புதிய கிரிமினல் சட்டங்கள் ஏன் எதிர்க்கப்படுகின்றனர்?
இந்தியாவில் உள்ள மூன்று கிரிமினல் சட்டங்களை மாற்றியதற்கு எதிர்க்கட்சிகள், வழக்கறிஞர்கள், சிவில் உரிமை குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
1860 -ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், பாரதிய நியாய் சன்ஹிதா என்று மாற்றப்பட்டுள்ளது.
1973ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என்று மாற்றப்பட்டுள்ளது.
1872-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய சாட்சியச் சட்டம் பாரதிய சாஷிய அதினியம் என்று மாற்றப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டு இந்த புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. 146 உறுப்பினர்கள் அவைக்கு வராத தருணத்தில், பெரிய அளவிலான விவாதங்கள் ஏதும் நடைபெறாமல் இந்த சட்டங்களை அமல்படுத்தக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த புதிய சட்டங்கள் ஜூலை1ம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டன. ஜூலை 1ம் தேதி முதல் செய்யப்படும் குற்றங்களுக்கு புதிய சட்டம் பொருந்தும். அதற்கு முன்பு நடைபெற்ற குற்றங்களுக்கு பழைய சட்டங்களே பொருந்தும். எனவே சில காலத்துக்கு, இரண்டு சட்டங்களுமே நீதிமன்ற வழக்குகளில் பயன்படுத்தப்படும்.

பட மூலாதாரம், Getty Images
புதிய சட்டங்களின் பல பிரிவுகளுக்கு சிவில் உரிமை குழுக்கள், வழக்கறிஞர்கள், சில மாநில அரசுகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இந்திய சாசனச் சட்டத்தின் படி இந்தியாவின் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர்கள் இருக்க வேண்டும். இந்த சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு, கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டங்கள் பொதுப் பட்டியலில் இடம்பெறுபவை. எனவே மாநிலங்களோடு விவாதிக்காமல் மத்திய அரசே சட்டங்களை இயற்றி திணிக்கக் கூடாது என்று தமிழ்நாடு கூறுகிறது.
பாரதிய நியாய் சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா ஆகிய சட்டங்களின் பல பிரிவுகள் முரண்பாடாகவும், பல ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தமிழ்நாடு கூறுகிறது.
தேச துரோகம் குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட்டு வந்தாலும், இந்த பிரிவு பெரும்பாலான நேரங்களில் பழிவாங்கவே பயன்படுத்தப்படுகிறது என்று பல நீதிபதிகள் கூறியுள்ளனர். புதிய சட்டத்தில் இந்த பிரிவு நீக்கப்பட்டாலும், தேசத்தின் ஒற்றுமை, இறையாண்மைக்கு எதிராக பேசினால், செயல்பட்டால் அது குற்றம் என்ற கடுமையான பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இது தெளிவாக இல்லை என்பதையும் தமிழ்நாடு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த புதிய சட்டங்கள் காவல்துறைக்கு ஆதரவாகவும் மக்களுக்கு எதிராக இருப்பதாகவும் இவற்றை எதிர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



