You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி தாக்குதலை தொடரும் முனைப்பில் இஸ்ரேல் - ரஃபாவில் என்ன நடக்கிறது?
தெற்கு காஸாவில் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், மேலும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனர்களை ரஃபாவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
ரஃபாவின் கிழக்கு மாவட்டங்களில் வசிப்பவர்களை அல்-மவாசிக்கு செல்லுமாறு அறிவிப்புகள் விடப்படுகின்றன. சமூக ஊடக பதிவுகள் மூலமாகவும் தெரிவிக்கப்படுகின்றன. குறுகிய கடலோரப் பகுதியான அல்-மவாசியை "விரிவாக்கப்பட்ட மனிதாபிமான மண்டலம்" என இஸ்ரேல் அழைக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு உள்ளூர் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் நிரம்பியிருந்த ரஃபாவின் பகுதிகள், தற்போது பேய் நகரம் போல் காட்சியளிக்கின்றன.
தரைவழித் தாக்குதல் பாரிய பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் மனிதாபிமான நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகள் எச்சரித்த போதிலும், ரஃபாவில் திட்டமிட்ட நடவடிக்கைகளைத் தொடரப் போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
சனிக்கிழமையன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவித்தால் அடுத்த நாளே காஸாவில் போர் நிறுத்தம் சாத்தியமாகும் என்றார்.
போர் நிறுத்தம் ஹமாஸ் கையில் உள்ளது. அவர்கள் அதைச் செய்ய விரும்பினால், நாங்கள் அடுத்த நாளே போர் நிறுத்தம் செய்வோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸால் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் 128 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதில், 36 பேர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
ரஃபாவில் ஹமாசுடன் நேருக்கு நேர் சண்டை என இஸ்ரேல் தகவல்
சனிக்கிழமையன்று ரஃபாவில் புகை எழுந்ததைக் காண முடிந்தது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்களாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை மேற்கோள் காட்டியவர்கள் எகிப்துடனான எல்லை அருகே வான்வழித் தாக்குதல் நடந்ததாக தெரிவித்தனர்.
முன்னதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படை, ரஃபாவில் ஹமாஸ் குழுவினருடன் "நேருக்கு நேர் சண்டையில்" ஈடுபட்டதாகக் குறிப்பிட்டிருந்தது.
அந்தப் பகுதியில் பல சுரங்கங்களை கண்டறிந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை, காஸா பகுதி முழுவதும் டஜன்கணக்கில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடந்துள்ளன, இஸ்ரேலிய ராணுவம் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் உள்கட்டமைப்புகளை குறிவைப்பதாகக் கூறியது.
சனிக்கிழமை மாலை இஸ்ரேல் ராணுவம், காஸா பகுதியின் வடக்கே ஜபாலியா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத இலக்குகளைத் தாக்கி வருவதாக கூறியிருந்தது.
முன்னதாக, வடக்கு காஸாவின் சில பகுதிகளை விட்டு வெளியேறுமாறு அங்கிருக்கும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவர்கள் "தற்காலிகமாக மேற்கு காஸா நகரத்தில் உள்ள தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
அமெரிக்காவையும் மீறி தாக்குதலை தொடர இஸ்ரேல் உறுதி
லட்சக்கணக்கான பாலத்தீனர்கள் அடைக்கலமாகியுள்ள காஸா பகுதியின் தெற்கு முனை வரை தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தும் இஸ்ரேலின் திட்டம் சர்வதேச அளவில் கவலையைத் தூண்டியுள்ளது.
கடந்த வாரம், ரஃபா மீதான பெரிய தாக்குதலுக்கு பயன்படுத்தக் கூடிய கனரக ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்காது என்று அதிபர் பைடன் கூறினார்.
அதே போல இஸ்ரேலின் இந்தச் செயலை பிரிட்டனும் எதிர்க்கிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன், "ரஃபாவில் ராணுவ நடவடிக்கையை பிரிட்டன் எதிர்க்கிறது, ஆனால் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவது தொடர்பாக அமெரிக்காவை முடிவை பிரிட்டன் பின்பற்ற வாய்ப்பில்லை" என்றும் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த முரண்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ரஃபா மீதான இராணுவத் தாக்குதலைத் தொடர்வோம் என்றும் உறுதியாக தெரிவித்தார்.
மேலும், "தேவைப்பட்டால்.. நாங்கள் தனித்து நிற்போம்"என்றும் நெதன்யாகு கூறினார்.
அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும், 252 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
இதற்கு பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் குறைந்தது 34,900 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)