You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலை - நவாஸ் ஷெரிஃப் நிலை என்ன?
நேற்று (வியாழன், பிப்ரவரி 8) நடந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது, முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, நவாஸ் ஷெரிஃப் மற்றும் இம்ரான் கான் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளின்படி, இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் பல இடங்களில் முன்னணியில் உள்ளனர்.
ஆனால், பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான நவாஸ் ஷெரிஃப், தனது தலைமையிலான முஸ்லீம் லீக்(பிஎம்எல்-என்) கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறியுள்ளார்.
தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியுள்ள அவர், “இதற்கு முன்னாலும் பாகிஸ்தானை கடினமான நேரங்களில் இருந்து காப்பாற்றியிருக்கிறோம். அதை மீண்டும் செய்வோம்,” என்று கூறியுள்ளார்.
மேலும், இம்ரான் கான் ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் சுயேட்சை வேட்பாளர்களும் தன்னுடன் இணைந்து ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் அவர்.
ஆனால், நவாஸ் ஷெரிஃப்பின் இந்தக் கருத்துக்கு பிடிஐ கட்சி எதிர்வினை ஆற்றியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அந்தக் கட்சி, “நவாஸ் ஷெரிஃப் வெட்கமின்றிப் பேசி வருவதாக” தெரிவித்துள்ளது.
மேலும், நவாஸ் இந்தத் தேர்தலைக் கைப்பற்ற முயலும் செயலைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
இதுவரையிலும் பிஎம்எல்-என் கட்சி 59 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேநேரம் சுயேட்சை வேட்பாளர்கள் 86 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
பிபிசி உருது சேவை அளித்துள்ள தகவலின்படி, சுயேட்சை வேட்பாளர்கள் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது பிடிஐ கட்சியுடன் தொடர்பில் உள்ளவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தனக்கு தனிப் பெரும்பான்மை இல்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ள நவாஸ் ஷெரிஃப், கூட்டணி அமைத்து அரசு அமைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சிகள் முன்வைத்தாலும், இதுகுறித்து தேர்தல் ஆணையம் எதுவும் தெரிவிக்கவில்லை.
அதேவேளையில், இம்ரான் கானின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியமளிப்பதாக அந்நாட்டு பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன.
சர்ச்சைகளுக்கு இடையே நடந்து முடிந்த தேர்தல்
பல சர்ச்சைகளுக்கிடையே பாகிஸ்தனின் தேர்தல் நேற்று (வியாழன், பிப்ரவரி 8)நடந்து முடிந்தது. இதில் கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்தனர்.
தேர்தலின்போது செல்போன் இணைப்புகள், இணைய வசதி ஆகியவை அதிகாரிகளால் இடைநிறுத்தப்பட்டன. பயங்கரவாத சம்பவங்கள் நிகழாமல் தடுக்க இந்த நடவடிக்கை அவசியமானது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் வெளியேற்றப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தேர்தல் நடந்துள்ளது.
பல ஆய்வாளர்கள் இந்தத் தேர்தலை பாகிஸ்தானின் நம்பகத்தன்மை இல்லாத தேர்தல் என்று கூறியுள்ளனர். கடந்த ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கானின் கட்சி இணைய வசதி இடைநிறுத்தப்பட்டதை ‘கோழைத்தனமான செயல்’ என்று விமர்சித்தது.
யார் இந்த நவாஸ் ஷெரீப்?
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானை விட்டு வெளியேறி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு லாகூர் தொகுதியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019-ஆம் ஆண்டில், உடல்நிலை காரணமாக அவர் ஜாமீனுக்கு மனு செய்ய அனுமதிக்கப்பட்டார். அவர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் பொது பதவியில் இருக்க தடை விதிக்கப்பட்டார்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் லண்டனில் இருந்து தாயகம் திரும்பி, சிறைபடுத்தப்பட்டுள்ள தனது பரம எதிரியான இம்ரான் கானின் கட்சிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டார்.
ஷரீப்புக்கு அரசியல் மறுபிரவேசம் ஒன்றும் புதிதல்ல. 1999-இல் நடந்த இராணுவம் அவரது இரண்டாவது பதவிக்காலத்தை கவிழ்த்த பிறகு, 2013-ஆம் ஆண்டில் சாதனையாக மூன்றாவது முறையாக பிரதமரானார்.
சிறைபிடிக்கப்பட்டும் ஆதிக்கம் செலுத்தும் இம்ரான் கான்
இம்ரான் கான் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டாலும், தேர்தலில் தவிர்க்கமுடியாத சக்தியாகத் தொடர்கிறார். கணிப்புகளின்படி, 101 நாடாளுமன்றத் தொகுதிகளில் 47 இடங்களில் அவரது பிடிஐ ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
சிலருக்கு, கான் ஒரு புரட்சிகரமான ஹீரோ. அவரது எதிரிகளுக்கு, அவர் அதிகார வெறிபிடித்தவர் மற்றும் ஊழல்வாதி.
தேர்தலில் வென்று நான்கே ஆண்டுகளுக்குப் பிறகு, 2022-இல் அவர் எதிரிகளால் பாராளுமன்ற பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் இப்போது ஊழல் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் உட்பட 170-க்கும் மேற்பட்ட வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். இது அவரை தேர்தலில் இருந்து வெளியேற்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட முயற்சி என்று அவர் கூறுகிறார்.
ஆனால் அவர் இன்னும் கணிசமான ஆதரவைக் கொண்டுள்ளார். அவர் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இரவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாகிஸ்தான் முழுவதும் போராட்டம் நடத்தினர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)