You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீங்கள் இதுவரை பார்த்திராத சூரியன்: சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட மிக நெருக்கமான படங்கள்
- எழுதியவர், ரடாக்கியான்
- பதவி, பிபிசி முண்டோ
சூரியனை மிக நெருக்கமாக காட்சிப்படுத்தப்பட்ட படங்களை நீங்கள் பார்க்கிறீர்கள். அதாவது ஒரு சூரியகாந்திப் பூவை தேனீயின் கண்கொண்டு நீங்கள் பார்ப்பது போலத்தான் இதுவும் இருக்கும்.
இந்தப் படங்கள் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (NSF) டேனியல் கே. இன்யூயே சூரிய தொலைநோக்கி மூலம் காட்சிப்படுத்தப்பட்ட படங்கள் ஆகும்.
ஹவாய் நிர்வாகத்துக்கு உட்பட்ட மவுய் தீவில் அமைந்துள்ள இத்தொலைநோக்கி, சூரியனைப் படம் பிடிப்பது மற்றும் ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த தரையில் பொருத்தப்பட்டுள்ள தொலைநோக்கி ஆகும்.
இது போன்ற சூரியனை நெருக்கமாகக் காட்டக்கூடிய படங்கள் விஞ்ஞானிகளுக்கு சூரியனின் காந்தப்புலத்தையும் சூரிய புயல்களுக்கான காரணத்தையும் புரிந்து கொள்ள உதவும் என்று நம்பப்படுகிறது.
தொலைநோக்கியின் மிக உயர்-தெளிவுத்திறன் கொண்ட முதல் தலைமுறை கருவிகளில் ஒன்றான விசிபிள் பிராட்பேண்ட் கேமரா அல்லது VBI மூலம் எடுக்கப்பட்ட சூரியனின் எட்டு புதிய படங்களை NSF வெளியிட்டுள்ளது.
இப்புகைப்படங்கள் சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் மேற்பரப்பின் அமைதியான பகுதிகள் இரண்டையும் காட்டுகின்றன. ஆனால் அதன் பொருள் என்ன?
சூரிய புள்ளிகள் என்றால் என்ன?
சூரிய புள்ளிகள் என்பவை சூரியனின் மேற்பரப்பில் தோன்றும் இருண்ட பகுதிகள் ஆகும். அவை பரிமாணத்தில் ஒன்றுக்கொன்று மாறுபடும். ஆனால் பெரும்பாலான புள்ளிகள் பூமியின் அளவுக்கோ அல்லது அதைவிட பெரியதாகவோ இருக்கும் .
இப்புள்ளிகள் தோற்றத்தில் கருமையாக உள்ளன. ஏனெனில் அவை சூரியனின் மேற்பரப்பில் உள்ள மற்ற பகுதிகளை விட வெப்பநிலையில் குளிர்ச்சியாக இருக்கும். இது ஃபோட்டோஸ்பியர் என்று அழைக்கப்படுகிறது. மேலும் அவை காந்தப்புலங்களால் உருவாகின்றன.
சூரியப் புள்ளிகளின் தொகுப்பு அல்லது குழுக்கள் சூரியனில் அதீத வெப்பத்தை உருவாக்கும் அல்லது சூரிய புயல்களை உருவாக்கும் காரணிகளாக அறியப்படுகின்றன.
இது போன்ற ஆற்றல் வெளிப்படும் போது அது சூரியனின் வெளிப்புற அடுக்கில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் பெயர் ஹீலியோஸ்பியர் எனப்படும். இந்த ஹீலியோஸ்பியர் பூமியையும் பல வழிகளில் பாதிக்கலாம்.
இந்தப் படங்களைக் கொண்டு சூரியனின் காந்தப்புலம் மற்றும் சூரிய புயல்களின் விளைவுகளை விஞ்ஞானிகள் மேலும் அதிக அளவு புரிந்து கொள்ள முடியும்.
சூரிய புயல்களால் ஆபத்து ஏற்படுமா?
ஒரு சக்திவாய்ந்த சூரிய புயல் ஏற்பட்டால் பூமியில் இருக்கும் மின்காந்த அலைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளை முடக்கி, மிகப்பெரிய பொருளாதார சேதத்தை மட்டுமில்லாமல், வேறு பல பாதிப்புக்களையும் ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
கடந்த காலங்களில் இந்த சூரியப் புயல் காரணமாக மின் உற்பத்தி நிலையங்களில் பெரும் தீ மற்றும் வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு ஏராளமான பகுதிகளுக்கு மின்வினியோகம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு, பேரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் நாம் செல்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு நெட்வொர்க்குகளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சார்ந்திருக்கும் நிலையில், சூரியப் புயல்களின் போது ஏற்படும் பாதிப்பு அதி் தீவிரமாக இருக்கும்.
இது அந்த அமைப்பைச் சார்ந்துள்ள உற்பத்தி, போக்குவரத்து, நிதி மற்றும் பாதுகாப்பு என அனைத்து உள்கட்டமைப்புகளிலும் அளவில்லாத பேரிழப்புக்களை ஏற்படுத்தும்.
அதனால்தான் விஞ்ஞானிகள் ஒவ்வொரு நாளும் சூரியனின் மேற்பரப்பை ஆழ்ந்த கவனத்துடன் கண்காணித்து வருகின்றனர். ஏதேனும் ஆபத்துக்காலங்களில், முன்னெப்போதும் கிடைக்கப்பெறாத இது போன்ற படங்கள் விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு பேருதவியாக இருக்கும்.
அதிக பொருட்செலவில் புத்தம் புதிய தொலைநோக்கியாக உருவாக்கப்பட்டுள்ள இன்யூயே, தற்போதைய சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அது விரைவில் முழு செயல் திறனை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள படங்கள், இந்த சோதனை ரீதியான பயன்பாட்டின் முதல்கட்டப் படங்களின் ஒரு சிறிய பகுதியே ஆகும்.
தேசிய அறிவியல் அறக்கட்டளையின் ஆதரவில் செயல்படுத்தப்படும் இந்த தொலைநோக்கி மூலம் எதிர்காலத்தில் இன்னும் ஏராளமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
இன்யூயே தொலைநோக்கி சூரியனைத் தொடர்ந்து ஆராயத் தொடங்கியுள்ள நிலையில், சூரிய மண்டலத்தில் உள்ள, இதுவரை யாருக்கும் தெரியாத பல தகவல்கள் கிடைக்கும் என்பதால், எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் விபத்துக்களிலிருந்து மனிதசமூகம் தற்காத்துக்கொள்ள அற்புதமான உதவிகளை அளிக்கும் என விஞ்ஞானிகள் முழுமையாக நம்புகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்