'அழகு மீது பொறாமை': சிறுமி கொலையில் கைதான பெண் தனது 3 வயது மகனையும் கொன்றதாக போலீஸ் தகவல்

    • எழுதியவர், ஷகீல் அக்தர்
    • பதவி, பிபிசி உருது பத்திரிகையாளர்

(இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் சங்கடம் தரலாம்)

டிசம்பர் ஒன்றாம் தேதி வீடே மணக்கோலம் பூண்டிருந்தது. திருமண ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது. ஆனால் ஆறு வயது சிறுமியை வெகுநேரமாக எங்கும் காணவில்லை. அங்கிருந்தவர்கள் அவளை எல்லா இடங்களிலும் தேடினர். அப்போது வீட்டின் ஸ்டோர் ரூமில் அந்த சிறுமி இறந்து கிடந்தார்.

தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு தொட்டியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. சடலம் கண்டெடுக்கப்பட்ட ஸ்டோர் ரூம் வீட்டின் முதல் தளத்தில் இருந்தது. அது வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்தது.

ஆறு வயது சிறுமி தனது பெற்றோருடன் ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள ஒரு கிராமத்திற்கு நவம்பர் 30-ஆம் தேதி உறவினர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்க சென்றிருந்தார். சிறுமியின் மற்றொரு உறவினரான பூனமும் திருமணத்தில் கலந்து கொள்ள வந்திருந்தார்.

சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, அனைத்து கோணங்களிலும் விசாரணையை தொடங்கிய போலீசார், டிசம்பர் 3-ம் தேதி சிறுமியை கொன்றதாக அவரது உறவினர் பூனத்தை கைது செய்தனர்.

'பெற்ற மகன் மற்றும் மூன்று சிறுமிகளைக் கொன்றதாக ஒப்புதல்'

பூனம் கைது செய்யப்பட்ட பிறகு நடந்த காவல்துறை விசாரணையில், அந்த வீட்டில் இருந்தவர்கள் திருமண ஊர்வலத்திற்குச் சென்றிருந்த போது, ​​​​சிறுமியை பூனம் ஏதோ சாக்கு சொல்லி ஸ்டோர் ரூமுக்கு அழைத்துச் சென்று தண்ணீர் நிரம்பிய தொட்டியில் மூழ்கடித்ததாகக் கூறப்படுகிறது.

அவரை நீரில் மூழ்கடித்துவிட்டு, அந்த அறையின் கதவை வெளியில் இருந்து பூட்டிவிட்டு, கீழே இறங்கி வந்த பூனம், மற்றவர்களுடன் பழையபடி அரட்டையடித்துள்ளார்.

பூனத்தின் கணவரும் சிறுமியின் தந்தையும் உறவினர்கள்.

விசாரணையின் போது அந்த பெண் தனது மகனையும் அவரது குடும்பத்தில் உள்ள மூன்று சிறுமிகளையும் கொன்றதாக ஒப்புக்கொண்டார் என்று செய்தியாளர் சந்திப்பில் பானிபட் எஸ்.பி பூபிந்தர் சிங் கூறினார்.

இந்த செய்தியால் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

'தொடர் கொலைகள் தொடங்கியது எங்கே?'

சிறுமியின் மரணம் ஒரு பெரிய ரகசியத்தை அம்பலப்படுத்தியது. விசாரணையில், பூனம் 2023-ம் ஆண்டு சோனிபட்டில் உள்ள பவார் கிராமத்தில் உள்ள தன் வீட்டில் முதல் கொலையை செய்தது தெரியவந்தது.

அப்போது, பூனம் தனது உறவினரான ஒன்பது வயதேயான சிறுமியை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ''சந்தேகம் வராமல் இருக்க, அதை விபத்து என்று நம்பவைக்கும் நோக்கில் தன் மூன்று வயது மகனையும் அதே தொட்டியில் மூழ்கடித்தார்" என்றனர்.

காவல்துறை கூற்றுப்படி, ஆகஸ்ட் 2025-ல் சேவா கிராமத்தில் தன் உறவினர் மற்றும் ஆறு வயது சிறுமியையும் தண்ணீரில் மூழ்கடித்து பூனம் கொன்றிருக்கிறார்.

"இந்த மூன்று சம்பவங்களையும் விபத்துகளாகவே கருதி உறவினர்கள் அமைதியாக இருந்தனர். அவர்கள் எதையும் சந்தேகிக்கவில்லை. எனவே காவல்துறையில் புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை" என்று போலீசார் தெரிவித்தனர்.

கடுமையான விசாரணையின்போது அப்பாவி சிறுமிகளைக் கொன்றதற்கான காரணத்தை விளக்கிய பூனம், "அழகான பெண்களை வெறுக்கிறேன்" என்று சொன்னதாக எஸ்.பி. பூபேந்திர சிங் கூறினார்.

பூனம் குறித்து அவர் கூறுகையில், "அழகான பெண்ணை பார்த்தவுடனேயே, அவள் தன்னை விட அழகாக வருவாளோ என்று நினைத்து பொறாமைப்படுகிறார்" என்றார்.

மேலும் பேசிய அவர், "தன் குடும்பத்தில் வேறு எந்தப் பெண்ணும் தன்னை விட அழகாக இருப்பதை அவள் விரும்பவில்லை. இந்தப் பொறாமை அவளை ஒரு சைக்கோ கொலையாளியாக மாற்றியது. ஒவ்வொரு கொலைக்கும் முன்பு அவள் மிகவும் அமைதியாகவும் தனிமையாகவும் இருந்திருக்கிறாள்" என்றும் அவர் கூறினார்.

32 வயதான பூனம் அரசியல் அறிவியலில் எம்.ஏ மற்றும் பி.எட் பட்டம் பெற்றிருக்கிறார். ஆனால், அவர் எந்த வேலையும் செய்யவில்லை.

அவருக்கு 2019-ல் திருமணம் ஆகியிருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒரு 'சைக்கோ கொலையாளி' என்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

'அவர் இந்த கொலைகளை தற்செயலாகச் செய்யவில்லை. மாறாக, இந்த கொலைகளை அவர் மிகவும் கவனமாக திட்டமிட்டு நடத்தி விபத்துகள் போல் ஆக்கியுள்ளார்'

கொலைக்கு முன் பூனம் மிகவும் அமைதியாகவும் தனியாகவும் இருக்க முயன்றதாக நெருங்கிய உறவினர்கள் சிலர் கூறுகின்றனர்.

கடந்த வாரம் சிறுமியின் கொலைக்குப் பிறகு பூனம் முற்றிலும் சாதாரணமாகிவிட்டதாகவும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

"குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தை, கொலைக்குப் பிறகு அவருக்கு எந்த வருத்தமும் இல்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது" என்று காவல்துறை கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு