You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு: இலங்கை முடிவு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் உள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் சில வீரர்கள், பாதுகாப்பு காரணங்களால் நாடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம் அவர்களை போட்டியைத் தொடருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த சில வீரர்கள் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். சில வீரர்கள் நாடு திரும்ப விரும்புவதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியமும் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக 2009 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சில வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், தற்போதைய சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக வீரர்களிடம் பேசியதாகக் கூறும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம், வீரர்களின் பாதுகாப்பும் நலனும் உறுதி செய்யப்படுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும், வீரர்களின் அனைத்து கவலைகளும் நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாரியம் என்ன சொன்னது?
இலங்கை அணியின் வீரர்கள், துணை ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் அனைவரும் திட்டமிட்டபடி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடருமாறு இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில், "இந்த உத்தரவு இருந்தபோதிலும், ஒரு வீரரோ அணியின் உறுப்பினரோ இலங்கைக்குத் திரும்ப தீர்மானித்தால், சுற்றுப்பயணம் தடையின்றி நடைபெறுவதற்காக, இலங்கை கிரிக்கெட் வாரியம் உடனடியாக மாற்று வீரர்களை அனுப்பும்" என்று வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "ஒரு வீரரோ, வீரர் குழுவோ அல்லது துணை ஊழியர்களோ இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றவில்லை என்றால், அவர்களின் நடவடிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன கூறியது?
இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, அட்டவணையில் சில மாற்றங்களுடன் தொடர் தொடரும் என்று தெரிவித்ததாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி வியாழக்கிழமையன்று ராவல்பிண்டியில் நடைபெறவிருந்தது, ஆனால் இப்போது வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது போட்டி நவம்பர் 15 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 16 ஆம் தேதி அதே மைதானத்தில் நடைபெறும்.
முதல் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது, அதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இந்த தொடருக்காக இலங்கை 16 வீரர்கள் கொண்ட அணியை அனுப்பியுள்ளது. நம்பகமான வட்டாரங்களின் தகவல்படி, குறைந்தது எட்டு வீரர்கள் கொழும்புக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த வீரர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் செக்டர் ஜி-11 பகுதியில் உள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்திற்கு வெளியே செவ்வாய்க்கிழமை நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 27 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி உறுதிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு தலைவராக உள்ள மொஹ்சின் நக்வி, அந்நாட்டின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.
தாக்குதல் நடத்தியவரை அடையாளம் காண பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முடிவை வரவேற்கும் பாகிஸ்தான்
இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது அனைத்து வீரர்களையும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடருமாறு அறிவுறுத்தியதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர முடிவு செய்ததற்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
"இது உண்மையான விளையாட்டுத்திறன் மற்றும் பரஸ்பர ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மொஹ்சின் நக்வியின் கூற்றுப்படி, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மீதமுள்ள ஒருநாள் போட்டிகள் நவம்பர் 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ராவல்பிண்டியில் நடைபெறும். இந்தப் போட்டிகள் முதலில் நவம்பர் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்தன.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவை பாகிஸ்தான் சமூக ஊடக பயனர்கள் வரவேற்றுள்ளனர். "ஃப்ரெண்ட்ஷிப் நாட் அவுட்" என்ற ஹேஷ்டேக்குடன் மக்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் 'ஃப்ரெண்ட்ஷிப் நாட் அவுட்' என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, "கிரிக்கெட்டுக்கு ஆதரவாக நின்று பயங்கரவாதத்தை தோற்கடித்த இலங்கை அணிக்கு நன்றி" என்று பதிவிட்டார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் நஜாம் சேதி, "பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பின் அடையாளமாக கிரிக்கெட்டைப் பயன்படுத்துவது இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் துணிச்சலான முடிவு" என்று தனது பதிவில் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரஷீத் லத்தீஃப், தனது நீண்ட பதிவில், இலங்கையில் மிகவும் மோசமான பாதுகாப்பு சூழல் இருந்தபோதிலும் பாகிஸ்தான் தொடர்ந்து விளையாடிய காலத்தை நினைவுகூர்ந்து பதிவிட்டிருந்தார்.
"நாங்கள் 1994 ஆம் ஆண்டு மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் சென்றபோது, இலங்கையில் சூழல் சரியாக இல்லை. தமிழ்ப் புலிகளுடன் பல மோதல்கள் நடந்தன. கொழும்பில் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு, ஒரு குண்டுவெடிப்பு நடந்தது, நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதன் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. மோசமான சூழல் நிலவியபோதும், பாகிஸ்தான் அணி கொழும்பில் இருந்தது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அரசாங்கமும் எடுத்த முடிவுகளை வீரர்கள் மரியாதையுடன் ஏற்றுக்கொண்டனர்" என்று ரஷீத் லத்தீஃப் அப்பதிவில் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு