You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பழைய செல்போனை விற்பதில் மறைந்துள்ள ஆபத்து - 5 முக்கிய விஷயங்கள்
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
"செல்போனில் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை சேதப்படுத்தினால் தொலைத்தொடர்பு சட்டத்தின்படி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்" என இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DOT) எச்சரித்துள்ளது.
பொது மக்கள், தங்கள் செல்போனின் ஐ.எம்.இ.ஐ எண் சரியாக உள்ளதா என்பதை பிரத்யேக செயலி மூலம் சரிபார்க்குமாறும் தொலைத் தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
"பழைய செல்போன்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனத்துடன் செயல்படாவிட்டால் சட்டரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்" என்று சைபர் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சகம் கடந்த நவம்பர் 24ஆம் தேதியன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், செல்போன் ஐ.எம்.இ.ஐ எண்ணை சேதப்படுத்துதல் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து எச்சரித்துள்ளது.
1. ஐ.எம்.இ.ஐ எண்களின் தவறான பயன்பாட்டை தவிர்ப்பது எப்படி?
இந்தியாவில் செல்போன் பயன்பாட்டின் வளர்ச்சியில் ஐ.எம்.இ.ஐ எண்களைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு தீவிர பிரச்னையாக உருவெடுத்துள்ளதாக, தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
இதைத் தவிர்ப்பதற்கான வழிகளை தொலைத்தொடர்புத் துறை பட்டியலிட்டுள்ளது. அதன்படி,
- மாற்றப்பட்ட ஐ.எம்.இ.ஐ எண்களைக் கொண்ட மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- மாற்றியமைக்கப்பட்ட ஐ.எம்.இ.ஐ எண்களைக் கொண்ட மோடம் (Modems), சிம் பெட்டிகள் (Sim boxes) ஆகிய சாதனங்களைப் பயன்படுத்தக்கூடாது.
- போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் அல்லது மோசடி மூலம் சிம்கார்டுகளை வாங்கக் கூடாது.
- சிம்கார்டுகளை தவறாகப் பயன்படுத்தக் கூடிய நபர்களிடம் சிம்கார்டுகளை கொடுப்பது அல்லது அத்தகைய நபர்களிடம் இருந்து வாங்குவது குற்றச் செயலாகும்.
- இணையதளங்களைப் பயன்படுத்தி அழைப்பு அடையாளத்தை (Calling Line Identity) மாற்றியமைப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
மேலும், "சிம்கார்டுகளை வேறு யாரும் தவறாகப் பயன்படுத்தினாலும் அதன் அசல் பயனாளர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும்" எனவும் தொலைத்தொடர்புத் துறை எச்சரித்துள்ளது.
"இணையவழி குற்றங்கள் பெருகிக் கொண்டே போவதால் இப்படியொரு எச்சரிக்கையை தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது" என்கிறார் பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் (சென்னை வட்டம்) மாநில செயலாளர் ஸ்ரீதர் சுப்ரமணியன்.
"முன்பு ஆதார் அட்டையைப் பயன்படுத்தி சிம்கார்டுகளை விநியோகம் செய்தனர். தற்போது ஆதார் எண்ணுடன் விரல் ரேகையைப் பதிவு செய்த பிறகே சிம்கார்டுகள் வழங்கப்படுகின்றன. ஆனாலும் அதிகளவில் இணைய குற்றங்கள் நடக்கின்றன" என்று அவர் குறிப்பிட்டார்.
இணையவழி குற்றங்கள் அனைத்தும் சிம்கார்டுகளில் இருந்து தொடங்குவதாகக் கூறுகிறார், வழக்கறிஞரும் சைபர் தொழில்நுட்ப நிபுணருமான கார்த்திகேயன்.
மேலும், "குற்றத்தில் ஈடுபடும் நபர்கள், தங்களின் அடையாளத்தை மறைத்துக் கொண்டு தவறான வழிகளில் சிம்கார்டுகளை பெறுகின்றனர். கைவிரல் ரேகையைப் போல செல்போனுக்கு தனித்தன்மை வாய்ந்த ஒன்றாக ஐ.எம்.இ.ஐ எண் (International mobille equipment identity) உள்ளது. அதைச் சிதைக்கும்போது அதன் உற்பத்தி விவரங்கள் மாறிவிடுகிறது," என்று அவர் விளக்கினார்.
இணையவழி குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் பிடிபடும்போது அவர்கள் கையில் இருக்கும் செல்போன்களுக்கும் அதன் அசல் உற்பத்தி விவரங்களுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாகக் கூறும் கார்த்திகேயன், "இரண்டும் ஒன்று போல் இருக்காது. இதனால் அவர்கள் விடுதலையாகும் சூழல்கள் ஏற்படுகின்றன" என்கிறார்.
2. பழைய செல்போன்களை விற்பதில் மறைந்துள்ள ஆபத்து
"சிம்கார்டு யார் பெயரில் உள்ளதோ அவர் பயன்படுத்தும் செல்போனின் ஐ.எம்.இ.ஐ எண் அதனுடன் (Tag) சேர்ந்துவிடும். அதாவது, சிம்கார்டு யார் பெயரில் உள்ளதோ அந்த நபரின் பெயர் ஐ.எம்.இ.ஐ உடன் இணைக்கப்பட்டு இருக்கும்" எனக் கூறுகிறார் கார்த்திகேயன்.
அதோடு, "ஒரு செல்போனை வாங்கிய பிறகு முடிந்த அளவுக்கு அதைப் பயன்படுத்த வேண்டும். அதை இன்னொரு நபருக்கு விற்பதைத் தவிர்க்க வேண்டும். செல்போன் விற்கப்பட்டாலும் முதலில் வாங்கியவர் பெயரிலேயே இருக்கும் என்பதால் அதன் பேரில் எந்தக் குற்றம் நடந்தாலும் அதன் உரிமையாளர் மீது வழக்கு பதிவாகும்" என்று விளக்குகிறார்.
பழைய கார் அல்லது இரு சக்கர வாகனங்களை விற்கும்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் பெயர் மாற்றம் செய்து கொள்ளும் வசதிகள் உள்ளன.
இதைக் குறிப்பிட்டுப் பேசும் கார்த்திகேயன், "ஆனால், செல்போன்களை விற்கும்போது அதுபோன்று எந்த ஆவணங்களும் பரிமாற்றம் செய்யப்படுவதில்லை" என்றும், "செல்போனுக்கு என பிரத்யேக பதிவு முறைகள் இருந்தால் சட்டப்படி எந்தப் பிரச்னைகளும் வரப் போவதில்லை" என்றார்.
மேலும், "பயன்படுத்தப்பட்ட செல்போனுக்கு சந்தையில் குறைந்த விலையே நிர்ணயிக்கப்படுகிறது. சில ஆயிரம் ரூபாய்களுக்காக ஏன் சட்ட சிக்கலை எதிர்கொள்ள வேண்டும்?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
3. உண்மைத் தன்மையை சரிபார்ப்பது எப்படி?
நாம் பயன்படுத்தும் செல்போனில் ஐ.எம்.இ.ஐ எண் சரியாக உள்ளதா என்பதை அறிவதற்கான வசதியை தொலைத்தொடர்புத் துறை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, 'சஞ்சார் சாத்தி (https://sancharsaathi.gov.in) என்ற இணையதளத்திற்குச் சென்று ஐ.எம்.இ.ஐ விவரங்களைச் சரிபார்க்கலாம்' என தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு என பிரத்யேகமாக சஞ்சார் சாத்தி என்ற பெயரில் மொபைல் செயலியை தொலைத்தொடர்புத் துறை வடிவமைத்துள்ளது.
"அந்தத் தளத்திற்குள் சென்று செல்போன் எண்ணைப் பதிவிட்டு அதனுடன் ஐ.எம்.இ.ஐ எண்ணைப் பதிவிட வேண்டும். அவ்வாறு பதிவிடும்போது உற்பத்தி தேதி, மாடல் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட செல்போன், தொடர்புடைய சிம்கார்டு உடன் பொருந்திப் போகிறதா என்பதை அறியலாம்" எனக் கூறுகிறார் கார்த்திகேயன்.
"தற்போது இரண்டு சிம்கார்டு வசதி என்பது பரவலாக உள்ளது. இரண்டு சிம்கார்டு எண்களையும் சஞ்சார் சாத்தி இணையதளத்தில் பதிவிட்டுச் சரிபார்க்கலாம்" எனக் கூறும் கார்த்திகேயன், "ஐ.எம்.இ.ஐ எண்ணைப் பதிவிடும்போது அரசு ஆவணங்களில் உள்ள உற்பத்தி எண்ணுடன் அது பொருந்திப் போகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்" என வலியுறுத்துகிறார்.
"செல்போனில் உள்ள ஐ.எம்.இ.ஐ எண் அதன் அசல் விவரங்களுடன் பொருந்திப் போகாவிட்டால் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். அதைத் தவிர்க்க வேண்டும் என்றால், பொருளை வாங்கிய இடத்தின் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்" எனக் கூறுகிறார், கார்த்திகேயன்.
"ஆனால், தொடர்புடைய மொபைல் எண்ணைப் பயன்படுத்தி குற்றங்கள் நடக்கும்போது மட்டுமே அதன் அசல் பயனாளருக்கு சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறுகிறார், பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியனின் (சென்னை வட்டம்) மாநில செயலாளர் ஸ்ரீதர் சுப்ரமணியன்.
4. செல்போன் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?
செல்போன் தொலைந்து போனாலோ, திருடப்பட்டாலோ அதன் ஐ.எம்.இ.ஐ எண்ணை முடக்குவதற்கு சஞ்சார் சாத்தி இணையதளம் மற்றும் செயலியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
செல்போன் காணாமல் போய்விட்டாலோ, தொலைந்து போய்விட்டாலோ அதுதொடர்பான விவரங்களை பதிவு செய்யலாம். இதன்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சஞ்சார் சாத்தி தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, இதன் பேரில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 41.78 லட்சம் மொபைல் போன்கள் முடக்கப்பட்டதாக (Block) சஞ்சார் சாத்தி தளத்தில் கூறப்பட்டுள்ளது.
'மொபைல் யாருடைய பெயரில் உள்ளது?' என்பது தொடர்பாகப் பெறப்பட்ட 284 லட்சம் கோரிக்கைகளில் 248 லட்சம் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டு இருப்பதாகவும் சஞ்சார் சாத்தி தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் போனை பயன்படுத்தி மோசடி நடந்தது தொடர்பாக 40.01 லட்சம் புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் தளத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒருவேளை தொலைந்துபோன செல்போன் கண்டறியப்பட்டால், முடக்கப்பட்டதை நீக்குவதற்கான வழிகளும் சஞ்சார் சாத்தி இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
"செல்போனில் உள்ள ஐ.எம்.இ.ஐ எண் தவறாக இருப்பது கண்டறியப்பட்டால் பொருளை வைத்திருக்கும் நபரே குற்றம் செய்தவராகக் கருதப்படுவார்" எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநர் கார்த்திகேயன்.
"செல்போன் தொலைந்துபோய் ஐ.எம்.இ.ஐ தெரியாவிட்டால் அருகில் காவல் நிலையம் சென்று மொபைல் எண்ணைக் கூறினால் போதும். அவர்களே ஐ.எம்.ஐ. எண்ணைக் கண்டறிந்து கூறுவார்கள்" எனவும் அவர் தெரிவித்தார்.
5. தவறு கண்டறியப்பட்டால் என்ன தண்டனை?
குடிமக்களைப் பாதுகாக்கவும் தொலைத்தொடர்பு சாதனங்களை அடையாளப்படுத்தவும் ஐ.எம்.இ.ஐ போன்றவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டங்களை இந்திய அரசு வலுப்படுத்தி இருப்பதாக, தொலைத்தொடர்புத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான சட்ட விதிகளை தொலைத்தொடர்புத் துறை பட்டியலிட்டுள்ளது. அதன்படி,
- இந்திய தொலைத்தொடர்பு சட்டம் 2023, செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ எண்ணை சேதப்படுத்துவதற்கு கடும் தண்டனைகளை விதிப்பது குறித்துக் கூறுகிறது.
- தொலைத்தொடர்பு சட்டம் 2023, பிரிவு 42(3)(c), ஐ.எம்.இ.ஐ எண்ணை சேதப்படுத்துவதைத் தடை செய்கிறது.
- பிரிவு 42(3)(e), மோசடி, ஏமாற்றுதல் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் சிம்கார்டு பெறுவதைத் தடுக்கிறது.
- பிரிவு 42(3)(f)இன்படி, செல்போன், மோடம், சிம் பாக்ஸ் (பல சிம்கார்டுகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவது) ஆகியவற்றை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவது, சேதப்படுத்தப்பட்ட ஐ.எம்.இ.ஐ எண் ஆகியவற்றைப் பயன்படுத்துவது குற்றம்.
- இதை மீறினால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 50 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் எனத் தொலைத்தொடர்பு சட்டம் கூறுகிறது.
- பிரிவு 42(7)இன்படி, கைது செய்யக்கூடிய குற்றமாகவும் பிணையில் வர முடியாத குற்றமாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
- பிரிவு 42(6) குற்றங்களைத் தூண்டுகிறவர்களுக்கும் ஊக்குவிப்பவர்களுக்கும் ஒரே மாதிரியான தண்டனையை வழங்குகிறது.
"குற்றத்தில் ஈடுபட்டாலும், அதை ஊக்குவித்தாலும் ஒரே மாதிரியான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இதற்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது" எனக் கூறும் கார்த்திகேயன், "சில முக்கியத்துவம் வாய்ந்த இணைய குற்றங்களில் இரண்டு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படுகிறது" எனக் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு