இலங்கையில் ராஜபக்ஸவை விரட்டியடித்தது யார்? தமிழர்கள், வெளிநாட்டு சக்தி பற்றி அவர் கூறுவது என்ன?

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சூழ்ச்சி’ என்ற பெயரில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ புத்தகமொன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.

இந்த புத்தகத்தின் ஊடாக கோட்டாபய ராஜபக்ஸ, பௌத்த மேலாதிக்கத்தை நியாயப்படுத்தி, ஏனைய மதத்தவர்களை சூழ்ச்சிக்குள் உள்ளடக்கும் வகையில் இந்த புத்தகத்தை எழுதியிருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து பிபிசி தமிழ் ஆராய்கின்றது.

‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சூழ்ச்சி’

‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சூழ்ச்சி’ என்ற 192 பக்கங்களை கொண்ட புத்தகமொன்றை கோட்டாபய ராஜபக்ஸ அண்மையில் வெளியிட்டார்.

தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் காணப்பட்ட பொருளாதார நிலைமை முதல் தான் பதவியை விட்டு வெளியேற்றப்பட்ட காலம் வரையான விடயங்களை உள்ளடக்கும் வகையில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தை தவிர்த்து, ஏனைய அனைத்து தரப்பினரும் தன்னை பதவியிலிருந்து வெளியேற்றும் சூழ்ச்சியில் உள்ளடங்கியுள்ளதாக பிரதிபலிக்கும் வகையில் இந்த புத்தகத்தின் உள்ளடக்கங்கள் காணப்படுகின்றன.

தமிழர்கள் குற்றம்சாட்டும் யுத்தக் குற்றங்கள், இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டும் கோவிட் மரணங்ளை அடக்கம் செய்ய நிராகரித்த விடயங்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குற்றம் சாட்டும் ஈஸ்டர் தாக்குதல் போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தி இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

ஜெனீவா யோசனை தொடர்பான விவகாரம்

2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்த அரசாங்கம், ஜெனீவா மனித உரிமை பேரவையின் 30/1 யோசனைக்கு அனுசரணை வழங்கியமையை கோட்டாபய ராஜபக்ஸ இந்த புத்தகத்தின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த யோசனைக்கு இணை அனுசரணை வழங்கியமையானது, சிங்கள மக்களை இலக்காக கொண்டு செய்த ஒரு விடயம் என பலரும் உற்று நோக்கியதாக அவர் தனது புத்தகத்தின் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஜெனீவா அறிக்கையின் பிரகாரம், இலங்கை ராணுவம் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டது என்பதை அப்போதைய அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக இதில் கூறப்பட்டுள்ளது.

''இலங்கை ராணுவம் மீதான யுத்தக் குற்றங்களை விசாரணை செய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணை அதிகாரிகள் அடங்கிய நீதிமன்ற கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கும், கடந்த காலங்கள் குறித்து ஆராய்வதற்கு மேலும் பல நிறுவனங்களை ஸ்தாபிப்பதற்கும், அனைத்து பொறிமுறைகளுக்கும் சர்வதேச தரப்பிடமிருந்து நிதியுதவி, தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளும் சுதந்திரத்தை வழங்குவதற்கும் 2015ஆம் ஆண்டு அரசாங்கம் 30/1 யோசனையின் ஊடாக இணக்கம் தெரிவித்தது" என அவர் கூறுகின்றார்.

''உத்தேச நீதிமன்ற கட்டமைப்பின் முன்னிலைக்கு, ஆயுதம் ஏந்திய ராணுவ உறுப்பினர் ஒருவரை ஆஜர்படுத்துவதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லாத போதிலும், மனித உரிமை மீறல் அல்லது யுத்தக் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் கீழ் ராணுவ அதிகாரிகளை உள்ளக நிர்வாக செயற்பாடுகளின் ஊடாக சேவையிலிருந்து நீக்குவதற்கு ஜெனீவாவில் 2015ஆம் அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது" என கோட்டாபய ராஜபக்ஸ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தேசிய நலனுக்கு முரணான வகையில் பல விடயங்கள் ஜெனீவா யோசனையில் உள்ளடங்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான விடயங்களினால் 2015-2019 அரசாங்கம் தேசிய விரோத மற்றும் சிங்கள விரோத அரசாங்கம் என்ற விதத்தில் மக்கள் நோக்கினார்கள் என கோட்டாபய ராஜபக்ஸ தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

2015 - 2019 அரசாங்கத்தை பாதுகாத்த உள்நாட்டு, வெளிநாட்டு சக்தி?

2015 - 2019ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலிருந்து அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக செயற்பட்ட வெளிநாட்டு சக்திகள், 2022ஆம் ஆண்டு தன்னை வெளியேற்றும் போராட்டத்தை செயற்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

''2018ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் அப்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இடையில் விரிசல் ஏற்பட்ட போது, அந்த அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக செயற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள், 2022ஆம் ஆண்டு தன்னை வெளியேற்றும் போராட்டத்தை முன்னெடுத்ததாக அவர் தனது புத்தகத்தின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மை சிங்கள மக்கள் என்ற விதத்தில் தமது நாட்டிற்குள் காணப்படுகின்ற இடம் தமக்கு இல்லாது போயுள்ளது என்ற உணர்வினாலேயே 2019ஆம் ஆண்டு தனக்கு வாக்களிக்க மக்கள் ஒன்று திரண்டதாகவும் அவர் கூறுகின்றார்.

கோவிட் காலத்தில் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள நேர்ந்தமை

கோவிட் காலப் பகுதியில் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள நேர்ந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தனது புத்தகத்தில் இணைத் தலைப்பாக இந்த விடயத்தை அவர் தெளிவூட்டியுள்ளார்.

2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை சுற்றுலாத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டதுடன், 2020 முதல் 2021 செப்டம்பர் வரை குறைந்தளவான சுற்றுலா பயணிகளே வருகைத் தந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

2020ஆம் ஆண்டு 7,104 டாலர் அந்நிய செலாவணியே நாட்டிற்கு கிடைத்துள்ளது. 2021ஆம் ஆண்டு 5,491 டாலர் அந்நிய செலாவணி நாட்டிற்கு கிடைத்துள்ளது. 2022ஆம் ஆண்டு 3,789 டாலர் அந்நிய செலாவணி கிடைத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், வாகனம் உள்ளிட்ட இறக்குமதிகளை தடை செய்ய நேர்ந்ததாகவும், வெளிநாட்டிற்கு அனுப்பும் பணத்தை 5000 டாலர் வரை மட்டுப்படுத்த நேர்ந்ததாகவும், வெளிநாட்டு கடன் செலுத்துவதை நிறுத்த நேர்ந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

கோவிட் பெருந்தொற்று தனது ஆட்சி காலத்தில் பொருளாதார வீழ்ச்சிக்கு பாரிய தாக்கத்தை செலுத்தியது என அவர் குறிப்பிடுகின்றார்.

இதனால், வாழ்வாதாரம் ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியமை, மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கியமை உள்ளிட்ட விடயங்களை அவர் இந்த புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோவிட் காலப் பகுதியில் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கமாக கோட்டாபய ராஜபக்ஸ இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அத்துடன், கோவிட் பாதிப்புகளை தவிர்த்துக் கொள்வதற்காக உடனடி தடுப்பூசி திட்டத்தை செயற்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

கோவிட் தொற்று காணப்பட்ட காலப் பகுதியில் நடாத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில், தமது கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தன்வசப்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு, வரிசை மற்றும் வன்முறை

கோவிட் தொற்று காரணமாக நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியினால், 2022 மார்ச் மாதம் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், மின்தடையை ஏற்படுத்த வேண்டிய நிலைமையும் காணப்பட்டது என அவர் குறிப்பிடுகின்றார்.

2022 மார்ச் மாதம் 28ஆம் தேதி 7 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டதுடன், மார்ச் 31ஆம் தேதி அந்த மின்வெட்டு நேரம் 12 மணிநேரம் வரை அதிகரிக்கப்பட்டது.

இதையடுத்து, 2022 மார்ச் 31ஆம் தேதி தனது மிரிஹான வீட்டு வளாகம் யுத்த களமாக மாறியது என கோட்டாபய ராஜபக்ஸ கூறுகின்றார்.

முதலில் சிறு குழுவினரால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், ஒரு தொலைக்காட்சி மற்றும் சமூகவலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை அடுத்து, அது பாரிய போராட்டமாக மாற்றம் பெற்றது என அவர் குறிப்பிடுகின்றார்.

போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக வருகை தந்த பாதுகாப்பு பிரிவினர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடாத்தியதை அடுத்து, போராட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகத்தை பாதுகாப்பு பிரிவினர் நடாத்தியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதற்காக பெருமளவான வழக்கறிஞர்கள் முன்னிலையானதாக கூறிய அவர், தான் பதவியிலிருந்து விலகும் வரை அந்த செயற்பாடு தொடர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து, 2022 ஏப்ரல் 09ஆம் தேதி காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார்.

காலி முகத்திடல் போராட்டத்தில் சிறுபான்மையினர்

''விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிரான யுத்தத்தை நாம் வென்ற தருணத்திலிருந்து, நான் தமிழ் மக்களின் எதிரியாக சித்தரிக்கப்பட்டேன். ஒன்றிணைந்த நாட்டிற்கு பதிலாக ஐக்கிய இலங்கையை கோரி நின்ற புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரல் இந்த போராட்டத்தில் தெளிவாகியது.

சமஷ்டி அரசாங்கமொன்றை தமிழ் கட்சிகள் நீண்டகாலமாக கோரியதுடன், காலி முகத்திடல் போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்தின் மீது மின்விளக்குகளின் ஊடாக அந்த கோரிக்கை காட்சிப்படுத்தப்பட்டது." என அவர் குறிப்பிடுகின்றார்.

''2012ஆம் ஆண்டு பொதுபல சேனா அமைப்பு உருவானதுடன், அந்த அமைப்புடன் எனக்கு தொடர்புள்ளது என்ற அடிப்படையில், நான் முஸ்லிம்களின் எதிரி என்ற கருத்து வெளியானது. கோவிட் மரணங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் கூட முஸ்லிம்களுக்கு எதிரானவன் என கருத்தை காணக்கூடியதாக இருந்தது."

''2019ஆம் ஆண்டு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள், எனது எதிர் போட்டியாளருக்கு கிடைத்த நிலையிலேயே நான்; அதிகாரத்தை கைப்பற்றினேன். பௌத்த மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் இடமான ருவன்வெலிசேய புனித பூமியிலேயே நான் பதவி பிரமாணம் செய்துக்கொண்டேன். சிங்கள பெரும்பான்மை வாக்குகளினால் நான் தெரிவு செய்யப்பட்டமை குறித்து நான் பதவி பிரமாணம் செய்துக்கொண்டதன் பின்னர் பல்வேறு அர்த்தங்கள் வெளிப்படும் வகையில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன." என அவர் குறிப்பிடுகின்றார்.

தனது அமைச்சரவையில் அறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா ஆகிய தமிழர்கள் இருந்த போதிலும், முஸ்லிம்கள் எவரும் இருக்கவில்லை. ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்ததன் பின்னர் அவரது மகன் தெரிவு செய்யப்பட்டபோதிலும், அவருக்கு வயது குறைவு காரணமாக அமைச்சர் பதவி வழங்கவில்லை. தேசிய பட்டியல் ஊடாக அலி சப்ரியை தெரிவு செய்து, அவருக்கு அமைச்சர் பொறுப்பை வழங்கினேன்." என அவர் கூறுகின்றார்.

'போராட்டத்திற்குள் 'சிங்கள பௌத்த தரப்பில் குறுகிய அளவினரே பங்குப்பற்றினர். சில பௌத்த மத குருமார்களே பங்குப்பற்றினார்கள். போராட்டத்திற்கு ஒரு மூத்த பௌத்த பிக்கு மாத்திரமே ஆதரவு வழங்கினர். ஓமல்பே சோபித்த தேரர் மாத்திரமே ஆதரவு வழங்கினார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வசமிருந்த சிங்கள பௌத்த அதிகாரம் இல்லாது போனது என சோபித்த தேரர் ஹிரு தொலைக்காட்சிக்கு தெரிவித்தார். ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகி பெற்றுக்கொண்ட சிங்கள பௌத்த வாக்குகளை போராட்டத்தின் ஊடாக இல்லாது செய்து நோக்கம் என்பது அவரது கருத்திலிருந்து விளங்கிக்கொள்ள முடிகின்றது" என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த போராட்டமானது சிங்கள எதிர்ப்பு மற்றும் பௌத்த எதிர்ப்பு போராட்டம் என்பதுடன், அது வெளிநாட்டு தரப்பினரின் தூண்டுதல் மற்றும் அனுசரணை என கோட்டாபய ராஜபக்ஸ கூறுகின்றார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் விவகாரம்

கோவிட் தொற்று காரணமாக ஏற்படும் மரணங்களை அடக்கம் செய்ய கூடாது என சுகாதார தரப்பினர் வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைய, தான் நடவடிக்கை எடுத்த போதிலும், அதனை முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கையாக சிலர் சித்தரித்ததாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

இந்த முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கையானது, பின்னரான காலத்தில் தனக்கு எதிரான வைராக்கியமாக மாற்றம் பெற்றதை அடுத்து, தன்னை பதவியிலிருந்து விரட்டியடிக்கும் திட்டத்திற்கு அதனை பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் கூறுகின்றார்.

''கோவிட் மரணங்களை அடக்கம் செய்வதற்கு மாலத்தீவு அரசாங்கத்திடம் தான் உதவி கோரிய நிலையில்,அதற்கு மாலத்தீவு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. எனினும், இனவாத இலங்கை அரசாங்கத்திற்கு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கு ஏன் உதவி செய்கின்றீர்கள் என இலங்கைக்கான ஐரோப்பிய தூதுவர் ஒருவர் மாலத்தீவு அரசாங்கத்திடம் கோரினார். ஜெனீவா மனித உரிமை பேரவை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அரசாங்கத்தை நிர்க்கதி நிலைக்கு தள்ள சர்வதேச வல்லரசு நாடுகள் இந்த பிரச்னையை பயன்படுத்திக் கொண்டன" என அவர் குறிப்பிடுகின்றார்.

அதனைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளின் அடிப்படையில் 30 அடி ஆழத்தில் நிலத்தடி நீர் இல்லாத பகுதிகளில் கோவிட் சடலங்களை புதைக்க அனுமதி வழங்கப்பட்டது என அவர் தெரிவிக்கின்றார்.

எனினும், இந்த விடயத்தை முன்னிலைப்படுத்தி, முஸ்லிம்களை தனக்கு எதிராக திசை திருப்பியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்

'என்னை பதவியிலிருந்து விரட்டியடிக்கும் விவகாரத்தில் கார்தினல் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயத்தின் சிலர் தரப்பினர் பாரிய பொறுப்புக்களை நிறைவேற்றினார்கள். காலி முகத்திடல் போராட்டத்தில் கத்தோலிக்க சமூகத்தையே அதிகளவில் காணக்கூடியதாக இருந்தது. தன்னை வெளியேற்றும் நடவடிக்கைகளின் கத்தோலிக்க சமூகத்தினர் மறைமுகமாகயின்றி நேரடியாகவே களமிறங்கினார்கள்." என அவர் கூறுகின்றார்.

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் இரகசிய சாட்சியங்கள் காணப்பட்டமையினால், அதனை வெளிப்படுத்த வேண்டாம் என பரிந்துரை செய்யப்பட்டடிருந்தது. அதனால், கார்தினல் உள்ளிட்ட எவருக்கும் அதனை கையளிக்க முடியவில்லை. எனினும், 2021 பிப்ரவரி 25ஆம் தேதி ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அனைத்து சாட்சியங்களுடனும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த பிரதிகள் பௌத்த மகாநாயக்க தேரர்கள் மற்றும் கார்தினல் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. எனினும், இந்த தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கார்தினல் கோரிக்கை விடுத்தார். எனினும், அந்த அறிக்கை குறித்து கார்தினல் திருப்தி கொள்ளவில்லை" என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டே கத்தோலிக்க சபை தனக்கு எதிராக போராடியது என கோட்டாய ராஜபக்ஸ தனது புத்தகத்தின் தெளிவூட்டியுள்ளார்.

தன்னை ஆட்சியிலிருந்து வெளியேற்ற பல நாடுகள் தொடர்புபட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள போதிலும், அந்த நாடுகளின் பெயர்களை தெளிவாக உறுதிப்படுத்த இந்த புத்தகத்தில் கோட்டாபய ராஜபக்ஸ கூறவில்லை.

பத்திரிகையாளரின் பார்வை

''சிங்கள் மக்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார். அவருக்கு மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லாவிட்டாலும் கூட, தனது ஆட்சி மோசமான ஆட்சி என வரலாற்றில் பதிந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு வியாக்கியானத்தை கொடுக்க முயல்கின்றார்.

எனினும், அவரது குடும்பத்திற்குள் வந்த அழுத்தங்களை அவர் சொல்லவில்லை. வெளிநாட்டு சக்திகள் என கூறுகின்றார். ஆனால் வெளிநாட்டு சக்திகள் யார் என்பதை அவர் கூறவில்லை. குறிப்பாக இந்தியா இறுதி நேரத்தில் அவரது விமானத்தை தரையிறக்க அனுமதி மறுத்ததாக செய்திகள் வந்தது.

ஆனால், அதற்கான காரணத்தை அவர் சொல்லவில்லை. அதேபோன்று, அமெரிக்க பிரஜாவுரிமைக்காக அவர் அமெரிக்காவிற்கு போவதற்கான விசாவை கேட்கின்றார். அதற்கும் அமெரிக்கா அனுமதி வழங்கவில்லை. மேற்குலக சக்தி என கூறுகின்ற போதிலும், அது எந்த நாடு என கூறவில்லை.

ரஷ்ய விமானம் நிறுத்தப்பட்டது ஒரு சதி என சொல்லும் அவர், ரஷ்ய தூதரகம் விளக்கத்தை கேட்ட போதிலும், அவர் அதற்கான விளக்கத்தை கூட சொல்லவில்லை. அனுதாபத்தை தேடி வரலாற்றில் தனக்கு அவப் பெயர் வந்து விடக்கூடாது என யோசிக்கும் கோட்டாபய, வரலாற்றை திரிபுபடுத்தும் வகையில் அந்த புத்தகத்தை எழுதியுள்ளார்." என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

''இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறிய அந்த தவறை இவர்கள் இன்னும் சீர்செய்யவில்லை. பௌத்த மேலாதிக்க வளர்ச்சி தனது ஆட்சியில் வளர்ந்து விடும் என்பதை தடுத்து விடுவதற்காகவே இந்த விடயம் நடந்தது என கோட்டா சொல்கின்ற நிலையில், பௌத்தர்களின் அனுதாபத்தை வென்றெடுக்க முயற்சிக்கின்றார். இன்னும் இவர்கள் பாடம் கற்கவில்லை." எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

''இந்த புத்தகத்தின் ஊடாக இனவாத தோற்றம் ஒன்று நிச்சயமாக தெரிவிக்கின்றது. மூத்த பௌத்த தேரர்கள் கூட போராட்டத்தில் இருந்தார்கள். ஓமல்பே சோபித்த தேரர். கோட்டா வெளியேறுவதற்கு கூட நான் உதவி செய்தேன் என அவர் கூறுகின்றார். அதாவது பதவியை விட்டு போங்க என சொன்னதே பிக்குகள் தான்.

கோட்டாவின் ஆட்சி காலத்தில் மாதத்திற்கு ஒரு முறை பௌத்த மதத் தலைவர்களை மட்டும் அவர் சந்தித்தார். அவர்களுக்கு பாரிய உதவிகளை செய்தார். ஆனால், கோட்டாவை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.

இன்றும் கூட அவர் சொன்ன கருத்தை எந்தவொரு பௌத்த மதத் தலைவரும் ஆதரவில்லை. பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்திய அவர், இப்போது தன்னை நியாயப்படுத்த வருவதாகவே அவர்கள் நினைக்கின்றார்கள். சொல்ல வேண்டிய விடயங்களை அவர் இந்த புத்தகத்தில் சொல்லவில்லை." என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)