You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான், ஆனா கை விட்டுடுவான்' - ரஜினி யாரை சொல்கிறார்?
தனது எக்ஸ் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கும் ரஜினிகாந்த், பாட்ஷா பட வசனத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவர் அந்த வசனத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்திருக்கின்றன.
நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். அதில் "நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்" என்று கூறி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, புத்தாண்டு வாழ்த்துகளில் நல்லவர்கள் - கெட்டவர்கள் என யாரை அவர் குறிப்பிடுகிறார் என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்திருக்கின்றன.
தி.மு.க. ஆட்சியின் மீது அவர் நேரடித் தாக்குதல் தொடுத்திருப்பதாகவும் மு.க. ஸ்டாலினையே அவர் குறிப்பிடுவதாகவும் சில ரசிகர்கள் பதிவுசெய்திருக்கின்றனர்.
'நடிகர் அஜீத்திற்கு ஆறுதல்'
ஆனால், வேறு சிலர் நடிகர் அஜீத்திற்கு ஆறுதல் சொல்லும் வகையில் இதனைத் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜீத் நடிக்கும் 'விடாமுயற்சி' பொங்கலுக்கு வெளியாகாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனைக் குறிப்பிட்டு ஆறுதல் தெரிவிக்கும் வகையிலேயே ரஜினிகாந்த் இப்படித் தெரிவித்திருப்பதாக அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சிலர் தங்களை ஆண்டவன் சோதிக்கவில்லையென்றும் அஜீத்குமார்தான் சோதிப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.
ரஜினி அரசியலுக்கு வருவதாகச் சொல்லி வராமல் போனதைக் குறிப்பிடும்வகையில், 'அவரை நம்பியவர்களை அவர் கைவிட்டதாக' ஒருவர் சொல்லியிருக்கிறார்
1990களில் ரஜினியை அரசியலுக்கு வரவேற்பது குறித்த பேச்சுகள் எழுந்ததில் இருந்தே அவர் சொல்லும் ஒவ்வொரு வரிக்கும், ஒவ்வொரு செயலுக்கும் அரசியல் ரீதியான அர்த்தத்தைத் தேடுவது வழக்கமாகவே இருந்துவருகிறது.
ஆனால், இந்த காலகட்டங்களில் நேரடியான பொருள்படும்படி அரசியல் பேசியது மிகக் குறைவாகவே இருந்தது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 2017-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார் ரஜினி. 2018-ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக வீடியோ பதிவையும் வெளியிட்டார்.
இதற்குப் பிறகு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு சமகால பிரச்னைகள், தனது ரசிகர் மன்றச் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவுசெய்துவந்தார் ரஜினி. ஆனால், 2019 புத்தாண்டு தினத்தன்று எக்ஸ் தளம் மூலம் வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை. அந்த ஆண்டில் அவருடைய பதிவுகளை குறைவாக இருந்தன. 2020-ஆம் ஆண்டு புத்தாண்டில் வாழ்த்துத் தெரிவித்தார்.
அதே ஆண்டு மார்ச் மாதம் 12-ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து, 54 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியை அகற்றுவதற்காக அரசியலில் தீவிரமாக இறங்கப்போவதாக அறிவித்தார் ரஜினி. "இப்ப இல்லைனா, எப்பவும் இல்ல" என்று முழங்கினார்.
ரஜினிகாந்தின் முந்தைய பதிவுகள்
ஆனால், அக்டோபர் மாத இறுதியில் ரஜனிகாந்தின் உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதில் இருக்கும் தகவல்கள் உண்மை என உறுதிப்படுத்திய ரஜினிகாந்த், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என்றார். இதனால், அவர் அரசியலுக்கு வருவதிலிருந்து பின்வாங்குகிறாரோ என்ற தோற்றம் ஏற்பட்டது.
பிறகு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி கட்சி துவங்கி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். ஆனால், இனிமேல் அரசியலுக்கே வரப்போவதில்லை என டிசம்பர் 29-ஆம் தேதி அறிவித்தார் ரஜினி. 2021-ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்து எதையும் எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிடவில்லை.
ஜூலை மாதத்தில் ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்பட்டு, முன்பைப்போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாகவே செயல்படும் என அறிவித்தார். 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வாழ்த்துப் பதிவு இடம்பெற்றது.
அதேபோல 2023-ஆம் ஆண்டில் #Your_life_is_in_your_hands என்ற ஹாஷ்டாகுடன் வாழ்த்தைப் பதிவிட்டார் ரஜினி. 2024-ஆம் புத்தாண்டு தினத்தன்று வாழ்த்துப் பதிவு ஏதும் இல்லை. ஆனால், இந்த ஆண்டு மீண்டும் புத்தாண்டு வாழ்த்துப் பதிவை வசனத்துடன் வெளியிட்டுள்ளார் ரஜினி.
ரஜினியின் இந்த வாழ்த்து சமூக ஊடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தனது வீட்டிற்கு வெளியில் கூடியிருந்த ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் தனது புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்.
ஆனால், பிரபலமான தனது வசனத்துடன் வாழ்த்துச் சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்துவதுதான் இந்த பதிவின் நோக்கமே தவிர, இதில் வேறு விஷயங்கள் ஏதும் இல்லை என்கின்றன அவருடைய ரசிகர் மன்ற வட்டாரங்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)