மேற்கு வங்கத்தில் பிறந்த காலிதா ஜியா வங்கதேசத்தில் மாபெரும் தலைவரானது எப்படி?

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான காலிதா ஜியா, தனது 80 வயதில் காலமானார்.

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அவரது கணவர் ஜியாவுர் ரஹ்மான், 1977-ல் அதிபராகப் பொறுப்பேற்றார்.

அந்த நேரத்தில், தனது இரண்டு மகன்களுக்காக அர்ப்பணிப்புடன் இருந்த ஒரு "கூச்ச சுபாவமுள்ள இல்லத்தரசி" என்று காலிதா ஜியா விவரிக்கப்பட்டார்.

ஆனால், 1981-ல் தனது கணவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது கணவரின் வங்கதேச தேசியவாதக் கட்சியை (BNP) வழிநடத்தினார். முதலில் 1990-களிலும் பின்னர் 2000-களின் தொடக்கத்திலும் என இரண்டு முறை பிரதமராக அவர் பொறுப்பேற்றார்.

வங்கதேச அரசியலின் கடுமையான சூழலில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி பல ஆண்டுகளை அவர் சிறையில் கழித்தார்.

2024-ல் போராட்டத்தின் விளைவாக அவரது நீண்டகால அரசியல் எதிரியான ஷேக் ஹசீனா பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, காலிதா ஜியா மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.

மேற்கு வங்கத்தில் பிறந்தவர்

பேகம் காலிதா ஜியா 1945-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் (தற்போதைய இந்தியாவில்) பிறந்தார்.

ஒரு தேயிலை வியாபாரியின் மகளான இவர், இந்தியப் பிரிவினைக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இப்போது வங்கதேசமாக இருக்கும் பகுதிக்கு இடம்பெயர்ந்தார்.

காலிதா ஜியா, தனது 15-வது வயதில், அப்போதைய இளம் ராணுவ அதிகாரியான ஜியாவுர் ரஹ்மானை மணந்தார்.

1971-ல், மேற்கு பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான கிளர்ச்சியில் இணைந்த ரஹ்மான், வங்கதேசத்தின் சுதந்திரத்தை அறிவித்தார்.

1977-ல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அப்போது ராணுவத் தளபதியாக இருந்த ரஹ்மான் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்டார்.

அரசியல் கட்சிகளையும் சுதந்திரமாக செயல்படும் ஊடகங்களையும் அவர் மீண்டும் அனுமதித்தார். பின்னர் மக்கள் வாக்களிப்பின் மூலம் அதிபராக அவர் அங்கீகரிக்கப்பட்டார்.

அவர் சுமார் 20-க்கும் மேற்பட்ட ராணுவப் புரட்சிகளை எதிர்கொண்டு, அவற்றை மிகக் கடுமையாகக் கையாண்டார். அப்போது ராணுவ வீரர்கள் பெருமளவில் தூக்கிலிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

பின்னர் 1981-ல், சிட்டகாங்கில் ராணுவ அதிகாரிகளின் குழுவினரால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

ராணுவ சர்வாதிகாரத்தை அடிபணியச் செய்தது எப்படி?

அதுவரை, காலிதா ஜியா பொது வாழ்வில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியே இருந்தார்.

பின்னர் அவர் பிஎன்பி (BNP) கட்சியில் உறுப்பினராகி, அதன் துணைத் தலைவராக உயர்ந்தார்.

1982-ல் வங்கதேசத்தில் ஒன்பது ஆண்டுகால ராணுவ சர்வாதிகார ஆட்சி தொடங்கியபோது, ஜியா ஜனநாயகத்திற்கான போராட்டங்களை ஒருங்கிணைக்கத் தொடங்கினார்.

ராணுவம் அவ்வப்போது தேர்தல்களை நடத்தினாலும், அவை தீவிர கண்காணிப்பிற்கு உட்பட்ட தேர்தல்களாகவே இருந்தன. அந்தத் தேர்தல்களில் பங்கேற்க தனது கட்சியினரை காலிதா ஜியா அனுமதிக்கவில்லை. அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

இருப்பினும், காலிதா ஜியா தொடர்ந்து மாபெரும் பேரணிகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்தார்.

இது இறுதியாக ராணுவத்தை அடிபணியச் செய்தது.

1991-ல், ராணுவ ஆட்சிக்குப் பிந்தைய தேர்தலில் காலிதா ஜியாவும் அவரது பிஎன்பி (BNP) கட்சியும் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தன.

பின்னர் அவர் பிரதமராகப் பதவியேற்றார்.

முந்தைய அதிபர் முறையிலிருந்த பெரும்பாலான அதிகாரங்களைப் பெற்ற அவர், வங்கதேசத்தின் முதல் பெண் தலைவராகவும், ஒரு இஸ்லாமிய நாட்டை வழிநடத்திய இரண்டாவது பெண்மணியாகவும் ஆனார்.

வங்கதேசக் குழந்தைகள் சராசரியாக இரண்டு ஆண்டுகள் மட்டுமே கல்வி கற்று வந்த நிலையில், அவர் ஆரம்பக் கல்வியை அனைவருக்கும் இலவசமாகவும் கட்டாயமானதாகவும் மாற்றினார்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியிடம் அவர் தோல்வியடைந்தார்.

2001-ஆம் ஆண்டு தேர்தலில் காலிதா ஜியா சில இஸ்லாமியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வசப்படுத்தினார்.

தனது இரண்டாவது பதவிக்காலத்தில், பெண் எம்.பி.க்களுக்காக சட்டமன்றத்தில் 45 இடங்களை ஒதுக்க அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். 70% பெண்கள் கல்வியறிவற்றவர்களாக இருந்த அந்த நாட்டில், இளம்பெண்களுக்கு கல்வி வழங்க அவர் பாடுபட்டார்.

அக்டோபர் 2006-ல், திட்டமிடப்பட்ட பொதுத் தேர்தலுக்கு முன்னதாக காலிதா ஜியா பதவியில் இருந்து விலகினார்.

ஆனால் அப்போது வெடித்த கலவரங்களால் ராணுவம் தலையிட்டது. தேர்தல் தள்ளிப்போனது.

இடைக்கால அரசாங்கம் பெரும்பாலான அரசியல் நடவடிக்கைகளைத் தடை செய்ததுடன் ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடங்கியது. இது அனைத்துக் கட்சியினரையும் பாதித்தது.

ஓராண்டுக்குப் பிறகு, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் காலிதா ஜியா கைது செய்யப்பட்டார்.

இதற்கு முன்னதாகவே, வங்கதேசத்தின் முதல் அதிபரின் மகளும், காலிதா ஜியாவின் அரசியல் போட்டியாளருமான அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவும் கைது செய்யப்பட்டிருந்தார்.

இருபது ஆண்டுகளாக மாறிமாறி ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்த இவ்விரு பெண்களும் திடீரென நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொண்டனர்.

காலிதா ஜியா மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

2008-ல் அவர் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. ராணுவத்தின் ஆதரவுடன் நடந்த தேர்தலில் அவர் பங்கேற்றார். அந்தத் தேர்தலில் ஷேக் ஹசீனா வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்தார்.

2011-ல், ஊழல் தடுப்பு ஆணையம் ஜியா மீது ஒரு வழக்கைப் பதிவு செய்தது. மறைந்த கணவரின் பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளைக்காக நிலம் வாங்க, கணக்கில் காட்டப்படாத வருமானத்தைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார். கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டார்.

2014-ல், அவாமி லீக் கட்சி தேர்தல் முறைகேட்டில் ஈடுபடும் என்று கூறி, காலிதா ஜியா ஆதரவாளர்கள் பொதுத்தேர்தலைப் புறக்கணித்தனர்.

அந்தத் தேர்தலின் போது, பிஎன்பி (BNP) ஆதரவாளர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டனர் மற்றும் நாடாளுமன்றத்தின் பாதி இடங்களுக்குப் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஓராண்டுக்குப் பிறகு, தேர்தல் புறக்கணிப்பு நடந்ததன் ஆண்டு நிறைவில் ஜியா புதிய தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்தினார். அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்தவும் அவர் திட்டமிட்டார்.

இதற்கு எதிர்வினையாக, தலைநகர் டாக்காவில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தின் கதவுகளைப் பூட்டி அவரை வெளியேற முடியாமல் பாதுகாப்புப் படைகள் தடுத்தன. டாக்காவில் அனைத்துப் போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

அப்போது, அரசாங்கம் மக்களிடமிருந்து "துண்டிக்கப்பட்டுவிட்டது" என்றும், அதன் நடவடிக்கைகளால் "முழு நாட்டையும் சிறைபிடித்துள்ளது" என்றும் காலிதா ஜியா விமர்சித்தார்.

ஜியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அவரது இரண்டாவது பதவிக்காலம் தொடர்பானவை. 2003-ல் சரக்கு முனையங்கள் தொடர்பான ஒப்பந்தங்களை வழங்க அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த ஒப்பந்தங்களை அங்கீகரிக்க அவரது இளைய மகன் அராபத் ரஹ்மான் கோகோ அவரை வற்புறுத்தியதாகக் கூறப்பட்டது.

அவர் பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட அறக்கட்டளைக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 2,52,000 டாலர் பணத்தை முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2018-ல் காலிதா ஜியாவிற்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

டாக்காவின் பழைய மற்றும் தற்போது பயன்பாட்டில் இல்லாத மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட ஒரே கைதி அவர் தான். இந்தத் தண்டனையின் காரணமாக அவர் பொதுத்தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், அவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் அவர் கூறினார்.

ஓராண்டுக்குப் பிறகு, 73 வயதான காலிதா ஜியாவுக்குக் கடுமையான மூட்டுவலி மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் இருந்ததால், சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இறுதியில், உடல்நிலை காரணங்களுக்காக அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார்.

2024-ஆம் ஆண்டில், மக்களின் பெரும் அதிருப்தி அலையால் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டது.

அரசுப் பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்பட்ட போது, கடுமையான அரசாங்க எதிர்ப்பு எழுச்சியாக மாறியது.

இதனைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா இந்தியாவிற்குத் தப்பிச் சென்றார். அவருக்குப் பதிலாகப் பொறுப்பேற்ற இடைக்கால அரசாங்கம், காலிதா ஜியாவை விடுவிக்கவும், முடக்கப்பட்ட அவரது வங்கிக் கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவரவும் உத்தரவிட்டது.

இந்த நேரத்தில், அவர் கல்லீரல் பாதிப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான தொடர்ச்சியான பாதிப்புகளால் அவர் அவதிப்பட்டு வந்தார்.

ஜனவரி 2025-ல், ஜியா வெளிநாடு செல்வதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு