You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரியரில் போதைப் பொருள் வந்திருப்பதாகக் கூறி ஐந்தே மாதங்களில் 35 கோடி மோசடி - முழு பின்னணி
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த வயது முதிர்ந்த பெண்மணி ஒருவரைத் தொலைபேசியில் அழைத்து, தாங்கள் மகாராஷ்டிர காவல்துறையில் இருந்து பேசுவதாகவும், அந்தப் பெண்மணியின் தொலைபேசி எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறி சுமார் ஒரு கோடி ரூபாய் வரை பணம் பறித்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
இந்த விவகாரத்தில் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் இது தொடர்பான மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாகவே இதுபோன்ற மோசடிகள் நடக்கின்றன என்றாலும், இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கக்கூடிய வகையில் அதிகரித்திருக்கிறது.
இந்த ஆண்டில் மட்டும் 35 கோடி ரூபாய் இதுபோல ஏமாற்றப்பட்டிருப்பதாக காவல் துறை தெரிவிக்கிறது. இந்த மோசடிகள் எப்படி நடக்கின்றன?
முதிய பெண்மணியிடம் ஒரு கோடி ரூபாய் மோசடி
சென்னையைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட பெண்மணி அவர். அவருக்கு கடந்த மே 7ஆம் தேதியன்று அவரது வீட்டின் தரைவழி இணைப்பு தொலைபேசியில் அழைப்பு ஒன்று வந்தது. தாங்கள் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து பேசுவதாகவும், மகாராஷ்டிர மாநிலத்தின் கட்கோபாரில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் இடம் பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
அதாவது அவரது பெயரில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து பணம் அதிகமாகத் தருவதாகக் கூறும் விளம்பரங்களும் ஆபாசமான வாசங்கங்களைக் கொண்ட சில செய்திகளும் அனுப்பப்பட்டதாகவும் அதற்காகவே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த நபர் கூறியிருக்கிறார்.
மேலும், இந்தப் பெண்மணியின் பெயரில் உள்ள ஒரு கனரா வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்மணி, தன்னிடம் அம்மாதிரி ஒரு வங்கிக் கணக்கு ஏதும் இல்லை என மறுத்துள்ளார். அந்தப் பெண்மணியின் தகவல்களைப் பயன்படுத்தி யாராவது அப்படி ஒரு கணக்கைத் திறந்திருக்கலாம் என்றும் இந்த மோசடி தொடர்பாக ஸ்கைப் அழைப்பு மூலம் கூடுதலாகப் பேச வேண்டும் என்றும் அந்த நபர் தெரிவித்திருக்கிறார். ஆனால், இந்த விஷயத்தை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்.
அந்த நபர் சொன்னதைப் போலவே இதற்கு அடுத்த நாள் ஸ்கைப் அழைப்பில் ஒரு நபர் வந்தார். அவர் தன்னை மும்பை காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதற்குப் பிறகு அந்த முதிய பெண்மணியை சரமாரியாகத் திட்டிய அந்த நபர், அவரைக் கைது செய்யப் போவதாகவும் எச்சரித்துள்ளார்.
இதற்குப் பிறகு அந்த ஸ்கைப் அழைப்பில் இணைந்துகொண்ட வேறு சில நபர்கள், அந்தப் பெண்மணியின் வங்கிக் கணக்கை சரிபார்க்க வேண்டுமென்றும் அதற்காக ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தைத் தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் சொல்லியிருக்கின்றனர்.
வங்கிக் கணக்கைச் சரிபார்த்துவிட்டு, அவர் அனுப்பிய பணத்தை அவருக்கே திருப்பி அனுப்பிவிடுவோம் என்றும் கூறியிருக்கின்றனர்.
தனது குடும்பத்தினரையும் தங்களுடைய பட்டயக் கணக்காளரையும் கேட்டுக்கொண்டு பணத்தை அனுப்புவதாக அந்த மூதாட்டி தெரிவித்திருக்கிறார். ஆனால், இந்த விவகாரத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என ஸ்கைப்பில் பேசியவர்கள் கூறியிருக்கின்றனர். அவர் தனது வங்கிக் கணக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் தரும்படியும் பணத்தைப் பரிமாற்றம் செய்யும்படியும் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு அடுத்த நாள், மீண்டும் ஒரு ஸ்கைப் அழைப்பு வந்துள்ளது. மகாராஷ்டிராவின் நேரு நகர் காவல் நிலையத்தைத் சேர்ந்த வினய் குமார் சௌபே என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த விவகாரத்தை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது எனக் கூறிய அவர், இது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரம் என்றும் தெரிவித்திருக்கிறார். மும்பை நகரக் காவல்துறையின் முத்திரை பதிக்கப்பட்ட காகிதம் ஒன்றைக் காட்டி, அதுதான் அவர் மீதான முதல் தகவல் அறிக்கை என்றும் கூறியுள்ளார்.
இதற்குப் பிறகு மூன்று வங்கிக் கணக்குகளைக் கொடுத்து, அந்தக் கணக்குகளுக்கு பணத்தைப் பரிமாற்றம் செய்யும்படி வலியுறுத்தியுள்ளனர். அதன்படி அந்தப் பெண்மணி சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கான பணத்தை அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளார். மே 9ஆம் தேதிக்கும் 14ஆம் தேதிக்கும் இடையில் ஒவ்வொரு இரண்டு மணிநேரத்திற்கும் ஒருமுறை தாம் இருக்கும் இடத்தை அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.
தான் செலுத்திய பணம் ஏதும் திரும்ப வராததால், மே 15ஆம் தேதி அவர்கள் தன்னிடம் தொடர்புகொள்ளப் பயன்படுத்திய ஸ்கைப் ஐடியை அந்தப் பெண்மணி அழைத்தபோது, அந்த ஐடி செயல்படவில்லை. இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்து, காவல்துறையை அணுகி புகார் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்துள்ள சென்னை நகர சைபர் குற்றப்பிரிவு காவல்துறை, விசாரணையைத் துவங்கியுள்ளது.
கொரியர் மோசடியில் வலை விரிக்கப்படுவது எப்படி?
இந்த சைபர் மோசடிகள் எப்படி நடக்கின்றன என்பது குறித்து சைபர் குற்றப்பிரிவு காவல்துறை ஒரு விரிவான விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள் இனி:
வழக்கமாக தொலைபேசி மூலம் அழைத்து, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் ஆகியவற்றின் எண்களைப் பெற்று மோசடி செய்வதே வழக்கமாக இருந்த நிலையில் அதுபோன்ற மோசடிகள் பற்றி விழிப்புணர்வு ஓரளவுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், ஒருவரது தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி தவறான செயல் நடைபெற்றிருப்பதாகக் கூறி பணம் பறிக்கும் மோசடிகள் அரங்கேற ஆரம்பித்துள்ளன.
"மேலே குறிப்பிடப்பட்ட பெண்மணியைப் பொறுத்தவரை, அவரது எண் பயன்படுத்தப்பட்டு, வசவுச் செய்திகள் அனுப்பப்பட்டதாகவும் வேறு சில தேசவிரோத காரியங்களுக்கு அவரது எண் பயன்படுத்தப்பட்டதாகவும் மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த மோசடி இந்தியா முழுவதும் வேறொரு வடிவத்தில் வலம் வருகிறது. மோசடிக்காக குறிவைக்கப்படும் நபருக்கு 'ஃபெடெக்ஸ் கொரியரில் இருந்து' பேசுவதாகவும் அவரது பெயரில் கிழக்காசிய நாடு ஒன்றுக்கு அனுப்பப்பட்ட பார்சலில், போதைப் பொருள், விலங்குகளின் தோல், கஞ்சா, பல லட்சம் டாலர் மதிப்புள்ள பணம், சிம் கார்டுகள் போன்றவை வந்திருப்பதாகவும் மும்பையின் சைபர் கிரைம் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படும்.
