You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் 4 மாதங்களில் உயருமா? - இன்றைய முக்கிய செய்திகள்
இன்றைய (25/01/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளைப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு குறித்து அரசு போக்குவரத்து கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரித்தது.
அப்போது, உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுப்படி, பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க போக்குவரத்துத் துறைச் செயலர் தலைமையில் உயர் மட்டக் குழுவை அமைத்து, கடந்த டிசம்பர் 6-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாக தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த உயர் நிலைக் குழு, அரசுப் போக்குவரத்து கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டு கட்டண நிர்ணயம் தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்றும் தமிழ்நாடு அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று, 4 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நிலைக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேலத்தில் ரூ.12.50 கோடி, 2.50 கிலோ தங்கம் பறிமுதல்
சேலத்தில் அறக்கட்டளை நடத்தி, பொதுமக்களிடம் முதலீடு பெற்று வட்டி வழங்கியதாக எழுந்த புகாரில் அதன் நிர்வாகிகள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி கூறுகிறது.
சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் விஜயா பானு (48) என்பவர், அன்னை தெரேசா மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு அலுவலகம் அமைத்து செயல்பட்டு வந்தார். இங்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை டெபாசிட் பெறப்பட்டு, வட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அறக்கட்டளை செயல்பட்டு வந்த திருமண மண்டபத்துக்கு நேற்று முன்தினம் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, பணத்தை முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாநகர பொருளாதார குற்றப்பிரிவு உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையிலான போலீஸார், திருமண மண்டபத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, விஜயா பானு மற்றும் அறக்கட்டளை ஊழியர்கள், பணம் முதலீடு செய்ய வந்த பொதுமக்கள் ஆகியோர், போலீஸாரை முற்றுகையிட்டு தகராறு செய்தனர்.
இதையடுத்து, போலீஸார் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, விசாரணையைத் தொடர்ந்தனர். அதில், பொதுமக்களிடம் பணம் முதலீடு பெறுவதற்கான சட்டப்பூர்வ அனுமதி எதுவும் பெறாமல், மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, மண்டபத்தில் போலீஸார் சோதனை நடத்தினர்.
இதில், மண்டபத்தில் இருந்த அறைகள், ஆங்காங்கே இருந்த தொட்டிகள் என பல இடங்களில் பணம் கட்டுக்கட்டாக இருந்ததையும், தங்கக் காசுகள், வெள்ளிப்பொருட்கள், நூற்றுக்கணக்கில் அரிசி மூட்டைகள், மளிகைப் பொருள் பொட்டலங்கள் என பலவும் இருந்தன.
அதில் ரொக்கமாக ரூ.12.50 கோடி, தங்கம் 2.50 கிலோ, வெள்ளி 15 கிலோ ஆகியவை இருந்தன. இவற்றைப் பறிமுதல் செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், அறக்கட்டளை தலைவர் விஜயாபானு, துணைத்தலைவர் ஜெயப்பிரதா, நிர்வாகி பாஸ்கர் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இதேபோல், போலீஸாரை தாக்கிய வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தது யார்?
வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பிருக்கிறது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருப்பதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த சுதர்சன், முத்துக்கிருஷ்ணன், முரளிராஜா ஆகிய மூன்று பேருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முரளி ராஜா பொய் தகவலை பரப்பியதாகவும், சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மேல்நிலைத் தொட்டி மீது ஏறி மனிதக் கழிவை தண்ணீரில் கலந்ததாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்து சுமார் 2 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மனுவாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
"உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றம், சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். அத்துடன், தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்." என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
வட இந்தியாவில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் திடீரென மூடல்
ஜேஇஇ (JEE) போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை நடத்தி வரும் FIITJEE நிறுவனம் வட இந்தியாவின் பல பகுதிகளில் தமது மையங்களை திடீரென மூடியிருப்பதால் மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள தமது பல கிளைகளை FIITJEE திடீரென முடியுள்ளது. இதனால், FIITJEE-ல் சேர்ந்து நுழைவு / போட்டித் தேர்வுகளுக்காக தயாராகி வந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பெற்றோர்கள் பலர், கட்டணத்தைத் திருப்பித் தரக்கோரி காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
காஜியாபாத் நகரில் FIITJEE மூடப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பெற்றோர் சங்கத்தின் தலைவர் விவேக் தியாகி, "இது போட்டித் தேர்வுகளுக்கான மிக முக்கிய காலம் என்பதால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். FIITJEE-யிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அதிக முன்பணம் செலுத்தியுள்ள பெற்றோர்கள் பலர் காவல் நிலையங்களில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இலங்கையில் அதானி நிறுவனத்தின் காற்றாலை மின் திட்டம் ரத்தா?
இலங்கையில் 484 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்களை ரத்து செய்ததாகக் கூறப்படும் செய்திகளை அதானி குழுமம் மறுத்திருப்பதாக டெய்லி மிரர் இணையதள செய்தி கூறுகிறது.
"கடந்த ஜனவரி 2-ஆம் தேதி இலங்கை அமைச்சரவை, மே 2024 இல் அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தை மறு மதிப்பீடு செய்ய முடிவு செய்தது, வழக்கமான மறுஆய்வு செயல்முறையின் ஒரு பகுதியாகும்," என்று அதானி குழும செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த மறுமதிப்பீடு, புதிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நிலையான நடைமுறையாகும், இது தற்போதைய முன்னுரிமைகள் மற்றும் எரிசக்தி கொள்கைகளுடன் விதிமுறைகள் ஒத்துப்போவதை உறுதி செய்கிறது.
"திட்டம் ரத்து செய்யப்படவில்லை," என்று அதானி நிறுவன செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியிருப்பதாக அந்த செய்தி கூறுகிறது.
இலங்கையின் பசுமை எரிசக்தி துறையில் 1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதற்கான அதன் உறுதிப்பாட்டில் அதானி நிறுவனம் உறுதியாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
அதானி நிறுவனத்தின் முயற்சிகள் இலங்கையில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)