You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாபா சித்திக்: மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்ட இவர் யார்? ஷாருக், சல்மானுடன் நெருங்கியது எப்படி?
அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவரும் மகராஷ்டிராவின் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
மும்பையின் கிழக்கு பாந்த்ரா பகுதியில் சனிக்கிழமை இரவு மூன்று நபர்களால் அவர் சுடப்பட்டார். இதையடுத்து, ஆபத்தான நிலையில் லீலாவதி மருத்துவமனையில் பாபா சித்திக் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, செய்தியாளர் சந்திப்பில் பாபா சித்திக் இறந்ததை உறுதி செய்தார்.
இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் தலைமறைவாக உள்ளதாகவும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
சித்திக் சுடப்படுவதற்கு முன்பு, அந்த இடத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
10-15 நாட்களுக்கு முன்பு பாபா சித்திக்கிற்கு மிரட்டல் வந்ததாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
பாபா சித்திக் மூன்று முறை எம்.எல்.ஏ ஆகவும் மகராஷ்டிர அரசாங்கத்தில் அமைச்சராகவும் பாபா சித்திக் இருந்துள்ளார்.
சுமார் 48 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்த பாபா சித்திக், இந்த ஆண்டு பிப்ரவரியில் அஜித் பவார் பிரிவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
பாபா சித்திக் அரசியலில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் மிகுந்த செல்வாக்கு கொண்டவர் எனக் கூறப்படுகிறது.
பாபா சித்திக், 16-17 வயதில் காங்கிரஸில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். கடந்த 1992-1997இல், பாபா சித்திக் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது மும்பை சிவில் அமைப்பிற்கு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்.
அவர் 1999இல் பாந்த்ரா (மேற்கு) தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 2004 முதல் 2009 வரையிலான ஆண்டுகளிலும் பாபா சித்திக் இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பாபா சித்திக், மகாராஷ்டிராவின் விலாஸ்ராவ் தேஷ்முக் அரசில் 2004 முதல் 2008 வரை உணவு வழங்கல் அமைச்சராக இருந்துள்ளார்.
மேலும் அவர், 2014 முதல் மும்பை காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராக இருந்தார்.
கடந்த 2000-2004 வரை மகாராஷ்டிரா வீட்டு வசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராகவும் சித்திக் இருந்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டில், பண மோசடி தொடர்பாக பாந்த்ராவில் உள்ள பாபா சித்திக்கின் வளாகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதற்குப் பிறகு, அவர் அரசியலில் முன்பு போல் முழுமையாக ஈடுபடாமல் இருந்தார்.
கடந்த 2014இல் பாபா சித்திக் பாந்த்ரா கிழக்கில் பாஜகவிடம் தோல்வியடைந்தார். ஆனால், 2019இல் அவரது மகன் ஜீஷன் சித்திக் வெற்றி பெற்றார்.
பாபா சித்திக் பாலிவுட் திரையுலகில் தனக்கு இருந்த நெருக்கம் காரணமாக அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
பாந்த்ரா மேற்கு தொகுதியில் 15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்தப் பகுதியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் வசித்து வருகின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் ரமலான் மாதத்தில் பாபா சித்திக்கின் இஃப்தார் விருந்து செய்திகளில் இடம்பிடிக்கும்.
அரசியல்வாதிகள் மட்டுமின்றி, ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான், சஞ்சய் தத் போன்ற பெரிய பாலிவுட் பிரபலங்களும் அவரது இஃப்தார் விருந்துக்கு வருவது வழக்கம்.
ஷாருக் கானுக்கும் சல்மான் கானுக்கும் இடையே பல ஆண்டுகளாக விரிசல் நீடித்தபோது, அதை முடிவுக்குக் கொண்டு வருவதில் பாபா சித்திக் முக்கியப் பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது.
மூத்த காங்கிரஸ் தலைவரும் பிரபல நடிகருமான சுனில் தத்துக்கும் பாபா சித்திக் மிக நெருக்கமாக இருந்தார்.
சித்திக்கின் குடும்பம், சஞ்சய் தத், பிரியா தத் ஆகியோருடன் நம்பகமான உறவையும் கொண்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)