வங்கதேசத்தில் தொடர்ந்து 4 முறை வென்ற இவர் யார்? இந்தியாவுடன் உள்ள பந்தம் என்ன?

வங்கதேசத்தில் நாடு தழுவிய மாணவர்களின் போராட்டம் வலிமையடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்திருப்பதுடன், நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

76 வயதான ஹசீனா ஹெலிகாப்டர் மூலமாக திங்கட்கிழமை இந்தியாவிற்கு சென்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இதனால் வங்கதேசத்தை 20 ஆண்டுகள் ஆண்டுள்ள ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஹசீனா அதிகாரத்திற்கு வந்தது எப்படி?

1947ம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஹசீனாவின் இரத்தத்திலேயே அரசியல் ஊறியுள்ளது.

இவரது தந்தை தேசிய தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் ‘வங்கதேசத்தின் தந்தை’ என போற்றப்படுபவர். 1971ல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து சுதந்திரம் பெற்ற பிறகு, நாட்டின் முதல் அதிபராக பதவி வகித்து வங்கதேசத்தை வழிநடத்தியவர்.

அச்சமயத்தில் ஹசீனா, டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக உருவெடுத்திருந்தார்.

1975-ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் ஆட்சியைக் கவிழ்த்த ராணுவம், முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டனர். அவரது குடும்பத்தினர் பலரும் கொல்லப்பட்டனர். அப்போது வெளிநாட்டில் வசித்து வந்த ஹசீனா மற்றும் அவரது சகோதரி மட்டுமே அவரது குடும்பத்தில் உயிர் பிழைத்திருந்தனர்.

ஹசீனாவுக்கு இந்தியாவுடன் உள்ள பந்தம் என்ன?

இந்தியா புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த ஹசீனா 1981ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு திரும்பி அவரது தந்தையின் அவாமி லீக் கட்சிக்கு தலைவராக பொறுப்பேற்றார்.

ஜெனரல் ஹுசைன் முகமது இர்ஷாத்தின் இராணுவ ஆட்சியை எதிர்த்து ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வர பிற அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்து போராட்டங்களை முன்னெடுத்தார்.

மக்கள் எழுச்சியால் உந்தப்பட்ட ஹசீனா அந்நாட்டின் தேசிய அடையாளமாக உருவெடுத்தார்.

1996ஆம் ஆண்டு முதன்முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார் ஹசீனா. இந்தியாவுடன் நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் மற்றும் நாட்டின் தென்கிழக்கில் உள்ள பழங்குடி கிளர்ச்சியாளர்களுடன் அமைதி ஒப்பந்தம் போன்றவற்றுக்காக போற்றப்பட்டார்.

ஹசீனாவின் அரசு மீது ஊழல் புகார்கள் எழுந்ததுடன், இந்தியாவுக்கு கீழ்ப்படிந்து நடப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

2001ஆம் ஆண்டு கூட்டணியில் இருந்து பின் போட்டியாளராக மாறிய வங்கதேச தேசியவாத கட்சியின் (BNP) பேகம் கலீதா ஜியாவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தார்.

அரசியல் வாரிசுகளான இந்த இரு பெண்களும் வங்கதேச அரசியலில் 3 தசாப்தங்களுக்கு மேலாக கோலாச்சி வருகின்றனர். இவர்கள் ‘Battling Begam’s’ என அழைக்கப்பட்டனர். இஸ்லாமியத்தில் பேகம் என்பது உயர் பதவி வகிக்கும் பெண்களை குறிக்கும் சொல்லாகும்.

இவர்களது போட்டாபோட்டி அரசியலின் விளைவாக, பேருந்து குண்டிவெடிப்புகள், காணாமல் போகும் நிகழ்வுகள், சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் போன்றவை நடப்பது வழக்கமாகிவிட்டதாக இவர்கள் ஆட்சியை கூர்ந்து கவனித்தவர்கள் கூறுகின்றனர்.

2009ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று ஹசீனா மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தார்.

எதிர்க்கட்சியாக இருந்த போது இவர் பலமுறை கைதுசெய்யப்பட்டார், இவரை படுகொலை செய்ய முயற்சிகள் நடந்தன. முக்கியமாக 2004 இல் நடந்த ஒரு முயற்சியின் போது இவரது காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது. நாட்டில் இருந்து வெளியேற்ற பலமுறை நடந்த முயற்சிகளிலும் இவர் தப்பினார். இவர் மீது பல ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன.

ஹசீனா சாதித்தது என்ன?

ஹசீனா ஆட்சியின் கீழ் வங்கதேசம் முன்னேற்றம் கண்டது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் உலகின் ஏழ்மையான நாடு, 2009-ஆம் ஆண்டில் இருந்து இவரது தலைமையின் கீழ் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டது.

இப்போது வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது வங்கதேசம்.

கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடுகையில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் வங்கதேசத்தில் 2.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

இந்த வளர்ச்சியின் பெரும்பங்கை ஜவுளித் தொழில் வகிக்கிறது. இது வங்கதேசத்தின் ஏற்றுமதியில் பெரும்பங்கு வகிக்கிறது.

நாட்டின் சொந்த நிதிகள், கடன் மற்றும் மேம்பாட்டு உதவிகளின் மூலம், ஹசீனாவின் அரசாங்கம் கங்கையின் குறுக்கே 2.9 பில்லியன் டாலர் மதிப்பிலான பத்மா பாலம் உட்பட மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கியது.

ஹசீனாவை சுற்றியுள்ள சர்ச்சை என்ன?

சமீபத்திய சர்ச்சைக்குரிய தேர்தலுக்கு பிறகு தொடர்ந்து நான்காவது முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஹசீனா. இவர் பதவியேற்ற பிறகு, சமீபத்திய போராட்டங்கள் தான் இவர் எதிர்கொண்ட மிக தீவிரமான சவாலாகும்.

இவர் பதவி விலக வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் வந்த போதிலும், அவர் அவற்றை பொருட்படுத்தவில்லை.

போராட்டக்காரர்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்ட ஹசீனா, இந்த பயங்கரவாதிகளை உறுதியான கரம் கொண்டு அடக்குவதற்கு மக்களின் ஆதரவை கோரினார்.

இவர் அறிவித்த சிவில் சர்வீஸ் வேலை இடஒதுக்கீடு ஆணையை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று கூறி டாக்கா மற்றும் பிற பகுதிகளில் போராட்டம் வெடித்தது. இது பின்னாட்களில் அரசுக்கு எதிரான போராட்டமாக விரிவடைந்தது.

கோவிட் தொற்று பரவலுக்கு பிறகு வங்கதேசத்தில் விலைவாசி உயர்வு அதிகரித்தது, பணவீக்கம் வானளாவ உயர்ந்தது, அந்நியச் செலாவணி கையிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது, இதனால் 2016ஆம் ஆண்டில் இருந்து ஒப்பிடுகையில் இதன் வெளிநாட்டு கடன் இரண்டு மடங்கு அதிகரித்தது.

இதற்கு ஹசீனா அரசின் தவறான நிர்வாகமே காரணம் என்று விமர்சகர்கள் குற்றம் சாட்டினர். வங்கதேசத்தின் முந்தைய பொருளாதார வெற்றி, ஹசீனாவின் அவாமி லீக்கிற்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே உதவியது என்று கூறப்பட்டது. இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஹசீனா மற்றும் அவரது அரசு மறுத்தது.

சமீபத்திய மாதங்களில், அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களோடு சேர்த்து வங்கதேச தேசியவாத கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். ஒரு காலத்தில் பிற கட்சிகளோடு இணைந்து ஜனநாயகத்திற்காக போராடிய தலைவரின் செயல்பாட்டில் பெரும் திருப்புமுனையாக இது பார்க்கப்பட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)