். அதன் வழியாக தொற்றுப் பரவும் அபாயம் உண்டு. நாய்களுக்கு முத்தம் கொடுப்பது, வாயில் நக்க விடுவது கண்டிப்பாகக் கூடாது.’’ என்றார்.
வெயில் காலத்தில் அதிகம் தாக்கும் ரேபிஸ்
தெருநாய்கள் வெயில் காலத்தில்தான் அதிகளவில் ரேபிஸ் தாக்கத்துக்கு உள்ளாவதாகக் கூறும் கால்நடை மருத்துவர் அசோகன், ‘‘கோடைக் காலத்தில் தெருநாய்கள் மிகவும் அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் . நிற்க இடமிருக்காது. உணவு, தண்ணீர் கிடைக்காது. அப்போதுதான் ரேபிஸ் வைரஸ் பெருக்கம் அதிகமாக இருக்கும்.
ரேபிஸ் தாக்கிய நாய், அதிகபட்சமாக 10 நாட்கள் உயிரோடு இருக்கவே வாய்ப்புண்டு. அதனால் சாப்பிட முடியாது, தண்ணீரைக் கண்டால் பயம் வரும். நாக்கு சுழன்று விடும், குரைக்க முடியாது, ஓடிக் கொண்டேயிருக்கும். அந்த நேரத்தில் நாயுடன் தொடர்பில் வருபவர்களை கடிப்பதற்கான வாய்ப்பு அதிகம்’’ என்றார்.
நாய் கடிக்கும் இடத்தையும், அதன் அளவையும் பொறுத்து, ரேபிஸ் தாக்கம் ஏற்படும் என்று கூறும் கோவை கேஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம், ''நாய் கடித்த முதல் நாள், மூன்றாம் நாள், ஏழாம் நாள், 21 ஆம் நாள் அல்லது 28 ஆம் நாளில் தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும். காயம் பெரிதாக இருந்தால், கடிபட்ட இடத்தைச் சுற்றிலும் HUMAN RABIES IMMUNOGLOBULIN (HRIG) தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.’’ என்கிறார்.
ரேபிஸ் நோய் பாதித்தவரைத் தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகக் கூறும் டாக்டர் பக்தவத்சலம், ‘‘நோய் பரவும் வாய்ப்பின் காலம் நாய் கடித்த நாளிலிருந்து 10 நாள் முதல் மூன்று மாதம் வரை என மாறுபடும். அதன் பின் அதற்கான அறிகுறிகள் தெரியும். காய்ச்சல் வரும், சோர்வு ஏற்படும், தண்ணீரைக் கண்டால் பயம் வரும்.
சில நாட்களில், பெருமூளைச் செயலிழப்பு, பலவீனம், பக்கவாதம், சுவாசிப்பது மற்றும் விழுங்குவதில் சிரமம், அசாதாரண நடத்தை என நிலைமை மோசமாகிவிடும். உலகிலுள்ள நோய்களில் 100 சதவீதம் காப்பாற்ற முடியாத நோய் ரேபிஸ் என்பதால், விழிப்புணர்வுடன் இருப்பது மட்டும்தான் உயிரைக் காப்பதற்கான ஒரே வழி. ரேபிஸ் தடுப்பூசி அரசு மருத்துவமனையில் இலவசமாகப் போடப்படுவதால், நாய் கடித்ததும் அதைப் போட்டுக் கொள்வது மிகமிக அவசியம்,’’ என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)