கண்ணால் காண்பதை விட புகைப்படத்தில் நிலா சிறிதாக தெரிவது ஏன்? செல்போனில் தெளிவாக படம் பிடிக்க டிப்ஸ்

    • எழுதியவர், எலன் சாங்
    • பதவி, பிபிசி உலக சேவை

இந்த வார இறுதியில் தெளிவான வானம் அமையும் அதிர்ஷ்டம் இருந்தால், நீங்கள் பிரகாசமான, பெரிய சூப்பர் மூனை அதன் அற்புதமான வடிவத்துடன் இரவு வானில் காணலாம்.

நீங்கள் அதை உங்கள் கண்களால் பார்ப்பீர்கள். ஆனால், உங்கள் ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுக்க முயலும்போது, அது மங்கலான புள்ளியாகத் தெரிவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இது உங்கள் மோசமான புகைப்படத் திறமையைக் காட்டுவதாக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஒரு ஸ்மார்ட்போனில் சந்திரனைப் படம் பிடிப்பது ஏன் மிகவும் கடினம் என்பதற்கு சில காரணங்கள் உள்ளன.

ஆனால், நீங்கள் எடுக்கும் படத்தை வெகுவாக மேம்படுத்தக்கூடிய சில குறிப்புகள் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.

மங்கலான, பிரகாசமான புள்ளி போன்ற விளைவு

இரவில் சந்திரன் தொடர்பாக நாம் சந்திக்கும் முதல் பிரச்னை அதீத வெளிப்பாடு (Overexposure) ஆகும்.

"மிகவும் இருண்ட பின்னணியில் ஒரு சிறிய நிலவை நாம் அடிக்கடி காண்கிறோம், அதனால் உங்கள் ஸ்மார்ட்போன் இரவுக்கான புகைப்படத்தை எடுக்க முயற்சிக்கிறது," என்று ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் வானியல் இணைப் பேராசிரியர் மைக்கேல் பிரவுன் கூறுகிறார்.

ஆனால், நாம் சூரிய ஒளியால் பிரகாசிக்கும் சந்திரனின் பக்கத்தைப் புகைப்படம் எடுக்கிறோம், அதனால் அங்கே அது உண்மையில் பகல் நேரமாகும்.

பிரகாசமான, அதிக வெளிச்சமுள்ள புள்ளியாக ஒரு புகைப்படம் கிடைக்கும். இதை சமாளிக்க ஒரு எளிய வழி, இருள் சூழ்வதற்கு முன்பே சந்திரனைப் படம் எடுப்பதாகும்.

ஆனால், முழு நிலவாக இருக்கும்போது சந்திரன், சூரியனிலிருந்து பார்க்கும் போது பூமிக்கு எதிர்புறம் இருக்கும். எனவே முழு நிலவுகள் சூரிய அஸ்தமனத்திற்கு முன் அரிதாகவே தெரியும்.

நீங்கள் சூப்பர் மூனைப் படம் பிடிக்க விரும்பினால், சூரிய அஸ்தமனமான உடனே முயற்சி செய்யலாம்.

நாசாவின் சந்திரன் புகைப்படம் எடுக்கும் வழிகாட்டியின்படி, அந்தி நேரம் ஒரு சிறந்த நேரமாகும், ஏனெனில் சந்திரனுக்கும் வானத்திற்கும் இடையில் உள்ள அதிக மாறுபாட்டை உங்கள் போன் சமாளிக்க வேண்டியதில்லை. மேலும் முன்புறத்தில் உள்ள பொருட்களும் தெரியும்.

மாறாக, நீங்கள் இரவில் சந்திரனைப் படம் பிடிக்க ஆர்வமாக இருந்தால், பல வழிகளில் வெளிப்பாட்டைக் (Exposure) குறைக்கலாம் .

சந்திரனைச் சரியானபடி படம் எடுக்கும் இரவுப் புகைப்படங்களுக்கான செயலிகளை நீங்கள் பதிவிறக்கலாம் என்று பிரவுன் கூறுகிறார்.

அல்லது உங்கள் போன் கேமராவில் தானியங்கி வெளிப்பாடு அமைப்பை (Auto-exposure setting) நிறுத்தி, அதை நீங்களாக குறைக்கலாம்.

உங்கள் போனில் 'புரோ மோட்' (Pro mode) இருந்தால், நீங்கள் வெளிப்பாட்டின் இரண்டு கூறுகளைக் கூட மாற்றலாம் - அதாவது ISO (ஒளிக்கு சென்சார் எவ்வளவு உணர்திறன் கொண்டது) மற்றும் ஷட்டர் வேகம் ஆகியவற்றை மாற்றலாம்.

"உங்கள் அமைப்பிற்கு எது வேலை செய்கிறது என்பதைப் பார்க்க சற்று சோதித்து பாருங்கள்," என்று பிரவுன் அறிவுறுத்துகிறார்.

புகைப்படத்தில் நிலவு ஏன் சிறிதாகத் தெரிகிறது?

வெற்று கண்ணுக்கு எவ்வளவு பெரிதாகத் தெரிந்தாலும், நீங்கள் எடுக்கும் புகைப்படத்தில் சந்திரன் மிகச் சிறிதாகத் தோன்றலாம்.

இதற்கு 'நிலவு மாயை' (Moon illusion) என்று அழைக்கப்படும் ஒரு விளைவு காரணமாக இருக்கலாம். இது அடிவானத்தில் உள்ள சந்திரன் உண்மையில் இருப்பதை விடப் பெரிதாகத் தோன்றும் படி உங்கள் கண்களை ஏமாற்றுகிறது.

இதற்கு என்ன காரணம் என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை, ஆனால் அடிவானத்தில் உள்ள ஒரு பொருள் எவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும் என்று நம் மூளை எதிர்பார்க்கிறது என்பதனுடன் இதற்குத் தொடர்பு இருக்கலாம். அல்லது மரங்கள் மற்றும் கட்டடங்களுடன் ஒப்பிட்டு சந்திரனைப் பெரிதாகக் காட்டலாம்.

ஒரு செல்போன் கேமராவின் வடிவமைப்பையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பிரவுன் கூறுகிறார். இது பரந்த காட்சிகளை அல்லது நெருக்கமான செல்ஃபிகளை எடுப்பதற்கு மிகவும் நல்லது - ஆனால் தொலைவில் உள்ள சிறிய பொருட்களைப் படம் பிடிப்பதற்கு ஏற்றதல்ல.

வானத்தை கிழக்கு முதல் மேற்கு வரை 180 டிகிரி என்று நீங்கள் வைத்துக்கொண்டால், சந்திரன் முழுவதும் குறுக்கே 0.5 டிகிரி மட்டுமே இருக்கும்.

"சில [போன் கேமராக்கள்] ஒரே புகைப்படத்தில் கிட்டத்தட்ட 90 டிகிரி வரை படம் பிடிக்கும் மோடுகளைக் கொண்டுள்ளன," என்று அந்த வானியலாளர் விளக்குகிறார். "சந்திரன் முழுப் புகைப்படத்தின் ஒரு சில சதவிகிதமே இருக்கிறது... [இது] குறுக்கே 50 பிக்சல்கள் மட்டுமே இருக்கலாம்."

ஜூம் செய்வதில் கவனமாக இருங்கள்

எனவே, வெறுமனே ஜூம் செய்வதுதான் இதற்குத் தீர்வா?

அப்படி இல்லை.

பெரும்பாலான ஸ்மார்ட்போன் கேமராக்கள் டிஜிட்டல் ஜூம் செய்கின்றன. அதாவது, நீங்கள் படத்தை கிராப் செய்து அதை மேலும் மங்கலாகத்தான் ஆக்குகிறீர்கள். இது உங்களுக்கு அதிகம் உதவாது.

இருப்பினும், சில உயர்தர போன்களில் ஆப்டிகல் ஜூம் உள்ளது. இது காம்பாக்ட் கேமராக்கள் மற்றும் டிஎஸ்எல்ஆர்-களைப் போல, கேமராவின் குவிய தூரம் (focal length) (அதன் லென்ஸ் உருப்பெருக்கத்தின் ஒரு அளவீடு) அதிகரிக்கிறது - அவ்வாறு செய்யும்போது அதிக விவரங்களை வெளிப்படுத்துகிறது.

உங்கள் போனில் இது இருந்தால், நீங்கள் பயன்படுத்த வேண்டிய ஜூம் இதுதான்.

இல்லையெனில், நீங்கள் போனுக்காக வாங்கக்கூடிய கிளிப்-ஆன் ஜூம் லென்ஸ்கள் உள்ளன. அல்லது உங்களிடம் தொலைநோக்கி இருந்தால், கண்களைப் பொருத்தி பார்க்கும் இடத்திற்கு அருகில் உங்கள் போனைப் பிடிக்கலாம். இவை உங்கள் போன் சார்பாக ஆப்டிகல் ஜூம் செய்யும்.

ஒரு சிறிய, மலிவான தொலைநோக்கி கூட உங்களுக்கு சந்திரனின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்கள் போன்ற விவரங்களை வெளிப்படுத்தும், குறுக்கே நூற்றுக்கணக்கான பிக்சல்கள் கொண்ட புகைப்படத்தை அளிக்க முடியும், என்று பிரவுன் கூறுகிறார்.

நீங்கள் ஜூம் செய்யும்போது கேமராவின் எந்தவொரு தடுமாற்றத்தையும் பெரிதாக்கும். எனவே ஒரு ட்ரைபாடை பயன்படுத்துங்கள் அல்லது உங்கள் போனை நிலையான ஒன்றின் மீது வைக்கவும்.

ஷட்டர் பொத்தானை அழுத்தும்போது போனை அசைப்பதைத் தவிர்க்க, டைமரைப் பயன்படுத்தவும் அல்லது உங்கள் போனில் இருந்தால் லைவ் வியூ (live view) மோடைப் பயன்படுத்தவும். அல்லது சில வயர்ட் ஹெட்போன்களின் வால்யூம் பொத்தானை ரிமோட் ஷட்டர் பொத்தானாகப் பயன்படுத்தலாம்.

படைப்பாற்றலுடன் செயல்படுங்கள்

உங்களிடம் ஆப்டிகல் ஜூம் இல்லாமல், ஒரு சிறிய சந்திரன் படத்துடன் திருப்தியடைய வேண்டியிருந்தால், மற்ற வழிகளில் புகைப்படத்தை மேம்படுத்தலாம்.

"முன்புறத்தில் சுவாரஸ்யமான ஒன்றை வைத்துக்கொண்டு நீங்கள் ஒரு ஒப்பிட்டுக் காட்டும் அமைப்பை உருவாக்கலாம்" என்று பிரவுன் பரிந்துரைக்கிறார்.

சொல்லப்போனால் நாசாவின் மூத்த புகைப்படக் கலைஞர் பில் இங்கல்ஸ், சந்திரனை மட்டும் தனியாகப் படம் எடுப்பதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கிறார்.

"அந்த ஷாட்டை அனைவரும் எடுப்பார்கள்," என்று அவர் நாசா இணையதளத்தில் ஒரு கட்டுரையில் கூறுகிறார். "மாறாக, அந்தப் படத்தை எப்படிப் படைப்பாற்றல் மிக்கதாக மாற்றுவது என்று யோசியுங்கள்... உங்கள் புகைப்படத்திற்கு ஒரு இருப்பிட உணர்வை வழங்க எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்."

ஆனால், நம் அனைவராலும் தொழில்முறையாக எடுக்கப்பட்டதாக தோற்றமளிக்கும் புகைப்படங்களை எடுக்க முடியாது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

சில ஸ்மார்ட்போன்கள் நிலவுப் புகைப்படங்களை அழகுபடுத்த செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துகின்றன என்று பிரவுன் கூறுகிறார். இது ஒரு ஸ்மார்ட்போன் கேமராவின் சிறிய லென்ஸால் என்ன செய்ய முடியும் என்பது பற்றி நடைமுறைக்கு ஒவ்வாத எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தலாம்.

நீங்கள் உண்மையாக இருக்க விரும்பி, ஆனால் ஒரு அழகான நிலவைப் படம் எடுக்கத் தேவையான தொழில்நுட்பம் உங்களிடம் இல்லையென்றால், அதற்குப் பதிலாக உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்களுக்கு ஏற்ப செயல்படலாம்.

"மங்கலான விஷயங்களைக் கண்டறியும் அதன் திறன் மிகமிக நல்லது," என்று பிரவுன் கூறுகிறார். "அந்த பரந்த பார்வை உண்மையில் ஒரு சிறந்த புகைப்படத்தை வழங்கக்கூடிய வேறு சில விஷயங்களை புகைப்படம் எடுப்பதைக் குறித்து நீங்கள் யோசிக்கலாம்."

பால்வெளி மண்டலம், அரோராக்கள் அல்லது பிரகாசமான வால் நட்சத்திரங்கள் ஆகியவை நல்ல இலக்குகளாக இருக்கலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு