You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெனிசுவேலா மீதான அமெரிக்க தாக்குதல் பற்றி ரஷ்யா, சீனா, கியூபா கூறியது என்ன?
மதுரோ சிறை பிடிக்கப்பட்டதாக வரும் செய்திகளால் ரஷ்யாவும் சீனாவும் அதிருப்தி அடைந்துள்ளன, அதே நேரத்தில் வெனிசுவேலாவின் அண்டை நாடு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸ் மீது தாக்குதல் நடத்தி, வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா 'சிறை பிடித்துவிட்டதாக' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
வெனிசுவேலாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யா, இது உண்மையாக நிரூபிக்கப்பட்டால், அது எந்தவொரு நாட்டின் இறையாண்மை, சர்வதேச சட்டத்திற்கு எதிரான கடுமையான மீறலாக இருக்கும் என்று கூறியுள்ளது.
அதேநேரத்தில், ஓர் இறையாண்மை கொண்ட நாட்டின் மீது அமெரிக்கா வெளிப்படையாகப் பலத்தைப் பயன்படுத்துவதையும், அதன் அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதையும் கண்டு தாங்கள் மிகவும் ஆச்சரியப்படுவதாகவும், அதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் சீனா கூறியுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் பிரிட்டனுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பிரிட்டிஷ் பிரதமர் கூறியுள்ளார், அதே நேரத்தில் அர்ஜென்டினா அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது.
இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ராணுவப் படைகளை உடனடியாக நிலைநிறுத்த வெனிசுவேலாவின் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். வெனிசுவேலாவில் நடந்த தாக்குதல்கள் குறித்த பல விவரங்கள் இன்னும் அறியப்படாமலேயே உள்ளன.
உதாரணமாக, இந்தத் தாக்குதல்களில் ராணுவ உள்கட்டமைப்புக்கு எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது, எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர்? என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.
நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி மீது சட்ட ரீதியாக வழக்குத் தொடரப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் மதுரோ மற்றும் அவரது மனைவி மீது சட்ட வழக்குத் தொடரப்படும் என்று அமெரிக்க அட்டர்னி ஜெனரல் கூறியுள்ளார்.
அமெரிக்கத் தாக்குதல் குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்திற்கு வெனிசுவேலா அழைப்பு விடுத்துள்ளது. சர்வதேச சட்டம் மதிக்கப்பட வேண்டும் என்று வெனிசுவேலா வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
வெனிசுவேலாவின் அண்டை நாடான கொலம்பியாவின் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ இந்தத் தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
மக்களைப் பாதுகாக்கவும், வெனிசுவேலா மக்கள் கொலம்பியாவிற்குள் நுழையக்கூடும் என்ற சாத்தியக்கூறுக்குத் தயாராகவும் எல்லையில் படைகளை நிலைநிறுத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குடேரெஸ் வெனிசுவேலாவில் நிலவும் சூழ்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
ஐ.நா தனது அறிக்கையில், சமீபத்திய பதற்றங்கள் அதிகரித்திருப்பது குறித்தும், வெனிசுவேலாவில் அமெரிக்க ராணுவ நடவடிக்கையாக அது உச்சக்கட்டத்தை அடைந்திருப்பது குறித்தும், இது பிராந்தியத்தில் ஏற்படுத்தக் கூடிய கவலைக்குரிய விளைவுகள் குறித்தும் பொதுச்செயலாளர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
"இந்த நிகழ்வுகள் ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. ஐ.நா சாசனம் உட்பட சர்வதேச சட்டத்தை முழுமையாக மதிப்பதன் முக்கியத்துவத்தை பொதுச்செயலாளர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார், சர்வதேச சட்டம் மதிக்கப்படாதது குறித்து அவர் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார்," என்று ஐ.நா கூறியுள்ளது.
இந்தியா கூறியது என்ன?
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் அமெரிக்கா சிறைபிடித்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியா ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "வெனிசுவேலாவில் சமீபத்திய நிகழ்வுகள் ஆழ்ந்த கவலைக்குரியவை. அங்கு உருவாகி வரும் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்," என்று கூறப்பட்டுள்ளது.
"வெனிசுவேலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு இந்தியா தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இப்பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை பேணப்படுவதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான வழிகள் மூலம் பிரச்னைகளைத் தீர்க்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கராகஸில் உள்ள இந்தியத் தூதரகம் இந்திய சமூக உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளதுடன், சாத்தியமான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும்." என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, சனிக்கிழமை இரவு, வெனிசுவேலாவுக்கான பயணம் குறித்து இந்தியா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தலை வெளியிட்டது. வெனிசுவேலாவுக்கான அத்தியாவசியமற்ற அனைத்துப் பயணங்களையும் தவிர்க்குமாறு இந்திய அரசு குடிமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.
ரஷ்யா கூறியது என்ன?
வெனிசுவேலாவின் நெருங்கிய நட்பு நாடுகளான ரஷ்யாவும் கியூபாவும் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளன. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையை ரஷ்யா "அதிர்ச்சியூட்டும் செயல்" என்று வர்ணித்துள்ளது.
"இன்றைய அமெரிக்காவின் ஆக்கிரோஷமான நடவடிக்கையின் போது வெனிசுவேலா அதிபரும் அவரது மனைவியும் பலவந்தமாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக வரும் செய்திகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்," என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.
"இந்தச் செய்திகள் உண்மையென நிரூபிக்கப்பட்டால், அது ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்திற்கு எதிரான கடுமையான மீறலாக இருக்கும்." என்பது ரஷ்யாவின் கருத்து.
சீனா கூறியது என்ன?
"அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தையும் வெனிசுவேலாவின் இறையாண்மையையும் கடுமையாக மீறுவதோடு, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளன. இதை சீனா கடுமையாக எதிர்க்கிறது," என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "அமெரிக்கா சர்வதேச சட்டத்தையும் ஐ.நா. சாசனத்தின் நோக்கங்களையும் கொள்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மற்ற நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை மீறுவதை நிறுத்த வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் எழுதியுள்ளார்.
கியூபா
கியூப அதிபர் மிகுவல் டயஸ்-கனெல், வெனிசுவேலா மீதான தாக்குதலை கியூபா கண்டிப்பதாகவும், சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான பகுதி கொடூரமாகத் தாக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கியூபா அதிபர் தனது எக்ஸ் பக்கத்தில், "தாய்நாடு அல்லது மரணம்!" என்று எழுதியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் கூறியது என்ன?
ஐரோப்பிய ஒன்றியம் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விவகாரத்திற்கு அமைதியான தீர்வைக் காண உதவுவதற்காக மத்தியஸ்தராகச் செயல்பட ஸ்பெயின் முன்வந்துள்ளது.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது சமூக ஊடகப் பதிவில், "வெனிசுவேலாவில் நடக்கும் நிகழ்வுகளை ஸ்பானிய அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. எங்கள் தூதரகங்களும் துணைத் தூதரகங்களும் செயல்பட்டு வருகின்றன." என்று கூறியுள்ளார்.
"நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் பொறுப்புடன் நடந்துகொள்ளவும் நாம் அழைப்பு விடுப்போம். நாம் சர்வதேச சட்டத்தையும் ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளையும் மதிக்க வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார்.
சிலி
அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை குறித்து சிலி அதிபர் கேப்ரியல் போரிக் தனது நாட்டின் "கவலையையும்" "கண்டனத்தையும்" தெரிவித்துள்ளார்.
"வெனிசுவேலாவில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை குறித்து எங்கள் கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். நாட்டைப் பாதிக்கும் இந்தத் தீவிர நெருக்கடிக்கு அமைதியான தீர்வைக் காணுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
"படையைப் பயன்படுத்துவதற்கான தடை, தலையிடாமை, சர்வதேசப் பிணக்குகளை அமைதியான முறையில் தீர்ப்பது மற்றும் நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாடு போன்ற சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கான தனது உறுதிப்பாட்டை சிலி மீண்டும் உறுதிப்படுத்துகிறது," என்று அவர் எழுதியுள்ளார்.
வெனிசுவேலா நெருக்கடியை வன்முறை அல்லது வெளிநாட்டுத் தலையீடு மூலம் அல்லாமல், அனைத்துத் தரப்பினரின் உரையாடல் மற்றும் ஆதரவின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் பிரதமர் என்ன சொன்னார்?
வெனிசுவேலாவில் அமெரிக்கா நடத்திய நடவடிக்கையில் பிரிட்டன் "எந்த வகையிலும் ஈடுபடவில்லை" என்று பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
ஆனால், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்பு அவர் மேலதிக தகவல்களுக்காகக் காத்திருக்கிறார்.
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடித்தது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசவில்லை என்று ஸ்டார்மர் கூறினார்.
"நான் பேசவில்லை, இது வெளிப்படையாக வேகமாக மாறிவரும் ஒரு சூழ்நிலை. நாம் அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்," என்று அவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
பிரதமர் ஸ்டார்மர், "இந்த நடவடிக்கையில் பிரிட்டன் எந்த வகையிலும் ஈடுபடவில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்," என்றார்.
சில இடதுசாரி தொழிற்கட்சி எம்.பி.க்களும் சில சுயேச்சை எம்.பி.க்களும் செய்தது போல, இந்த நடவடிக்கையைக் கண்டிப்பீர்களா என்று கேட்டபோது, ஸ்டார்மர், "நான் முதலில் உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நான் டிரம்புடன் பேச விரும்புகிறேன்," என்றார்.
மேலும் அவர், "உங்களுக்குத் தெரியும், நாம் சர்வதேச சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று நான் எப்போதும் கூறுகிறேன், நம்புகிறேன்," என்றார்.
வெனிசுவேலாவில் சுமார் 500 பிரிட்டிஷ் குடிமக்கள் இருப்பதாகவும், தூதரகத்துடன் இணைந்து அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் உறுதி செய்யப்படுவதாகவும் ஸ்டார்மர் கூறினார்.
மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பாம், ஐ.நா. சாசனத்தின் 2வது பிரிவை மேற்கோள் காட்டி தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவித்தார்.
"அமைப்பின் உறுப்பு நாடுகள் தங்கள் சர்வதேச உறவுகளில், எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராகப் படைபலத்தைப் பயன்படுத்துவதையோ அல்லது அச்சுறுத்துவதையோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கு முரணான எந்த வகையிலும் செயல்படுவதையோ தவிர்க்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
அர்ஜென்டினா வரவேற்பு, பிரேசில் கண்டனம்
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது.
அர்ஜென்டினா அதிபர் ஹாவியர் மில்லி, வெனிசுவேலாவில் அமெரிக்காவின் தலையீட்டை வரவேற்று, "சுதந்திரம் முன்னேறிச் செல்கிறது" என்ற அறிக்கையை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, "வெனிசுவேலா பிரதேசத்தின் மீது குண்டு வீசுவதும், அதன் அதிபரை சிறை பிடிப்பதும் சகித்துக்கொள்ள முடியாத ஒரு வரம்பு மீறிய செயலாகும். இந்த நடவடிக்கைகள் வெனிசுவேலாவின் இறையாண்மைக்கு எதிரான ஒரு மிகத் தீவிரமான தாக்குதலாகும்" என்று விமர்சித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை அவர், "முழு சர்வதேச சமூகத்திற்கும் ஒரு மிகவும் ஆபத்தான முன்னுதாரணம்" என்று வர்ணித்தார்.
பிரேசில் அதிபர் மேலும் கூறுகையில், "சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறி நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவது, வன்முறை, குழப்பம் மற்றும் நிலையற்ற தன்மை நிறைந்த உலகத்தை நோக்கிய முதல் படியாகும்" என்றார்.
"அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளின் அரசியலில் அந்த நாடு தலையிட்ட மோசமான காலகட்டத்தை நினைவூட்டுகிறது. இது பிராந்தியத்தில் அமைதியைப் பேணுவதற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது" என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு