மோதி - ஜே.டி. வான்ஸ் சந்திப்பு - வரி விதிப்பு நடவடிக்கைகள் குறித்து பேசியது என்ன?

பட மூலாதாரம், x/@narendramodi
பிரதமர் நரேந்திர மோதி இன்று, திங்கள்கிழமையன்று (ஏப்ரல் 21) அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இரு நாட்டு மக்களின் நலனில் கவனம் செலுத்தும் பரஸ்பர நன்மை பயக்கும் இந்தியா-அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் "குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை" அவர்கள் வரவேற்றனர் என்று ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
"எரிசக்தி, பாதுகாப்பு, மூலோபாய தொழில்நுட்பங்கள் மற்றும் பிற துறைகளில் இரண்டு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் குறித்தும் இருவரும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இரு நாட்டு அரசியல் தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர், மேலும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளை முன்னோக்கி நகர்த்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர்" என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை கூறியுள்ளது.

பட மூலாதாரம், x/@narendramodi
ஜே.டி. வான்ஸ், நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இன்று குடும்பத்துடன் இந்தியா வந்தார். அவருடன் அவரது மனைவி உஷா வான்ஸ், அவர்களது மூன்று குழந்தைகள் மற்றும் அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்களும் இந்தியா வந்தனர்.
"பிரதமர் மோதி ஜனவரி மாதம் வாஷிங்டனுக்கு சென்றதையும், 'மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்' (MAGA) மற்றும் 'விக்சித் பாரத் 2047' ஆகிய திட்டங்களின் பலன்களைப் பயன்படுத்தி, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பிற்கான திட்டத்தை அமைத்த அமெரிக்க அதிபர் டிரம்பு உடனான நடந்த பயனுள்ள கலந்துரையாடல்களையும் நினைவு கூர்ந்தார்," என்று இரு நாட்டு அரசியல் தலைவர்களின் சந்திப்புக்கு பிறகு இந்தியா தரப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், "இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பிரதமரும் துணை அதிபர் வான்ஸும் மதிப்பிட்டனர்", என்றும்,
"துணை அதிபர், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இந்தியாவில் இதில் இனிமையான மற்றும் பயனுள்ள பயணமாக இருக்கட்டும் என்று பிரதமர் வாழ்த்துகள் தெரிவித்தார்", என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதிபர் டிரம்பிற்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர் மோதி, இந்த ஆண்டு இறுதியில் டிரம்பின் இந்தியா சுற்றுப்பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், x/@narendramodi
இது துணை அதிபராக வான்ஸின் முதல் இந்திய வருகை. இந்த பயத்தின்போது அவர் ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ராவிற்கும் குடும்பத்துடன் செல்வார்.
இந்தியா உள்பட பல உலக நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்க அமெரிக்கா முடிவு செய்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இவர்களின் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
அமெரிக்கா தனது பெரும்பாலான வர்த்தகப் பங்காளிகளுக்கான புதிய வரி விகிதங்களை 90 நாட்களுக்கு 10 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