மோசடிக்கு இலக்காகும் நபர் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததும், அவருடைய ஆதார் எண்ணைக் கேட்பார் அந்தப் போலி அதிகாரி. ஆதார் எண்ணைச் சொன்னதும் அவருடைய ஆதார் எண்ணுடன் உலகம் முழுக்கவும் பல வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் அதில் சட்டவிரோத பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும் போலி அதிகாரி கூறுவார்.
இதற்குப் பிறகு, தாங்கள் அனுப்பும் லிங்க்கை க்ளிக் செய்து வீடியோ அழைப்பில் வரும்படி கூறுவார்கள். வீடியோ அழைப்பில் வந்தபிறகு, அவர்கள் யாரையும் தொடர்புகொள்ளக்கூடாது என்றும் விசாரணை முடியும்வரை கேமரா முன்பாகவே இருக்க வேண்டும் என்றும் எச்சரிப்பார்கள். சம்பந்தப்பட்டவர்கள் 'Digital Arrest'இல் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்வார்கள். அதற்குப் பிறகு இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போன்றே எல்லாம் நடந்து பணம் பறிபோகும்.
இந்த மோசடி நடக்கும்போது எந்தத் தருணத்திலாவது, எச்சரிக்கையடைந்து சம்பந்தப்பட்டவர்கள் ஸ்கைப் அழைப்பைத் துண்டித்தால் இதிலிருந்து தப்பலாம்."
இந்த மோசடி எப்படி செயல்படுத்தப்படுகிறது?
இந்த கொரியர் மோசடி ஒரு விரிவான நெட்வொர்க்கின் மூலம் செயல்படுத்தப்படுகிறது என்கிறார் இது தொடர்பான வழக்குகளில் ஆஜராகும் சைபர் வழக்கறிஞர் கார்த்திகேயன்.
"கொரியரிலிருந்து அழைப்பதாகத் துவங்கும் தொலைபேசி அழைப்பு எதையும் ஆட்கள் செய்வதில்லை. கிரெடிட் கார்ட், கடன் போன்றவற்றை வழங்குவதாகக் கூறி வரும் அழைப்பைப் போலவே இதுவும் எந்திரங்கள் மூலமாகச் செய்யப்படும் அழைப்புதான். கிரெட் கார்டுகளை விற்கும் ஏஜென்சிகளுக்கு எப்படி நம்முடைய வங்கி தகவல்கள் செல்கின்றனவோ, அதேபோலத்தான் இந்த மோசடி நெட்வொர்க்கிற்கும் வங்கியில் நிறைய பணம் வைத்திருப்பவர்களின் தகவல்கள் செல்லும்," என்று விவரிக்கிறார் அவர்.
அதன் அடிப்படையில் "எந்திரங்கள் அழைப்பை மேற்கொள்ளும். சம்பந்தப்பட்ட நபர் அந்த அழைப்பை எடுத்த பிறகுதான் மனிதர்கள் அதில் பேச ஆரம்பிப்பார்கள்."
"சில நிமிடங்களிலேயே சம்பந்தப்பட்ட நபர், மோசடிக்கு இலக்காகக் கூடியவரா என்பது தெரிந்துவிடும். இலக்காகக் கூடியவர் என்றால், வழக்கமான நடைமுறைகளைப் பயன்படுத்தி மோசடி செயல்படுத்தப்பட்டுவிடும்" என்கிறார் கார்த்திகேயன்.
இந்த மோசடியின்போது ஒரு வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும் பணம், உடனடியாக க்ரிப்டோ கரென்சியாக மாற்றப்படும். அந்த க்ரிப்டோ கரென்சியை பிறகு எந்த நாட்டின் பணமாகவும் மாற்றிக்கொள்வார்கள். மோசடிக்கு உள்ளாகும் நபர், எந்த வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புகிறாரோ, அந்த வங்கிக் கணக்கு விவரங்களை வைத்து மோசடி செய்யும் நபரை பிடிக்க முடியாதா?
