தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் வழக்கம் புராணங்களில் இருந்ததா?

பட மூலாதாரம், Getty Images
(2022-ஆம் ஆண்டு வெளியான கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது)
இந்தியாவில் தீபாவளியன்று வாண வேடிக்கை மற்றும் பட்டாசுகளை வெடிக்கும் வழக்கம் எவ்வளவு பழையது? அதன் வரலாறு என்ன? இதற்கு வல்லுநர்கள் கூறும் பதில் என்ன?
புராணங்கள் மற்றும் பண்டைய நூல்களின் விளக்கத்திலிருந்து தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் பழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை என்கிறார் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடம் கற்பிக்கும் ராஜீவ் லோச்சன்.
தீபாவளி பண்டிகையின்போது மக்கள் தங்கள் மகிழ்ச்சியை பட்டாசு வெடித்து அல்ல, விளக்கேற்றித்தான் வெளிப்படுத்துவார்கள் என்று பழங்கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பட்டாசு வெடித்து ஒலி எழுப்புவது சீன மரபு. பட்டாசு சத்தத்திற்கு பயந்து, தீய சக்திகள், எண்ணங்கள், துரதிர்ஷ்டங்கள் ஓடிவிடும், அதிர்ஷ்டம் வரும் என்ற நம்பிக்கை சீனாவில் இருந்தது.
இந்தியாவில் 12-ஆம் நூற்றாண்டில் ஆதிஷ் தீபாங்கர் என்ற பெங்காலி பௌத்த மதகுரு இந்தக்கருத்தை அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அவர் அதை சீனா, திபெத் மற்றும் கிழக்கு ஆசியாவிலிருந்து கற்றிருக்கலாம். இந்தியாவின் ரிக்வேதத்தில், துரதிர்ஷ்டத்தைத் தரும் நிர்ரிதி ஒரு தேவியாகக் கருதப்படுகிறார். மேலும் திக்பால் (திசைகளின் ஒன்பது தெய்வங்களில் ஒருவர்) என்ற அந்தஸ்தும் அவருக்கு அளிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
பட்டாசு பற்றிய குறிப்பு
'தேவி, இப்போதே நீ சென்றுவிடு. திரும்பி வராதே' என்று அவரிடம் வேண்டிக்கொள்ளப்படுகிறது. பட்டாசு வெடித்து அவரை மிரட்டி விரட்ட வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை.
பழங்காலத்திலிருந்தே சிறப்பு ஒளி மற்றும் ஒலிகளுடன் வெடிக்கும் கருவிகளை இந்தியா நன்கு அறிந்திருந்தது என்பது உறுதி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இத்தகைய கருவிகள் இந்தியாவின் புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தில் இயற்றப்பட்ட கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம், விரைவாக எரிந்து, வலுவான தீப்பிழம்புகளை உருவாக்கும் ஒரு தூள் பற்றி விவரிக்கிறது. அதை ஒரு குழாயில் அடைத்தால் அது பட்டாசாக மாறும்.

பட மூலாதாரம், Getty Images
உப்பில் இருந்து பட்டாசு?
வங்காளப் பகுதியில் மழைக்காலத்திற்குப் பிறகு, பல பகுதிகளில் காய்ந்த நிலத்தில் உப்பு அடுக்கு உருவாகும்.
இந்த உப்பை நன்றாக அரைத்தால் அது வேகமாக எரியும் பொடியாக மாறியது. அதில் தகுந்த அளவு கந்தகம் மற்றும் நிலக்கரி தூசி கலந்தால், அதன் எரியும் தன்மை மேலும் அதிகரித்தது.
இந்த உப்பு தரையில் காணப்படாத இடங்களில், தரமான மரச் சாம்பலைக் கழுவி இந்த உப்பைத் தயாரித்தனர். வைத்தியர்களும் இந்த உப்பை பல நோய்களுக்கு பயன்படுத்தினர்.
இந்தப் பொடியும் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட துப்பாக்கியில் பயன்படுத்தும் பொடியும் ஏறக்குறைய நாடு முழுவதும் கிடைத்தன.
ஆனால் பட்டாசு தயாரிக்க இது பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
பண்டிகையை கொண்டாடவும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், வீட்டு வாசலில் விளக்கு ஏற்றப்பட்டது. ஆனால் பட்டாசு பற்றிய விளக்கம் எங்கும் இல்லை. நெய் விளக்கு ஏற்றுவது பற்றி நிச்சயமாக ஒரு குறிப்பு உள்ளது.
எதிரியைக் கொல்லப் பயன்படும் அளவுக்கு இந்த துப்பாக்கித் தூள் திறன் வாய்ந்ததாக இல்லை. 1270-ஆம் ஆண்டில் சிரியாவைச் சேர்ந்த வேதியியலாளர் ஹசன் அல்-ரம்மா தனது புத்தகத்தில் இந்த வகை துப்பாக்கிப்பொடி பற்றி முதன்முதலில் குறிப்பிட்டார் என்று நம்பப்படுகிறது. சுடுநீரைக் கொண்டு வெடிமருந்துப்பொடியை சுத்திகரித்து அதன் வெடிப்புத்திறனை மேலும் அதிகரிப்பது பற்றி அவர் அதில் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
மொகலாயர்கள் கொண்டு வந்தார்களா?
ஆனால் இதற்குப் பிறகும், காபூலின் சுல்தான் பாபர் 1526 இல் மொகலாய ராணுவத்துடன் டெல்லி சுல்தான் அரசைத் தாக்கியபோது, அவரது துப்பாக்கி குண்டுகளின் சத்தத்தைக் கேட்டு, இந்திய வீரர்கள் பயந்துபோனார்கள் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். கோவில்களிலும், நகரங்களிலும் பட்டாசு வெடிக்கும் வழக்கம் இருந்திருந்தால், இந்த துணிச்சலான வீரர்கள் பலத்த சத்தத்திற்கு பயப்பட்டிருக்க மாட்டார்கள்.
மற்ற நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? மொகலாயர்களுக்குப் பிறகுதான் பட்டாசுகளும், வாண வேடிக்கையும் தொடங்கியதாக சிலர் சொல்கிறார்கள். ஆனால் நிபுணர்கள் இதை முழுமையற்ற தகவல் என்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
'பட்டாசு ஏற்கனவே இருந்தது'
''மொகலாயர் காலத்தில் பட்டாசுகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. ஆனால் மொகலாயர்கள்தான் இந்தியாவிற்கு பட்டாசு கொண்டு வந்தார்கள் என்று சொல்வது சரியாக இருக்காது. பட்டாசு முன்பே இருந்துவந்துள்ளது.'' என்கிறார் மொகலாய வரலாற்றுப் பேராசிரியர் நஜப் ஹைதர்
இது தொடர்பான ஓவியங்களும் உள்ளன. பேரரசர் ஷாஜகானின் மூத்த மகன் தாரா ஷிகோவின் திருமண ஓவியத்தில் மக்கள் பட்டாசு வெடிப்பதைக் காணலாம். ஆனால் இவை மொகலாயர்களுக்கு முன்பே இருந்தன. ஃபெரோஷ் ஷா காலத்தில் கூட வாணவேடிக்கைகள் இருந்தன.
துப்பாக்கி தூள் பின்னர்தான் இந்தியாவிற்கு வந்தது. ஆனால் மொகலாயர்களுக்கு முன்பே பட்டாசுகள் வந்துவிட்டன. வேட்டையாடும்போதோ யானைகளுடன் சண்டையிடும்போதோ இது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. அவற்றை பயமுறுத்துவதற்காக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
மொகலாயர் காலத்தில், திருமணம் உள்ளிட்ட கொண்டாட்டங்களில் பட்டாசுகள், வாணவேடிக்கைகள் பயன்படுத்தப்பட்டன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