இந்தியாவில் இயங்கும் 'ரன்னர்'கள்
இந்த மோசடி இரு இடங்களில் இருந்து நடப்பதாகக் கூறுகிறார் சைபர் வழக்கறிஞர் கார்த்திகேயன். அவரது கூற்றுப்படி, வியட்நாம், கம்போடியா போன்ற கிழக்காசிய நாடுகளில் ஒரு கும்பல் இயங்கும், இந்தியாவிற்குள் 'ரன்னர்கள்' எனப்படுபவர்கள் இயங்குவார்கள். "இந்த ரன்னர்களின் வேலை, வங்கிக் கணக்குகளை ஆரம்பித்துத் தருவதுதான். இதற்காக சாலையோரம் கடை வைத்திருப்பவர்கள் குறிவைக்கப்படுவார்கள்."
"அவர்களிடம் பேசி, புதிய வங்கிக் கணக்கைத் துவங்கினால், ஐயாயிரம் - பத்தாயிரம் பணம் தருவதாகச் சொல்வார்கள். அதற்கு இணங்குபவர்களை வைத்து புதிய வங்கிக் கணக்கு துவங்கப்படும். சொன்னபடி பணத்தையும் தந்துவிடுவார்கள். ஆகவே, காவல்துறை இந்த வங்கிக் கணக்கை ஆராய்ந்தாலும், அப்பாவிகள்தான் சிக்குவார்களே தவிர, உண்மையான குற்றவாளிகள் சிக்குவது கடினம்,” என்கிறார் கார்த்திகேயன்.
மேலும் சாலையோர வியாபாரிகளை அணுகும்போதே, சிசிடிவி கேமராக்கள், கண்காணிப்பு இல்லாத பகுதியாகப் பார்த்துதான் இந்த ரன்னர்கள் அணுகுவார்கள் என்பதால், இந்த வியாபாரிகளை அணுகியது யார் என்பதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமில்லை என்றும் கூறுகிறார் அவர்.
கார்த்திகேயனின் கூற்றுப்படி, கிழக்காசிய நாடுகளில் இயங்கும் மோசடிக் கும்பலைப் பொறுத்தவரை, இந்தியாவின் எல்லா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் 'ஐடி' பணி என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டவர்களாக இருப்பார்கள்.
"இவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கப்பட்டாலும் தினசரி இலக்குகள் இருக்கும். அந்த இலக்குகளை எட்டாவிட்டால் தண்டிக்கப்படுவார்கள். ஆனால், இந்த நெட்வொர்கை சட்ட அமைப்புகள் அடைவது அவ்வளவு எளிதாக இருக்காது," என்கிறார் அவர்.
ஐந்தே மாதங்களில் 35 கோடி மோசடி
காவல்துறையைப் பொறுத்தவரை, பொதுமக்கள் இந்த மோசடிகள் குறித்த விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்கிறது.
"யாராவது காவல்துறை என்று கூறி பணம் கேட்டாலே உடனடியாக காவல்துறையை அணுக வேண்டும்" என்கிறார் சென்னை நகர சைபர் கிரைம் காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர். எந்த அரசு அமைப்புகளும் ஒருபோதும் ஆன்லைனில் பணம் அனுப்பச் சொல்ல மாட்டார்கள் என்பது மக்களுக்குப் புரிய வேண்டும் என்கிறார் அவர்.
கொரியரில் சட்டவிரோதமான பொருட்கள் அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறி பணத்தைப் பறிக்கும் மோசடிகள் நீண்ட காலமாகவே நடக்கின்றன என்றாலும் கடந்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் இதுபோல மோசடிக்கு உள்ளாபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது.
தமிழ்நாட்டின் சைபர் கிரைம் காவல்துறை அளிக்கும் தகவல்களின்படி, இதுவரை இந்த மோசடியால் பாதிக்கப்பட்டு 2,066 பேர் புகார் அளித்துள்ளனர். இந்த மோசடிகளில் 45 கோடி ரூபாய் வரை பறிபோயிருக்கிறது.
ஆனால், இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து தற்போது வரை மட்டும் ஐந்து மாதத்தில் மட்டும் 1,342 பேர் இதுபோல ஏமாற்றப்பட்டிருப்பதாக புகார் அளித்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 35 கோடி ரூபாய் பணம் ஏமாற்றப்பட்டிருக்கிறது என்கிறது தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையின் ஏடிஜிபி அலுவலகம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)